பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குஜராத் டைட்டன்ஸ் அணியினரை வீழ்த்திய லக்னௌ சூப்பர் ஜயண்ட்ஸ் அணியினர். எழுதியவர், க.போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக44 நிமிடங்களுக்கு முன்னர்

2025ம் ஆண்டு ஐபிஎல் டி20 சீசன் கடைசி நேரத்தில் பரபரப்படைந்துள்ளது, ப்ளே ஆஃப் சுற்றுக்கு 4 அணிகள் தகுதி பெற்ற நிலையில், 4 இடங்களில் எந்தெந்த அணி இடம்பெறும் என்பது கணிக்க முடியாததாகவே அமைந்திருக்கிறது. இதனால் குவாலிஃபயர், குவாலிஃபயர்-2 சுற்று எந்தெந்த அணிகளுக்கு நடக்கும் என்பது சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

ஆமதாபாத்தில் நேற்று (மே 22) நடந்த ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னெள அணி.

இந்த வெற்றியால் லக்னெள அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் வரமுடியாது என்றாலும், தன்னால் இயன்ற சேதாரத்தை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகளுக்கு ஏற்படுத்த முடியும்.

முதலில் பேட் செய்த லக்னெள அணி 2 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் சேர்த்தது. 236 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணி, 9 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் மட்டுமே சேர்த்து 33 ரன்களில் தோல்வி அடைந்தது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இந்த தோல்வியால் குஜராத் அணி 18 புள்ளிகளுடன், 0.602 நிகர ரன்ரேட்டில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. லக்னெள அணி 12 புள்ளிகளுடன் மைனஸ் 0.337 ரன்ரேட்டில் 6-வது இடத்தில் இருக்கிறது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பிளே ஆஃப் சுற்றில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணி முதல் தகுதிச்சுற்றில் விளையாடும் அதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும். 3வது மற்றும் 4வது இடத்தில் உள்ள அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் வெல்லும் அணி, முதல் தகுதிச் சுற்றில் தோற்ற அணியுடன் மோத வேண்டும். இதில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும்.

ஆனால், இதுவரை பிளே ஆஃப் சுற்றில் முதல் 4 இடங்களைப் பிடிக்கப் போகும் அணிகள் யார் என்பதை கணிக்க முடியவில்லை. குஜராத், மும்பைக்கு தலா ஒரு ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ளது, பஞ்சாப், ஆர்சிபிக்கு தலா 2 ஆட்டங்கள் மீதமுள்ளன. இதில் அணிகள் பெறும் வெற்றி, இடங்களை முடிவு செய்யும்.

குஜராத் அணி

குஜராத் அணியைப் பொருத்தவரை 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியுடன் மோதுகிறது. முதல் இரு இடங்களைப் பிடிக்க குஜராத் அணிக்கு வாய்ப்பிருக்கிறது, அதற்கு, கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை வெல்ல வேண்டும்.

ஒருவேளை ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் தங்களின் கடைசி 2 லீக் ஆட்டங்களிலும் வென்றால், இரு அணிகளும் 21 புள்ளிகள் பெற்றுவிடும். அந்த நிலையில், குஜராத் அணி 20 புள்ளிகள் வைத்திருந்தாலும் முதல் இரு இடங்களைப் பெற முடியாது.

ஒருவேளை சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி தோற்றால்கூட பிளே ஆஃப் சுற்றில் முதல் இரு இடங்களைப் பெற முடியும். அதற்கு ஆர்சிபி கடைசி 2 லீக் ஆட்டங்களிலும் தோற்க வேண்டும், பஞ்சாப் அணி மும்பையை கண்டிப்பாக வென்று மற்றொன்றில் தோற்க வேண்டும். அல்லது ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகள் கடைசி இரு லீக் ஆட்டங்களிலும் தோற்க வேண்டும். இது நடந்தால் குஜராத் முதல் இரு இடங்களில் வர முடியும்.

குஜராத் அணி முதல் இரு இடங்களில் வரவேண்டுமானால், ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் தங்களின் கடைசி இரு லீக் ஆட்டங்களி்ல் வெல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் ஆர்சிபி, பஞ்சாப் அணிகள்

ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் தலா 17 புள்ளிகளுடன் உள்ளன. இதில் ஆர்சிபி 0.482 ரன்ரேட்டிலும், பஞ்சாப் 0.389 ரன்ரேட்டிலும் உள்ளன. ஆர்சிபி அணி கடைசி லீக் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ், லக்னெள அணிகளைச் சந்திக்கிறது. பஞ்சாப் அணி, மும்பை, டெல்லி அணிகளுடன் மோதுகிறது.

ஒருவேளை குஜராத் அணி கடைசி லீக்கில் சிஎஸ்கே அணியை வென்றால் 20 புள்ளிகளுடன் முடிக்கும். அதேசமயம், ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் தங்களின் கடைசி 2 லீக் ஆட்டங்களிலும் வென்றால், 21 புள்ளிகளுடன் டாப்-2 இடங்களில் வரலாம். ஆர்சிபி அணி கடைசி 2 லீக் போட்டிகளில் தோற்றால் டாப்-2 இடங்களில் வரமுடியாது. ஒருவேளை ஒரு ஆட்டத்தில் ஆர்சிபி வென்றால் 19 புள்ளிகள் பெறும்.

பஞ்சாப் அணி தனக்கிருக்கும் 2 ஆட்டங்களில் தோற்றால், 17 புள்ளிகளுடன் இருக்கும், மும்பை அணி கடைசி லீக்கில் வென்றால் 18 புள்ளிகளுடன் முடித்து வலுவான ரன்ரேட்டில் பஞ்சாப் அணியின் 17 புள்ளிகளை விட சிறப்பாக இருந்து 3வது இடத்தைப் பிடிக்கும்.

ஒருவேளை பஞ்சாப் அணி கடைசி இரு லீக் ஆட்டங்களில் ஒன்றில் வென்று, மற்றொன்றின்றில் தோற்றால் 19 புள்ளிகளுடன் 3வது இடத்தைப் பிடிக்கும். மும்பை அணி கடைசி லீக்கில் வென்றால் 18 புள்ளிகளுடன் 4வது இடத்தைப் பிடிக்கும்.

ஆக, பஞ்சாப் அணி 3வது இடத்துக்கு வர குறைந்தபட்சம் ஒரு வெற்றி தேவை. இரு ஆட்டங்களிலும் தோற்றால் 4வது இடம்தான் பெறும், மும்பை வெற்றி பெற்றால் 3வது இடத்தைப் பிடிக்கும், சில நேரங்களில் டாப்-2 இடங்களுக்குள் வரலாம்.

ஆர்சிபி அணி கடைசி இரு லீக்கிலும் வென்றால், 21 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கலாம், ஒரு ஆட்டத்தில் வென்றால் 19 புள்ளிகளுடன் முடிக்க முடியும். 2வது இடத்தைப் பெற முடியும். ஆனால், ஒருவேளை குஜராத் அணி கடைசி லீக்கில் சிஎஸ்கேவிடம் தோற்றால் 18 புள்ளிகளுடன் முடிக்கும், மும்பை அணி வலுவான ரன்ரேட்டுடன் 18 புள்ளிகளுடன் முடித்தால் 2வது இடம் அல்லது 3வது இடம் பிடிக்கவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு நடக்க பஞ்சாப் அணி 2 போட்டிகளிலும் தோற்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பஞ்சாப் கிங்ஸ் அணியினர் மும்பை அணி

மும்பை அணி 16 புள்ளிகளுடன், 1.292 என வலுவான ரன்ரேட்டுடன் 4வது இடத்தில் இருக்கிறது. கடைசி லீக்கில் பஞ்சாப் அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி இதில் வென்றால்18 புள்ளிகளுடனும் தோற்றால் 16 புள்ளிகளுடன் முடிக்கும். ஒரு வேளை மும்பை அணி வென்று, பஞ்சாப் அணி தனக்கிருக்கும் கடைசி லீக்கிலும் தோற்றால் 17 புள்ளிகளுடன் பஞ்சாப் முடித்து 4வது இடத்தைப் பிடிக்கும். மும்பை அணி 3வது இடத்தைப் பிடிக்க முடியும்.

ஒருவேளை குஜராத் அணி கடைசி லீக்கில் சிஎஸ்கேயிடம் தோற்றால் 18 புள்ளிகளுடன் முடிக்கும். மும்பை அணியும் 18 புள்ளிகளுடன் இருந்து குஜராத்தைவிட வலுவான ரன்ரேட்டில் இருக்கும் பட்சத்தில் 18 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பிடிக்க முடியும்.

ஒருவேளை ஆர்சிபி கடைசி இரு லீக்கிலும் சன்ரைசர்ஸ், லக்னெளவிடம் தோற்றால் 17 புள்ளிகளுடன் முடிக்கும். அப்போது 18 புள்ளிகளுடன் இருக்கும் மும்பை அணி முதலிடத்தைப் பிடிக்கவும் வாய்ப்புள்ளது. நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், ஆர்சிபி 17 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பிடிக்கும். ஒருவேளை, ஆர்சிபி அணி ஒரு போட்டியில் வென்றால்கூட 19 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மும்பை இந்தியன்ஸ் அணியினர் மார்ஷ், பூரனின் மிரட்டல் ஆட்டம்

லக்னெள அணி தொடரிலிருந்து வெளியேறினாலும் தன்னால் முடிந்த சேதாரத்தை எதிரணிகளுக்கு ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆட்டத்தில் மார்ஷ் 64 பந்துகளில் 114 ரன்கள் சேர்த்து ஆட்டமிமிழந்தார், நிகோலஸ் பூரன் 27 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். லக்னெள அணியில் இருவரும் சேர்த்த ரன்கள்தான் அதிகபட்சமாகும்.

ரஷீத் கான் பந்துவீசுவதற்கு முன்பாக சாய் கிஷோரை அறிமுகப்படுத்தினார் ஷுப்மன் கில். மார்ஷ் 2 சிக்ஸர்களை கிஷோர் பந்துவீச்சில் விளாசினார். ரஷீத் கான் வீசிய முதல் ஓவரிலேயே மார்ஷ் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்கள் சேர்த்தார். சாய் கிஷோர் ஓவரை விளாசிய பூரன் ஒரு பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். மார்ஷ் 33 பந்துகளில் அரைசதத்தையும், அடுத்த 23 பந்துகளில் அடுத்த 50 ரன்களையும் விரைந்து எட்டி முதல் சதத்தைப் பதிவு செய்தார். நிகோலஸ் பூரனும் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். சதம் அடித்து 114 ரன்கள் சேர்த்த மிட்ஷெல் மார்ஷ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லக்னௌ அணியின் வீரர் மிஷல் மார்ஷ் 64 பந்துகளில் 114 ரன்கள் சேர்த்தார். அரிதாக ஆட்டமிழந்த டாப்-3 பேட்டர்கள்

அதேபோல், குஜராத் அணியின் நம்பிக்கை பேட்டர்கள், தொடக்க கூட்டணியான ஷுப்மன் கில்(35) சாய் சுதர்சன்(21), பட்லர்(33) ஆகியோர் 10 ஓவர்களில் ஆட்டமிழந்தனர். இந்த சீசன் முழுவதும் குஜராத் அணியின் நடுவரிசை பேட்டர்களுக்கு பெரிதாக வேலையின்றி இருந்த நிலையில் நேற்று ஷெர்பானே ருதர்போர்ட், ஷாருக்கான் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 40 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை பரபரப்பாக்கினர்.

கடைசி 4 ஓவர்களில் குஜராத் அணி வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்டது. இதில் ரூதர்ஃபோர்ட் 38 ரன்களில் ரூர்கே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின், அடுத்துவந்த பேட்டர்கள் சரியாக ஆடாததால் கடைசி 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது, ஒரு பவுண்டரிகூட குஜராத் பேட்டர்கள் விளாசவில்லை.

இந்த சீசனிலேயே குஜராத் அணியில் டாப்-3 பேட்டர்களும் அரிதாக குறைந்த ரன்னில் 3 பேருமே ஆட்டமிழந்துள்ளனர். இல்லாவிட்டால், டாப்-3 பேட்டர்களில் யாரேனும் இருவர் பெரிய பார்ட்னர்ஷிப்புக்கு வித்திடுவார்கள், அணியை எப்படியேனும் கரைசேர்த்துவிடுவார்கள். ஆனால், 3 பேருமே குறைந்த ரன்னில் 10 ஓவருக்குள் ஆட்டமிழந்தது அரிது.

குஜராத் அணி இந்த சீசனில் சேர்த்த ரன்களில் 76.87 சதவிகித ரன்கள் டாப்-3 பேட்டர்கள் சுதர்சன், கில், பட்லர் மட்டும் சேர்த்தவை. கடந்த போட்டியில் டெல்லி்க்கு எதிராக 200 ரன்களை விக்கெட் இழப்பின்றி சுதர்சனும், கில்லும் சேஸ் செய்தனர்.

ஆனால் இந்த ஆட்டத்தில் ரூர்கே பந்துவீச்சில் சுதர்சன் அடித்த ஷாட்டை மார்க்ரம் அருமையாக கேட்ச் பிடித்தார். பட்லர் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார். ஆவேஷ் கான் பந்துவீச்சில் அப்துல் சமதிடம் கேட்ச் கொடுத்து கில் ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் பட்லர் ஆகாஷ் சிங் பந்துவீச்சில் பட்லர் போல்டாகி விக்கெட்டை இழந்தார். 10 ஓவர்களுக்குள் டாப்-3 விக்கெட்டுகளை இழந்தது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குஜராத் டைடன்ஸ் அணியின் வீரர் சாய் சுதர்சன் பரிசோதிக்கப்படாத நடுவரிசை

இந்த சீசன் முழுவதும் குஜராத் அணியின் நடுவரிசை பேட்டர்கள் பரிசோதிக்கப்படவில்லை. அதற்கான வாய்ப்பை கொடுக்காமலே டாப்-3 பேட்டர்கள் ஆட்டத்தை முடித்துவந்தனர். ஆனால் இந்த முறை நடுவரிசை பேட்டர்களுக்கான வாய்ப்பை ஷாருக்கான், ரூதர்ஃபோர்ட் பயன்படுத்தினர். இந்த சீசனில் குஜராத் அணியின் நடுவரிசை பேட்டர்கள் 21 ரன்கள் சராசரியும் 165 ஸ்ட்ரைக் ரேட் வைத்து குறைவாக உள்ளனர். இந்த சீசனில் நடுவரிசை பேட்டர்கள் ஃபினிஷிங் பணிக்கு மட்டுமே பயன்பட்டனர்.

ஆனால் நேற்று ரூதர்ஃபோர்ட், தமிழக வீரர் ஷாருக்கான் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 14-15 ஓவர்களில் மட்டும் இருவரும் சேர்ந்து 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 36 ரன்கள் சேர்த்து ஆட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தினர். ஷாருக்கான் 22 பந்துகளில் முதல் அரைசதத்தை விளாசினார். இருவரும் சேர்ந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். கடைசி 4 ஓவர்களில் குஜராத் வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், ரூதர்ஃபோர்ட்(38) ஆட்டமிழந்ததும், ஆட்டம் தலைகீழாகமாறியது. அடுத்தடுத்த பேட்டர்கள் ஆட்டமிழக்கவே, குஜராத் அணி 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வி அடைந்தது.

‘வெற்றிக்குத் திரும்புவோம்’

குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் கூறுகையில், “கூடுதலாக 20 ரன்கள் வரை வழங்கியது தோல்விக்கான காரணங்களில் ஒன்று. 210 ரன்களுக்குள் லக்னெளவை கட்டுப்படுத்தி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். பவர்பிளேயில் சிறப்பாகவே பந்துவீசினோம், பரிசோதனை முயற்சி எடுக்கவில்லை, அதேநேரம் விக்கெட்டுகளையும் வீழ்த்த சிரமப்பட்டோம். ஆனால் கடைசி 14 ஓவர்களில் லக்னெள 180 ரன்கள் சேர்த்தனர். 17-வது ஓவர்கள் வரை சேஸிங்கில் சிறப்பாக செயல்பட்டோம், ரூதர்ஃபோர்ட், ஷாருக்கான் ஆட்டமிழந்தபின் ஆட்டம் எங்களை விட்டு சென்றது. அடுத்த ஆட்டத்தில் வெற்றிப்பாதைக்கு திரும்புவோம்” எனத் தெரிவித்தார்.

ஆட்டங்களின் விவரம்

இன்றைய ஆட்டம்

ஆர்சிபி vs சன்ரைசர்ஸ்

இடம்: லக்னெள

நேரம்: இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

நாள் – மே 26

இடம் – ஜெய்பூர்

நேரம்- இரவு 7.30 மணி

சிஎஸ்கேயின் அடுத்த ஆட்டம்

குஜராத் டைட்டன்ஸ் vs சிஎஸ்கே

நாள் – மே 25

இடம் – ஆமதாபாத்

நேரம்- மாலை 3.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

ஆர்சிபி vs லக்னெள

நாள் – மே 27

இடம் – லக்னெள

நேரம்- இரவு 7.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு

சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-638 ரன்கள்(13 போட்டிகள்)

ஷுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்)-636 ரன்கள்(13 போட்டிகள்)

சூர்யகுமார் யாதவ்(மும்பை இந்தியன்ஸ்) 583 (13 போட்டிகள்)

நீலத் தொப்பி

பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 21 விக்கெட்டுகள்(12 போட்டிகள்)

நூர் அகமது(சிஎஸ்கே) 21 விக்கெட்டுகள்(13போட்டிகள்)

டிரன்ட் போல்ட் (மும்பை) 19 விக்கெட்டுகள்(13 போட்டிகள்)

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு