வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், காணிகளின் உரிமைகளைக் கொண்டுள்ள மக்களுக்கு உடனடியாக காணிகளை கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் காணி உரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக பாராளுமன்றத்தின் குழு அறையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே பிரதமர்  இவ்வாறு தெரிவித்தார்.

இதுவரை காலமும் வடக்கு மற்றும் கிழக்கில் நில உரிமைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்னைய அரசாங்கங்கள் மேற்கொண்ட திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளன 

சில குழுக்கள் மோசடியாக நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளதாகவும், தற்போதைய அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்கும் என்று மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

பொதுமக்களின் சந்தேகங்களைப் போக்க முறையான வழிமுறையை அறிமுகப்படுத்தி, சட்டப்பூர்வ உறுதிப்படுத்தல்களுடன் மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது.

மக்களின் நிலங்களை எந்த வகையிலும் கையகப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு எந்த எண்ணமும் இல்லை.

அதன்படி, மக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்துரையாடிய பின்னர் எதிர்காலத்தில் ஒரு சரியான தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். அதற்கான தேவையான மேலதிக நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என தெரிவித்தார்.