Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மனைவி அதிகமாக சம்பாதிப்பது ஆண்களை சோகத்தில் ஆழ்த்துகிறதா? வீட்டில் இருக்கும் ஆண்கள் என்ன கூறுகிறார்கள்?
எழுதியவர், மெலிசா ஹோகென்பூம் பதவி, பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது நம் மனநலனை பாதிக்கும், குறிப்பாக சுற்றி இருப்பவர்களுடன் வருமானத்தை ஒப்பிடும்போது அது நம்மை பாதிக்கிறது. மேலும், ஆண்களின் மனநலனில் அது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
“உங்களின் மனைவி தான் குடும்பத்துக்கான வாழ்வாதாரத்துக்காக முழுவதும் சம்பாதிக்கிறார் என்றால், அது உங்களை காயப்படுத்தும்.” என, வீட்டிலிருந்து குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் தன் நிலை குறித்துக் கூறுகிறார் டேவ்.
“நான் ஓர் ஆண். வீட்டிலேயே இரு என சொல்லும்போது, மற்றவர்கள் உங்களை பெண்மை குணம் கொண்டவராக நினைக்கின்றனர்,” என்கிறார் டாம். பெண்கள் மட்டும் சம்பாதிக்கும் போது உறவுகளில் அது எவ்வாறு தாக்கத்தை செலுத்துகிறது என்பது குறித்து விரிவான ஆய்வு ஒன்றுக்காக, ஆண்கள் மற்றும் பெண்களிடம் நேர்காணல்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் பங்கேற்றவர்களுள் டேவ் மற்றும் டாம் ஆகியோரும் அடங்குவர்.
மற்றொரு நபரான பிரெண்டன், இதில் சங்கடத்தை ஏற்படுத்தும் மற்றொரு காரணத்தையும் கூறுகிறார். அதாவது, குடும்ப உறுப்பினர்களே அவர்களை மோசமாக விமர்சிப்பதுதான்.
வீட்டுக்கு வெளியே சென்று வேலை பார்க்காதபோதும் மற்றும் தங்களின் இணையரே குடும்பத்துக்காக வருமானம் ஈட்டும் முதன்மை நபராக இருக்கும்போதும் ஆண்கள் எதிர்கொண்ட அனுபவங்களின் மூன்று உதாரணங்கள்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.விவாகரத்துக்கான சாத்தியக்கூறு
சமூகத்தில் நீண்ட காலமாக ஆண்கள் தான் வருமானத்தை ஈட்டும் முதன்மை நபர்களாக கருதப்படுவதால், தங்களை மற்றவர்கள் இப்படி எடை போடுவதாக ஆண்கள் இந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர். எனினும், தங்களின் வாழ்க்கைத் துணையை விட, அதிகம் சம்பாதிக்கும், அல்லது குடும்பத்துக்காக முதன்மையாக வருமானம் ஈட்டும் பெண்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இது, வீடு மற்றும் பரந்த சமூகத்தில் அதிகார பரிமாற்றத்தில் நீண்ட கால தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
பணம் அதிகாரத்துடன் நெருக்கமாக பிணைந்துள்ளதால்தான், இது குடும்ப இயங்கியலில் செல்வாக்கு செலுத்துவதற்கான முக்கிய காரணமாக உள்ளது. சமூகத்தின் சில பிரிவினர் எதிர்பார்ப்பது போன்று, ஆண்கள் அதிகமாக சம்பாதிக்காத போது, தங்களுக்கு அதிகாரம் இல்லை என நினைப்பது, மனநல ஆரோக்கியம் கெடுவது போன்றவற்றுக்கு வழிவகுக்கிறது, மேலும் விவாகரத்து ஏற்படுவதற்கான சாத்தியக்கூறையும் அதிகரிக்கிறது.
ஒட்டுமொத்தமாக பார்த்தால், ஆண்கள் இன்னும் பெண்களை விட அதிகமாகவே சம்பாதிக்கின்றனர், குறிப்பாக குழந்தைகள் உள்ள திருமணமான தம்பதிகளில் ஆண்கள் அதிகம் சம்பாதிக்கின்றனர். அதே சமயம், ஆண்களை விட அதிகமாக பெண்கள் குழந்தைகள் கவனிப்பு மற்றும் வீட்டு வேலைகளில் ஈடுபடுகின்றனர். இது, உலகளவில் நீடிக்கும் முரண்பாடாக உள்ளது. ஒவ்வொரு பாலினம் சார்ந்து நிலவும் எதிர்பார்ப்புகளால் இது நிகழ்வதாக கருதலாம், ஆனால் சில சந்தர்ப்பங்களில் அதிக வருமானம் ஈட்டுபவர்கள் தங்களின் வேலைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதற்கான பொருளாதார தேவையை இது பிரதிபலிக்கிறது, எனவே பெண்கள் பகுதிநேர வேலைக்கோ அல்லது (பல்வேறு விதங்களில்) நெகிழ்வுடன் கூடிய வேலைகளுக்கோ திரும்புவதற்கான சாத்தியத்தை இது அதிகரிக்கும்.
வீட்டுக்காக வருமானம் ஈட்டும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போதிலும், ஊதியம் பெறும் வேலை மற்றும் வீடுகளில் அவர்கள் செய்யும் வேலைகள் குறித்த பாலின மனப்பான்மை மாறுவது மெதுவாகவே உள்ளது. பெண்கள் அதிகமாகவே சம்பாதித்தாலும், குறைவாக சம்பாதிக்கும் தங்கள் வாழ்க்கைத் துணையை விட வீட்டு வேலைகள் மற்றும் குழந்தைகளை கவனிப்பது போன்றவற்றை அதிகம் செய்ய வேண்டியுள்ளது. சில வயதினரிடையே பாலின சமத்துவத்துக்கான ஆதரவு அதிகரித்து வரும் போதிலும், அதிகம் சம்பாதிக்கும் ஆண்கள் இதில் குறைந்தளவிலான திருப்தியையே வெளிப்படுத்துகின்றனர்.
தங்களை விட தங்களின் வாழ்க்கைத் துணை அதிகமாக சம்பாதிப்பது, ஆண்களின் சுயமரியாதை மற்றும் மகிழ்ச்சியை அதிகமாக பாதிப்பதாக காட்டும் ஆய்வுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால், உண்மையிலேயே இந்த பிரச்னை எவ்வளவு தீவிரமாக உள்ளது? இந்த புதிய யதார்த்ததுக்கு ஆண்கள் தகவமைத்துக்கொள்வதற்கு எவ்வாறு உதவுவது?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ‘வீட்டு வேலையை பகிரும்போது பெண்களால் பணிகளில் முன்னேற முடிகிறது’ மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் ஆண்கள்
வீட்டுக்காக வாழ்வாதாரம் ஈட்டுபவராக தங்களின் வாழ்க்கைத் துணை இருப்பது என்பது, ஆண்கள் பேசத்தயங்கும் விஷயமாகவே உள்ளது. தங்களின் வாழ்க்கைத் துணையை வேலை ரீதியாக அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்கள் உணரலாம், அதேசமயம் ஆண்மை குறித்து காலாவதியான பல அனுமானங்கள் இன்னும் நீடிப்பதால், வீட்டுக்காக வாழ்வாதாரம் ஈட்டும் நபராக தன்னுடைய பங்கை பூர்த்தி செய்ய முடியவில்லை என்றும் அவர்கள் நினைக்கின்றனர்.
குறிப்பாக, விருப்பத்தின் காரணமாக அல்லாமல் வேலை இழப்பு, இடப்பெயர்வு போன்ற காரணங்களுக்காக வீட்டிலிருந்து குழந்தைகளை பார்த்துக்கொள்ள நேருவது அவர்களை அதிகம் பாதிக்கிறது. ஆஸ்திரேலியாவின் சிட்னியை சேர்ந்த முன்னாள் ஆலோசகராகவும் தற்போது சமூக ஊடக இன்ஃப்ளூயென்சராகவும் உள்ள ஹேரி பண்டன் சமீபத்தில் தன் வேலையை இழந்தார். அவர், “ஓர் ஆணாக, கணவன் மற்றும் தந்தையாக தன்னுடைய விழுமியங்கள்” பாதிக்கப்பட்டுள்ளதாக, சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
“ஏன் அதிகமானோருக்கு மன அழுத்தம் மோசமாக இந்தளவுக்கு இருக்கிறது என்பதற்கான அர்த்தம் எனக்குப் புரிகிறது. திட்டமிட்டது போன்று எதுவும் நடக்கவில்லையென்றால், பேரழிவுகரமாக இருக்கும், மேலும் ஆணாக இருப்பது என்பது என்ன என்பது குறித்த உங்கள் யோசனைகளுக்கு அது சவால் விடுக்கும்,” என பண்டன் அப்பதிவில் தெரிவித்துள்ளார். “தங்களின் மதிப்பு இம்மாதிரியான சந்தர்ப்பங்களை சார்ந்து இருப்பதல்ல என்று, இந்த பதிவின் வாயிலாக மற்றவர்களுக்கு உணர்த்த முடியும் என்பதே என் நம்பிக்கை… நான் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்பினேனோ, அப்படியான தந்தையாக நான் உணகிறேன்.”
பட மூலாதாரம், Serenity Strull/ BBC/ Getty Images
படக்குறிப்பு, வீட்டிலிருந்து குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் ஆண்கள், தங்கள் மனைவிகளை விட குழந்தை பராமரிப்பில் அதிகமாக ஈடுபடுகின்றனர், ஆனால் வீட்டு வேலைகளை சமமான அளவிலேயே பகிர்ந்துகொள்கின்றனர் ‘ஆண்மையின் அடையாளம்’
தன் வாழ்வியலில் ஏற்பட்ட மாற்றம் குறித்து நேர்மறையாக எடுத்துக்கொண்ட பண்டன், தான் தன் துணையுடன் ஒப்பிடும்போது எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது எப்படி மனநலனை பாதிக்கிறது என்பதையும் வெளிப்படுத்தினார். உதாரணமாக, சமீபத்தில் ஸ்வீடனில் எதிர்பாலினத்தவரை திருமணம் செய்துகொண்ட தம்பதிகளின் 10 ஆண்டுகால ஊதிய தரவுகள் மற்றும் அவர்களின் மனநலன் குறித்து ஆராயப்பட்டது. அதில், தங்களை விட தன் மனைவி அதிகமாக சம்பாதிக்கும்போது, ஆண்களிடையே மனநல பிரச்னைகள் அதிகமாக கண்டறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தங்களின் வாழ்க்கைத் துணை அதிகமாக சம்பாதிக்கும்போது பெண்கள், ஆண்கள் என இருபாலினரிடமும் மனநல பிரச்னைகள் 8% அதிகமாக கண்டறியப்பட்டது, ஒட்டுமொத்தமாக இது ஆண்களிடையே 11% அதிகரித்துள்ளது.
‘பிரெட்வின்னர்ஸ்’ எனும் என்னுடைய புத்தகத்தை எழுதியபோது டுர்ஹாம் பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறை உதவி பேராசிரியரும் இந்த ஆய்வை வழி நடத்துயவருமான டெமிட் கெட்டிக்-கிடம் மேலதிக தகவல்களை பெற பேசினேன். ஆண்கள் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என வெளிப்படையாக நாம் இப்போது கேட்கவில்லையென்றாலும், அத்தகைய எதிர்பார்ப்புகள் இன்னும் அதிகமாகவே உள்ளது. தங்களின் வாழ்க்கைத் துணை அதிகமாக சம்பாதிக்கும்போது, ஆண்களிடையே மனநல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது என்பது, அத்தம்பதியினரிடையே உறவில் திருப்தி குறைந்துள்ளதை உணர்த்தலாம் என்கிறார் கெட்டிக், எனினும் அவரின் ஆய்வு தரவுகள் குறிப்பாக இதை ஆராயவில்லை.
இதனிடையே, அதிகமாக சம்பாதிக்கும் பெண்களின் கணவர்கள் ஏமாற்றுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக, மற்றொரு ஆய்வு காட்டுகிறது. தங்களின் ஆண்மையின் அடையாளத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான வழியாக இதை பார்க்கலாம் என ஆய்வாசிரியர்கள் கூறுகின்றனர். தங்களின் ஆண்மையின் அடையாளம், மனைவிகள் வருமானத்தை ஈட்டும்போது அச்சுறுத்தப்படுவதாக அந்த ஆண்கள் கருதுகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ‘வேலைகளிலிருந்து வெளியேறிய ஆண்களால் தங்கள் குழந்தைகளை சிறப்பாக கவனிக்க முடிகிறது’ ஆண்கள் தான் வீட்டுத் தேவைகளுக்காக வருமானம் ஈட்ட வேண்டும் என்ற அழுத்தம் அவர்களின் நலனில் பங்களிப்பதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. பெண்களை விட ஆண்கள் வேலையில் இல்லாமல் இருக்கும்போது, அவர்களுக்கு அதிகளவில் மன அழுத்தம் ஏற்படுகிறது. ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு வேலையைத் தாண்டி வலுவான சமூகத் தொடர்புகள் இருப்பது இதற்கு சாத்தியமான விளக்கமாக இருக்கலாம். வீட்டிலிருந்து குழந்தைகளை கவனிக்கும் பெண்களை விட, ஆண்கள் அதிகம் தனிமையாக உணர்கின்றனர்.
நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதுடன் நலன் ஏன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்வது, தவறான புரிதலை சரிசெய்ய உதவுகிறது. பெண்கள் வீட்டுக்காக வருமானம் ஈட்டும்போது, அவர்கள் அதிக அதிகாரம் கொண்டவர்களாகவும் வேலையை மையமாக கொண்டவர்கள் என்றும் தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. பல தம்பதிகளில் பெண்கள் வருமானம் ஈட்டுபவர்களாக இருப்பது, அந்த ஆண் வேலையை இழப்பதன் விளைவாகவே இருக்கிறது, இதனால் குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. பெண்கள் மட்டும் வேலைக்கு செல்லும் போது, ஆண்கள் வருமானம் ஈட்டும் குடும்பங்களை விட குடும்ப வருமானம் குறைவாக உள்ளது, இது பாலின ரீதியான ஊதிய இடைவெளியுடன் தொடர்புடையதாக உள்ளது. பாத் பல்கலைக்கழகத்தின் சமூக கொள்கை மற்றும் அறிவியல் துறையின் உதவி பேராசிரியர் ஹெலென் கோவாலெவ்ஸ்கா மற்றும் அவருடைய குழுவினர், “பெண்கள் வருமானம் ஈட்டுவதால் அவர்கள் அனுபவிக்கும் இழப்புகளை ஈடுசெய்வதற்கு பெரும்பாலான நாடுகள் தீவிரமாக செயலாற்றவில்லை,” என பரிந்துரைப்பதற்கு இது வழிவகுத்தது. இம்மாதிரியான சூழலில், ஒட்டுமொத்த குடும்பமும் குறைவான வருமானத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது, எனவே நலத்திட்டங்கள் இதில் அதிகம் உதவ வேண்டும் என அவர் வாதிடுகிறார்.
நேர்மறையான விஷயங்கள்
எனினும், வருமானம் ஈட்டும் வேலையிலிருந்து ஆண்கள் வெளியேறுவது குடும்பத்தின் மீது நேர்மறையான தாக்கத்தையும் செலுத்துகிறது. பிரிட்டனில் இப்படியான தந்தைகள் கடந்த காலங்களை விட அதிகமாக தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிடுகின்றனர், எனவே வீட்டிலுள்ள தந்தைகள் தங்கள் குழந்தைகளுடன் சிறப்பாக நேரம் செலவிடுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. வீட்டிலுள்ள ஆண்கள், வருமானம் ஈட்டும் தாய்மார்கள் அல்லது தந்தைகளை விட அதிகமாக குழந்தை கவனிப்பில் ஈடுபடுகின்றனர். ஆனால், வீட்டு வேலைகளில் தங்களின் பங்கை அவர்கள் அதிகப்படுத்துவதில்லை, இம்மாதிரியான சூழலில் கிட்டத்தட்ட சமமான அளவிலேயே வீட்டு வேலைகளை செய்கின்றனர். எல்லாவிதமான குடும்ப அமைப்புகளிலும் பெண்கள் அதிகமாகவே வீட்டு வேலைகளை செய்வதாக, 2023ம் ஆண்டு வெளியான அமெரிக்காவின் பியூ ஆய்வறிக்கை (pew report) கூறுகிறது.
குழந்தை பேறின் போது தந்தைகளுக்கு பல நாடுகளில் குறைவாகவே விடுப்பு வழங்கினாலும், அவர்கள் தாமாக விடுப்பு எடுக்கும்போது, குழந்தை கவனிப்பில் அவர்கள் ஈடுபடுவதால் திருமண உறவுகளில் திருப்தி அதிகரிக்கிறது, இது அவர்கள் மீண்டும் வேலைக்கு செல்லும்போதும் தொடர்கிறது. குழந்தை பேறின் போது விடுப்பு எடுக்கும் தந்தைகளுடன் குழந்தைகளுக்கு சிறப்பான பிணைப்பு ஏற்படுகிறது, இதன் காரணமாக, வீட்டு வேலைகளை சமமாக பகிர்ந்துகொள்வதை பார்த்து வளர்வார்கள். பெற்றோர்கள் எப்படி வீட்டு வேலைகளை பிரித்துக்கொள்கின்றனர் என்பது குழந்தைகளிடமிருந்து வாழ்க்கையில் எதிர்காலத்தில் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதையும் வடிவமைக்கிறது. வீட்டில் வேலைகளை சமமாக பிரித்துக்கொள்ளும்போது பெண்கள் வேலைகளில் எளிதாக முன்னேறுகின்றனர், அதன்மூலம் அவர்களின் வருமானம் உயர்வதற்கான சாத்தியமும் அதிகரிக்கிறது.
ஆனால், இந்த சமூக மாற்றங்களால் பெண்களுக்கு ஏற்படும் பலன்கள் இன்னும் உள்ளன. மெக்ஸிகோ குடும்பங்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வீட்டுக்கு வெளியே பெண்களுக்கு அதிக பணி வாய்ப்புகளும் மற்ற தளங்களில் அவர்களுக்கு அதிக அதிகாரமும் கிடைப்பதாக அக்குழு கண்டறிந்துள்ளது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பெரிய நிதிசார் முடிவுகளில் அவர்கள் பேரம் பேசுவதற்கான அதிகாரத்தைப் பெறுகின்றனர். இது மற்ற ஆராய்ச்சிகளுடன் பொருந்திப் போகிறது. வரலாற்று ரீதியாக அதிகாரம் இழந்த பெண்கள் பொருளாதார ரீதியாக அதிகாரமயப்படும் போது, ஊதியம் ஈட்டுதல், தன்னாட்சி மற்றும் வேலை ரீதியாக நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ‘வீட்டில் இருக்கும் ஆண்கள் மன அழுத்தம் போன்ற பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர், சில சந்தர்ப்பங்களில் இது விவாகரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது.’ விதிமுறைகள் மாறி, குடும்ப பொறுப்புகளுக்காக வேலையிலிருந்து ஆண்கள் வெளியேறுவது வழக்கமாகும்போது, அது ஒட்டுமொத்த குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். குழந்தை பேறின் போது ஆண்களுக்கு விடுப்பு வழங்குவது அறிமுகப்படுத்தப்பட்ட போது, 1995ம் ஆண்டில் இந்த விடுப்பை எடுத்த ஆண்கள் குழு, திருமண உறவில் நிலையின்மையை உணர்ந்ததாகவும் விவாகரத்துக்கான சாத்தியக்கூறு அதிகரித்ததாகவும் ஸ்வீடன் ஆய்வு காட்டுகிறது. 2022ம் ஆண்டில் இந்த விடுப்பை இரு மாதங்களாக அதிகரித்தபோது, நிலைமை இப்படி இருக்கவில்லை. தற்போது, ‘பயன்படுத்துங்கள் அல்லது இழந்துவிடுங்கள்’ (use-it-or-lose it) எனும் விடுப்பு திட்டத்தின்படி, ஸ்வீடன் பெற்றோர்களுக்கு மூன்று மாத விடுப்பு உள்ளது. இந்த விடுப்பை ஆண்கள் எடுப்பது, அதிகமாக உள்ளது. உண்மையில், இந்த விடுப்பை தந்தைகள் புறக்கணிப்பது ஓர் சமூகத் தடையாக பார்க்கப்படுகிறது.
இன்றைக்கு பெண்களை அதிகாரப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள போதிலும், அதுகுறித்த அணுகுமுறைகள் அப்படியேதான் உள்ளன. சமீபத்தில் லண்டன் கிங்ஸ் கல்லூரி மேற்கொண்ட இப்சோஸ் கணக்கெடுப்பின்படி (Ipsos survey), 18 முதல் 28 வயதுக்குட்பட்ட Gen Z தலைமுறையினர் அதிகம் இதில் மாறுபட்ட கருத்துகளை கொண்டவர்களாக உள்ளனர். உலகளவில் சுமார் 24,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில், தங்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்ள வீட்டில் இருக்கும் தந்தைகள், “ஆண்களை விட கீழானவர்களே” என இளம் ஆண்கள் அதிகம் ஒப்புக்கொண்டுள்ளனர். 28% Gen Z ஆண்கள் இதை ஒப்புக்கொண்டுள்ள போதிலும், 19% Gen Z பெண்களே இதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். மற்ற வயதினரிடையே இந்த எண்ணிக்கை குறைவாக உள்ளது. “சமத்துவத்தை ஆதரிக்க ஆண்கள் அதிகமானதை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது” எனும் கருத்து குறித்து கேட்டபோது, 60% Gen Z ஆண்கள் இதை ஆமோதித்தனர், ஆனால் 38% Gen Z பெண்களே இதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். (1945 முதல் 1965க்கு இடைப்பட்ட, மக்கள்தொகை பெருக்க காலத்தில் பிறந்த) ‘பேபி பூமர்கள்’ மத்தியில் இந்த எண்ணிக்கை ஆண்களில் 44% மற்றும் பெண்களில் 31% என்ற அளவில் குறைந்துள்ளது.
லண்டன் கிங்ஸ் கல்லூரியில் பணி மற்றும் வேலைவாய்ப்பு பேராசிரியரும் இந்த ஆய்வாசிரியர்களுள் ஒருவருமான ஹீஜுங் சங், இந்த போக்கு வளர்ந்து வருவதற்கு காரணம், இளம் ஆண்களை விட இளம் பெண்கள் பல்கலைக்கழகங்களில் படித்தவர்களாக இருப்பதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளதுதான் என்கிறார். அதன் விளைவாக, 20 வயதுகளின் முற்பகுதியில் உள்ள பெண்கள் ஆண்களை விட கொஞ்சம் அதிகமாக சம்பாதிக்கின்றனர் என்கிறார் அவர். பிரிட்டனில் முதன்முறையாக தற்போது ஆண் மருத்துவர்களை விட பெண் மருத்துவர்கள் அதிகமாக உள்ளனர்.
பட மூலாதாரம், Serenity Strull/ BBC/ Getty Images
படக்குறிப்பு, வீட்டில் அதிகாரம் என்பதுடன் பணம் என்பது நெருக்கமான தொடர்புடையதாக உள்ளது, தங்கள் மனைவியை விட குறைவாக சம்பாதிப்பவர்கள் சுயமரியாதை குறைவானதாக கருதுகின்றனர் தீர்வு என்ன?
“சில பகுதிகளில் பாலின சமத்துவத்துக்கான அறிகுறிகளை அதிகம் பார்க்க முடிகிறது.” என விவரிக்கும் சங், இன்றைக்கும் பல பெண்கள் எதிர்கொள்ளும் சமத்துவமின்மையை, இந்த இளம் ஆண்கள் அனுபவிப்பதில்லை என்கிறார்.
ஆண்மை பிரதிநிதித்துவம் குறித்து மாறிவரும் யோசனைகள், சமத்துவம் குறித்த அணுகுமுறையில் பிளவு ஏற்படுவதற்கான மற்றொரு காரணமாக உள்ளது, ஆனால் எல்லா இடங்களிலும் அல்ல. கிங்ஸ் காலேஜின் அரசியல் துறையில் பேராசிரியர் ரோசி கேம்பெல் , ஆய்வாசிரியராக இருந்த ஆய்வு ஒன்றில், ஆண்மை குறித்த அணுகுமுறைகளில் மாறுபட்ட கருத்துகள் அதிகரித்துவருவதாக கண்டறியப்பட்டுள்ளது, குறிப்பாக இளம் தலைமுறையினரிடையே அதிகரிக்கிறது. உதாரணமாக, இன்றைக்கு பெண்ணாக இருப்பதைவிட ஆணாக இருப்பது கடினமா என்பது போன்ற விஷயங்களில் ஆண்களும் பெண்களும் வேறுபட்ட கருத்துகளை கொண்டிருக்கின்றனர். “ஆண் மற்றும் பெண்களுக்கான பாலின சமத்துவம் குறித்ததாக பெண்ணியம் இருக்க வேண்டும். நிச்சயமாக, அதில் பெண்மை (feminine) என்ற வார்த்தையும் இருக்கிறது, அதனால் அது பெண்களுக்கானதாக மட்டும் பார்க்கப்படுகிறது,” என அவர் விளக்குகிறார்.
இளம் வயதினரிடையே வெளிப்படையான உரையாடல்களை குறிப்பாக பள்ளிகளில் பெண்ணியம் மற்றும் ஆண்மை என்பதற்கான அர்த்தம் என்ன என்பது குறித்து உரையாட வேண்டும் என ஆதரிக்கிறார். “இன்றைக்கு ஆணாக இருப்பது என்றால் என்ன என்பது குறித்து இளம் ஆண்களிடம் நாம் எப்படி உரையாடுகிறோம் என்பது குறித்தும் என்ன மாதிரியான முன்மாதிரியானவர்களை அவர்கள் உற்றுநோக்க வேண்டும் என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும்,” என்கிறார் அவர். சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான ‘அடலசென்ஸ்’ எனும் தொடரில் சித்தரிக்கப்பட்டது போன்று, குறிப்பாக இணையத்தில் வளர்ந்துவரும் ஆணாதிக்க தாக்கங்கள் குறித்து யோசிக்க வேண்டும்.
இத்தகைய முடிவுகள் இருந்தபோதிலும், சங் மற்றும் அவருடைய சகாக்கள் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின்படி, பாலின சமத்துவத்தை அடைவது முக்கியமானது என பலரும் ஒப்புக்கொள்கின்றனர். ஆண்மை மற்றும் கவனிப்பு, பரிவு மற்றும் பெண்மைக்கானதாக வகைப்படுத்தப்பட்டதாக கருதப்படும் பல திறன்களை உள்ளடக்கிய தந்தைமை குறித்த தங்களின் புரிதல்களை ஆண்கள் மாற்றிவருவதாக, சிறியளவிலான, ஆனால் அதிகரித்துவரும் ஆய்வுகள் காட்டுகின்றன. ஆண்மை என்பது குடும்பத்துக்காக சம்பாதிப்பதுதான் என்பதற்கு எதிராக அவர்களின் யோசனைகள் மாறிவருகின்றன.
“வெகுமதி அளிக்கக்கூடிய கேளிக்கையான விஷயங்களை பற்றியது மட்டும் அல்ல இது. கடினமான, அழுக்கான பராமரிப்பு வேலைகளை செய்வது,” என்கிறார் ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகத்தில் பாலின அறிஞராக உள்ள கர்லா எலியாட். ஆண்மை குறித்த இந்த புதிய யோசனையை பரப்புவதற்கு, ஆண்கள் அதிக பொறுப்புகளை எடுத்துக்கொள்வதோடு, ஆதிக்கம் மற்றும் சமத்துவமின்மையை கைவிட வேண்டும் என விளக்குகிறார்.
பேறுகால விடுப்பை அதிகரிப்பது, குறிப்பாக தந்தைகளுக்கான விடுப்பை அதிகரிப்பது, பராமரிப்பு தொடர்பான வேலைகளில் அவர்கள் கவனம் செலுத்துவதை அதிகரிக்கிறது. இது குடும்பத்துக்காக வருமானம் ஈட்டுபதில் ஆண்களுக்குள்ள சுமையை குறைத்து, பெண்கள் அதிகம் சம்பாதிக்க வழிவகுக்கும்.
கொள்கை ரீதியிலான மாற்றங்கள் ஏற்படுவதற்கு அதிக காலம் எடுக்கும், எனவே, சமூகத்தில் பாலின ரீதியிலான வேலைகள் குறித்து மாறிவரும் நம்முடைய எதிர்பார்ப்பு குறித்து நேர்மறையான செய்திகளை நாம் எல்லோரும் பரப்புவதுதான் ஒரு தீர்வாக இருக்கும். “இதில் மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது: தன் வாழ்க்கைத் துணையின் வருமானத்தால் தங்களின் சுயமரியாதை பாதிக்கப்படுவதாக ஆண்கள் கருதினால், தாங்கள் ஏன் அப்படி நினைக்கிறோம் என்பதை யோசிப்பதற்கான சிறந்த வாய்ப்பாக இருக்கும், இது ஆழமாக பதிந்த பாலின ரீதியிலான வேலைகளை சவால் விடுவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தும்,” என்கிறார் எலியட்.
வருமானம் ஈட்டும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், நாளடைவில் இந்த பொருளாதார மாற்றம் இயல்பானதாக மாறும்போது, குழந்தைகளுடன் உள்ள தம்பதிகளுள், ஆண்கள் வேலை மற்றும் குடும்ப பராமரிப்பில் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதற்கு ஏற்ப தகவமைப்பதற்கான தேவை எழும். அதன் விளைவாக, அதிகம் சம்பாதிக்கும் அவர்களின் மனைவிகள் தங்கள் வேலையில் முன்னேற முடியும்.
இதற்கு அதிக காலம் எடுக்கும் என்றாலும், இத்தகைய மாறிவரும் அணுகுமுறைகள், குடும்பத்துக்காக வருமானம் ஈட்டும் ஆண்களின் எண்ணிக்கையை குறைத்து, பெண்கள் குடும்பத் தலைவிகளாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை குறைத்து, உறவில் திருப்தியையும் ஆரோக்கியமான அதிகார பகிர்வையும் ஏற்படுத்தும்.
* மெலிசா ஹோகென்பூம், பிபிசியின் சுகாதார மற்றும் அறிவியல் செய்தியாளர் மற்றும் எனும் வெளியாகவிருக்கும் பிரெட்வின்னர்ஸ் (2025) மற்றும் தி மதர்ஹுட் காம்ப்ளெக்ஸ் ஆகிய புத்தகங்களின் ஆசிரியரும் ஆவார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு