இளம் படையுடன் கிளம்பும் சுப்மன் கில் – இந்திய அணியின் அடுத்த அத்தியாயம் இவர்களா?

பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், க. போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக24 மே 2025, 13:49 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் என நமக்கு மிகப்பரிட்சயமான கிரிக்கெட் வீரர்கள் இனி இந்திய டெஸ்ட் அணியில் இல்லை. இவர்களுக்கு பதிலாக பல இளம் தலைமுறை வீரர்களுக்கான கதவு இந்திய அணியில் திறந்துள்ளது.

ஜூன் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள பட்டோடி டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியும், 5 போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கான புதிய கேப்டன் பெயரும் பிசிசிஐ தேர்வுக் கூட்டத்தில் இன்று (மே24) அறிவிக்கப்பட்டது

இதன்படி, சுப்மன் கில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார், துணைக் கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் வரிசையில் சுப்மன் கில் 5வது இடத்தில் உள்ளார். இவருக்கு முன்னதாக மன்சூர் அலிகான் பட்டோடி, சச்சின் டெண்டுல்கர், கபில் தேவ் , ரவி சாஸ்திரி ஆகியோர் இளம் வயதில் இந்திய அணியை தலைமை தாங்கியுள்ளனர்.

பிரிட்டனில் டெஸ்ட் விளையாடுவது என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவு. அதேநேரம் சவாலானதும் கூட. சிறந்த பேட்டர், பந்துவீச்சாளரின் திறமை பிரிட்டன் மண்ணில் அங்கீகரிக்கப்படும், மதிக்கப்படும், உலகரங்கில் உயர்த்தப்படுவார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இங்கிலாந்து தொடரிலிருந்துதான் கங்குலி, திராவிட் போன்ற ஜாம்பவான்கள் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. ஆதலால், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஒரு வீரர் முத்திரை பதித்துவிட்டால் அவரின் கிரிக்கெட் வாழ்க்கை உலகளவில் கவனிக்கப்படும்.

வாய்ப்பும், சவாலும் ஒன்றாகக் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து கில் தலைமையில் இந்திய அணியின் டெஸ்ட் சகாப்தம் தொடங்குகிறது. அது மட்டுமல்லாமல் 2025-27ம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றுப் போட்டியும் இதிலிருந்து தொடங்குகிறது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். ரோஹித் சர்மா, கோலி, அஸ்வின், ஷமி ஆகிய சீனியர் வீரர்கள் இல்லாத சூழலில், பல புதிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கதவுகள் இந்திய அணியில் திறக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் தமிழக வீரர் சாய் சுதர்சன், அர்ஷ்தீப் சிங், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் முதல்முறையாக வாய்ப்புப் பெற்றுள்ளனர். அபிமன்யு ஈஸ்வரன் பலமுறை இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றாலும் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டதில்லை, இந்த முறையும் அதே நிலையா என்பது தொடரில் தெரிந்துவிடும்.

நீண்டஇடைவெளிக்குப்பின் கருண் நாயர், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் டெஸ்ட் அணிக்குள் மீண்டும் திரும்பியுள்ளனர்.

பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்த நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்புக் கிடைத்துள்ளது. ஸ்பெசலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார். மற்றவகையில் குல்தீப் யாதவுடன் சேர்ந்து சுழற்பந்துவீச ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குஜராத் அணியில் சாய் சுதர்சனின் பங்களிப்பு அவருக்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது18 ஆண்டுகளுக்கு முந்தைய வெற்றி

பிரிட்டனில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்கில் ஜூன் 20ம் தேதி தொடங்குகிறது. 2வது டெஸ்ட் போட்டி ஜூலை 2ம் தேதி எச்ஜ்பாஸ்டனிலும், 3வது டெஸ்ட் போட்டி ஜூலை 10 ம்தேதி லார்ட்ஸ் மைதானத்திலும், ஜூலை 23ம் தேதி ஓல்ட் டிராபோர்டில் 4வது டெஸ்ட் போட்டியும், 5வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்திலும் நடக்கிறது.

கடைசியாக பட்டோடி டிராபி டெஸ்ட் தொடரை 2007ம் ஆண்டு ராகுல் திராவிட் தலைமையிலான இந்திய அணி 1-0 என்று வென்றது. அதன்பின், கடந்த 18 ஆண்டுகளாக இந்திய அணி பிரிட்டன் மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இளம் கேப்டன் கில் தலைமையிலான அணி சாதிக்குமா என்பது எதிர்பார்ப்புதான்.

இந்திய அணி குறித்த பார்வை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகார்கர்பட்டோடி டிராபி டெஸ்ட் தொடருக்காக 18 வீரர்கள் கொண்ட இந்திய அணியை தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவினர் இன்று (மே24) அறிவித்தனர்.

அந்த வகையில் கேப்டனாக சுப்மன் கில், துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்கால இந்திய அணியை கட்டமைக்கும் பொருட்டு 30 வயதுக்குள் இருக்கும் வீரர்களுக்கே அதிகமான முன்னுரிமை தரப்பட்டுள்ளது. ரவீந்திர ஜடேஜா, கருண் நாயர், பும்ரா மட்டுமே 30 வயதைக் கடந்தவர்கள், மற்ற வகையில் இளம் வீரர்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பேட்டிங் வரிசையில் கே.எல்.ராகுல், சுப்மன் கில், ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ரிஷப் பண்ட், சாய் சுதர்சன், கருண்நாயர், துருவ் ஜூரெல் ஆகியோர் உள்ளனர். இதில் தொடக்க வீரருக்கு சுப்மன் கில், ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் உள்ளனர்.

கோலியின் இடத்தில் யார்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விராட் கோலியின் இடத்தில் கேஎல் ராகுல் விளையாட வாய்ப்புடெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் இடத்தை நிரப்ப சாய் சுதர்சன் பயன்படுத்தப்படலாம் என்றாலும், சுப்மன் கில்லுடன் ஆட்டத்தை சாய் சுதர்சன் தொடங்கவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு இருந்தால், விராட் கோலியின் 4வது இடத்தில் கருண் நாயர் அல்லது கே.எல்.ராகுல் களமிறங்கலாம்.

ரிஷப் பண்டுக்கு மாற்று விக்கெட் கீப்பராக துருவ் ஜூரெல், கே.எல்.ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆல்ரவுண்டர்கள்

ஆல்ரவுண்டர்கள் வரிசையில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக ஷர்துல் தாக்கூர், நிதிஷ் குமார் ரெட்டியும், சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

5 வேகப்பந்து வீச்சாளர்கள்

பிரிட்டன் மைதானங்கள் வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும், நன்கு ஸ்விங் ஆகும், இந்திய அணி டெஸ்ட் ஆடும்போது அங்கு குளிர்காலம் இருக்கும் என்பதால் பந்து நன்றாக ஸ்விங் ஆகும் என்பதால் வேகப்பந்துவீச்சுக்கு முன்னுரிமை அளி்க்கப்பட்டுள்ளது.

பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் ஆகியோரும், ஸ்பெசலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முகமது ஷமி காயத்திலிருந்து முழுமையாக குணமடையவில்லை, தொடர்ந்து 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் அளவு உடல்நிலை தகுதியாக இல்லை என்பதால், அவர் பெயர் பரிசீலனையில் இல்லை. பார்டர் கவாஸ்கர் தொடரில் இருந்த சர்ஃபராஸ் கான், ஹர்ஷித் ராணா, தேவ்தத்படிக்கல், தனுஷ் கோட்டியான் ஆகியோர் பெயரும் பரிசீலிக்கப்படவில்லை.

இந்திய அணி விவரம்

சுப்மன் கில்(கேப்டன்) ரிஷப் பண்ட்(துணைக் கேப்டன்), ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, சாய் சுர்சன், அபமன்யு ஈஸ்வரன், கருண் நாயகர், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், அர்ஷ்தீப் சிங்.

பட மூலாதாரம், Getty Images

தமிழக வீரர் இருவருக்கு வாய்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தமிழக வீரர்கள் சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் தொடரில் சாய் சுதர்சனின் அற்புதமான ஆட்டம் அவருக்கான இடத்தை டெஸ்ட் அணியில் உறுதி செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் மிஸ்டர் கன்சிஸ்டென்சி எனப் பெயரெடுத்த சுதர்சன் இங்கிலாந்து தொடரில் எப்படி செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேபோல வாஷிங்டன் சுந்தரும் தொடருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அபிமன்யு ஈஸ்வரனின் இவரின் தந்தை தமிழர், தாய் பஞ்சாபி என்றாலும், அவர் மேற்கு வங்க அணிக்காக ஆடுகிறார்.

கில்லுக்கு புதிய அனுபவம்

பட மூலாதாரம், Getty Images

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில், இந்திய ஒருநாள் அணி அல்லது டெஸ்ட் அணியை இதற்கு முன் வழிநடத்தியது இல்லை.

ஆனால் 2024ம் ஆண்டு ஜிம்பாப்பே சென்ற இந்திய T20 அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக இருந்து வழி நடத்தியிருக்கிறார்.

2020-21 ம் ஆண்டு ஆஸ்திரேலியத் தொடரில்தான் டெஸ்ட் போட்டியில் சுப்மன் அறிமுகமாகினார். இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய கில் 5 சதங்கள், 7 அரைசதங்கள் உள்பட 1,893 ரன்கள் சேர்த்து 35 சராசரி வைத்துள்ளார். உள்நாட்டுப் போட்டிகளில் கில் 42 சராசரியும், வெளிநாடுகளில் 27 சராசரியும் வைத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக சுப்மன் கில் இதுவரை 2021-24 வரை 10 போட்டிகளில் ஆடி 592 ரன்கள் சேர்த்துள்ளார், இதில் பிரிட்டன் மண்ணில் 3 டெஸ்ட் போட்டியில் ஆடிய கில் 88 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். சொந்த மண்ணில் அதிகமான ரன்கள் குவித்த கில், வெளிநாடுகளில் பெரிதாக இதுவரை ரன்கள் குவித்ததில்லை.

8 ஆண்டுகளுக்குப்பின் கருண் நாயர்

பட மூலாதாரம், Getty Images

கருண் நாயர் கடைசியாக 2017ம் ஆண்டு மார்ச் 25 முதல் 28ம் தேதிவரை நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக பங்கேற்றார். அதன்பின் 8 ஆண்டுகளுக்குப்பின் கருண் நாயர் இப்போது மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். இதுவரை 6 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடிய கருண் நாயர் முச்சதம்(303) அடித்ததுதான் சிறந்த பேட்டிங்காக பார்க்கப்படுகிறது.

அதைத் தவிர்த்து உள்நாட்டுப் போட்டிகளில் முதல்தரப் போட்டிகளிலும், லிஸ்ட் ஏ போட்டிகளிலும் 100 ஆட்டங்களுக்கு மேல் ஆடிய அனுபவ வீரர் என்பதாலும், பிரிட்டனில் கவுண்டி போட்டிகளில் ஆடிய அனுபவம் இருப்பதாலும் சமீபத்திய உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடியதாலும் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஸ்ரேயாஸ், ஷமி ஏன் இல்லை

பட மூலாதாரம், Getty Images

ஸ்ரேயாஸ், ஷமி பெயர் ஏன் பரிசீலிக்கப்படவில்லை என்பதற்கு தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் கூறுகையில் “கணுக்கால் காயத்திலிருந்து உடல்நலன் தேறி ஷமி இப்போதுதான் வந்துள்ளார். ஐபிஎல் ஆடியபின் மீண்டும் லேசாக வலிவரத் தொடங்கியுள்ளது. அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தில் அவரால் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடும் நிலையில் உடல்நிலை இல்லை எனத் தெரியவந்தது. இதனால் அவருக்கு கூடுதலாக ஓய்வு அளிக்கப்பட்டது.

ஸ்ரேயாஸ் அய்யர் சிறந்த வீரர். ஒருநாள், டி20 போட்டிக்கான சிறந்த வீரர். உள்நாட்டுப் போட்டிகளிலும் சிறப்பாக ஸ்ரேயாஸ் ஆடியுள்ளார். இப்போதுள்ள நிலையில் டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸுக்கு இடமில்லை” எனத் தெரிவித்தார்.

வேகப்பந்துவீச்சு வலிமையாக இருக்கிறதா?

பட மூலாதாரம், Getty Images

வேகப்பந்துவீச்சாளர்கள் தேர்வு குறித்து அகர்கர் கூறுகையில் ” வேகப்பந்துவீச்சுக்கு முன்னுரிமை அளித்து வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம். பும்ராவால் 5போட்டிகளிலும் பங்கேற்க முடியாது, அவரின் வேலைப்பளுவை கவனத்தில் வைத்திருக்கிறோம். அர்ஷ்தீப் சிங் புதிய பந்தில் நன்கு ஸ்விங் செய்யக்கூடியவர், அதிலும் பிரிட்டன் மண்ணில் அவரால் சிறப்பாக பந்துவீச முடியும். கவுண்டி அணியிலும் அர்ஷ்தீப் ஆடியுள்ளார்.

நிதிஷ், ஷர்துல் இருவரும் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள். சில நேரத்தில் கடைசிவரை பேட்டர்கள் தேவை எனும் பட்சத்தில் இருவரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். வேகப்பந்துவீச்சில் வெரைட்டி தேவை என்பதை கருதி வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

சுப்மன் கில் எழுச்சி எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விராட் கோலியுடன் சுப்மன் கில்சுப்மன் கில் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து தேர்வுக் குழுத்தலைவர் அகர்கர் பேசுகையில் ” ரோஹித் சர்மாவுக்குப்பின் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்க பல வாய்ப்புகளை கடந்த ஓர் ஆண்டாக பரிசீலித்தோம், அலசினோம். வீரர்களிடமிருந்தும் ஓய்வறையில் இருந்து கருத்துக்களைக் கேட்டோம். அதில் சுப்மன் கில் குறித்து நல்லவிதமான கருத்துக்கள் வந்தன. இளம் வீரர், தொடர்ந்து தன்னை வளர்த்து வருகிறார். கடந்த ஆண்டைப் போல் கில் இப்போது இல்லை, அடுத்த ஆண்டு இதைவிட சிறந்தவராக இருப்பார் என நம்புகிறோம்.

ஏதோ ஒரு சில டூருக்காக மட்டும் கேப்டன்களை தேர்வு செய்யக்கூடாது. கடந்த ஆண்டிலிருந்து கில் ஆட்டம் வளர்ந்து வருகிறது. நிச்சயமாக சிறந்த கேப்டனாக கில் வருவார். இங்கிலாந்து தொடரில் ஒவ்வொருவரின் திறமையும் பரிசோதிக்கப்படும். ஆஸ்திரேலியத் தொடரில் கில் சிறப்பாக செயல்பட்டார். ரோஹித், கோலி இல்லாத நிலையில் இளம் வீரர்கள் கொண்ட அணிக்கு நிச்சயமாக சவாலாக இந்தத் தொடர் அமையும். பேட்டிங்கைப் பொருத்தவரை கவலை இல்லை, அனுபவம்தான் அடுத்தடுத்து வளர்த்தெடுக்கும்.

ரிஷப் பண்ட் கடந்த 2 ஆண்டுகளில் சிறந்த பேட்டராக உருவெடுத்துள்ளார். சுப்மன் கில்லுக்கு நிச்சயமாக ரிஷப் பண்ட் துணையாக இருப்பார். இரு இளம் வீரர்களுமே அணியை முன்னோக்கி அழைத்துச் செல்வார்கள் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு