செலவுகளுக்கு அஞ்சி குழந்தை பெறுவதை தவிர்க்கும் தம்பதிகள் அதிகரித்து வருவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குழந்தைகள் இல்லாதது தங்களது வேலை அல்லது தொழில் வாழ்க்கையில் வெற்றி பெற உதவுகிறது என ‘டிங்க்’ வாழ்க்கை முறையை விரும்பும் தம்பதிகள் கூறுகிறார்கள்.எழுதியவர், சிராஜ்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்திய சமூகத்தில் திருமணங்களுக்கு எந்தளவு முக்கியப் பங்கு உண்டோ, அதைவிட அதிக முக்கியத்துவம் ‘குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்’ என்பதைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது.

திருமணம் என்பதே குழந்தைகள் பெறத்தான் என்ற எண்ணம் பிரதானமாக இருக்கும் சமூகங்களுக்கு, DINK (டிங்க்) எனும் விஷயம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.

Double Income No Kids என்பதன் சுருக்கமே ‘டிங்க்’, ஒரு குடும்பத்தில் இரண்டு வருமானங்கள் இருந்தாலும் அல்லது கணவன்- மனைவி என இருவரும் வேலை செய்தாலும், குழந்தைகள் பெற்றுக் கொள்வதைத் தள்ளிப் போடுவது அல்லது பெற்றுக் கொள்ளவே வேண்டாம் என்ற முடிவை எடுப்பதுதான் ‘டிங்க்’.

இவ்வாறு வாழும் தம்பதிகளிடையே செலவழிக்கக்கூடிய வருமானம் (Disposable Income), அதாவது வரிகள் மற்றும் அத்தியாவசிய செலவுகள் கழிந்த பிறகு, கையில் மீதமிருக்கும் வருமானம் அதிகமாக இருக்கும் என்பதால் பலரும் இதை விரும்புகிறார்கள் என சில ஆய்வுகள் கூறுகின்றன.

குறிப்பாக, மில்லனியல் (1980 முதல் 1990களின் நடுப்பகுதி வரையிலான காலகட்டத்திற்குள் பிறந்தவர்கள்) மற்றும் ஜென் Z (1997 முதல் 2012 வரையிலான காலகட்டத்திற்குள் பிறந்தவர்கள்) தலைமுறையைச் சேர்ந்த 23% பேருக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் விருப்பம் இல்லை என ஒரு ஆய்வு கூறுகிறது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ‘டிங்க்’ எனப்படும் முறை, 1980-1990களில் மேற்கத்திய நாடுகளில் பிரபலமடையத் தொடங்கியது.பியூ ஆய்வு மையம் நடத்திய மற்றோர் ஆய்வில் (அமெரிக்காவில்) கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர், “குழந்தைகள் இல்லாததால் தாங்கள் விரும்பும் பொருட்களை வாங்குவது, சுற்றுலா செல்வது, பொழுதுபோக்குகள் மற்றும் பிடித்த விஷயங்களுக்கு நேரம் ஒதுக்குவது மற்றும் எதிர்காலத்திற்காகச் சேமிப்பது மிகவும் எளிதாகிவிட்டதாக” கூறியுள்ளார்கள்.

குறிப்பாக அதில் கலந்துகொண்ட இளைஞர்களில் பத்தில் ஆறு பேர், “குழந்தைகள் இல்லாததால் தங்களது வேலை அல்லது தொழில் வாழ்க்கையில் வெற்றி பெறவும், ஒரு சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழவும் முடிகிறது” என்று தெரிவித்துள்ளார்கள்.

இந்த ஆய்வு ஏப்ரல் 29 முதல் மே 19, 2024 வரை, இரு பிரிவினரிடம் நடத்தப்பட்டது.

குழந்தைகள் இல்லாத, 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்கள்குழந்தைகள் இல்லாத, 18 முதல் 49 வயதுடைய நபர்கள்அதில் 18 முதல் 49 வயதுடையவர்களில் 57% பேர், தங்களுக்கு குழந்தைகள் தேவையில்லை என்றும், 44% பேர் வேலை மற்றும் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துவதற்காக குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றும், 36% பேர் ஒரு குழந்தையை வளர்ப்பதற்கான பொருளாதாரச் சூழல் இல்லை என்றும் தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக இளம்பெண்களில் 22% பேர், தங்களுடைய பெற்றோர் அல்லது குடும்பத்தின் மூலம் கிடைத்த மோசமான அனுபவங்களால் பிள்ளை பெற்றுக்கொள்வதைத் தவிர்ப்பதாகக் கூறியுள்ளனர்.

ஐம்பது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில், 33% பேர் சரியான வாழ்க்கைத் துணை அமையவில்லை என்பதைக் காரணமாகக் கூறியுள்ளனர். அதில் 38% பேர் ஒரு கட்டத்தில் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை இருந்ததாகவும், பின்னர் மனம் மாறிவிட்டதாகவும் கூறியுள்ளனர்.

பொருளாதார ரீதியில் உதவுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்இந்த ‘டிங்க்’ எனப்படும் முறை, 1980-1990களில் மேற்கத்திய நாடுகளில் பிரபலமடையத் தொடங்கியது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிலும் இதுகுறித்த விவாதங்கள் தொடங்கியுள்ளன.

“இந்தியாவில் இதற்கு முந்தைய தலைமுறையினர் பெரும்பாலும் பெற்றோரையும் சமூகத்தையும் சார்ந்திருந்தனர். எனவே படிப்பு, வேலை, திருமணம், குழந்தைகள் பெற்றுக்கொள்வது என அனைத்தும் தீர்மானிக்கப்பட்டதாகவும், கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாகவும் இருந்தது. உலகமயமாக்கல் இன்று இளம் தலைமுறைக்கு பொருளாதார சுதந்திரத்தை அளித்துள்ளது. அதனால், இன்றைய தலைமுறையினர் இத்தகைய வாழ்க்கை முறையை விரும்புகிறார்கள்” என்கிறார் பொருளாதார நிபுணரான நாகப்பன் புகழேந்தி.

பொருளாதார ரீதியாக ஒரு தம்பதிக்கு இது உதவியாக இருக்கும் என்றாலும்கூட, இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் என்கிறார் அவர்.

“எல்லாவற்றிலும் சாதக-பாதகங்கள் உள்ளன. அதை எதிர்கொள்ளத் தயாரெனில், செய்யலாம். மற்றபடி இந்தியா போன்ற ஒரு நாட்டில் வாழும் நாம், சரி-தவறு என இந்த விஷயத்தில் கருத்து சொல்ல முடியாது. பொருளாதார ரீதியாக நிச்சயம் சில நன்மைகள் இருக்கலாம், ஆனால் எதை இழந்து அதைப் பெறுகிறோம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்கிறார்.

இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் சரிந்து வரும் குழந்தை பிறப்பு விகிதமும் இங்கே கவனம் பெறுகிறது.

சமீபத்திய SRS -Sample Registration Survey 2021 தரவுகள்படி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் 1.5, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் 1.6 ஆக உள்ளது. மக்கள் தொகையை நிலையாகப் பராமரிக்கத் தேவையான 2.1 என்ற குழந்தைப் பிறப்பு விகிதத்தைவிட இது குறைவு.

குழந்தையை வளர்ப்பதற்கான பொருளாதாரச் சூழல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்ஓசூரை சேர்ந்த கண்ணன்- வினோதினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதி, திருமணமாகி சில வருடங்களுக்கு இந்த ‘டிங்க்’ வாழ்க்கை முறையைப் பின்பற்றியவர்கள்.

“காதல் திருமணம் செய்துகொண்ட புதிதில், இருவருமே அப்போதுதான் பணிகளில் சேர்ந்திருந்தோம். உடனடியாக குழந்தை என்பதை நாங்கள் விரும்பவில்லை. இன்னும் சொல்லப்போனால், அதற்கான பொருளாதாரச் சூழல் அப்போது எங்களிடம் இல்லை” என்று கூறும் கண்ணன் தற்போது பெங்களூருவில் சொந்தமாக ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் நடத்தி வருகிறார்.

“திருமணத்திற்குப் பிறகு எனது மனைவி ஒரு முதுகலை பட்டப் படிப்பை முடித்தார். அவர் இன்று வகிக்கும் பதவிக்கு அதுதான் முக்கியக் காரணம். திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்துதான் குழந்தை பெற்றுக் கொண்டோம். இந்தக் காலகட்டத்தில் பல ‘ரிஸ்குகளை’ என்னால் எடுக்க முடிந்தது.

இன்று நல்ல நிலையில் இருப்பதால், அந்த 8 வருடங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்தது குறித்த எந்த உறுத்தலும் எங்களுக்கு இல்லை. நாங்கள் எடுத்த முடிவு சரியானது என்றே கருதுகிறோம்,” என்கிறார் கண்ணன்.

இந்த 8 வருட காலத்தில் தாங்கள் எதிர்கொண்ட சமூக அழுத்தத்தையும் பகிர்ந்துகொண்டார் கண்ணன்.

“பார்க்கும் உறவினர்கள் அனைவரும் துக்கம் விசாரிப்பது போலப் பேசுவார்கள். மருத்துவர்களைப் பரிந்துரைப்பது, அறிவுரை கூறுவது, குடும்ப நிகழ்ச்சிகளில் குத்திக்காட்டிப் பேசுவது என எல்லாவற்றையும் செய்தார்கள். இப்படிப் பேசுபவர்கள் குழந்தைக்கு ஒரு ‘டயப்பர்’ கூட வாங்கித் தரப் போவதில்லை என்பதும் எங்களுக்குத் தெரியும். நல்ல வேலையும், பொருளாதாரச் சூழலும் முக்கியம் என்பதில் உறுதியாக இருந்தோம்” என்கிறார் கண்ணன்.

பட மூலாதாரம், Nagappan

படக்குறிப்பு, பொருளாதார நிபுணர் நாகப்பன் புகழேந்திஅமெரிக்காவை சேர்ந்த ப்ரூக்கிங்ஸ் எனும் சமூக அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் நிறுவனம், இனி வரும் காலங்களில் குழந்தை வளர்ப்பு என்பது பொருளாதார ரீதியாக மிகவும் சவாலானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

அதாவது ஒரு குழந்தையைப் பெற்று, 18 வயது வரை வளர்ப்பதற்கு மட்டுமே 2,00,000 முதல் 3,10,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 1.70- 2.64 கோடி ரூபாய்) வரை செலவாகும் எனக் குறிப்பிட்டுள்ளது. வளர்ந்து வரும் பணவீக்கத்தையும் கருத்தில் கொண்டு இவ்வாறு மதிப்பிட்டுள்ளது.

ஆனால், இதை இந்திய சூழலுக்கு பொருத்திப் பார்க்கத் தேவையில்லை என்கிறார் பொருளாதார நிபுணரான நாகப்பன் புகழேந்தி.

“மேற்கத்திய நாடுகளில் ஒரு குழந்தையை வளர்ப்பதற்கான செலவு என்பது மிகவும் அதிகம். இங்கு அப்படியல்ல. உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் இருக்கும் கல்வி மற்றும் மருத்துவக் கட்டணங்களை மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் புரியும்.

அதே நேரம், தங்கள் சுயவிருப்பத்தின் பேரில் கல்விக்காகப் பல கோடிகளைச் செலவு செய்வது என்பது வேறு. எனவே மேற்கத்திய நாடுகளில் இருக்கும் சூழ்நிலை மற்றும் போக்கை இங்குள்ள சூழலுடன் குழப்பிக்கொள்ளத் தேவையில்லை” என்று விளக்கினார்.

உளவியல் தாக்கங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்மதுரையைச் சேர்ந்த பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 2000களின் தொடக்கத்திலேயே இந்த ‘டிங்க்’ வாழ்க்கை முறையைப் பின்பற்றியவர்.

“நானும் எனது கணவரும் காதலிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்தே, குழந்தை வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தோம். மதுரைதான் பூர்வீகம் என்றாலும், நாங்கள் இருவரும் படித்தது, அதன் பிறகு வேலை செய்தது வெளிநாட்டில் என்பதால் இருவருக்குமே அந்த மனநிலை இருந்தது.

ஆனால், 40 வயதைக் கடந்த பிறகு, வாழ்வில் ஒரு வெறுமையை உணரத் தொடங்கினோம். சொந்த ஊருக்குத் திரும்பினோம். ஆனாலும் அந்த வெறுமையைக் கடக்க முடியவில்லை. அதன் பிறகுதான், ஒரு பெண் குழந்தையை சட்டப்பூர்வமாகத் தத்தெடுக்கலாம் என்ற முடிவை எடுத்தோம். இப்போது குழந்தையின் சிரிப்பைப் பார்க்கும்போது, இந்த முடிவை முன்னரே ஏன் எடுக்கவில்லை என்று அடிக்கடி யோசிக்கிறேன்,” என்கிறார் பிரியா.

இந்தக் கட்டுரையின் முன்பகுதியில் குறிப்பிட்ட பியூ ஆய்வு மையத்தின் ஆய்வில் கலந்துகொண்ட 50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரில், 26% பேர் ‘முதுமையில் தங்களை யார் கவனித்துக் கொள்வார்கள் என்பது பற்றிய கவலை’ தங்களுக்கு இருப்பதையும், 19% பேர் தங்களுக்கு தனிமை குறித்த பயம் இருப்பதையும் ஒப்புக்கொண்டனர்.

படக்குறிப்பு, கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் மருத்துவர் பூர்ண சந்திரிகா.’டிங்க்’ வாழ்க்கை முறையின் இத்தகைய உளவியல் பாதிப்புகள் குறித்துப் பேசிய கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் மருத்துவர் பூர்ண சந்திரிகா, தன்னிடம் மனநல ஆலோசனைக்கு வரும் சில தம்பதிகளில், “கணவருக்கு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இருக்கும், ஆனால் மனைவிக்கு இருக்காது. சில நேரம் இதற்கு நேர்மாறாகவும் இருக்கும்” என்று கூறினார்.

“அதற்கு வேலை, தற்போதைய பொருளாதாரச் சூழலை அப்படியே பராமரிக்க வேண்டும் என்ற கவலை போன்ற பல காரணங்களை அவர்கள் சொல்வார்கள். சிலர் இதற்காகவே விவாகரத்து வரை கூடச் செல்வார்கள்” என்கிறார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.அதே நேரம், பிள்ளைகளைப் பெற்று வெளிநாட்டிற்கு படிப்பு அல்லது வேலைக்காக அனுப்பிவிட்டு, தன்னிடம் மனநல ஆலோசனைக்காக வரும் பெற்றோர்களும் உண்டு என்கிறார் அவர்.

“எனக்குத் தெரிந்து ஒருவர், நல்ல பொருளாதார நிலையில் இருக்கிறார். ஆனால் அவருடைய மகன், வேலைக்காக அமெரிக்கா சென்றவர் 5 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இந்தியா வருகிறார்.

இவரோ ஒரு ஓய்வு பெற்றவர்களுக்கான சமூகத்தில் (Retirement society) வசிக்கிறார். எனவே இதில் சரி தவறு எனக் கிடையாது. முழுக்க முழுக்க ஒருவரின் தனிப்பட்ட விருப்பமே” என்கிறார் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.