இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது பொற்கோவில் வளாகத்தில் ராணுவம் ஆயுதங்களை நிலைநிறுத்தியதா? உண்மை என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்2 மணி நேரங்களுக்கு முன்னர்

அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ தர்பார் சாஹிப் வளாகத்தில் ராணுவம் எந்த வகையான வான் பாதுகாப்பு துப்பாக்கிகளையும் நிலைநிறுத்தவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

திங்களன்று, இந்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் சுமர் இவான் ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியின் போது வெளியிடப்பட்ட ஒரு தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

“அண்மையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவிய சமயத்தில், ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப்பின் (பொற்கோவிலின்) தலைமை மதகுரு (கிரந்தி), வான் பாதுகாப்பு துப்பாக்கிகளை நிறுவ எங்களுக்கு அனுமதி அளித்தார்” என்று இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் சுமர் இவான் கூறியிருந்தார்.

இந்தக் கூற்றை சிரோமணி குருத்வாரா பர்பந்தக் குழுவின் நிர்வாகிகள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். அதற்குபிறகு, இந்திய ராணுவம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், “பொற்கோவில் வளாகத்தில் வான் பாதுகாப்பு துப்பாக்கிகள் உட்பட ஆயுதங்கள் பொருத்தப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.”

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மின்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு பொற்கோவிலின் வெளிப்புற விளக்குகள் அணைக்கப்பட்டன.”அமிர்தசரஸின் (பொற்கோவில்) வளாகத்தில் வான் பாதுகாப்பு பீரங்கிகளோ அல்லது வேறெந்த வான் பாதுகாப்பு மூலங்களோ பயன்படுத்தப்படவில்லை என்பது தெளிவுபடுத்தப்படுகிறது.”

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

முன்னதாக, இந்திய ராணுவ அதிகாரிகள் அறிக்கைகளை வெளியிட்ட விதம் குறித்து கருத்து தெரிவித்த அமிர்தசரஸ் பொற்கோவிலின் கூடுதல் தலைமை மதகுரு கியானி அமர்ஜித் சிங், இதுபோன்ற செய்திகள் ஆச்சரியமளிப்பதாகக் கூறினார்.

ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் என்பது சீக்கிய மதத்தின் ஆன்மீக ஆலயங்களுள் தலையாயதாகும், இது பொற்கோவில் என்றும் ஸ்ரீ தர்பார் சாஹிப் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு, சீக்கியர்கள் மட்டுமல்ல, பல்வேறு மதங்கள் மற்றும் சாதிகளைச் சேர்ந்த மக்களும் வந்து பிரார்த்தனை செய்கின்றனர்.

இந்த விவகாரம் குறித்து பேசும் கூடுதல் தலைமை கிரந்தி கியானி அமர்ஜித் சிங், “சில நாட்களுக்கு முன்னதாக நகரத்தில் மின்தடை தொடர்பாக அமிர்தசரஸ் மாவட்ட நிர்வாகம் வழங்கிய அறிவுறுத்தல்களை ஏற்று, ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் நிர்வாகம் ஒத்துழைப்புக் கொடுத்தது” என்றார்.

“அந்த சமயத்தில், ஸ்ரீ தர்பார் சாஹிப் வளாகத்தின் வெளிப்புறமும் மேற்தளங்களிலும் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குகள் குறிப்பிட்ட நேரத்துக்கு அணைக்கப்பட்டன. இருந்தபோதிலும், குரு தர்பாரின் சடங்குகள் நடைபெற்ற இடங்களில் விளக்குகள் அணைக்கப்படாமல் சடங்குகள் வழக்கம்போல சம்பிரதாயப்படியே நடைபெற்றன” என்று அவர் கூறினார்.

ஏப்ரல் 22 அன்று காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையை பாகிஸ்தானில் மேற்கொண்டது. அதற்கு பாகிஸ்தானும் எதிர் நடவடிக்கை எடுத்தது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எப்போது மோதல் ஏற்பட்டாலும், அப்போதெல்லாம் பஞ்சாப் மாநிலத்தின் எல்லைப் பகுதி குறிப்பிட்ட இலக்குகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ராணுவத்தின் கூற்றை நிராகரித்த தர்பார் சாஹிப்

பிபிசி செய்தியாளர் ரவீந்தர் சிங் ராபின் பகிர்ந்து கொண்ட தகவலின்படி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பொற்கோவிலில் வான் பாதுகாப்பு துப்பாக்கிகளை நிறுவுவதற்கு தலைமை கிரந்தி இந்திய ராணுவத்துக்கு அனுமதி அளித்ததாக இந்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் தெரிவித்தது தவறான தகவல் என்று கியானி அமர்ஜித் சிங் கூறினார்.

“இந்த புனித இடத்தில் ஆயுதங்களை நிறுத்துவதற்கு அனுமதியோ அல்லது ஒப்புதலோ வழங்கப்படவில்லை” என்று கூறினார்.

ஸ்ரீ தர்பார் சாஹிப் வளாகம், ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி அன்னதானம், ஸ்ரீ அகண்ட் பாத் சாஹிபன் மற்றும் பிற குரு சந்திதானங்களில் வழக்கமாக நடைபெறும் தினசரி சடங்குகள் கட்டாயமானவை என்றும், அதில் எந்த வகையிலும் இடையூறு செய்ய யாருக்கும் உரிமை இல்லை என்றும் அவர் கூறினார்.

“அண்மையில் சூழ்நிலைகள் பதற்றமானதாக மாறியபோதும், குரு தர்பாரின் சடங்குகளும் சம்பிரதாயங்களும் எந்தவித தடங்கலும் இன்றி அர்ப்பணிப்புடன் தொடர்ந்தது, தொடர்கிறது” என்று கூறிய அவர், மின் தடையின் போது, வழக்கமான சடங்குகள் நடைபெற்றபோது சந்நிதிகளின் விளக்குகள் அணைக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் சொன்ன தகவல் “தவறானது மற்றும் ஆச்சரியமானது” என்று அமர்ஜித் சிங் தெரிவித்தார். கூடுதல் தலைமை கிரந்தி என்ற முறையில், துப்பாக்கிகளை பொருத்துவதற்கு ராணுவத்துக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வழக்கறிஞர் ஹர்ஜிந்தர் சிங் தாமி, தலைவர், சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டிநிர்வாகம் ஒப்புதல் கொடுக்கவில்லை: தாமி

சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியின் தலைவர் மற்றும் வழக்கறிஞர் ஹர்ஜிந்தர் சிங் தாமியும், ராணுவ அதிகாரியின் கருத்துக்கு பதிலளித்துள்ளார். மின்தடையின் போது விளக்குகளை அணைப்பது தொடர்பாக அரசாங்கமும் மாவட்ட நிர்வாகமும் தன்னைத் தொடர்பு கொண்டதாகவும், இது ஒரு நிர்வாகப் பொறுப்பாகக் கருதி, முழு ஒத்துழைப்பையும் வழங்கியதாகவும் தாமி கூறினார்.

“ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப்பில் வான் பாதுகாப்பு துப்பாக்கிகளை நிறுவுவது தொடர்பாக இந்திய ராணுவ அதிகாரிகள் தொடர்பு கொள்ளவில்லை” என்று அவர் கூறினார்.

மாவட்ட நிர்வாகம் பிறப்பித்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதற்காக, கூடுதல் தலைமை கிரந்தி கியானி அமர்ஜித் சிங்குடன் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும், அதன்படி வெளிப்புற விளக்குகள் மட்டுமே அணைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மின்தடையின் போதும், பெருமளவிலான பக்தர்கள் ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப்பில் வழிபாடு செய்து கொண்டிருந்ததாகவும், சேவை செய்து கொண்டிருந்ததாகவும் கூறிய அவர், வான் பாதுகாப்பு அமைப்பு அல்லது துப்பாக்கிகள் என ஆயுதங்களை பொற்கோவிலில் வைத்திருந்தால் அதை அனைவரும் கவனித்திருப்பார்கள் என்றும் தாமி கூறினார்.

ராணுவ அதிகாரி ஒருவர் இதுபோன்ற ஒரு கருத்தைத் தெரிவிப்பது ஆச்சரியமானது என்று கூறிய அவர், ராணுவ அதிகாரிகள் ஏன் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுகிறார்கள் என்பதை இந்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் நாடு எதிர்கொண்ட பதற்றமான சூழலை சமாளிக்க நாடும் ராணுவமும் ஆற்றிய பங்கு பாராட்டத்தக்கது என்றும், ஆனால் சீக்கியர்களின் முக்கியமான பொற்கோவிலைப் பற்றி இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்புவது ஆச்சரியமாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

சிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டியின் தலைவர் என்ற முறையில் வழக்கறிஞர் தாமி, ஆயுதங்களை நிறுவுவதற்கு ராணுவத்துக்கு ஒப்புதல் வழங்கவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

படக்குறிப்பு, ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப்பின் தலைவர் கிரந்தி சிங் சாஹிப் கியானி ரக்பீர் சிங்’உண்மைக்கு மாறான பொய் பிரசாரம்’ – கியானி ரக்பீர் சிங்

ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப்பின் தலைவர் கிரந்தி சிங் சாஹிப் கியானி ரக்பீர் சிங் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், அண்மையில் இந்தியாவின் ராணுவ நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தான் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்தபோதிலும், வான் பாதுகாப்பு ஆயுதங்கள் நிறுவுவது குறித்து தன்னுடன் யாரும் பேசவில்லை என்றும், பொற்கோவிலில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும் கூறினார்.

அமிர்தசரஸ் குருத்வாராவில் சூழல் இயல்பாகவே இருந்ததாகவும், பக்தர்கள் வழக்கம்போலவே பொற்கோவிலில் வழிபட வந்து செல்வதாகாவும் கியானி ரக்பீர் சிங் கூறினார்.

பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள சர்வதேச எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள வீரர்கள், ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றிய முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ராணுவ அதிகாரியின் கூற்று

பட மூலாதாரம், ani

படக்குறிப்பு, 15வது காலாட்படை பிரிவின் ஜிஓசி மேஜர் ஜெனரல் கார்த்திக் சி சேஷாத்ரிஇதற்கிடையில், 15வது காலாட்படை பிரிவின் ஜிஓசி மேஜர் ஜெனரல் கார்த்திக் சி சேஷாத்ரி கூறுகையில், “பாகிஸ்தான் ராணுவம், பயங்கரவாத குழுக்கள் மூலம், ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் இந்தியா முழுவதும் இருந்து வந்திருந்த நிராயுதபாணியான சுற்றுலாப் பயணிகளைத் திட்டமிட்டுத் தாக்கியதை உலகமே அறியும்” என்றார்.

“இதற்குப் பிறகு, வலுவான இந்தியத் தலைமையின் கீழ் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடங்கப்பட்டது. நாங்கள் பயங்கரவாத மறைவிடங்களை மட்டுமே அழித்தோம், வேறு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை” என்றார்.

“ஒன்பது இடங்களில், ஏழு இடங்கள் இந்திய ராணுவத்தால் குறிப்பாக அழிக்கப்பட்டன. இவற்றில் லஷ்கர்-இ-தொய்பா தலைமையகம் அமைந்துள்ள லாகூருக்கு அருகிலுள்ள முரிட்கே நகரம் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) தலைமையகம் அமைந்துள்ள பஹவல்பூர் ஆகியவை அடங்கும். அவை முற்றிலுமாக அழிக்கப்பட்டன,” என்று அவர் கூறினார்.

“தாக்குதல் நடைபெற்ற உடனேயே, நாங்கள் பாகிஸ்தான் வீரர்களையோ அல்லது பொதுமக்களையோ வேண்டுமென்றே குறிவைக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தும் ஒரு அறிக்கையை வெளியிட்டோம்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், “பாகிஸ்தான் ராணுவத்துக்கு முறையான இலக்குகள் இல்லை என்றாலும், அவர்கள் மதத்தலங்கள், இந்திய ராணுவ நிலைகள் மற்றும் பொதுமக்களை குறிவைப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். இவற்றில், பொற்கோவில் மிகவும் முக்கியமானதாகத் தோன்றியது” என்று மேஜர் ஜெனரல் கார்த்திக் சி சேஷாத்ரி மேலும் கூறினார்.

“பாகிஸ்தான் அதிக எண்ணிக்கையிலான டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் பொற்கோவிலைத் தாக்குவார்கள் என்று எங்களுக்கு கூடுதல் உளவுத்துறை தகவல்களும் கிடைத்தது, எனவே நாங்கள் உடனடியாக நவீன, கூடுதலான மற்றும் போதுமான வான்வழி பாதுகாப்பை வழங்கினோம். பொற்கோவிலில் ஒரு கீறல் கூட ஏற்பட அனுமதிக்கவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

“ஆளில்லா வான்வழி ஆயுதங்கள், முக்கியமாக டிரோன்கள் மற்றும் தொலைதூர ஏவுகணைகளைப் பயன்படுத்தி பாகிஸ்தான் பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தியது.”

“தாக்குதலை எதிர்பார்த்திருந்ததால் நாங்கள் முழுமையான தயார் நிலையில் இருந்தோம், விழிப்புடன் இருந்த ராணுவத்தினர் பொற்கோவிலை குறிவைத்த அனைத்து டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தினார்கள்” “நமது புனிதமான பொற்கோவிலில் சிறு கீறல் கூட ஏற்பட இந்திய ராணுவம் அனுமதிக்கவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், ani

படக்குறிப்பு, லெப்டினன்ட் ஜெனரல் டெகுனாலெப்டினன்ட் ஜெனரல் டெகுனா என்ன சொன்னார்?

இந்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் சுமர் இவான் டிகுனா, ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில் மேஜர் ஜெனரல் கார்த்திக்கின் கூற்றை வழிமொழிந்தார்.

“பாகிஸ்தானின் செயல்பாடுகளை எங்களால் அனுமானிக்க முடிந்தது. அவர்களுக்கு குறிப்பிட்ட இலக்கு ஏதும் இல்லை” என்று லெப்டினன்ட் ஜெனரல் டெகுனா கூறினார்.

“எனவே, அவர்கள் நமது பொதுமக்களையும் மதத் தலங்களையும் குறிவைக்கலாம் என யூகித்திருந்தோம்”, “பொற்கோவிலின் தலைமை குரு, துப்பாக்கிகளை நிறுவ எங்களுக்கு அனுமதி அளித்தார். தர்பார் சாஹிப்பின் விளக்குகள் அணைக்கப்பட்டது இதுவே முதல்முறை” என்று அவர் தெரிவித்தார்.

“பொற்கோவில் நிர்வாகிகள், நிலைமையை புரிந்துகொண்டனர். தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதை புரிந்துகொண்டனர். எனவே, ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வருகை தரும் தேசிய மற்றும் சர்வதேச தளத்தைப் பாதுகாக்க பீரங்கிகளை நிறுவ அவர் எங்களுக்கு அனுமதி அளித்தார்” என்று லெஃப்டினெண்ட் ஜெனரல் சுமேர் இவான் தெரிவித்தார்.

“தர்பார் சாஹிப்பின் விளக்குகள் அணைக்கப்பட்டன, இதனால் வானில் வந்த டிரோன்களை எங்களால் தெளிவாகக் காண முடிந்தது” என்று லெப்டினன்ட் ஜெனரல் டெகுனா கூறினார்.

பட மூலாதாரம், ani

படக்குறிப்பு, மேஜர் ஜெனரல் கார்த்திக்கின் கூற்றை வழிமொழிந்த லெப்டினன்ட் ஜெனரல் சுமர் இவான் டிகுனாசிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழு எவ்வாறு உருவானது?

குருத்வாரா சட்டம் 1925 இன் கீழ் உருவாக்கப்பட்ட சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழுவின் முதல் 21 ஆண்டுகளின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. பஞ்சாப் அரசாங்கம் முதல் குருத்வாரா தேர்தலை ஜூன் 18, 1926 அன்று நடத்தியது.

தேர்தலில் சிரோமணி அகாலி தளத்துக்கு எதிராக போட்டியிட்ட சர்தார் பகதூர் மெஹ்தாப் சிங்கின் பிரிவு தோற்கடிக்கப்பட்டது. பஞ்சாப் அரசாங்கம் மற்றும் பாட்டியாலா மகாராஜாவின் ஆதரவைப் பெற்றது சர்தார் பகதூர் பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.

120 இடங்களுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, சிரோமணி அகாலிதளத்தைச் சேர்ந்த 85 வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். சர்தார் பகதூரின் தரப்பு 26 இடங்களைப் பெற்ற நிலையில், சீர்திருத்தக் குழுவின் 5 வேட்பாளர்களும், 4 சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.

மக்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சிரோமணி குழுவின் முதல் கூட்டம், நவம்பர் 4, 1926 அன்று அமிர்தசரஸில் உள்ள டவுன் ஹாலில் நடைபெற்றது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு