Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பழனி வக்ஃப் நிலம் சர்ச்சை: மூன்று ஆண்டுகளாக நீடித்த பிரச்னை முடிவுக்கு வந்ததா? பின்னணி என்ன?
பட மூலாதாரம், Special Arrangement
படக்குறிப்பு, திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகாவில் அமைந்துள்ளது பாலசமுத்திரம் கிராமம்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்2 மணி நேரங்களுக்கு முன்னர்
திண்டுக்கல், பழனியில் செங்கல் சூளை நிறுவனத்தை நடத்தி வரும் பாலகிருஷ்ணனுக்கு இங்குள்ள பாலசமுத்திரம் கிராமத்தில் சுமார் 4 சென்ட் நிலம் உள்ளது.
வீட்டுக் கடனை வேறு ஒரு வங்கிக்கு மாற்றுவதற்காக பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு அவர் சென்றுள்ளார். அங்கு அவருக்கு கூறப்பட்ட தகவல், கிராமத்தில் உள்ள சுமார் 300 குடும்பங்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.
“இந்த சர்வே எண்ணில் உள்ள சுமார் 90 ஏக்கர் நிலம் வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமானது என்பதால் பத்திரப் பதிவு செய்ய முடியாது என அதிகாரிகள் கூறினர்” என பிபிசி தமிழிடம் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக நிலத்தை வாங்கவும், விற்கவும் முடியாமல் தங்கள் கிராம மக்கள் மனஉளைச்சலை சந்தித்ததாகவும் அவர் கூறினார். தற்போது நில விவகாரத்தில் தீர்வு காணப்பட்டுவிட்டாலும், பிரச்னை வேறு வடிவில் தொடர்வதாக அங்குள்ள பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கூறுகின்றனர். என்ன பிரச்னை?
திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகாவில் அமைந்துள்ளது பாலசமுத்திரம் கிராமம். பட்டியல் பிரிவு மக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தப் பகுதி மக்கள் செங்கள் சூளைகள் மற்றும் கூலி வேலைகளை நம்பியே உள்ளனர்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.”3 ஆண்டுகளாக நீடித்த பிரச்னை”
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் தங்களின் நிலத்துக்கு உரிமை கொண்டாட முடியாத நிலையில் தவித்து வருவதாக, பாலசமுத்திரம் கிராம மக்கள் கூறுகின்றனர். “1989 ஆம் ஆண்டு என் அப்பா சுமார் 4 சென்ட் அளவுள்ள இந்த இடத்துக்கு பட்டா வாங்கினார். 2011 ஆம் ஆண்டு என் பெயருக்கு பத்திரமாக மாற்றினார்.
அதற்கு குடிநீர் வரி, சொத்து வரி ஆகியவற்றை பாலசமுத்திரம் பேரூராட்சிக்கு முறையாக செலுத்தி வருகிறோம். வரி கொடுத்து வருகிறோம். ஆனால், என்னுடைய நிலம் வக்ஃப் சொத்து எனக் கூறியதால், சென்னையில் வக்ஃப் வாரிய அலுவலகத்துக்கு நேரில் சென்று மனு கொடுத்தேன்” எனக் கூறுகிறார், இப்பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்.
ஒருகட்டத்தில், அவரின் மனுவை பரிசீலித்த வக்ஃப் வாரிய அதிகாரிகள், கிராமத்தில் 53/1 ஏ உள்பட சில சர்வே எண்களில் வக்ஃப் நிலம் வருவதாக, கூறியுள்ளனர். “நிலத்தை அளந்துவிட்டு பதில் சொல்கிறோம் எனக் கூறினர். ஆனால், அது அவ்வளவு எளிதாக நடக்கவில்லை” என்கிறார் பாலகிருஷ்ணன்.
இதற்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இவர் வழக்கு தொடர்ந்துள்ளார். “பத்திரப்பதிவுத் துறை தலைவர், வக்ஃப் வாரிய நிர்வாகம் ஆகியவை தலையிட்டால் மட்டுமே பிரச்னை தீரும் என்பதால் வழக்கு தொடர்ந்தேன்” எனக் கூறினார்.
இதுதொடர்பாக பழனி வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் ஆய்வாளர், பழனி எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில்குமார் என பலரிடமும் பாலசமுத்திரம் கிராம மக்கள் முறையிட்டனர்.
விவகாரம் திசை திருப்பப்பட்டதா?
பாலசமுத்திரம் கிராமத்தில் கோட்டைக் காளியம்மன் கோவில் தெரு தொடர்பாக அங்குள்ள பள்ளிவாசல் நிர்வாகத்துக்கும் ஊர் மக்களுக்கும் தகராறு இருந்து வந்ததாகக் கூறுகிறார், இதே கிராமத்தைச் சேர்ந்த பிரியங்கா சுபாஷ். பழனி கிழக்கு ஒன்றிய பா.ஜ.க துணைத் தலைவராக இவர் பதவி வகிக்கிறார்.
“இப்பகுதியில் உள்ள 53/1ஏ என்ற சர்வே எண்ணில் சுமார் 90 ஏக்கர் நிலம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் உள்ள சுமார் 6 ஏக்கர் நிலத்தில் ஜமாத் நிர்வாகத்துடன் கிராம மக்களுக்குப் பிரச்னை ஏற்பட்டது” எனக் கூறுகிறார் அவர்.
“கோட்டைக் காளியம்மன் கோவில் அருகில் இந்துக்கள் குடியிருக்கின்றனர். அந்த வழியாக சென்று உடல்களை அடக்கம் செய்வோம் என முஸ்லிம்கள் கூறுகின்றனர். வக்ஃப் வாரியத்துடன் எங்கள் நிலத்தைத் தொடர்புப்படுத்தி சிக்கலை ஏற்படுத்துவதற்கு இதுதான் காரணம்” எனக் கூறுகிறார்.
“தொடர்ந்து இந்த விவகாரம் பிரச்னையை ஏற்படுத்தவே, திருவிழா காலத்தில் முஸ்லிம் சமூகத்தில் யாராவது இறந்தால் உடலை கோவில் தெருவில் கொண்டு செல்லாமல் வேறு பாதையில் கொண்டு செல்வது என முடிவானது” எனக் கூறுகிறார், பாலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்.
“தெரு வழியாக உடலைக் கொண்டு செல்வதற்கும் இந்த 90 ஏக்கர் நிலத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், உடல்களைக் கொண்டு செல்வதற்கு ஒரு குறிப்பிட்ட பிரிவினர் எதிர்ப்பு காட்டுகிறார்கள் என்பதால், 53/1 ஏ சர்வே எண்ணில் வக்ஃப் நிலம் உள்ளதாக ஜமாத் தரப்பில் இருந்து வாரியத்துக்கு தெரியப்படுத்தி சிக்கலை ஏற்படுத்திவிட்டனர்” என்கிறார்.
ஒரு தெருவில் உடலைக் கொண்டு செல்வதற்கான பிரச்னையை மொத்த ஊர்ப் பிரச்னையாக சிலர் மாற்றிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
“இவர்களால் சுமார் 300 குடும்பங்களுக்கு மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்டது” எனக் கூறுகிறார் பாலகிருஷ்ணன்.
ஆனால், இதை முழுமையாக மறுக்கிறார், பாலசமுத்திரம் சுன்னத் வல் ஜமாத் பள்ளிவாசல் தலைவர் ஷேக் அலாவுதீன்.
ஜமாத் தலைவர் கூறுவது என்ன?
பட மூலாதாரம், Special Arrangement
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ஜமாத் கட்டுப்பாட்டில் கிராமத்தில் 5 ஏக்கர் 39 சென்ட் நிலம் உள்ளது. சர்வே எண் 53/1 ஏ உடன் இருந்த நிலத்தைத் தனியாக பிரித்து, 53/1 பி எனக் குறிப்பிட்டு வக்ஃப்-க்கு ஒப்படைக்கப்பட்டது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தை 53/1ஏ என்று மட்டும் அடையாளப்படுத்தியதால் இதர நிலங்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுவிட்டது” என்கிறார்.
வக்ஃப் நிலம் அமைந்துள்ள இடத்தில் மயானம், மசூதி என இரண்டும் உள்ளதாகக் கூறும் அவர், “அதற்கு சுற்றுச்சுவர் போட முயற்சிக்கும்போது மாற்று மதத்தினர் தடுத்து நிறுத்துகின்றனர். இறந்தவர் உடல்களை மாற்றுப் பாதையில் கொண்டு செல்லுமாறு ஊர் மக்களில் சிலர் பிரச்னை செய்கின்றனர்” என்கிறார்.
“உடல்களை கொண்டு செல்லும் இடம் 120 அடி பொதுப் பாதையாக உள்ளது. அதில் கோவில் கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இது தான் பெரிய பிரச்னையாக உள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தான் வழக்கு தொடர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சர்வே எண் 53/1Aல் பத்திரப் பதிவுகளுக்கு அனுமதி அளிக்குமாறு வக்ஃப் வாரியத்துக்கு ஜமாத் தரப்பில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அந்தக் கடிதத்தில், 22.6.49 ஆம் ஆண்டின்படி 53/1ஏ நத்தம் புறம்போக்கு எனவும் 53/1 B என்பது 5.39 ஏக்கர் மசூதி மயான புறம்போக்கு எனவும் பதிவுகள் உள்ளதாக அதில் தெரிவித்துள்ளார்.
“நிலத்தை வக்ஃப் அதிகாரிகள் சர்வே செய்யும்போது அதனை அளப்பதற்கு கிராம மக்கள் அனுமதித்திருந்தால் பிரச்னை எப்போதோ முடிவுக்கு வந்திருக்கும்” என்கிறார் ஷேக் அலாவுதீன்.
‘தடை விதிக்க முடியாது’ – பதிவுத் துறை தலைவர்
பட மூலாதாரம், Special Arrangement
இந்தநிலையில், கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு வக்ஃப் வாரிய முதன்மை செயல் அலுவலருக்கு பத்திரப் பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் பாலசமுத்திரம் கிராமத்தில் குறிப்பிட்ட புல எண்களுக்கு ஆவணம் பதியத் தடை கோரப்பட்டது. கிராமத்தில் உள்ள சர்வே எண்களுக்கு தமிழ் நிலம் இணையதளத்தில் வக்ஃப் பெயரில் பட்டா காணப்பட்டால் மட்டுமே ஆவணம் பதியத் தடை மேற்கொள்ளப்படும் எனக் கூறியிருந்தார்.
தொடர்ந்து, சமீபத்தில் பத்திரப் பதிவுத் துறை தலைவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘கிராமத்தில் உள்ள வக்ஃப் நிலங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். வருவாய்த் துறையின் தமிழ் நிலம் தகவல் தொகுப்பில் குறிப்பிட்ட சர்வே எண்கள், வக்ஃப் வாரியத்தின் பெயரில் பட்டா இருப்பதாக குறிப்பிடப்படாத நிலையில், நிலங்களின் பத்திரப் பதிவுக்கு தடை விதிக்க முடியாது’ எனத் தெரிவித்துள்ளார்.
பதிவுத் துறையின் உத்தரவால், எந்தப் பிரச்னையும் இல்லாமல் பழையபடி பத்திரப் பதிவுகளை தங்கள் பகுதி மக்கள் மேற்கொண்டு வருவதாகக் கூறுகிறார், பாலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சேகர்.
வக்ஃப் வாரிய தலைவர் கூறுவது என்ன?
பட மூலாதாரம், FB/K.Navas Kani
படக்குறிப்பு, தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் நவாஸ்கனிசடலங்களை கொண்டு செல்வதில் ஏற்பட்ட பிரச்னையாக ஜமாத் நிர்வாகம் மடைமாற்றியதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து, தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் நவாஸ்கனியிடம் பிபிசி தமிழ் கேட்டது.
“90 ஏக்கர் நிலத்தின் சர்வே எண்களில் உட்பிரிவுகள் சேர்க்கப்பட்டதால் பிரச்னை ஏற்பட்டது. வாரியத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்த உடன், பதிவுத்துறை தலைவரிடம் கூறி, வக்ஃப் நிலத்தைத் தவிர மற்ற நிலங்களை நீக்குமாறு கூறிவிட்டோம். அவர்களும் நீக்கிவிட்டனர்” எனக் கூறினார்.
“மற்றவர்களின் நிலங்களில் பத்திரப் பதிவு செய்வதற்கு தற்போது எந்த தடையும் இல்லை” எனக் கூறும் நவாஸ் கனி, “வக்ஃப் நிலத்திலும் சிக்கல் இல்லை. அனைத்தும் சரிசெய்யப்பட்டுவிட்டது” என்கிறார்.
தனி நபர்களின் இடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதை உடனுக்குடன் வாரியம் சரிசெய்து கொடுக்கிறது” எனவும் நவாஸ்கனி தெரிவித்தார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு