“போரின் நடுவே, பட்டினி” காஸா குழந்தைகளின் நிலைமை இதுதான்காணொளிக் குறிப்பு, காஸாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகள்”போரின் நடுவே, பட்டினி” காஸா குழந்தைகளின் நிலைமை இதுதான்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

காஸாவில் ஏற்பட்டுள்ள உணவு மற்றும் மருத்துவ உதவிகளின் தட்டுப்பாட்டால் அங்குள்ள குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சென்று பணியாற்றிய மருத்துவர்கள் காஸாவில் நிலவும் சூழ்நிலையை விவரிக்கின்றனர். மூன்று மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் விதித்த தடை, உதவிகளை காஸாவுக்குள் நுழையவிடவில்லை

“இந்த குழந்தைகள் மிகவும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர், சோர்ந்து வருகிறார்கள். இந்த அளவிலான ஊட்டச்சத்து குறைபாட்டைக் காண்பது அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு எல்லாம் காரணம் தடுப்பு நடவடிக்கைதான். ” என்கிறார் பிளாஸ்டிக் மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணரான விக்டோரியா ரோஸ்.

காஸாவைச் சேர்ந்த 5 மாத குழந்தையான சிவார் அஷூர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு வழக்கமான பால் பவுடர் அவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியதால், சிறப்பு வகை அவளுக்கு தேவைப்பட்டது.

“அவள் உடையை நான் மாற்றும்போதெல்லாம் ​​அவளுடைய உடல் மிகவும் மோசமாகவும் நீரிழப்புடனும் இருந்தது. அவள் எலும்புக்கூடு போல இருக்கிறாள். அவளைப் பார்த்தவுடனே அழ ஆரம்பித்து விடுகிறேன். அவள் இவ்வளவு மெலிந்து போனதை என்னால் சகிக்க முடியவில்லை.” என்கிறார் ஷிவாரின் தாய்

சிவாரின் நிலை சீரடைந்து, ஒரு வாரத்துக்கு முன்பு பரபரப்பான மருத்துவமனையில் இருந்து பால் கலவை டப்பாவுடன் அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

நிலைமை மிக மோசமாக உள்ளது. கூடாரத்தில் தங்கியிருக்கிறோம், அங்கே நிறைய பூச்சிகள் உள்ளன. பூச்சிகள் அவளை நோக்கி வருகின்றன. அவளை துணியால் போர்த்த வேண்டும். அப்போதுதான் எதுவும் அவளை தீண்டாது. சமீபத்திய நாட்களில் அவள் எடை மீண்டும் குறைந்துவிட்டதாக அவளுடைய தாய் கூறுகிறார்.

இஸ்ரேல் இப்போது காஸாவுக்குள் சில உதவிகளை அனுமதித்தாலும், சிவாருக்கு போதுமான ஊட்டச்சத்து எதுவும் கிடைக்கவில்லை.

மேலும் அவர், “தற்போது உணவோ ஊட்டச்சத்தோ கிடைக்கவில்லை. தண்ணீர் மாசடைந்துள்ளது. அதை அருந்தும் கட்டாயத்தில் உள்ளோம். எங்களிடம் உணவோ ரொட்டியோ இல்லை. அருகிலுள்ள உணவை மக்கள் கொள்ளையடிக்க முயன்றபோது தங்குமிடம் துப்பாக்கிச்சூடுக்கு இலக்கானது.”

“ராக்கெட்டுகளின் சத்தங்களைக் கேட்கும்போது, ​​அவள் திடுக்கிட்டு அழுகிறாள். அவளுக்கு இந்த விஷயங்கள் புரிகின்றன. டாங்கிகள், போர் விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகளின் சத்தம் மிக அதிகமாக இருக்கிறது, எங்களுக்கு அருகில் கேட்கிறது. இதனால், அவள் தூங்கிக் கொண்டிருந்தால், திடுக்கிட்டு எழுந்து அழுவாள்.” என்றார்.

மூன்று நாட்களுக்கு முன்பு காஸாவில் உணவு நெருக்கடி இல்லை என்று இஸ்ரேலிய அரசாங்கம் கூறியது. ஆனால் இப்போது அப்படியொரு நெருக்கடி ஏற்படுவதைத் தடுக்க, அங்கு உதவிகளை அனுமதிக்கத் தொடங்கியுள்ளது. அங்கு வாழ்க்கை என்பது பசியும், பயமும், மன அழுத்தமும் நிறைந்ததாகிவிட்டது.

பிரிட்டனைச் சேர்ந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான வாசிம் சயீத் சமீபத்தில் காஸாவில் இருந்து திரும்பியுள்ளார். இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கடுமையான குண்டுவெடிப்பு மற்றும் தீக்காயங்களுக்கு உள்ளான ஆறு வயது நூர் போன்ற பல குழந்தைகளுக்கு அவர் சிகிச்சை அளித்துள்ளார். காயங்கள் குணமடைவதை ஊட்டசத்து குறைபாடு மிகவும் கடினமாக்குவதாக அவர் கூறுகிறார்.

மேலும் அவர், “மக்கள் நம்பிக்கையை இழப்பதை நீங்கள் காணலாம். அவர்கள் எவ்வளவு மனச்சோர்வடைந்துள்ளனர் என்பதை காணலாம். அனைவரின் ஊட்டச்சத்து நிலையும் மோசமாக இருந்தது. அதனால் தோல் மாற்றும் சிகிச்சைகள் பலனளிக்கவில்லை. காயங்கள் குணமடையவில்லை.” என்றார்.

இவ்வளவு துன்பங்களை கண்ட பின்பும், அந்த பிரிட்டன் மருத்துவர் மீண்டும் காஸாவிற்கு செல்ல விரும்புகிறார்.ஒரு மனிதராக இது தனது கடமை என்று அவர் கூறுகிறார்.

“இவை எதுவும் நடக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு குழந்தையையும் பார்ப்பதற்கும் முன், உங்களின் சொந்தக் குழந்தைகள் நினைவுக்கு வருகின்றனர். அதையெல்லாம் நினைக்காமல் இருக்க முயற்சிக்கிறோம். இல்லையென்றால் வேலை செய்ய முடியாது. ‘இது என் மகளுக்குச் நடந்திருந்தால்?’ என்று நினைத்தால், அதை தாங்க முடியாது.” என்றார் டாக்டர் வசீம் சயீத்.

போரின் நடுவில்…ஒரு குழந்தையின் வாழ்க்கை மிகவும் பலவீனமானது. ஆனால் ஒவ்வொரு இதயத் துடிப்புக்கும் இடையில் மிகுந்த அன்புடன் நேசிக்கப்படுகிறது.