Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இன்று வியாழக்கிழமை (22) 9 வது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் இன்றைய தினம் மாலை யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சென்று முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.
-மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில்,குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் நான்கு பேர் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பல்வேறு பிரச்சனைகளை முன் வைத்து முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.
ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி கடந்த புதன்கிழமை (14) முதல் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த உப்பளத்தின் தற்போது உள்ள பொது முகாமையாளர், முகாமைத்துவ பிரிவினர், உதவி முகாமையாளர், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் தம்மை பழிவாங்குவது போன்றே செயற்படுகின்றனர்.
தமக்கு உரிய வகையில் வேலைகளை வழங்குவதில்லை. தமக்கான மருத்துவ வசதிகள் உப்பளத்தில் இல்லை.குடிநீர் பிரச்சனை காணப்படுகிறது. குடிநீர் வெளியே உள்ள தாங்கியில் இருந்து தான் உள்ளே எடுத்து செல்லவேண்டும்.
இந்த மாதம் தொடங்கி இதுவரை எமக்கு 4 நாட்களே வேலை வழங்கப்பட்டது. 10 நாட்கள் வேலை இல்லாமலே இருக்கின்றோம். இதை விட இந்த மாதம் வேலை செய்யாத ஊழியர்கள் கூட காணப்படுகின்றனர்.
மனித வலு இருக்கும் போது இயந்திர வலுவை பயன்படுத்துகின்றனர். வேலை செய்யும் எமக்கு சீருடைகள், பாதுகாப்பு கவசங்களோ வழங்கப்படுவதில்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் வகையில் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட ஆனையிறவு உப்பள ஊழியர்கள் சார்பாக துரித விசாரணைகளை மேற்கொள்வதாக யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு குறித்த ஊழியர்களிடம் தெரிவித்துள்ளது