Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
கோவையில் மருதமலை அடிவாரத்தில், உடல் நலக்குறைவால் கர்ப்பிணி யானை உயிரிழந்ததற்கு, பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டதும் முக்கிய காரணமெனத் தெரியவந்துள்ளது. மருதமலை, வெள்ளியங்கிரி போன்ற வனப்பகுதிக்குள் அமைந்துள்ள ஆன்மிக சுற்றுலாத்தலங்களில், அளவு கடந்த பிளாஸ்டிக் பயன்பாடு, யானை உள்ளிட்ட காட்டுயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.
இதனால் உதகை, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில், பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளுக்கு தடை விதித்தது போல, வனப்பகுதிகளில் உள்ள ஆன்மிக மையங்களிலும் இவற்றுக்குத் தடை விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசிடம் பரிந்துரைத்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் கூறுகின்றனர்.
கோவை நகருக்கு அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் ஒரு பகுதியாக மருதமலை உள்ளது. இந்த மலையில் அமைந்துள்ள சுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில், முருகனின் ஏழாம் படை வீடாக ஆன்மிகவாதிகளால் கருதப்படுகிறது. இந்த கோவில் கட்டப்பட்டுள்ள பகுதியும், அதைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளும் கோவை வனக்கோட்டத்துக்குள் அமைந்துள்ளன.
கர்ப்பிணி யானையின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
படக்குறிப்பு, வனத்துறையினர் வந்து, மயங்கிக் கிடந்த யானையை கிரேன் உதவியுடன் துாக்கிச் சென்று சிகிச்சை கொடுத்தனர்.இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு காட்டுயிர்களும் இருக்கின்றன. ஆசிய யானைகளின் வாழ்விடமாகவும், வலசைப்பாதையாகவும் உள்ள இந்த மலைப்பகுதிக்கு அருகிலேயே பாரதியார் பல்கலைக்கழகமும் பல நுாறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கடந்த மே 17 ஆம் தேதியன்று, அந்தப் பகுதியில் ஒரு பெண் யானை மயங்கிய நிலையில் கிடந்தது. அருகில் ஒரு குட்டி யானையும் நின்றது.
வனத்துறையினர் வந்து, மயங்கிக் கிடந்த யானையை கிரேன் உதவியுடன் துாக்கிச் சென்று சிகிச்சை கொடுத்தனர். வனத்துறையில் பணியாற்றும் கால்நடை மருத்துவர்கள் ஐந்து பேர் இணைந்து, சிகிச்சை மேற்கொண்டனர். இருப்பினும் யானை உயிரிழந்து விட்டது. அதை பிரேத பரிசோதனை செய்தபோது, அந்த யானையின் வயிற்றில் 15 மாதமுள்ள சிசு இருந்தது தெரியவந்தது. அத்துடன் அதன் வயிற்றில் ஏராளமான பிளாஸ்டிக், பாலித்தீன் மற்றும் பேப்பர் கழிவுகளும் இருந்ததும் கண்டறியப்பட்டது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
பெண் யானை கர்ப்பமாக இருந்தது கூடத் தெரியாமல், யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாகவும், அதன் வயிற்றில் ஏறி மிதித்ததாகவும் ஊடகங்களில் பலவிதமான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தத் தகவல்கள் அனைத்தையும் வனத்துறை அதிகாரிகளும், இதற்கு சிகிச்சையளித்த, பிரேத பரிசோதனை செய்த கால்நடை மருத்துவர்களும் மறுத்துள்ளனர்.
பிரேத பரிசோதனை செய்த வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமார், ”அந்த யானைக்கு உடல்ரீதியாக பலவிதமான பாதிப்புகள் ஏற்பட்டு, பல்வேறு உறுப்புகளும் செயலிழந்திருந்தன. யானையின் குடலில் பெருமளவில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தன. அங்கேயுள்ள குப்பைக்கிடங்கிலிருந்த உணவுக் கழிவுகளை சாப்பிடும்போது, பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன்களையும் சேர்த்துச் சாப்பிட்டுள்ளது. அதுவே அதன் உடல் நல பாதிப்புக்கு வழிவகுத்துள்ளது.” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பிளாஸ்டிக் கழிவுகளால் ஆசிய யானைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன (சித்தரிப்புப் படம்)”அந்த யானை விழுந்து கிடந்த இடத்துக்கு அருகில் இருந்த சாணத்தில், பாக்கெட் ஊறுகாய் கவர்கள் 10க்கும் அதிகமாக இருந்தன. அதை மொத்தமாக யானை சாப்பிட்டுள்ளது. நான் இதற்கு முன்பு, பல யானைகளை பிரேத பரிசோதனை செய்தபோது, ஒன்றிரண்டு பிளாஸ்டிக் அல்லது பாலித்தீன் துண்டுகள் இருக்கும். ஆனால் இந்த யானைக்கு இருந்தது போல, இவ்வளவு அதிகமான பிளாஸ்டிக் கழிவை நான் இதற்கு முன்பு பார்த்ததேயில்லை.” என்றும் கால்நடை மருத்துவர் சுகுமார் தெரிவித்தார்.
இறந்த யானை கர்ப்பமாக இருப்பதே தெரியாமல் சிகிச்சை அளித்ததாகக் கூறும் குற்றச்சாட்டை மறுத்த அவர், ”பெண் காட்டுயிர் என்றாலே அது கர்ப்பமாக இருக்க வாய்ப்புள்ளதாகக் கருதியே சிகிச்சை தரப்படும். அதுமட்டுமின்றி, கர்ப்பிணி யானைக்கு ஒன்றாகவும், மற்ற யானைக்கு வேறு விதமாகவும் சிகிச்சை தர முடியாது. எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சைதான்.” என்றார்.
கர்ப்பமாக இருந்தது தெரியாமல் வயிற்றில் ஏறி மிதித்ததாகக் கூறும் குற்றச்சாட்டை மறுத்த சுகுமார், ”யானைக்கு மாரடைப்பு ஏற்பட்டு உருக்குலைந்ததும், மனிதர்களுக்கு சிபிஆர் கொடுப்பதுபோல அதன் நெஞ்சுப்பகுதியில் மிதித்து இதயத்தில் அழுத்தி மீட்கும் (Chest Compression) முயற்சியை இப்படிச் சித்தரித்து விட்டார்கள். யானை இறப்புக்கு முக்கியக் காரணம், கெட்டுப்போன உணவுகளும், பிளாஸ்டிக் கழிவுகளும்தான்.” என்றும் விரிவாக விளக்கினார்.
‘யானையின் சாணத்தில் 70 சதவிகிதம் பிளாஸ்டிக் கழிவு’
படக்குறிப்பு, அப்பகுதியில் இருந்த யானைகளின் சாணங்கள் அனைத்திலும் 70 சதவிகிதம் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததாக கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.இறந்த யானையின் மலக்குடல், சிறுகுடல், பெருங்குடல் அனைத்திலும் பிளாஸ்டிக், பாலித்தீன் மற்றும் அலுமினிய ஃபாயில் பேப்பர்கள் உள்ளிட்ட பலவித குப்பைகள் இருந்ததாகக் கூறும் கால்நடை மருத்துவர்கள், அந்த யானையின் சாணத்தில் மட்டுமின்றி, அந்தப் பகுதியில் இருந்த யானைகளின் சாணங்கள் அனைத்திலும் 70 சதவிகிதம் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததாகத் தெரிவிக்கின்றனர்.
”மான், காட்டுமாடு போன்ற காட்டுயிர்களுக்கு வயிற்றில் நான்கு அறைகள் இருப்பதால், பிளாஸ்டிக் கழிவு சாப்பிட்டால் ஏதாவது ஓரிடத்தில் போய் தங்கி, வயிறு உப்பி இறக்க நேரிடும். ஆனால் யானை ஒற்றை வயிறுள்ள விலங்கு என்பதால், பிளாஸ்டிக் சாப்பிட்டாலும் வெளியில் வந்துவிடும். ஆனால் அதைச் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்பு, உயிருக்கே ஆபத்தாக முடிகிறது.” என்றார் கால்நடை மருத்துவர் சுகுமார்.
பிளாஸ்டிக் கழிவுகளை தொடர்ந்து உட்கொண்டதால், அதன் வாய் மற்றும் தொண்டைப் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு, வயிற்றுக்குள் தொற்று உருவாகி, அதனால் உணவு உண்ண முடியாமலும் போயிருக்க வாய்ப்புள்ளதாக வனத்துறையின் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். பிளாஸ்டிக் கழிவு காரணமாக அதனால் இயல்பாக கழிவை வெளியேற்றவும் தடையிருந்திருக்கலாம் என்றும் அவர்கள் கூறினார்கள்.
இறந்து போன இந்த யானை உட்பட அதே பகுதியில் வாழும் பல்வேறு காட்டு யானைகளும் அதிகளவில் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டிருப்பது அவற்றின் சாணங்களை ஆராய்ந்ததில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதே பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த ஒரு காட்டுயானையின் வயிற்றிலிருந்து கிலோ கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதற்குக் காரணம், வனப்பகுதியை ஒட்டியுள்ள ஒரு காலியிடத்தில் சோமையம்பாளையம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுவதுதான் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இதுகுறித்து பல்வேறு ஊடகங்களும், காட்டுயிர் ஆர்வலர்களும் ஏராளமான புகைப்படங்களையும், காணொளிகளையும் வெளியிட்டு, குப்பைக் கிடங்கை அகற்ற வலியுறுத்தியும் ஊராட்சி நிர்வாகம் அதைச் செய்யவில்லை. தற்போது இந்த யானை இறந்த பின்பு, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் உத்தரவின்படி, அந்த குப்பைக் கிடங்கை அகற்றி அங்கே மண்ணைக் கொட்டும் வேலை நடக்கிறது. ஆனால் மருதமலை கோவிலிலும், அடிவாரத்திலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அபரிமிதமாகவுள்ளது.
படக்குறிப்பு, வனப்பகுதியை ஒட்டியுள்ள காலியிடத்தில் கொட்டப்பட்ட குப்பைகள்குப்பைக்கிடங்கு இருந்த பகுதி மற்றும் மருதமலை அடிவாரப் பகுதிகளில் பிபிசி தமிழ் கள ஆய்வு செய்தபோது, மலைப்பகுதியிலுள்ள கடைகளில் சந்தனம், குங்குமம் போன்ற எதுவுமே பெரும்பாலும் பிளாஸ்டிக் பைகளில் விற்கப்படுவதில்லை என்று தெரிந்தது.
ஆனால், அடிவாரத்திலுள்ள கடைகளில், இலந்த வடை, அப்பம் உள்ளிட்ட உணவுப் பண்டங்கள், பாரம்பரிய விளையாட்டுப் பொருட்கள் அனைத்துமே பிளாஸ்டிக் பைகளில்தான் விற்கப்படுகின்றன. உணவகங்கள் உள்ளிட்ட மற்ற கடைகளில் பிளாஸ்டிக், பாலித்தீன் கேரிபேக் பயன்பாடு மிக அதீதமாக இருந்தது.
பக்தர்கள் தாங்கள் வாங்கி வரும் உணவுப் பொருட்கள், பிற பொருட்களை எடுத்துவிட்டு குப்பைகளை மலையுச்சியிலும், மலைக்கான படிக்கட்டுப் பாதையிலும் போட்டிருப்பதால் அந்த குப்பைகளும் ஏராளமாக இருந்தன. அதேபோல, மருதமலை பேருந்து நிலையத்திலும், வனப்பகுதியை ஒட்டியுள்ள காலியிடங்களிலும் மலை போல பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதையும், மாடுகள் மேய்ந்து கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது.
பிபிசி தமிழிடம் பேசிய சோமையம்பாளையம் கிராம ஊராட்சி நிர்வாக அலுவலர் செந்தில்குமார், ”ஆட்சியர் உத்தரவின்படி, அந்த இடத்தில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு, அங்கு கற்களைப் பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருதமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. அதனால் குப்பையும் உடனுக்குடன் குவிந்து விடுகிறது. துாய்மைப் பணியாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் இவற்றை அவ்வப்போது அகற்ற முடிவதில்லை.” என்று தெரிவித்தார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.அறநிலையத்துறையின் விளக்கம் என்ன?
ஆனால் மருதமலை உச்சியில் சுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ள பகுதிகளில், பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டை அறநிலையத்துறையின் துணை ஆணையர் செந்தில்குமார் மறுத்தார். கடந்த 2 ஆண்டுகளாகவே, அறநிலையத்துறையின் கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்திவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பிபிசி தமிழிடம் பேசிய அறநிலையத்துறை துணை ஆணையர் செந்தில்குமார், ”மலையுச்சியில் உள்ள கோவில் வளாகத்தை துாய்மைப்படுத்த துாய்மைப் பணியாளர்கள் 20 பேர் உள்ளனர். அவர்கள் படிக்கட்டுப் பாதையிலும், கோவிலைச் சுற்றிலும் உள்ள குப்பைகளை அவ்வப்போது சேகரித்து பைகளில் கட்டி வைத்து விடுகின்றனர். கோவில் மட்டும் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருப்பதால் தினமும் எடுத்துக் கொண்டு போய்விடுகின்றனர். கீழேயிருக்கும் குப்பைக்கும் கோவில் நிர்வாகத்துக்கும் தொடர்பில்லை.” என்றார்.
மலையடிவாரத்தில் ரூ.110 கோடி மதிப்பில் ஆசியாவிலேயே மிக உயரமாக 184 அடி உயரத்துக்கு முருகன் சிலை அமைப்பதால், கடந்த பிப்ரவரியிலேயே அங்குள்ள கடைகளை காலி செய்யுமாறு கூறிவிட்டதாகவும் அவர் தகவல் தெரிவித்தார். அந்தக் கடைகள், சோமையம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவற்றைக் காலி செய்ய வேண்டியது உள்ளாட்சி நிர்வாகத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும், மருதமலை பேருந்து நிலையத்தில் குப்பைகள் குவியவும் கடைகளே காரணமென்றும் துணை ஆணையர் செந்தில் குமார் விளக்கினார்.
மருதமலை மட்டுமின்றி, இதே மேற்குத் தொடர்ச்சி மலையில் கோவை வனக்கோட்டத்தில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலையும், அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவேதான் அமைந்துள்ளது. அதன் உச்சியில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு, வனத்துறை அனுமதிக்கும் பிப்ரவரி 1 முதல் மே இறுதிவரையிலும் பல லட்சம் பக்தர்கள் வருகின்றனர். அங்கே ஆண்டுதோறும் டன் கணக்கில் பிளாஸ்டிக் மற்றும் ஆடைக் கழிவுகள் சேருகின்றன. அவற்றை வனத்துறைதான் அகற்றிவருகிறது. சூழல் அமைப்புகள் இதற்குத் துணை நிற்கின்றன.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, யானையின் வயிற்றில் ஒரு அறைதான் இருப்பதால் பிளாஸ்டிக் கழிவுகள் வெளியேறி விடும் என்றாலும், அவை யானைகளுக்கு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன (சித்தரிப்புப் படம்) பிளாஸ்டிக் மற்றும் கேரிபேக் பயன்பாட்டைக் குறைக்க வனத்துறை ஆண்டுதோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் எந்த பயனுமில்லை. இதில் மற்ற காட்டுயிர்களை விட, யானைகள்தான் அதிகளவில் பாதிப்புக்குள்ளாவதும் உறுதியாகி வருகிறது.
யானைகள் மட்டுமின்றி, முதுகெலும்பில்லாத விலங்குகள், முதுகெலும்புள்ளவை என 1500க்கும் மேற்பட்ட இனங்கள், பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிக்கப்படுவதாக ஆய்வறிக்கைகள் தெரிவித்துள்ளன. இதனால் காட்டுயிர்களுக்கு நரம்பியல் பாதிப்பு ஏற்பட்டு இனப்பெருக்கமே பாதிக்கப்படுவதாக ஒரு அறிக்கை கூறுகிறது. ‘நேச்சர் கன்சர்வேஷன்’ எனும் ஆய்விதழிழ் வெளியான அந்த ஆய்வறிக்கையில், ஆசிய யானைகளுக்கு பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் ஆபத்துகள் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. விலங்குகளுக்கு பிளாஸ்டிக் கழிவுகளால் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்பட்டு, அதனால் அவற்றின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
முறையற்ற கழிவு மேலாண்மையின் எதிர்மறை விளைவுகளில் ஒன்றாக இதைக் குறிப்பிடும் அந்த ஆய்வறிக்கையில், ஆய்வுக்கு எடுக்கப்பட்ட யானை சாண மாதிரிகளில் 85 சதவிகிதம் பிளாஸ்டிக் இருந்தது உறுதியாகியுள்ளது.
இந்த சாணங்களில் 1 மி.மீ. முதல் 355 மி.மீ. வரையிலான பல்வேறு அளவிலான பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததாகவும் ஆராய்ச்சியை மேற்கொண்ட விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மலையை ஒட்டியுள்ள குப்பைக் கிடங்குகளால் பிரச்னை
படக்குறிப்பு, யானை இறந்த பின்பு, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் உத்தரவின்படி, அந்த குப்பைக் கிடங்கை அகற்றி அங்கே மண்ணைக் கொட்டும் வேலை நடக்கிறதுஉண்மையில் தமிழகத்திலுள்ள ஆசிய யானைகளுக்கு பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்பும், ஆபத்தும் ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகி வருவதாகக் கூறுகிறார், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் கோ. சுந்தர்ராஜன்.
உதகை, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில், பிளாஸ்டிக், பாலித்தீன் கேரிபேக் தடையை கடுமையாக அமல்படுத்துவதுபோல, மருதமலை, வெள்ளியங்கிரி உள்ளிட்ட ஆன்மிக சுற்றுலாத் தலங்களிலும் பிளாஸ்டிக், பாலித்தீன் போன்றவற்றுக்கு முற்றிலும் தடை விதித்து, அதைக் கடுமையாக அமல்படுத்த வேண்டுமென்பதையும் அவர் கோரிக்கையாக முன் வைக்கிறார்.
”நீலகிரி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் நுழைவுவாயில்களில் வாகனங்களை நிறுத்தி, பிளாஸ்டிக் பொருட்களை சோதனையிடுவது சிறப்பாக அமல்படுத்தப்படுகிறது. முதுமலை, ஆனைமலை புலிகள் காப்பகங்களில் இவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றை மருதமலை, வெள்ளியங்கிரி போன்ற மலைப்பகுதிகளிலும் அமல்படுத்த வலியுறுத்துவோம்.” என்றார் சுந்தர்ராஜன்.
இந்த ஆன்மிகத் தலங்களுக்கான பாதையில் சோதனைச்சாவடி அமைத்து, அவற்றை வனத்துறையிடம் ஒப்படைத்து, பிளாஸ்டிக் பொருட்களைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் என்று கூறிய சுந்தர்ராஜன், வனத்துறையினருக்கு வாகனங்களை சோதனையிடவும், அபராதம் விதிக்கவும் அதிகாரம் அளித்தாலே இதை பெருமளவில் கட்டுப்படுத்திவிட முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
படக்குறிப்பு, பிளாஸ்டிக் கழிவுகளால் யானைகள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகின்றன என ஆய்வுகள் கூறுகின்றனதமிழக அரசு கூறுவது என்ன?
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு, ”தமிழகத்தில் ஏற்கெனவே ஒரு முறை பயன்படுத்தும் 14 விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னையைப் பொறுத்தவரை, வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் குப்பைக் கிடங்கு அமைப்பதே காட்டுயிர்களுக்கு பெரும் பிரச்னையாகவுள்ளது. இதுபோன்று வனத்தை ஒட்டியுள்ள குப்பைக் கிடங்கு அனைத்தையும் இடம் மாற்ற வேண்டியது உள்ளாட்சித்துறையின் பொறுப்பு.” என்றார்.
“இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் பேசியுள்ளேன். கோவையில் மருதமலை அடிவாரத்தில் இருந்த குப்பைக் கிடங்கு அகற்றப்படுகிறது. அதேபோல, தமிழகம் முழுவதும் வனத்தை ஒட்டியுள்ள குப்பைக் கிடங்குகளை ஜிபிஎஸ் முறையில் ஆய்வு செய்து, அவற்றை அகற்றவும் அல்லது இடம் மாற்றவும் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட வன அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து உள்ளாட்சித்துறை செயலாளருக்கும் நான் கடிதம் எழுதியுள்ளேன். இனி இப்படி நடக்காது.” என்றும் சுப்ரியா சாஹு தெரிவித்தார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு