பூநகரி முழங்காவில் பகுதியினில் சட்டவிரோதமாக அரச காணிகளை இரவோடிரவாக பிடித்து கடைகளை நிர்மாணித்தரவர்கள் தேசிய மக்கள் சக்தியின் கரியாலைநாகபடுவான் பகுதியில் உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிட்டு தோற்கடிக்கப்பட்டவரென தெரியவந்துள்ளது.அதேவேளை அவரது சகோதரர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் எடுபிடியெனவும் காணி பிடிக்கமுற்பட்டவர் சித்தப்பா என்பதும் அம்பலமாகியுள்ளது.

முழங்காவில் பகுதியில் நாச்சிக்குடா சந்தியை அண்மித்து மன்னார் – யாழ்ப்பாணம் வீதியோரமாக நேற்றுமுன்தினமிரவு முதல் தடாலடியாக அரச காணிகளில் கடைகள்  சில முளைத்துள்ளன.நிரந்தரமாக இரும்பினால் ஒட்டப்பட்டதும் தகரங்களால் வேயப்பட்டதுமானதாக அக்கடைகள் இருந்துள்ளன.

பொதுப்போக்குவரத்திற்கு அபாயத்தை தரக்கூடியதும் அனுமதியற்றதுமான கட்டுமானங்களை தயவு தாட்சணியமின்றி அகற்ற வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ள நிலையில் அவை தொடர்பில் பொதுமக்களால் முறைப்பாடுகள் பூநகரி பிரதேசசபைக்கு செய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்து செயலாளர் மற்றும் வருமான வரிபரிசோதகர் நிலைய பொறுப்பதிகாரி சகிதம் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.உரிமை கோரப்படாத நிரந்தர தகரக்கொட்டகைக்கு பகிரங்கமாக அகற்றுவதற்கான எச்சரிக்கை அறிவித்தல்களை ஒட்டிய அதிகாரிகள் அருகாக தொடர்ந்து நிர்மாண வேலையில் ஈடுபட்டிருந்த மற்றைய வர்த்தக நிலையத்தினரிடம் அனுமதியை பெற்று வேலையை  முன்னெடுக்க கோரியிருந்தனர்.

இந்நிலையில் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பில் புகைப்படமெடுக்க முற்பட்டவர்களை தாக்க முற்பட்ட அங்கிருந்த கும்பலொன்று கைத்தொலைபேசியை பறிக்கவும் முற்பட்டுள்ளது.இதனையடுத்து அவர்களை எச்சரித்த அதிகாரிகள் காவல்துறையில் முறையிட்டனர்.

அதனையடுத்து சம்பவ இடத்திலிருந்தவர்களை காவல்நிலையத்திற்கு தருவித்த பொலிஸார் எச்சரிக்கை விடுத்ததுடன் கைது செய்ய முற்பட்டிருந்தனர்.எனினும் அதனை  மறுதலித்த பிரதேசசபை செயலர் சட்டவிரோத கட்டுமானங்களை முன்னெடுக்கவேண்டாமெனவும் உரிய அனுமதியை பெற்ற பின்னர் பணிகளை முன்னெடுக்கலாமெனவும் தெரிவித்து வெளியேறியதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் அதிகாரிகளை தாக்க முற்பட்டவர்கள் தேசிய மக்கள் சக்தியின் சந்திரசேகரனினதும் இளங்குமரனினதும் குண்டர்படை என தெரியவந்துள்ளது.