Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
‘ஏஸ்’ திரைப்படத்தைக் காப்பாற்றியதா விஜய் சேதுபதி- யோகிபாபு கூட்டணி? கதை என்ன?
பட மூலாதாரம், @Aaru_Dir
படக்குறிப்பு, விஜய் சேதுபதி – ருக்மணி வசந்த்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஏஸ்’ திரைப்படம் இன்று (மே 23) வெளியாகியுள்ளது. யோகிபாபு, ருக்மணி வசந்த், கேஜிஎப் அவினாஷ், பப்லு பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ஆறுமுக குமார் இயக்கியுள்ளார், ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.
இதற்கு முன் 2018இல், இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், இன்று வெளியாகியுள்ள ‘ஏஸ்’ ரசிகர்களின் வரவேற்பைப் பெறுமா? ஊடக விமர்சனங்கள் கூறுவது என்ன?
திரைப்படத்தின் கதை என்ன?
பட மூலாதாரம், @Aaru_Dir
தனது குற்றப் பின்னணியிலிருந்து விடுபட்டு புதிய வாழ்க்கையைத் தொடங்க மலேசியா வருகிறார் போல்ட் கண்ணன் (விஜய் சேதுபதி).
அங்கே துப்புரவுப் பணியாளராக வேலை செய்துகொண்டு, வெளியே தன்னை தொழிலதிபராகக் காட்டிக்கொள்ளும் யோகி பாபு (அறிவு), கண்ணனை தனது நண்பனின் உறவினர் என தவறாக நினைத்து வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.
அங்கு, எதிர் வீட்டில் வசிக்கும் நாயகி ருக்குவுக்கும் (ருக்மணி வசந்த்) போல்ட் கண்ணனுக்கும் காதல் மலர்கிறது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இந்தச் சூழலில், ருக்குவுக்கு அவரது வளர்ப்புத் தந்தையால் (பப்லு பிருத்விராஜ்) சொத்துப் பிரச்னை இருப்பது தெரியவருகிறது. அதைத் தீர்க்க ஒரு குற்றத்தில் ஈடுபடுகிறார் நாயகன். அதைத் தொடர்ந்து அவருக்கு ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அதிலிருந்து எப்படி மீண்டார் என்பதே ‘ஏஸ்’ திரைப்படத்தின் கதை.
விஜய் சேதுபதி- யோகி பாபு கூட்டணி
பட மூலாதாரம், @Aaru_Dir
‘ஏஸ்’ திரைப்படத்தை, லாஜிக் என்ற ஒன்றை மறந்துவிட்டு திரையரங்கிற்குள் சென்றால் ரசிக்கலாம் என டைம்ஸ் ஆப் இந்தியாவின் விமர்சனம் கூறுகிறது.
“இத்திரைப்படத்தில் ‘க்ரைம்’ ஜானர் உள்ளது, ஆனால் அது முழுமையாக இல்லை. கொள்ளையடிப்பது தொடர்பான காட்சிகள் உள்ளன, ஆனால் ‘ஹெய்ஸ்ட்’ (Heist) படமும் அல்ல. அதேபோல இது ரொமான்ஸ் படமோ அல்லது நகைச்சுவை படமோ கூட அல்ல. அனைத்தும் கலந்த, எளிய கதைக்களம் கொண்ட ஒரு படம்” என்று அந்த விமர்சனம் விவரிக்கிறது.
விஜய் சேதுபதி, யோகி பாபுவின் கதாபாத்திரங்களைத் தவிர்த்து பிற கதாபாத்திரங்களுக்கு போதுமான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் டைம்ஸ் ஆப் இந்தியாவின் விமர்சனம் கூறுகிறது.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் தனது விமர்சனத்தில், “இயக்குனர் ஆறுமுககுமார், தனது பன்முகத்தன்மையை வெளிப்படுத்தவும், பல ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் சேதுபதியை ஒரு நகைச்சுவை கலந்த படத்தில் நடிக்க வைக்கவும், காதல்- திரில்லர் கதையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
இப்படிப்பட்ட ஒரு கதைக்கு யோகி பாபு மற்றும் விஜய் சேதுபதியை தேர்ந்தெடுத்தது இயக்குனரின் சாமர்த்தியம், ஏனெனில் ‘ஏஸ்’ பெரும்பாலும் இந்த இரண்டு நடிகர்களின் நடிப்பு மற்றும் நகைச்சுவை வசனங்களால் காப்பாற்றப்படுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளது.
திரைப்படத்தின் கதை எளிதாக கணிக்கும்படி எழுதப்பட்டுள்ளது எனக் கூறும் ‘தி இந்து’ நாளிதழின் விமர்சனம், படத்தின் நேர்மறை அம்சங்களையும் பட்டியலிடுகிறது.
“முதலாவதாக, இதில் யோகி பாபு தனது சிறந்த நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துகிறார். அறிவுக்கரசன் என்ற கதாபாத்திரத்தில் படம் முழுவதும் அமர்களப்படுத்துகிறார். அவரது வசனங்களில், 10இல் 9 வசனங்கள் சரியான ‘டைமிங்கில்’ வெளிப்படுகின்றன.இரண்டாவது விஜய் சேதுபதி- நாயகி ருக்மணி வசந்த் இடையேயான காதல் காட்சிகள் அழகாக உள்ளன.மூன்றாவது, ஜஸ்டின் பிரபாகரனின் இசை படத்தை நகர்த்திச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.இயக்குனர் ஆறுமுககுமாரின் திரைக்கதைத் திறன் சில காட்சிகளில் கைகொடுக்கிறது” என ‘தி இந்து’ நாளிதழின் விமர்சனம் பாராட்டுகிறது.
திரைப்படத்தின் குறைகள் என்ன?
பட மூலாதாரம், @Aaru_Dir
திரைப்படத்தில் சூதாட்டம் குறித்த காட்சிகள் உள்ளன, அவை வரும்போது திரைப்படம் விறுவிறுப்பாக நகர்வது போல உள்ளது. ஆனால், அந்த காட்சிகள் வரும் வரை, மெதுவாக நகரும் திரைக்கதையை நாம் பொறுத்துக்கொள்ள வேண்டும் என இந்தியா டுடேவின் விமர்சனம் கூறுகிறது.
“ஆனால் சூதாட்டம் தொடர்பான காட்சிகள் கதாபாத்திரங்களின் பதற்றத்தை ரசிகர்களுக்கு கடத்தவில்லை, காரணம் ‘போக்கர்’ (Poker) விளையாட்டு எல்லோருக்கும் பரிச்சயமானதல்ல.” என அந்த விமர்சனம் கூறுகிறது.
திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுகமாகும்போது இருக்கும் சுவாரஸ்யம், அடுத்தடுத்த காட்சிகளில் மறைந்துவிடுகிறது என ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் விமர்சனம் கூறுகிறது.
“நகைச்சுவையாக ஒரு படத்தை அணுகுவது வேறு, ஒரு ஹெய்ஸ்ட் களத்தை எடுத்துக்கொண்டு ‘சீரியஸாக’ கதையை அணுகுவது வேறு. இந்தத் திரைப்படம் இரண்டுமே அல்ல” என திரைக்கதையில் இருக்கும் குழப்பம் குறித்து விமர்சிக்கிறது ‘தி இந்து’ நாளிதழ்.
“திரைப்படத்தில் ஒரு சில ட்விஸ்டுகள் சுவாரசியமாக இருந்தாலும், பல தமிழ் திரைப்படங்களில் பார்த்த கதைக்களம் என்பதால், அடுத்து என்ன என்பதை ரசிகர்கள் எளிதாக கணித்துவிடலாம்” என டைம்ஸ் ஆப் இந்தியா விமர்சனம் கூறுகிறது.
திடீரென மாறும் கதையின் போக்கு, படத்தில் வரும் லாஜிக் பிரச்னைகள் என அனைத்தையும் மறக்கடிப்பது அவ்வவ்போது வரும் நகைச்சுவைக் காட்சிகள் மட்டுமே என்று கூறும் அந்த விமர்சனம், “ஒரு முறை பார்த்துவிட்டு, எளிதில் கடந்துபோகக்கூடிய திரைப்படம்” என விமர்சிக்கிறது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இந்தியா டுடே தனது விமர்சனத்தில், “விஜய் சேதுபதியின் நடிப்பு படத்தை பெரும்பாலும் காப்பாற்றுகிறது. திரைப்படத்தின் ஹெய்ஸ்ட் காட்சிகள் நன்றாக இருந்தாலும், அந்த சுவாரசியத்தை இயக்குனரால் தக்கவைக்க முடியவில்லை. இறுதியில் திரைப்படத்தை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம், வாய்ப்பை தவறவிட்டுவிட்டார்கள் என்ற எண்ணமே மிஞ்சுகிறது” என விமர்சித்துள்ளது.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையைப் பாராட்டியுள்ள ஹிந்துஸ்தான் டைம்ஸ் விமர்சனம், “ஒளிப்பதிவாளர் கரண் பி ராவத்தின் காட்சிப்படுத்தலைப் பாராட்ட வேண்டும், ஆனால் ஃபென்னி ஆலிவரின் எடிட்டிங் இன்னும் இறுக்கமாக இருந்திருக்கலாம். ஏனெனில் சில காட்சிகள் தேவையில்லாமல் நீட்டிக்கப்பட்டதால் படம் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. 154 நிமிடங்கள் என்பதை குறைத்திருக்கலாம்” எனக் கூறுகிறது.
மொத்தத்தில், ‘ஏஸ்’ஒரு நகைச்சுவையான, லாஜிக் இல்லாத ஹெய்ஸ்ட் படம். விஜய் சேதுபதி-யோகி பாபு காம்போவின் நகைச்சுவைக் காட்சிகள் இப்படத்தைக் காப்பாற்றுகின்றன என ஹிந்துஸ்தான் டைம்ஸ் விமர்சனம் கூறுகிறது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு