கிளாசன் மின்னல் வேக சதம்! வரலாற்றில் அழுத்தமாக தடம் பதித்து விடைபெற்றது சன்ரைசர்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹென்ரிச் கிளாசன் அதிவேக சதம்.எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஹென்ரிச் கிளாசனின் அதிவேக சததத்தால் 2025 ஐபிஎல் சீசனை வெற்றியுடன் முடித்து, 6வது இடத்தோடு விடைபெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 68-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்லத்தா நைட் ரைடர்ஸ் அணியை 110 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் சேர்த்தது. 279 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 18.4 ஓவர்களில் 168 ரன்களுக்கு ஆட்டமிழந்து 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ருத்ரதாண்டவம் ஆடிய கிளாசன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரைசதம் அடித்த கிளாசன் 300 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்தார்.சன்ரைசர்ஸ் அணிக்கு கடந்த பல சீசன்களாகவே பெரிய ஸ்கோர்களையும், அதிரடி வெற்றிகளையும் கிளாசன் பெற்றுக் கொடுத்துள்ளார். அந்த வரிசையில் நேற்றைய ஆட்டமும் முக்கிய மைல்கல்லாகும். 39 பந்துகளில் 105 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த கிளாசன் கணக்கில் 9 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். 17 பந்துகளில் அரைசதம் அடித்த கிளாசன் 300 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்தார், இறுதியாக முடிக்கும்போது 269 ஸ்ட்ரைக் ரேட்டில் கிளாசன் இருந்தார்.

3வது விக்கெட்டுக்கு இஷான் கிஷனுடன் பேட் செய்த கிளாசன் 20 பந்துகளில் அரைசதம் அடித்தனர். 19வது ஓவரில்தான் கிளாசன் 37 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். இஷான் கிஷன் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷனுடன் 3வது விக்கெட்டுக்கு கிளாசன் 83 ரன்கள் சேர்த்தார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

கிளாசன் அதிரடி ஆட்டத்தை நிகழ்த்துவதற்கு முன் டிராவிஸ் ஹெட் தனது வானவேடிக்கையை முடித்துவிட்டு சென்றார். 6 சிக்ஸர்கள், 6பவுண்டரிகள் உள்பட 40 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஹெட் ஆட்டமிழந்தார். கடந்த பல போட்டிகளாக ஃபார்மின்றி தவித்த டிராவிஸ் ஹெட் கடைசி லீக்கில் சிறப்பாக ஆட்டத்தை முடித்திருப்பது, டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு செல்லும்போது நம்பிக்கையளிக்கும். 26 பந்துகளில் அரைசதம் அடித்த ஹெட்டின் ஆட்டத்தால், சன்ரைசர்ஸ் அணி பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 79ரன்கள் சேர்த்தது.

அபிஷேக் சர்மா 32 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு அபிஷேக், ஹெட் 92 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். 2வது விக்கெட்டுக்கு ஹெட், கிளாசன் ஜோடி 83 ரன்கள் சேர்த்தனர். இந்த 3 பார்ட்னர்ஷிப்புகளும் தான் சன்ரைசர்ஸ் அணி பெரிய ஸ்கோரை அடைய காரணமாகும்.

பாவப்பட்ட கொல்கத்தா பந்துவீச்சாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொல்கத்தா பந்துவீச்சாளர்களில் வைபவ் அரோரா மட்டுமே ஓவருக்கு 9 ரன்கள் வீதத்தில் வாரி வழங்கினார்.கொல்கத்தா பந்துவீச்சாளர்களில் வைபவ் அரோரா மட்டுமே ஓவருக்கு 9 ரன்கள் வீதத்தில் வாரி வழங்கினார். மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 13 ரன்களுக்கும் மேலாக கொடை வள்ளலாக மாறி ரன்களை வாரிக் கொடுத்தனர். வேகப்பந்துவீச்சாளர்கள் நோர்க்கியா, அரோரா, ராணா ஆகியோர் மட்டும் 11 ஓவர்கள் வீசி 139 ரன்களை வழங்கி ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

சுழற்பந்துவீச்சாளர்கள் நரேன், வருண் இருவரும் 7 ஓவர்கள் வீசி 96 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரஸல் 2 ஓவர்கள் வீசி 34 ரன்கள் கொடுத்தார். ஆன்ரிச் நோர்க்கியா 4 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதுமின்றி 60 ரன்களை வழங்கினார், வருண் 54 ரன்கள் என மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.

டெல்லி மைதானம் சிறியது, இதில் அதிகவேகமாக பந்துவீசும்போது, பேட்டர்கள் வேகமாக டிபெண்ட் செய்தாலே பந்து பவுண்டரிக்கு பறந்துவிடும், சிக்ஸருக்கு லேசாக முயற்சித்து சரியான ஷாட்களை ஆடினால் எளிதாக சிக்ஸருக்கு பறந்துவிடக்கூடிய மைதானம்.

இதில் ராணா, நோர்க்கியா ஆகியோர் மணிக்கு 145 கி.மீ வேகத்துக்கு மேல் பந்துவீசியது பெரிய தவறாகும். அதேபோல வருண், நரேன் பந்துவீச்சில் வழக்கமான லைன் லென்த் கிடைக்காமல் திணறினர். இதனால் இருவரும் சிறிய தவறு செய்து பந்தை ஸ்லாட்டில் போட்டவுடன் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பந்து பறந்தது. குறிப்பாக கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற இன்டென்ட் இல்லாமல் சில நேரங்களில் செயல்பட்டது வெளிப்படையாகத் தெரிந்தது.

சுனில் நரேனால் பவுண்டரி கொடுக்காமலும் ஒரு ஓவரை வீச முடிந்தது, இருப்பினும் அதைத் தொடர்ந்து செயல்படுத்த அவரால் முடியவில்லை. ஆடுகளமும் பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாக மாற்றப்பட்டிருந்ததால், பந்துவீச்சாளர்களின் நிலைமை பரிதாபமாக இருந்தது.

3-வது அதிகபட்ச ஸ்கோர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் 3வது அதிகபட்ச ஸ்கோரை நேற்று பதிவு செய்தது.ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் அணி 3வது அதிகபட்ச ஸ்கோரை நேற்று பதிவு செய்தது. இதற்கு முன்பாக, 2024ம் ஆண்டு ஆர்சிபிக்கு எதிராக 284 ரன்களையும், இந்த சீசனில் ராஜஸ்தானுக்கு எதிராக 286 ரன்களை பதிவு செய்ததும் சன்ரைசர்ஸ் அணிதான். இப்போது 3வது அதிகபட்சமாக ஸ்கோராக நேற்று டெல்லியில் கொல்கத்தா அணிக்கு எதிராக 278 ரன்களையும் பதிவு செய்தது.

ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் வரிசையில் முதல் 6 இடங்களில் ஐந்தில் சன்ரைசர்ஸ் அணியே இருக்கிறது.

3வது அதிவேக சதம்

3வது இடத்தில் களமிறங்கிய ஹென்ரிச் கிளாசன் கொல்கத்தா பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். 17 பந்துகளில் அரைசதம் அடித்த கிளாசன் அடுத்த 20 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து 37 பந்துகளில் சதத்தை நிறைவு செய்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த 3வது வீரர் என்ற பெருமையை கிளாசன் பெற்றார். சுனில் நரேன் பந்துவீச்சில் 10 பந்துகளில் 24 ரன்கள், வருண் பந்துவீச்சில் 12 பந்துகளில் 36 ரன்கள் என கிளாசன் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார்.

இதற்கு முன் கிறிஸ் கெயில் 30 பந்துகளிலும், வைபவ் சூர்யவம்சி 35 பந்துகளிலும் அதிவேகமாக சதம் அடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எந்த பேட்டரும் பொறுப்பாக சேஸ் செய்யும் நோக்கில், நிதானமாக பேட் செய்யவில்லை.இமாலய இலக்கை துரத்திய கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக மணிஷ் பாண்டே 37 ரன்களும், ஹர்சித் ராணா 34, சுனில் நரேன் 31 ரன்களும் சேர்த்தனர். மற்ற அனைத்து பேட்டர்களும் 20 ரன்களுக்குள்ளாகவே ஆட்டமிழந்தனர். மிகப்பெரிய இலக்கு, ஏற்கெனவே தொடரிலிருந்து வெளியேறிவிட்டோம், இதில் வென்றாலும் பலன் இல்லை என்ற வெறுமை ஆகியவை நேற்று கொல்கத்தா பேட்டர்களிடம் தெளிவாகத் தெரிந்தது.

இதனால் எந்த பேட்டரும் பொறுப்பாக சேஸ் செய்யும் நோக்கில், நிதானமாக பேட் செய்யவில்லை. களத்துக்கு வருவதும், போவதுமாக பேட்டர்கள் இருந்தனர், ஹர்சித் ராணா, மணிஷ் பாண்டே தவிர மற்ற அனைத்து பேட்டர்களும் 20 பந்துகளுக்கும் குறைவாகவே சந்தித்து ஆட்டமிழந்தனர். சன்ரைசர்ஸ் தரப்பில் உனத்கட், மலிங்கா, ஹர்ஸ் துபே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

“அற்புதமாக முடித்துள்ளோம்”

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ்சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறுகையில், “அற்புதமாக தொடரை முடித்துள்ளோம். இந்த சீசனில் கடந்த சில போட்டிகளில் சில விஷயங்கள் சிறப்பாக நடந்தன. எங்களுக்கு தகுதி இருக்கிறது. ஆனால், சில போட்டிகளில் தவறுகளை சரி செய்து விளையாடவில்லை. பலமுறை பைனல் சென்றிருக்கிறோம், ஆனால் இந்த ஆண்டு எங்களால் முடியவில்லை. போட்டிகளிலும் எதிர்பார்த்த அளவு விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை.

அணியில் உள்ள சில வீரர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது, அதை அவர்கள் சரியாக பயன்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது. சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டபோதிலும், 20 வீரர்களையும் பயன்படுத்தி, வாய்ப்பு வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

இந்த வெற்றியால் சன்ரைசர்ஸ் அணி 2025 ஐபிஎல் சீசனில் 6 வெற்றிகள், ஒரு போட்டி ரத்து என மொத்தம் 13 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் முடித்தது. இருப்பினும் சன்ரைசர்ஸ் அணியின் நிகர ரன்ரேட் மைனஸ் 0.241 என்ற அளவே இருந்தது.

கடைசி இரு போட்டிகளில் பெற்ற வெற்றியால் சன்ரைசர்ஸ் அணிக்கு எந்தப் பலனும் இல்லாவிட்டாலும் 2 வெற்றிகளும் முன்பே கிடைத்திருந்தால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றிருக்கலாம்.

நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 14 போட்டிகளில் 5 வெற்றிகள், 2 போட்டிகள் மழையால் ரத்தால் 12 புள்ளிகளுடன் -0.305 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் முடித்துள்ளது. ரஹானே தலைமையில் களமிறங்கிய நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி பெரிய எதிர்பார்ப்புடன் சீசனுக்குள் வந்து, 8வது இடத்தோடு முடித்தது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.எதிர்வரும் முக்கிய ஆட்டங்கள்

இன்றைய ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

இடம்: ஜெய்பூர்

நேரம்: இரவு 7.30

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

ஆர்சிபி vs லக்னெள

நாள் – மே 27

இடம் – லக்னெள

நேரம்- இரவு 7.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-638 ரன்கள்(13 போட்டிகள்)

சுப்மான் கில் (குஜராத் டைட்டன்ஸ்)-636 ரன்கள்(13 போட்டிகள்)

சூர்யகுமார் யாதவ்(மும்பை இந்தியன்ஸ்) 583 (13 போட்டிகள்)

நீலத் தொப்பி யாருக்கு?

நூர் அகமது(சிஎஸ்கே) 24 விக்கெட்டுகள்(14போட்டிகள்)

பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 23 விக்கெட்டுகள்(14 போட்டிகள்)

டிரன்ட் போல்ட் (மும்பை) 19 விக்கெட்டுகள்(13 போட்டிகள்)

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு