பேராசிரியர் அலி கானுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் – நிபந்தனைகள் என்ன?

பட மூலாதாரம், Prof. Ali Khan Mahmudabad

படக்குறிப்பு, பேராசிரியர் அலி கான்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்தியா-பாகிஸ்தான் மோதல் மற்றும் கர்னல் சோபியா குரேஷி. விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோரின் பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட பேராசிரியர் அலி கான் மஹ்மூதாபாத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

மே 18-ஆம் தேதி பேராசிரியர் அலி கான் ஹரியாணா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

யோகேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஹரியாணாவின் சோனிபட் காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார். இரண்டு சமூகங்களுக்கிடையில் வெறுப்பைத் தூண்டுதல் என்ற பிரிவின் கீழ் பேராசிரியர் அலி கான் மீது ஹரியானா காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

உச்ச நீதிமன்றம் என்ன கூறியது?

இந்த விஷயத்தில் ​​உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்குகையில், “ஆட்சேபனைக்குரியதாகக் கூறப்படும் இரண்டு ஆன்லைன் பதிவுகளின் உள்ளடக்கங்களை நாங்கள் பரிசீலித்தோம். இந்த மனுக்கள் காரணமாக, மனுதாரர்கள் மீது இரண்டு எஃப்.ஐ.ஆர்.-கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கின் விசாரணையை நிறுத்துவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இருப்பினும், ஆன்லைன் பதிவுகளில் பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளின் பயன்பாட்டையும் சரியான விளக்கத்தையும் புரிந்து கொள்ள, ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைக்குமாறு ஹரியாணா காவல்துறை டிஜிபியை நாங்கள் அறிவுறுத்துகிறோம்.” என்று கூறிப்பிட்டுள்ளது.

“இந்தக் குழு ஹரியாணா அல்லது டெல்லியைச் சேர்ந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகளைக் (நேரடியாக நியமிக்கப்படும்) கொண்டிருக்க வேண்டும். இந்த குழு ஐஜி அல்லது அதற்கு மேற்பட்ட பதவியில் உள்ள அதிகாரியின் தலைமையில் செயல்படும், மற்ற 2 உறுப்பினர்கள் எஸ்பி அல்லது அதற்கு மேற்பட்ட பதவியில் இருப்பார்கள். இந்த மூன்று உறுப்பினர்களில் ஒருவர் பெண் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்க வேண்டும். 24 மணி நேரத்திற்குள் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

“ஜாமீன் மனுவும் பரிசீலிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம் “மேற்படி விசாரணையை எளிதாக்கும் நோக்கில், மனுதாரர் சோனிபட் தலைமை நீதித்துறை நடுவர் முன்னிலையில் ஜாமீன் பத்திரங்களை வழங்குவதற்கு உட்பட்டு, இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் உத்தரவிடுகிறோம்.” என்று தெரிவித்தது.

மனுதாரருக்கு பின்வரும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்று உச்ச நீதிமன்றம் கூறியது-

மனுதாரர் எந்த ஆன்லைன் பதிவுகள் அல்லது கட்டுரைகளை எழுத கூடாது மற்றும் விசாரணைக்கு உட்பட்ட 2 ஆன்லைன் பதிவுகள் தொடர்பான எந்த வாய்மொழி உரைகளையும் செய்ய கூடாது.இந்திய மண்ணில் பயங்கரவாத தாக்குதல்கள் அல்லது நமது நாட்டின் பதில் தொடர்பான எந்தவொரு விவகாரத்திலும் அவர் எந்த கருத்தையும் வெளிப்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.மனுதாரர் தனது பாஸ்போர்ட்டை சோனிபட் தலைமை நீதித்துறை நடுவர் முன் சமர்ப்பிக்க வேண்டும்.மனுதாரர் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். இடைக்கால ஜாமீன் வழங்குவதன் நோக்கங்களில் ஒன்று, விசாரணையை எளிதாக்குவதாகும்.பேராசிரியர் அலி கான் யார்?

பேராசிரியர் அலி கான், ஹரியாணாவின் அசோகா பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராக உள்ளார். இது ஒரு தனியார் பல்கலைக்கழகம்.

அலி கான் மஹ்முதாபாத் அரசியல் அறிவியல் மற்றும் வரலாற்றுப் பேராசிரியர். அவர் அரசியல் அறிவியல் துறையின் தலைவராகவும் உள்ளார். பேஸ்புக் சுயவிவரத்தின்படி, அவர் உத்தரபிரதேசத்தின் மஹ்முதாபாத்தை சேர்ந்தவர்.

அசோகா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, அவர் அமெரிக்காவின் ஆம்ஹெர்ஸ்ட் கல்லூரியில் வரலாறு மற்றும் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார்.

இதன் பிறகு சிரியாவின் டமாஸ்கஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டம் பெற்றார். இந்தக் காலகட்டத்தில், அவர் சிரியாவுக்கு மட்டுமல்ல, லெபனான், எகிப்து மற்றும் யேமென் ஆகிய நாடுகளுக்கும் பயணம் செய்தார். மேலும் இரான் மற்றும் ஈராக்கிலும் சிறிது காலம் இருந்தார். பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

பட மூலாதாரம், VINEET KUMAR

என்ன வழக்கு?

மே 6 மற்றும் 7 ஆம் தேதிகளின் இடைப்பட்ட இரவில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு, கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் இது குறித்த தகவல்களை வழங்கினர்.

இந்நிலையில் மே 8 அன்று, பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் சமூக ஊடகங்களில் ஒரு பதிவை வெளியிட்டார்.

இந்தப் பதிவில், கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு தேர்தெடுக்கப்பட்டது குறித்து எழுதியிருந்தார்.

மேலும் தனது பதிவில் இந்தியா- பாகிஸ்தான் மோதல் மற்றும் ‘போரை கோருபவர்களின்’ உணர்வுகள் குறித்தும், போரின் பாதிப்புகள் குறித்தும் பேராசிரியர் அலி கான் எழுதியிருந்தார்.

ஹரியாணா மாநில மகளிர் ஆணையம் இந்தப் பதிவு குறித்து, தாமாக முன்வந்து கவனத்தில் எடுத்துக்கொண்டு மே 12 அன்று பேராசிரியர் அலி கானுக்கு சம்மன் அனுப்பியது. இந்த சம்மனில், அவரது கருத்துக்கள்’ஆயுதப் படைகளில் உள்ள பெண்களை அவமதிக்கும் வகையிலும், வகுப்புவாத வெறுப்பை ஊக்குவிப்பதாகவும்’ உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஹரியாணா மகளிர் ஆணையம் தனது சம்மனில் ஆறு விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளது. மேலும் ‘கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் உள்ளிட்ட ராணுவத்தில் உள்ள பெண்களை அவமதிப்பது மற்றும் இந்திய ராணுவ அதிகாரிகளான அவர்களின் பங்கைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவது’ பற்றியும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பேராசிரியர் அலி கானுக்கு ஆணையத்தின் முன் ஆஜராக 48 மணிநேரம் அவகாசம் அளித்து, அவரிடம் எழுத்துப்பூர்வ பதிலைக் கேட்டது.

இதன் பின்னர், பேராசிரியர் அலி கானின் வழக்கறிஞர்கள் அவர் சார்பாக மகளிர் ஆணையத்திற்கு எழுத்துப்பூர்வ பதிலைக் கொடுத்தனர்.

”அவர் வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பேராசிரியர். அவர் இந்தக் கூற்றுகளை ‘தனது கல்வி மற்றும் தொழில்முறை நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி’ வெளியிட்டார், மேலும் அவை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன” என பேராசிரியர் அலி கானின் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

பேராசிரியர் அலி கானின் கருத்துகள் தொடர்பாக ஹரியாணாவின் சோனிபட்டில் வசிக்கும் யோகேஷ், மே 17 சனிக்கிழமை அன்று போலீஸில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், ஹரியாணா காவல்துறை ஞாயிற்றுக்கிழமை அன்று அலி கானை கைது செய்தது.

பேராசிரியர் அலி கான் மீது இந்திய தண்டனைச் சட்டம் 196 (1)B, 197 (1)C, 152 மற்றும் 299 ஆகிய பிரிவுகளின் கீழ் ஹரியாணா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பட மூலாதாரம், Ali Khan Mahmudabad/FB

பேராசிரியர் அலி கான் என்ன சொன்னார்?

மே 8 அன்று பேராசிரியர் அலி கான் வெளியிட்ட பதிவில்,”கர்னல் சோபியா குரேஷியைப் புகழ்ந்து பேசும் பல வலதுசாரிகளை கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், இவர்கள் இதேபோல் கும்பல் படுகொலை, தன்னிச்சையான புல்டோசர் நடவடிக்கை மற்றும் பாஜகவின் வெறுப்புணர்வைத் தூண்டும் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காகக் குரல் எழுப்பலாம். இதன் மூலம் இவர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் “இரண்டு வீராங்கனைகள் மூலம் தகவலை வெளியிடும் அணுகுமுறை முக்கியமானது. ஆனால் இந்த அணுகுமுறை யதார்த்தமாக மாற்றப்படவில்லையென்றால் அது வெறும் பாசாங்குத்தனமான ஒன்றாகதான் இருக்கும்” என்று பேராசிரியர் அலி கான் கூறினார்.

இருப்பினும், பேராசிரியர் அலி கான் தனது பதிவில் இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாராட்டினார்.

“பொதுவான முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் கள யதார்த்தம் அரசாங்கம் காட்ட முயற்சிப்பதை விட வேறுபட்டது. ஆனால் அதே நேரத்தில் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு (கர்னல் சோபியா மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங்கின் பத்திரிகையாளர் சந்திப்பு) இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையை காட்டுகிறது. இந்தக் கருத்தாக்கம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது என்பதையும் காட்டுகிறது” என்று அவர் எழுதியுள்ளார்.

பேராசிரியர் அலி கான் தனது பதிவின் இறுதியில் ‘ஜெய் ஹிந்த்’ என்று எழுதியிருந்தார்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு