ஜப்பானை விஞ்சியதா இந்திய பொருளாதாரம்? நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரியின் கூற்று சரியா?

பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், சந்தீப் சாய்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கடந்த வாரம் சனிக்கிழமையன்று, நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர் சுப்பிரமணியம் ஒரு அறிக்கையை வெளியிட்டு, இந்தியா ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது என்று கூறினார்.

ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு, திங்களன்று, நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி, 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று கூறினார்.

நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறுவது குறித்த கூற்றுகளுக்கு மத்தியில், இந்தியா ஒரு பெரிய மக்கள்தொகையுடன் பொருளாதார ரீதியாக சரியான திசையில் முன்னேறி வருகிறது என்று சிலர் கூறுகிறார்கள். அதே நேரத்தில் சில பொருளாதார வல்லுநர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பற்றிய கூற்றுகளில் உள்ள அவசரத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம், சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது உலக பொருளாதார கண்ணோட்டம் என்ற அறிக்கையில், 2025 ஆம் ஆண்டில், இந்தியா 4.187 டிரில்லியன் டாலருடன் உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறக்கூடும் என்று மதிப்பிட்டிருந்தது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி என்ன கூறினார்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர் சுப்பிரமணியம்சனிக்கிழமை ஒரு பொது நிகழ்ச்சியில் சுப்பிரமணியம் பேசுகையில், “நாம் இப்போது நான்காவது பெரிய பொருளாதாரமாக இருக்கிறோம், நாம் 4 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதாரம், இது எனது தரவு அல்ல. இது சர்வதேச நிதியத்தின் தரவுகள். இன்று மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) அடிப்படையில் ஜப்பானை விட இந்தியா பெரியது” என்று பேசினார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இருப்பினும், இந்தக் கூற்று சற்று முன்னதாகவே கூறப்பட்டுள்ளது என்பதை சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகள் காட்டுகின்றன. 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாமினல் ஜிடிபி (nominal GDP) அடிப்படையில் ஜப்பானை முந்திக்கொண்டு நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாற உள்ளது என்று தான் சர்வதேச நாணய நிதியம் மதிப்பிடுகிறது.

நாமினல் ஜிடிபி உண்மையில் பணவீக்க விகிதத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு மதிப்பிடப்படுகிறது, அதே நேரத்தில் அது இல்லாமல் செய்யப்படும் கணக்கீடு உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி என்று அழைக்கப்படுகிறது.

நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “இந்தியா நான்காவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் முயற்சியில் உள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நடக்கும் என்று நான் நம்புகிறேன், ஏனெனில் நிதியாண்டின் அனைத்து 12 மாதங்களுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தரவு தேவைப்படுகிறது. எனவே அதுவரை இது ஒரு முன்னறிவிப்பாகவே இருக்கும்” என்றார்.

பட மூலாதாரம், @NITIAayog

படக்குறிப்பு, இந்தியா நான்காவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் முயற்சியில் உள்ளது என்று நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி கூறுகிறார். சுப்பிரமணியனின் பேச்சு குறித்து, “இது ஒரு சிக்கலான கேள்வி, அவர் குறிப்பாக என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியாது. சில வார்த்தைகள் விடுபட்டிருக்கலாம் அல்லது வேறு ஏதாவதாக இருந்திருக்கலாம்” என்று விர்மானி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்தியா விரைவில் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

“இந்தியா சரியான பாதையில் நகர்கிறது”

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் பங்குச் சந்தைகள் சமீப காலமாக சிறப்பாக இயங்கி வருகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் தனிநபர் வருமானம் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளை விட வேகமாக (சதவீத அடிப்படையில்) வளர்ந்துள்ளது என்று கொள்கை மற்றும் புவிசார் அரசியல் நிபுணர் சித்தார்த் கூறுகிறார்.

“ஒவ்வொரு முறையும் இந்தியாவின் பொருளாதாரம் வளரும்போது, ‘ஆனால் தனிநபருக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (Per Capita GDP) குறைவாக உள்ளது’ என்று கூறப்படும். இந்தியா மொனாக்கோ அல்ல (மேற்கு ஐரோப்பாவில் உள்ள மிகச் சிறிய ஆனால் பணக்கார நாடு). இது வேகமாக வளர்ந்து வரும் மக்கள்தொகை கொண்டுள்ளது, 1.4 பில்லியன் மக்களைக் கொண்டுள்ளது” என்றார்.

மேலும், “2023ஆம் ஆண்டில் தனிநபர் வருமானம் 9.2% அதிகரித்துள்ளது, இது ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளை விட அதிகம். சிறிய அளவீடுகளுடன் ஒரு பெரிய நாட்டை அளவிடக் கூடாது. நீங்கள் அதை வேகம், அளவு மற்றும் மூலோபாய தாக்கத்தால் அளவிட வேண்டும். இந்தியா நகர்ந்து கொண்டு மட்டுமில்லை, முன்னேறியும் வருகிறது. இதைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

மற்றொரு பதிவுக்கு பதிலளித்த சித்தார்த், “இந்தியா சரியான பாதையில் செல்கிறது, அதன் தனிநபர் வருமானம் இன்னும் வளர்ந்து வருகிறது, தேக்கமடையவில்லை. ஒரு பெரிய மக்கள்தொகை இருப்பதை நிச்சயமாக கருத்தில் கொள்ள வேண்டும்.” என்றார்.

இருப்பினும், டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழக முன்னாள் பொருளாதார பேராசிரியர் அருண் குமார், பிபிசியிடம் பேசுகையில், நாமினல் ஜிடிபி ஜப்பானை விஞ்சும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பு என்றும், இந்த கூற்றை வெளியே சொல்வதில் அவசரம் காட்டப்பட்டதாகவும் கூறினார்.

பொருளாதார நிபுணர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் ஆரோக்கியத்தை அளவிடுவதற்கான ஒரு பொதுவான வழி, மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடுவதாகும். இது பொதுவாக டாலர்களில் கணக்கிடப்படும். அதே நேரத்தில் சர்வதேச நாணய சந்தைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருக்கும்.

பேராசிரியர் அருண் குமார் கூறுகையில், “2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.19 டிரில்லியன் டாலராக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில் ஜப்பானின் பொருளாதாரம் 4.186 டிரில்லியன் டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடுகள் டாலர்களில் உள்ளன மற்றும் வேறுபாடு மிகவும் சிறியது. ஆனால் ஜப்பானிய நாணயமான யென்னுக்கு எதிராக ரூபாய் ஏற்ற இறக்கம் அடைந்தால், இந்த வேறுபாடும் போய்விடும்.” என்று விளக்குகிறார்.

இது தவிர, 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.2 சதவீதமாகவும், பணவீக்க விகிதம் 4.2 சதவீதமாகவும் இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இந்த புள்ளிவிவரங்கள் நிலையானதாக இல்லாவிட்டால், நிலைமை அப்படியே மாறும்.

நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்பிரமணியம் கூறுகையில், இந்தியா அதன் திட்டமிடல் மற்றும் சிந்தனைக்கு ஏற்ப செயல்பட்டால், மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற 2-3 ஆண்டுகள் மட்டுமே ஆகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஏப்ரல் மாத அறிக்கையின்படி, தற்போதைய வளர்ச்சி விகிதத்தில், 2028 ஆம் ஆண்டில் நாமினல் ஜிடிபி அடிப்படையில் ஜெர்மனியை விஞ்சி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாற முடியும்.

அமெரிக்காவும் சீனாவும் உலகின் இரண்டு சிறந்த பொருளாதாரங்களாக இருக்கப் போகின்றன.

பேராசிரியர் அருண் குமார், சர்வதேச நாணய நிதியம் ஒரு தரவு சேகரிக்கும் அமைப்பு அல்ல, அந்த நாடுகள் வழங்கிய தரவுகளின் அடிப்படையில் அது கணிப்புகளை உருவாக்குகிறது என்று சுட்டிக்காட்டுகிறார்.

அவர், “மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் சரி செய்யப்படுகின்றன. இது தவிர, முழுமையான புள்ளிவிவரங்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்றன. சரியான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரங்கள் காலாண்டு தரவுகளில் கிடைக்கவில்லை, மேலும் புள்ளிவிவரங்களில், ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் என்ன நடக்கிறதோ, அது அமைப்புசாரா துறையிலும் நடக்கிறது என்று கருதப்படுகிறது” என்கிறார்.

மேலும் “ஆனால் பணமதிப்பிழப்பு மற்றும் கொரோனா ஊரடங்குக்குப் பிறகு, வீழ்ச்சியடைந்த துறை வளர்ந்து வருகிறது என்று நாம் கருதுகிறோம். இது நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது, இதுதான் தரவுகளின் சிக்கல்” என்கிறார்.

பேராசிரியர் அருண் குமார் கூறுகையில், “டிரம்பின் வரிவிதிப்பு போர் உலகப் பொருளாதாரத்திற்கு எவ்வளவு சேதத்தை ஏற்படுத்தும் என்பது மட்டுமே மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவையும் பாதிக்கும். சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பு ஏப்ரல் 2025-க்கானதாகும். அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றார்.

ஜிடிபியில் சமத்துவமின்மை

பட மூலாதாரம், Getty Images

மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் நாட்டின் செழிப்பிலும் அதிகரித்து வரும் சமத்துவமின்மை குறித்து சமூக ஊடகங்களில் ஒரு விவாதம் தொடங்கியுள்ளது.

எக்ஸ் தளத்தில் துஃபைல் நௌஷத் என்பவர் தனது பதிவில், “பொருளாதாரத்தில் முதல் 1%, 5% மற்றும் 10% ஐ விலக்கினால் இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Per Capita GDP) என்னவாக இருக்கும். பொருளாதாரத்தின் அடிமட்டத்தில் உள்ள 50% மக்களின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்னவாக இருக்கும்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

பல பொருளாதார வல்லுநர்கள் ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதாவது தனிநபர் வருமானம் சரியான அளவீடாக இருக்கும் என்று கருதுகின்றனர், மேலும் இந்தியா இந்த விஷயத்தில் உலகில் 140வது இடத்தில் உள்ளது.

பேராசிரியர் அருண் குமார் கூறுகையில், “சில நேரங்களில் ஈலோன் மஸ்க் மற்றும் ஜெஃப் பெசோஸ் ஒரு மைதானத்திற்குச் சென்றால், அங்குள்ளவர்களின் தனிநபர் வருமானம் திடீரென 1 மில்லியன் டாலராக அதிகரிக்கும் என்று நகைச்சுவையாக கூறப்படுகிறது. ஏனெனில் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் $100 மில்லியனுக்கும் அதிகமாக சம்பாதிக்கிறார்கள்.

ஒருபுறம், தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் இந்தியா 140வது இடத்தில் உள்ளது. மறுபுறம், கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகி வருகிறார்கள் என்பதையும், ஏழைகளின் நிலை பெரிதாக மாறவில்லை அல்லது குறைந்து வருகிறது என்பதையும் இது காட்டுகிறது.” என்று கூறுகிறார்.

“தனிநபர் வருமானமும் உண்மையான நிலைமைகளை காட்டவில்லை, ஏனெனில் சராசரி புள்ளிவிவரங்கள் சமத்துவமின்மையை மறைக்கின்றன” என்றும் அவர் கூறுகிறார்.

ஜிடிபி குறித்த கூற்றில் ஏன் அவசரம்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜப்பானின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதில் இந்தியா பலன் அடைந்துள்ளது. சனிக்கிழமை, நிதி ஆயோக்கின் கூட்டம் நடைபெற்றது, அதில் மாநில முதல்வர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பிரதமர் நரேந்திர மோதி, 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

பேராசிரியர் அருண்குமார் கூறுகையில், பாகிஸ்தானுடனான சமீபத்திய பதற்றத்தின் போது திடீரென போர் நிறுத்தத்திற்குப் பிறகு, ஒரு வலுவான பொருளாதார சக்தி என்ற பிம்பத்தை உருவாக்கவும், தன்னைப் பற்றி விவாதிக்கப்படவும் அரசு விரும்புகிறது என்று கருத்து தெரிவிக்கிறார்.

ஜிடிபி கூற்று குறித்து அவர் கூறுகையில், “இது முற்றிலும் அரசியலாகத் தெரிகிறது. பாகிஸ்தானுடனான சமீபத்திய மோதல் மற்றும் போர் நிறுத்தத்திற்குப் பிறகு மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சியாகவும் இது இருக்கலாம். அதேசமயம் இந்தியாவின் தனிநபர் வருமானம் ஜப்பானின் தனிநபர் வருமானத்தில் பதினைந்தில் ஒரு பங்கு மட்டுமே” என்று சுட்டிக் காட்டுகிறார்.

ஜப்பானின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். 2010 ஆம் ஆண்டில், இது 6 டிரில்லியன் டாலர்களாக இருந்தது, ஆனால் வயதான மக்கள் தொகை, உற்பத்தியில் தேக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக இது சுருங்கிவிட்டது. அதே நேரத்தில், இந்தியா அதன் நாமினல் ஜிடிபியை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கியுள்ளது. இது உலக தரவரிசையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

Worldometers வலைத்தளத்தின்படி, ஜப்பானின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 33,806 டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 2,400 டாலராக இருக்கும், இது கென்யா, மொராக்கோ, லிபியா, மொரீஷியஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளை விட குறைவு.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு