மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை அமைச்சு மட்டத்தில் முன்னெடுத்துவருதாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்திருக்கும் நிலையில், மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கினால் கொண்டுவரப்படும் தனிநபர் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் தனிநபர் சட்டமூலமொன்றை சமர்ப்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டு வியாழக்கிழமை (22) வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்கு அமைச்சு மட்டத்தில் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதனை விரைவாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் மாகாணசபைகள், உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும் பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன வெள்ளிக்கிழமை (23) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட சுமந்திரன், மாகாணசபைத்தேர்தல் சட்டத்தில் 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தத்தை நீக்கி, மாகாணசபைத்தேர்தலை மீண்டும் பழைய முறைமையிலேயே நடத்துவதற்கு ஏதுவாக தான் 2019 ஆம் ஆண்டிலும், பின்னர் 2023 ஆம் ஆண்டிலும் கொண்டுவந்த சட்டமூலம் நிறைவேற்றப்படவில்லை எனவும், அச்சட்டமூலமே தற்போது சாணக்கியனால் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

2019 ஆம் ஆண்டில் அத்தனிநபர் சட்டமூலத்தை முன்வைத்து சில நாட்களில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாகவும், 2023 ஆம் ஆண்டில் அச்சட்டமூலத்தை மூன்றாம் வாசிப்புக்கு எடுக்கவேண்டியிருந்த நிலையில், அது நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கப்பட்டதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது அரசாங்கமும் மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை அமைச்சு மட்டத்தில் முன்னெடுத்துவருதாக அமைச்சர் சந்தன அபேரத்ன கூறியிருக்கும் நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கினால் கொண்டுவரப்படும் இத்தனிநபர் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் மாகாணசபைத்தேர்தல் உடனடியாக நடத்தப்படவேண்டும் எனவும், இனியும் காலதாமதம் செய்யப்படக்கூடாது எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.