யுக்ரேனுக்கு உளவு பார்த்த ரஷ்ய தம்பதி – போர் முனையில் சிக்கியவர்கள் தப்பியது எப்படி?

படக்குறிப்பு, செர்ஜி மற்றும் டாட்டியானா வொரோன்கோவ்எழுதியவர், இலியா பாரபனோவ் மற்றும் அனஸ்டேசியா லோடரேவாபதவி, பிபிசி நியூஸ் ரஷ்யா 23 நிமிடங்களுக்கு முன்னர்

செர்ஜி மற்றும் டாட்டியானா வொரோன்கோவ் ஆகிய இருவரும் ரஷ்யாவிலிருந்து ஒரு சிறிய யுக்ரேனிய கிராமத்துக்கு குடிபெயர்ந்தபோது, அவர்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வோம் என எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் சூழல் வேறு விதமாக மாறியது.

ரஷ்யா தனது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கிய பிறகு, தாங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் வாழ்வதாக அந்த தம்பதி உணர்ந்தனர். பின்னர், யுக்ரேனிய ராணுவத்துக்கு தகவல் வழங்கும் உளவாளிகளாக செயல்பட முடிவு செய்தனர்.

அதற்குப் பிறகு, அவர்கள் காவலில் வைக்கப்பட்டனர். கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பின்னர் போலி ஆவணங்களுடன், ஒரு ரப்பர் வளையத்தை பயன்படுத்தி கடலைக் கடந்து, ஐரோப்பாவிற்கு தப்பிச் சென்றனர்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், FAMILY ARCHIVE

படக்குறிப்பு, யுக்ரேனில் வசிக்கச் செல்வதற்கு முன்பு மாஸ்கோவில் செர்ஜியும் டாட்டியானாவும்2014ஆம் ஆண்டில், கிரிமியாவை யுக்ரேனில் இருந்து பிரித்து தன்னுடன் ரஷ்யா சேர்த்துக் கொண்டவுடன், செர்ஜி மற்றும் டாட்டியானா வொரோன்கோவ், ரஷ்யாவை விட்டு வெளியேற முடிவு செய்தனர்.

அதிபர் விளாடிமிர் புதின் தலைமையிலான ஆட்சியில், தங்களது நாடு செல்லும் திசை குறித்து அந்த தம்பதியினர் பெரும் ஏமாற்றமடைந்திருந்தனர்.

ஆனால் கிரிமியாவை சட்டவிரோதமாக இணைத்ததும், கிழக்கு யுக்ரேனில் மோதல் தொடங்கியதும், அவர்களுக்கு அது ஒரு தேவையற்ற திருப்பமாக அமைந்தது.

“நாங்கள் (போருக்கு எதிரான) போராட்டங்களுக்குச் சென்றோம்… ஆனால் அது பயனற்றது என்று விரைவில் புரிந்துகொண்டோம்,” என்கிறார் தற்போது 55 வயதாகும் செர்ஜி.

“கிரிமியாவை கைப்பற்றுவது மற்றும் டான்பாஸில் [கிழக்கு யுக்ரேனில் உள்ள ஒரு பெரிய தொழிற்துறை பகுதி] மோதலில் ஈடுபடுவது தவறானது என்று நண்பர்கள் மற்றும் எனக்குத் தெரிந்தவர்களிடம் நான் கூறுவேன். அது பிடிக்கவில்லையென்றால், நீங்கள் வெளியேறலாம் என்று அவர்கள் எங்களிடம் கூறுவார்கள். அதனால் நாங்கள் வெளியேற முடிவு செய்தோம்.”

தற்போது 52 வயதாகும் டாட்யானா, டான்பாஸில் பிறந்தவர்.

ஆனால் அவரது கணவரைப் போலவே அவரும் ரஷ்ய குடியுரிமை கொண்டவர்.

கிரிமியா ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட சில காலத்திற்குப் பின்னர், டாட்யானாவின் அலுவலகத்தில் இருந்த சக பணியாளர்கள் அவரது ரஷ்ய எதிர்ப்புக் கருத்துகளை விரும்பவில்லை.

அதனால், வேலையை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதை பகிர்ந்து கொண்டார் டாட்யானா.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.’ஒரு ராக்கெட் வீட்டிற்கு மேல் பறந்து சென்றது’

அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அந்த தம்பதி யுக்ரேனுக்குப் பயணித்தனர்.

பின்னர் 2019ஆம் ஆண்டு, அவர்கள் தென்கிழக்கு ஜபோரிஜியா பிராந்தியத்தில், சுமார் 300 பேர் வாழும் நோவோலியுபிமிவ்கா எனும் கிராமத்தில் குடியேறினர். அங்கு அவர்கள் கால்நடைகளை வளர்த்தனர்.

சோவியத் ராணுவத்தில் பணியாற்றிய காலத்தில் நிபுணத்துவம் பெற்ற நில அளவையீட்டு பணி ஒன்றில் செர்ஜி சேர்ந்தார்.

அதன் பின்னர், 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று, ரஷ்யாவின் ராக்கெட்டுகள் முதன் முதலாக அவர்களின் வீட்டின் மேல் பறந்தன.

“காலையில் ஏதோ விசில் சத்தம் போல் கேட்டது. ஏதோ ஒரு பொருள் பறப்பது போல் இருந்தது. நான் வெளியே சென்று பார்த்தேன்,” என்று டாட்டியானா அந்த நாளை நினைவுகூர்கிறார்.

“ஒரு ராக்கெட் நேராக எங்கள் வீட்டிற்கு மேல் பறந்து சென்றது. என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள இணையத்தில் தேடினேன். அப்போது கியவ் நகரத்தில் ஏற்கனவே குண்டு வீசப்பட்டுள்ளது என்று பதிவிட்டிருந்தார்கள்.”

பட மூலாதாரம், FAMILY ARCHIVE

படக்குறிப்பு, படையெடுப்பிற்கு முன்பு யுக்ரேனில் செர்ஜி மற்றும் டாட்டியானா. ‘நாங்கள் அதை தேசத் துரோகமாக நினைக்கவில்லை’

பிப்ரவரி 26ஆம் தேதிக்குள், ஜபோரிஜியா பிராந்தியத்தின் தெற்குப் பகுதியில் உள்ள மற்ற கிராமங்களைப் போலவே, நோவோலியுபிமிவ்காவும் ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் சென்றுவிட்டது.

இருந்தாலும், தொடக்கத்தில் ரஷ்யப் படைகளுடன் அந்த தம்பதி நேரடி தொடர்பில் ஈடுபடவில்லை.

ஆனால் சில நாட்களில், ஒரு ரஷ்ய ராணுவ கான்வாய் அவர்களின் வீட்டைக் கடந்தபோது, டாட்டியானா ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்.

கடந்து செல்லும் ராணுவ வாகனங்களை பார்த்த டாட்டியானா, வீட்டுக்கு உள்ளே ஓடினார்.

கியவ் நகரில் தனக்கு அறிமுகமான ஒருவருக்கு யுக்ரேனிய பாதுகாப்பு சேவைகளுடன் தொடர்பு இருப்பதாக நம்பிய டாட்டியானா, அவருக்கு தனது தொலைபேசியை எடுத்து செய்தி அனுப்பினார்.

குறுஞ்செய்தி அனுப்பும் செயலியான டெலிகிராமில் உள்ள ஒரு சிறப்பு சாட்போட்டுக்கான இணைப்பை அந்த நபர் டாட்யானாவுக்கு அனுப்பினார்.

அந்த சாட்போட், தனித்துவமான அடையாளம் கொண்ட ஒருவர் விரைவில் அவர்களை தொடர்பு கொள்வார் என தெரிவித்தது.

ஏவுகணை அமைப்புகள் மற்றும் ராணுவ வாகனங்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி, அவர்கள் பார்த்த மின்னணு போர் அமைப்புகள், ராணுவ உபகரணங்களின் இருப்பிடம் மற்றும் அது குறித்த விவரங்களை வழங்குமாறு அந்த தம்பதியிடம் கேட்கப்பட்டது.

அந்த பகுதியில் உள்ள ரஷ்ய படைகள் மீது டிரோன்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் குறி வைத்து தாக்குதல் நடத்த யுக்ரேனிய ராணுவத்திற்கு இந்த தகவல்கள் உதவும்.

அவர்கள் இருவரும் ரஷ்ய குடிமக்களாக இருந்தபோதிலும், “நாங்கள் அதை தேசத் துரோகமாக நினைக்கவில்லை,” என்று டாட்டியானா கூறுகிறார்.

“ரஷ்யா மீது தாக்குதல் நடந்திருந்தால், நாங்கள் தேச துரோகம் செய்ததாகவும், எதிரியுடன் இணைந்து செயல்படுவதாகவும் கருதப்பட்டிருக்கும். ஆனால் யாரும் ரஷ்யாவைத் தாக்கவில்லை. இது தீமைக்கு எதிரான போராட்டம் தான்.”

தாங்கள் வழங்கிய தகவல்கள் பொதுமக்கள் அல்லது குடிமக்களின் உள்கட்டமைப்பு மீது எந்தவித தாக்குதலையும் ஏற்படுத்தவில்லை என்று அந்த தம்பதியினர் வலியுறுத்துகிறார்கள்.

“ஒரு பெரிய, முக்கிய இலக்கு இருந்தது. ஆனால் ‘நாங்கள் அதைத் தாக்க மாட்டோம், ஏனென்றால் அது மக்களின் வீடுகளுக்கு அருகில் உள்ளது” என்று யுக்ரேனிய ராணுவம் கூறியது,” என பகிர்ந்துகொண்டார் செர்ஜி.

பட மூலாதாரம், Anadolu Agency via Getty Images

படக்குறிப்பு, பிப்ரவரி 2022இல் டான்பாஸ் பகுதியை நோக்கி நகரும் ரஷ்ய ராணுவத் தொடரணி.பின்னர் ரஷ்ய ராணுவம் இருந்த இடங்கள் குறித்த குறியீடுகளை இரண்டு மாதங்களாக செர்ஜி சேகரித்தார்.

அவற்றை தனது தொலைபேசியிலிருந்து அனுப்பிய டாட்டியானா, தான் அனுப்பிய செய்திகளின் அனைத்து தடயங்களையும் கவனமாக நீக்கினார்.

ஏப்ரல் 2022 இறுதி வரை, நோவோலியுபிமிவ்கா அதன் இணைய சேவையை இழக்கும் வரை, கியவ் நகரில் தங்களுடன் தொடர்பில் இருந்த நபருடன் இந்த தம்பதி இணைப்பில் இருந்தனர்.

அதற்குள், தொடர்ந்து அந்த கிராமத்திற்கு சென்ற ஆயுததாரிகள், அங்கிருந்த வீடுகளுக்குள் நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அவர்கள் வொரோன்கோவ்ஸ் தம்பதியின் வீட்டையும் பல முறை பார்வையிட்டனர்.

ஏன் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை விட்டு வெளியேறவில்லை என்று அவர்களிடம் கேட்டால், “நாங்கள் எங்கே போவது?” என்கிறார்கள் அந்த தம்பதி.

அவர்கள் ரஷ்யாவுக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை, மேலும் ரஷ்ய ஆவணங்களுடன் ஆக்கிரமிக்கப்படாத யுக்ரேனில் நுழைவதற்கும் அவர்களுக்கு அனுமதி இல்லை.

அதற்கு மேலாக, அவர்கள் வசித்த அந்த இடத்தில் தான் “வீட்டில் இருப்பதைப் போல” உணர்ந்ததால், போர் தொடர்பாக யுக்ரேனுக்கு தொடர்ந்து உதவ அவர்கள் விரும்பினர்.

ஆனால் அவர்களது முயற்சிகள் அனைத்தும் செர்ஜி கைது செய்யப்பட்டவுடன் முடிவுக்கு வந்தது.

நடுங்கும் குளிரில் நடத்தப்பட்ட விசாரணை

ரஷ்ய குடிமக்களாக இருப்பதால், ஆக்கிரமிப்பு தொடங்கிய காலத்தில் இருந்தே இந்த தம்பதியர் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தனர்.

ஆனால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் தான், டோக்மாக் பிராந்திய மையத்தில் ஆயுததாரிகளால் செர்ஜி கைது செய்யப்பட்டார்.

ராணுவ சின்னங்களுடன் இல்லாத நபர்கள் செர்ஜியை ஒரு வீட்டிற்கு அழைத்து சென்று, இரண்டு மீட்டர் அகலமும் மூன்று மீட்டர் ஆழமும் கொண்ட குளிர்ந்த அடித்தளக் குழியில் தங்க வைத்தனர். அங்கே குத்தவைத்து அமர்ந்த நிலையில் தூங்கியதாக செர்ஜி கூறுகிறார்.

அடுத்த நாள், அவர் தலைக்கு மேல் ஒரு பையை பொருத்தி விசாரணை நடத்தப்பட்டது. வன்முறை அச்சுறுத்தலுக்கும் செர்ஜி ஆளானார்.

ரஷ்ய படைகள் எங்கு உள்ளன என்ற விவரங்களை யுக்ரேனியர்களுக்கு வழங்கினீர்களா என அதிகாரிகள் கேள்வி கேட்டனர் என்று விவரிக்கிறார் செர்ஜி.

தொடக்கத்தில், யுக்ரேனிய ராணுவத்துடன் தனக்கு இருந்த தொடர்பை மறுத்த பின், சிறைபிடிக்கப்பட்ட நான்காம் நாளில் செர்ஜி அதனை ஒப்புக்கொண்டார்.

ஏனென்றால் அவர் வன்முறைக்கு ஆளானால் தற்செயலாக மற்றவர்களையும் சிக்க வைக்கக்கூடும் என்று அவர் பயந்தார்.

இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, டாட்டியானா தனது கணவரைத் தீவிரமாக தேடிக்கொண்டு, மருத்துவமனைகள் மற்றும் பிணவறைகளைத் தொடர்பு கொண்டு அந்தப் பகுதிகளுக்குச் சென்றதாகக் கூறுகிறார்.

அதுவரை மாஸ்கோவிற்கு வெளியே வாழ்ந்து வந்த அந்த தம்பதியரின் மகன், ரஷ்யாவில் உள்ள விசாரணைக் குழுவிலிருந்து, அதிபர் வரை உள்ள பல்வேறு அதிகாரிகளை தொடர்பு கொள்ளத் தொடங்கினார்.

செர்ஜி கைது செய்யப்பட்ட 10வது நாளில், பாதுகாப்பு படையினர் நோவோலியுபிமிவ்காவில் உள்ள டாட்டியானாவிடம் சோதனை நடத்த சென்றனர்.

தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, அந்த தம்பதியரின் சேமிப்பான 4,400 டாலர் பணத்தை அவர்கள் தோண்டி எடுத்தனர்.

செர்ஜி கைது செய்யப்பட்ட 39 நாட்கள் கழித்து, மே 7ஆம் தேதி அன்று தான், டாட்டியானா தனது கணவரின் இருப்பிடத்தைப் பற்றி அறிந்தார்.

“அவர் அடித்தளத்தில் இருக்கிறார். உளவு பார்த்ததாகவோ அல்லது எதிரிக்கு உதவியதாகவோ சந்தேகப்பட்டதால், அவரை ரஷ்ய பாதுகாப்பு சேவை (FSB) அழைத்துச் சென்றுள்ளது என டோக்மாக்கில் காவல்துறையினர் என்னிடம் கூறினார்கள்” என்கிறார் டாட்டியானா.

மே 26 அன்று, செர்ஜியிடம் தங்களை ரஷ்ய பாதுகாப்பு சேவை அதிகாரிகள் (FSB) என்று அறிமுகப்படுத்தியவர்கள், செர்ஜி வாக்குமூலம் அளித்ததை வீடியோவில் பதிவு செய்தனர்.

இரண்டு நாட்களுக்கு பிறகு, செர்ஜி எதிர்பாராத விதமாக விடுவிக்கப்பட்டார் .

ஆனால் அவரது ஓட்டுநர் உரிமத்தைத் தவிர, மற்ற அனைத்து ஆவணங்களும் அவரைக் கைப்பற்றியவர்களிடம் இருந்தது.

அவரது வாக்குமூலத்திற்குப் பிறகு அவர் ஏன் விடுவிக்கப்பட்டார் என்பது, இன்று வரை செர்ஜிக்கும் டாட்டியானாவுக்கும் புரியவில்லை.

செர்ஜி டோக்மாக்கில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்குச் சென்று மாற்று ஆவணங்களுக்கு விண்ணப்பித்தார், ஆனால் அப்பகுதியை ஆக்கிரமித்திருந்த ரஷ்ய அதிகாரிகள் அவருக்கு புதிய பாஸ்போர்ட்டை வழங்குவதற்கு தாமதித்தனர்.

பட மூலாதாரம், FAMILY ARCHIVE

படக்குறிப்பு, நோவோலியுபிமிவ்கா கிராமத்தில் உள்ள வோரோன்கோவ்ஸ் வீடு.செர்ஜி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரஷ்யாவின் பாதுகாப்பு சேவைகள் தங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தம்பதியினர் நம்புகிறார்கள்.

அவர்களது வீட்டைக் கண்காணிப்பதற்காக வெவ்வேறு கார்கள் தொடர்ந்து அப்பகுதியில் செல்கின்றன. மேலும் தெரியாத நபர்கள் அடிக்கடி வீட்டு வாசலுக்கு வந்து அவர்கள் ஏதாவது விற்கிறார்களா என்று கேட்பதும் உண்டு.

அவர்களை ஒருபோதும் தனியாக விட மாட்டார்கள் என்பது அந்த தம்பதிக்கு தெரியும்.

ஐரோப்பாவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, அவர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை விட்டு வெளியேற முடிவு செய்தனர்.

முதலில் ரஷ்யாவுக்குத் திரும்புவதன் மூலம், ஒரு புதிய பாஸ்போர்ட்டைப் பெற முடியும் என்று செர்ஜி நம்பினார், அதன்பின் அங்கிருந்து ஐரோப்பாவுக்குச் செல்ல அந்த தம்பதி திட்டமிட்டனர்.

டோக்மாக்கில் உள்ள அவர்களது அண்டை வீட்டார் அவர்களிடமிருந்து கால்நடை மற்றும் உபகரணங்களை வாங்கி உதவினர். அந்த தம்பதியால் அவர்களது நாய்களை வளர்க்க வேறு புதிய வீட்டை கண்டுபிடிக்க முடிந்தது. இது தான் அவரது மிகப்பெரிய கவலையாக இருந்தது என்கிறார் செர்ஜி.

அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய இரண்டு வாரங்கள் கழித்து ரஷ்ய ராணுவம் அவர்கள் வசித்த வீட்டுக்குள் நுழைந்தது என்று செர்ஜி கூறுகிறார்.

பட மூலாதாரம், FAMILY ARCHIVE

படக்குறிப்பு, நோவோலியுபிமிவ்காவில் உள்ள வீட்டில் செர்ஜி மற்றும் அவரது செல்லப்பிராணிகள்.ஒரு ரப்பர் வளையத்துடன் தப்பித்த தம்பதி

அவர்கள் நோவோலியுபிமிவ்காவை விட்டு வெளியேறும்போது, ரஷ்ய படையினர் அவர்களை நிறுத்தி விசாரிக்கலாம் என்று நினைத்து, தங்கள் மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக, வொரோன்கோவ்ஸ் தம்பதி ஒரு பொய்கதையை உருவாக்கினர்.

ரஷ்ய படையினரை நம்ப வைப்பதற்கு சில பொருட்களையும் அவர்கள் பயன்படுத்தினார்கள்.

அந்த தம்பதி தங்களது காரில் அகலமான விளிம்புடைய வைக்கோல் தொப்பி மற்றும் ரப்பர் வளையம் போன்ற கடற்கரை உபகரணங்களை ஏற்றிக்கொண்டனர். ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட டாட்டியானாவுக்கு சுத்தமான காற்று கிடைக்க கடலுக்குச் செல்வதாகக் கூறலாம் என அவர்கள் திட்டமிட்டனர்.

ஆனால் இறுதியில் அவர்கள் ரஷ்ய படையினரால் நிறுத்தப்படவில்லை.

இந்த தம்பதியினருக்கு முதலில் ரஷ்யாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

ஆனால் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருப்பதை நிரூபிக்கும் சான்றிதழை செர்ஜி அளித்த பிறகு, அவர்களால் மீண்டும் ரஷ்யாவுக்குள் நுழைய முடிந்தது.

பாஸ்போர்ட் பெறுவதில் மேலும் தாமதம் ஏற்பட்டது. பெலாரஸ் வழியாக ரஷ்யாவை விட்டு வெளியேற நினைத்து அவர்கள் செய்த முயற்சி தோல்வியுற்றது. பின்னர் டெலிகிராம் வழியாக, செர்ஜி தனது பெயரில் ஒரு போலி பாஸ்போர்ட்டை வாங்கினார்.

பின்னர் தம்பதியினர் பெலாரஸுக்கு பேருந்தில் பயணம் செய்து, செர்ஜியின் போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி எல்லையைத் தாண்டினர். அங்கிருந்து, அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடும், யுக்ரேனின் நெருங்கிய கூட்டாளியுமான லிதுவேனியாவுக்குச் சென்றனர்.

குடும்பத்தில் ஏற்பட்ட பிளவு

ஆனால் லிதுவேனியாவில் உள்ள எல்லைக் காவலர்கள் செர்ஜியின் ஆவணங்கள் போலியானவை என்பதைக் கண்டுபிடித்து அவரை விசாரணைக்கு முந்தைய காவல் மையத்தில் வைத்தனர்.

ஆனால் செர்ஜிக்கு அது ஒரு விரும்பத்தகாத அனுபவமாக தோன்றவில்லை.

“எல்லாவற்றையும் கடந்து வந்த பிறகு, வெளியேற முடியாத ஒரு விருந்தினர் மாளிகையில் இருப்பது போல் இருந்தது,” என்கிறார் செர்ஜி.

“வாரத்தில் இரண்டு முறை குளிக்க அனுமதிக்கிறார்கள். படுக்கைகள் சரியாக மாற்றப்படுகின்றன. உணவும் நன்றாக இருக்கிறது.”என்று செர்ஜி அந்த அனுபவத்தை விவரிக்கிறார்.

பட மூலாதாரம், Anadolu Agency via Getty Images

படக்குறிப்பு, போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான லிதுவேனியாவிற்குள் செர்ஜியால் நுழைய முடிந்ததுபோலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தியதற்காக லிதுவேனியா நீதிமன்றம் செர்ஜியை குற்றவாளி எனக் கண்டறிந்து அவருக்கு 26 நாட்கள் தண்டனை விதித்தது. அவர் ஏற்கனவே விசாரணைக்கு முந்தைய காவலில் இருந்தார்.

அந்த தம்பதியினர் இப்போது லிதுவேனியாவில் தஞ்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.  தற்போது அவர்கள் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான ஒரு தற்காலிக தங்குமிடத்தில் வசிக்கிறார்கள்.

செர்ஜி தம்பதி (வொரோன்கோவ்ஸ்) லிதுவேனியாவில் தஞ்சம் கோரி சமர்ப்பித்துள்ள விண்ணப்பத்தை ஆதரிக்கும் விதமாக, கியவ் நகரில் அவர்களுடன் முன்பு தொடர்பில் இருந்த நபரின் வேண்டுகோளின் பேரில், நன்றி தெரிவிக்கும் கடிதம் ஒன்றை யுக்ரேனிய ராணுவம் அவர்களுக்கு அனுப்பியது.

அந்தக் கடிதத்தின் நகலை பிபிசி பார்வையிட்டுள்ளது.

செர்ஜியின் 87 வயதான தாயார் இன்னும் ரஷ்யாவில் வசித்து வருகிறார். அவர் தனது மகனுடன் முரண்பட்ட கருத்துகளைக் கொண்டுள்ளார். முழுமையான படையெடுப்பு தொடங்கிய நேரத்தில், அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சிறிது காலத்திற்கு பேசிக்கொள்வதை நிறுத்தினர்.

செர்ஜி (வொரோன்கோவ்ஸ்) தம்பதியரின் மகனும் தற்போது ரஷ்யாவில் வசித்து வருகிறார். பெற்றோர் என்ன செய்தனர் என்பதை அறிந்தவுடன், அவரும் அவர்களுடன் கொண்டிருந்த தொடர்பை துண்டித்துவிட்டார்.

அவர்களது குடும்பத்தினர் இன்னும் ரஷ்யாவில் உள்ளபோதிலும், செர்ஜி தம்பதி ரஷ்யாவுக்குத் திரும்பப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர்.

“ரஷ்யா எப்போதாவது மனிதாபிமானத்தை காட்டத் தொடங்கினால் மட்டுமே,” என்று கூறும் செர்ஜி, “இப்போதைக்கு அங்கே நான் எந்த மனிதத்தன்மையையும் பார்க்கவில்லை.” என்கிறார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு