Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
‘200 கொலைகள், பல ஆயிரம் கொள்ளைகள்’ : 4 மாநிலங்களில் ராணுவத்தையே திணறடித்த ‘இந்திய ராபின்ஹூட்’
பட மூலாதாரம், Rupa Publications
எழுதியவர், ரெஹன் ஃபாசல்பதவி, பிபிசி ஹிந்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
மத்தியப் பிரதேசத்தின் பிந்த் பகுதியில் ஒரு பிரபலமான கதை இருந்தது. ஒரு வறட்சியான காலத்தில், ராம்பூர் கிராமத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் எல்லாம் கருகிப் போகின.
திடீரென ஒரு நாள், 8 மாட்டு வண்டிகள் அந்த கிராமத்திற்கு வந்தன. அந்த மாட்டு வண்டிகளில் சாக்குகள் அடுக்கப்பட்டிருந்தன. அதில் கோதுமை நிரப்பப்பட்டிருந்தது. ராம்பூர் மக்களிடம் அதனை ஒப்படைத்த மாட்டுவண்டிக்காரர், இது ‘மன்சிங்கிடம் இருந்து வந்தது’ என்று மட்டும் கூறினார்.
கென்னத் ஆண்டர்சன் தன்னுடைய, டேல்ஸ் ஆஃப் மன்சிங், கிங் ஆஃப் இந்தியன் டகோய்ட்ஸ் என்ற புத்தகத்தில், “அந்த நேரத்தில் மன்சிங்கை உயிருடனோ, பிணமாகவோ பிடித்துக் கொடுத்தால் அவர்களுக்கு ரூ. 15 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்திருந்தது. 200 பேரை கொலை செய்ததாகவும், பல இடங்களில் கொள்ளை அடித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இருப்பினும் அவரைப் பற்றி தகவல் அளிக்க யாரும் முன்வராத காரணத்தால், அவரை யாராலும் பிடிக்க இயலவில்லை,” என்று எழுதியிருந்தார்.
ராம்பூர் மக்களுக்கு கோதுமை மூட்டைகளை கொடுத்துச் சென்ற மாட்டுவண்டிக்காரர்களிடம் காவல்துறையினர் பல விசாரணைகளை மேற்கொண்டனர்.
ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு ஆண் அவர்களை தொடர்பு கொண்டார் எனவும், 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரயில் நிலையத்திற்கு சென்று, சரக்கு ரயிலில் வைத்திருந்த சில தானிய மூட்டைகளை ராம்பூர் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் படியாக கூறியதாகவும் அவர்கள் விசாரணையில் தெரிவித்தனர். இந்த பணிக்காக அவர்களுக்கு தலா ரூ. 20 வழங்கப்பட்டது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
“மாட்டு வண்டி ஓட்டுபவர்களின் காதில், மன்சிங்கின் பெயரை ஒருவர் கூறியிருக்கிறார். மேலும் இந்த வேலையை ஒரு வாரத்திற்குள் முடிக்கவில்லை என்றால் அடுத்து வரும் வாரத்தின் முதல் நாளை பார்ப்பதற்கு அவர்கள் உயிரோடு இருக்கமாட்டார்கள் என்றும் அந்த நபர் கூறியிருக்கிறார். உயிருக்கு பயந்த மாட்டு வண்டி ஓட்டுநர்கள், ஆறாவது நாளே அந்த தானியத்தை ராம்பூரில் ஒப்படைத்தனர்,” என்றும் கென்னத் எழுதியுள்ளார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இந்தியாவின் ராபின் ஹூட்
சர்வதேச புகழ்பெற்ற வெளிநாட்டுப் பத்திரிகை ஒன்று கொள்ளையர் ஒருவரின் இறப்பை செய்தியாக்குவது அரிய நிகழ்வு.
1955-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி அன்று டைம் இதழ், “இண்டியா: டெட் மன்” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அதில், “டெல்லிக்கு தெற்கே அமைந்துள்ள நான்கு மாநிலங்களில் கொள்ளையன் மன் சிங்கிற்கு கிடைத்த மரியாதையும், கௌரவமும் வேறு யாருக்கும் கிடைத்ததில்லை. அந்த பிராந்தியத்தில் இருந்த ராஜாக்களும் ஜமீன்தார்களும் அவருடைய பேரனின் திருமண விருந்தில் கலந்து கொண்டனர்,” என்று குறிப்பிட்டிருந்தது.
1952-ஆம் ஆண்டு அரசால் அமைக்கப்பட்ட மொரேனா குற்ற விசாரணை கமிட்டியும், “மன் சிங்கிற்கு தனிப்பட்ட வெறுப்பு ஏதுமில்லை,” என்று குறிப்பிட்டிருந்தது.
ஆனால் மன்சிங் தீவிரமாக செயல்பட்ட 27 ஆண்டுகளில் கொலையான நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் நடைபெற்ற ஆயிரக்கணக்கான கொள்ளைகள் குறித்த மத்திய இந்தியாவின் காவல்துறை பதிவுகளையும் நம்மால் புறந்தள்ள இயலாது.
டைம் இதழ் தன்னுடைய கட்டுரையில், “மக்களின் மனதில் மன்சிங் குறித்த பயமும் மரியாதையும் இருந்தது விசித்திரமாக இருந்தது. ராபின் ஹூட்டைப் போன்று மன்சிங்கும் ஒரு காலத்தில் நல்ல மனிதராக இருந்தார். ஆனால் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி அவரை ஒரு கொள்ளையராக மாற்றியது,” என்று குறிப்பிட்டிருந்தது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 1955-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி அன்று டைம் இதழ், “இண்டியா: டெட் மன்” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. காவல்துறையினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மன்சிங்
மன்சிங்கைப் பிடிக்க நான்கு மாநிலங்களில் 1700 காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். 15 ஆண்டுகள், 8000 சதுர மைல்கள் பரப்பில் அவரை காவல்துறையினர் தொடர்ந்து தேடிக் கொண்டிருந்தனர். 80 முறை அவரை பிடிக்க சந்தர்ப்பம் இருந்தும் அவர்கள் அதைக் கோட்டைவிட்டனர்.
அவரைப் பிடிப்பதற்காக காவல்துறையினர் ஒன்றரை கோடி ரூபாய் செலவிட்டனர். அந்த காலத்தில் அது மிக அதிகமான நிதி.
மொரேனா குற்ற விசாரணைக் குழு அதன் அறிக்கையில், “காவல்துறையினருக்கு தகவல் தருபவர்கள் மற்றும் மன்சிங்கை பின் தொடரும் காவல்துறையினரை மன்சிங் எவ்வாறு கொலை செய்தார் என்று பலவிதமான தகவல்களை மக்கள் கூறுகின்றனர். பணம் இருப்பவர்களை மட்டுமே அவர் கடத்தினார். பள்ளிகள் கட்ட நிதி திரட்டவே நில உடைமையாளர்களை அவர் வலியுறுத்தினார்,” என்று கூறியுள்ளது.
கென்னத் தன்னுடைய புத்தகத்தில், “மன்சிங் குடிக்க மாட்டார். சைவ உணவை உட்கொள்ளுபவர். கடவுள் பக்தி கொண்டவர் என்று கூறப்படுகிறது. தினமும் சூரிய உதயத்திற்கு முன்பே ஆற்றில் குளித்துவிட்டு அவர் அருகில் உள்ள காளிமாதா கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்துவார். கொள்ளையடித்த பணத்தில் இருந்து அவர் பல கோவில்களைக் கட்டியெழுப்பியுள்ளார்,” என்று குறிப்பிடுகிறார்.
பல கோவில்களில் அவர் மணி வாங்கிக் கொடுத்துள்ளார். அதில் அவருடைய பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். பட்டேஸ்வர் நாத் கோவிலில் நடைபெறும் மத சடங்குகளில் அவர் தவறாமல் கலந்து கொள்வார். இந்த செய்தியை அறிந்து கொண்ட காவல்துறையினர் அனைத்து திசையிலும் இருந்து கோவிலை சுற்றி வளைத்தனர். ஆனால் மன்சிங் மாறுவேடத்தில் வந்து சென்றார்.
பட மூலாதாரம், Sheikh Mukhta
படக்குறிப்பு, மன்சிங்கைப் பிடிப்பதற்காக காவல்துறையினர் ஒன்றரை கோடி ரூபாய் செலவிட்டனர்யார் இந்த மன்சிங்?
1890-ஆம் ஆண்டு ஆக்ராவுக்கு அருகே அமைந்திருக்கும் ரத்தோர் கேதா என்ற கிராமத்தில் பிறந்தவர் மன்சிங். அவருடைய அப்பா பிஹாரி சிங் அந்த கிராமத்தின் தலைவராக பதவி வகித்தார். மிகவும் செழிப்பான குடும்ப பின்னணியைக் கொண்டவர் பிஹாரி சிங். அவருக்கு மன்சிங் மட்டுமின்றி நவாப் சிங் என்ற மற்றொரு மகனும் இருந்தார்.
மன்சிங்கிற்கு மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்தார் அவருடைய தந்தை. மன்சிங்கிற்கு ஜஷ்வந்த் சிங், சுபேதார் சிங், தாசில்தார் சிங் மற்றும் துமன் சிங் என்று நான்கு மகன்களும், ராணி என்ற மகளும் இருந்தனர்.
24 வயதில் அவர் ஆக்ரா மாவட்டத்தின் போர்டு உறுப்பினராகவும், கிராமத் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். எளிதில் மக்களோடு பழகும் சுபாவம் அவரை பிரபலமானவராக மாற்றியது.
பட மூலாதாரம், Social Media
படக்குறிப்பு, காவல்துறையினர் மன்சிங்கை 15 ஆண்டுகளாக வலைவீசி தேடினார்கள் பொய் குற்றச்சாட்டு
பிஹாரி சிங்கிற்கும் அதே பகுதியில் வசித்து வந்த தல்ஃபிராமுக்கும் நிலத்தகராறு ஒன்று ஏற்பட்டது. அந்த நேரத்தில் மன்சிங்கின் அண்ணன் நவாப் சிங் வீட்டில் இருந்து வெளியேறி காட்டில் வசித்து வந்தார்.
இந்த நேரத்தில் அவர்களின் கிராமத்தில் கொள்ளை சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. பணத்தை வட்டிக்கு விடும் நபர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற கொள்ளையர்கள் அவரைக் குத்திக் கொலை செய்தனர்.
இது தொடர்பாக கென்னத் ஆண்டர்சன் அவருடைய புத்தகத்தில் பின்வருமாறு எழுதியுள்ளார் : மன்சிங்கின் அண்ணன் நவாப் சிங்கும் இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்டிருப்பதாக தல்ஃபிராம் பொய்யான குற்றச்சாட்டு ஒன்றை காவல் நிலையத்தில் கொடுத்தார். அதில் நவாப் சிங்கிற்கு அவருடைய அப்பா பிஹாரி சிங் ஆதரவு அளிப்பதாகவும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து மன்சிங்கிற்கும் ஏற்கனவே தெரியும் என்றும் கூறியிருந்தார். நவாபிற்கு தேவையான உதவியை மன்சிங் செய்தார் என்றும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரால் குடும்பத்திற்கு அவமானம் நேர்ந்துவிட்டது என்று உணர்ந்த பிஹாரி சிங் தன் மகன் மன்சிங்கோடு இணைந்து தல்ஃபி ராமுக்கு ஒரு பாடம் கற்பிக்க முடிவு செய்தார். இதனை அடுத்து மன்சிங் தன்னுடைய நான்கு மகன்கள் மற்றும் அப்பாவையும் அழைத்துக் கொண்டு காட்டில் வாழும் அவருடைய அண்ணன் நவாப் சிங்கை சந்திக்கச் சென்றார்.
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, மன்சிங்கிற்காக அவருடைய கிராமத்தில் கட்டப்பட்டுள்ள கோவில் காவல்துறையினருடனான மோதலில் மகனை இழந்த மன்சிங்
ஒரு இரவில் மன்சிங்கும் அவரின் கூட்டாளிகளும் தல்ஃபிராமின் வீட்டை தாக்கினார்கள். தல்ஃபிராம் அதில் தப்பிப் பிழைத்தார். ஆனால் அவருடைய நண்பர்கள் பலர் உயிரிழக்க நேரிட்டது.
இந்த விவகாரத்தில் மன்சிங் கைது செய்யப்பட்டார். ஆனால் அவருடைய அண்ணன் நவாப் சிங், மூத்த மகன் ஜஷ்வந்த் சிங், உறவினர் தர்ஷன் சிங் ஆகியோர் தப்பித்தனர்.
ஒரு நாள் நவாப்சிங் அவருடைய அப்பாவின் வீட்டில் ஜஷ்வந்த் மற்றும் தர்ஷனுடன் தங்கியிருந்த போது, தல்ஃபிராம் அவருடைய கூட்டாளிகள் சிலரோடு அவர்களை தாக்க ஆரம்பித்தார்.
கென்னத் தன்னுடைய புத்தகத்தில்,”அதே நேரத்தில் காவல்துறைக்கும் தகவல் அளித்திருக்கிறார் தல்ஃபிராம். காவல்துறையினர் துப்பாக்கிகளோடு சம்பவ இடத்திற்கு வருவதற்கும், நவாப் சிங், ஜஷ்வந்த் மற்றும் தர்ஷன் துப்பாக்கியால் தாக்குதல் நடத்துவதற்கும் சரியாக இருந்தது. தல்ஃபிராம் அந்த இடத்தில் இருந்து ரகசியமாக வெளியேற, காவல்துறையினர் அந்த மூன்று நபர்களையும் சுற்றிவளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். அதில் ஜஷ்வந்த் சிங் மற்றும் தர்ஷன் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நவாப் சிங் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணைக்குப் பிறகு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது,” என்று குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மன்சிங்கின் மகன் மற்றும் உறவினர் இறக்க நேரிட்டது பழிதீர்த்த மன்சிங்
மன்சிங் ஏற்கனவே செய்த குற்றத்திற்காக பத்தாண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்தார். பழிதீர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவருடைய மனதில் ஓடிக்கொண்டு இருந்தது. நன்னடத்தை காரணமாக அவர் சிறையில் இருந்து 1938-ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.
1940-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி இரவில், தன்னுடைய 3 மகன்கள் மற்றும் நம்பிக்கைக்குரிய கூட்டாளி ரூபாணி ஆகியோடு சேர்ந்து தல்ஃபிராம் மற்றும் கெம் சிங்கின் வீட்டை மன்சிங் தாக்கினார். இரண்டு பெண்களைத் தவிர அந்த குடும்பத்தில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர்.
இதன் பிறகு மன்சிங் கொள்ளையராக உருமாறினார். அடுத்த 15 ஆண்டுகளில், இந்தியாவிலேயே மிகப்பெரிய கொள்ளையனாக அவர் கருதப்பட்டார்.
மத்திய இந்தியாவின் பல பிராந்தியங்களில் அவர் ‘தஸ்யூ சம்ரத்’ என்று அறியப்படுகிறார். அவருடைய 3 மகன்களோடு, கூடுதலாக சர்னா, லகான் சிங், அம்ரித்லால் மற்றும் தூரத்து உறவினர் ரூபா ஆகியோர் ஒரு குழுவாக இணைந்து செயல்பட்டார்.
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, மன்சிங் ஏற்கனவே செய்த குற்றத்திற்காக பத்தாண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்தார் சிறுசிறு கொள்ளையர்களின் அன்பைப் பெற்ற மன்சிங்
ஏழைகளையும் வறியவர்களையும் மன்சிங் துன்புறுத்தியது இல்லை என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். நில உடைமையாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களை இலக்காகக் கொண்டே அவர் செயல்பட்டார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நிறைய குற்றவாளிகள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். அப்படி விடுதலையானவர்களில் மன்சிங்கின் அண்ணன் நவாப் சிங்கும் ஒருவர்.
விடுதலையானதும் தன்னுடைய சொந்த ஊருக்குச் சென்ற அவர் துப்பாக்கி ஒன்றை வாங்கிச் சென்று உயிருடன் இருந்த தல்ஃபிராமின் இரண்டு உறவினர்களை சுட்டுக் கொன்றார். அதன் பிறகு காட்டில் இருக்கும் தன்னுடைய தம்பி மன்சிங்கோடு அவரும் சேர்ந்து கொண்டார்.
சம்பல் பிராந்தியத்தில் மன்சிங்கின் ஆதிக்கம் அதிகரிக்கத் துவங்கிய போது அவரைப் பிடிக்க அரசு ராணுவத்தை வரவழைத்தது.
அந்த பிராந்தியத்தில் செயல்பட்டு வந்த கொள்ளையர்கள் பலரும் கொள்ளையடித்து ஈட்டிய பொருளில் 10 முதல் 25%-த்தை மன்சிங்கிற்கு வழங்கினார்கள். அவரை தங்களின் தலைவர் என்றும் அழைத்தனர். இது அவருடைய செல்வத்தை அதிகரித்ததோடு, அந்த பிராந்தியத்தில் அவரின் செல்வாக்கையும் உயர்த்தியது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சம்பல் பிராந்தியத்தில் மன்சிங்கின் ஆதிக்கம் அதிகரிக்கத் துவங்கிய போது அவரைப் பிடிக்க அரசு ராணுவத்தை வரவழைத்தது உதவிக்கு வந்த ராணுவம்
1951-ஆம் ஆண்டு மன்சிங்கின் குழுவில் உள்ள சர்னா அவருடைய மனைவியை பார்ப்பதற்காக அவரின் சொந்த கிராமத்திற்கு செல்ல இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்தது. சர்னாவை பிடிக்க காவல்துறையினர் திட்டம் தீட்டினர்.
இது குறித்து தெரியாத சர்னாவும் அவருடைய கூட்டாளிகள் சிலரும் சர்னாவின் கிராமத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு சென்றனர். அதுவரை அமைதியாக நடப்பதை கவனித்த காவல்துறையினர் 60 பேர் அந்த வீட்டை சுற்றிவளைத்தனர். இதை அறிந்த கொள்ளையர்கள் காவல்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். துப்பாக்கிச்சூடு சுமார் 24 மணி நேரம் நீடித்தது. இதே நேரத்தில் காவல்துறையினர் 400 ராணுவ வீரர்களின் உதவியை நாடினார்கள்.
கென்னத் தன்னுடைய புத்தகத்தில்,”460 பாதுகாப்புப் படையினர் கொள்ளையர்களை அடுத்த மூன்று நாட்கள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினார்கள். தோக்ரா படைப்பிரிவில் இருந்த ராணுவத்தினரின் உதவியையும் அவர்கள் கோரினார்கள். இரண்டு பீரங்கி குண்டுகள் அந்த வீட்டை தாக்கியது. மொத்த வீடும் உருக்குலைய, காவல்துறையினர் சத்தமிட்டவாறே உள்ளே சென்றனர். அங்கே 15 கொள்ளையர்களின் உடல்கள் இருந்தன. ஆனால் சர்னா தப்பியோடிவிட்டார்,” என்று எழுதியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சர்னாவை பிடிப்பதற்காக தோக்ரா படைப்பிரிவில் இருந்த ராணுவத்தினரின் உதவியையும் காவல்துறையினர் நாடினார்கள் (சித்தரிப்புப் படம்) மன்சிங்கின் தனிப்பட்ட பிரச்னைகள்
ஆனால் 2 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற 10 மணி நேர தாக்குதலில் சர்னாவுக்கு தப்பிப் பிழைக்க வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. தாக்குதலின் முடிவில் சர்னாவும் அவருடைய 9 கூட்டாளிகளும் கொல்லப்பட்டனர்.
சர்னா, மன்சிங்கின் தைரியமான கூட்டாளி மட்டுமல்ல, தாக்குதலுக்காக தனித்துவமான வியூகங்களையும் வகுத்துக் கொடுத்தவர் ஆவார். எங்கே எப்போது தாக்குதல் நடத்த வேண்டும், நடத்தக் கூடாது என்பதை அவர் நன்கு அறிந்து செயல்படக் கூடியவர்.
அதே காலகட்டத்தில் மன்சிங்கின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல இக்கட்டான சம்பவங்கள் அரங்கேறின.
கென்னத் அவருடைய புத்தகத்தில், “மன்சிங் தன்னுடைய மகள் ராணியை, அவரின் குழுவில் இருக்கும் லகான் சிங்கிற்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால் ராணிக்கு அந்தக் கொள்ளை கூட்டத்தில் இருந்த மற்றொரு கொள்ளையர் மீது காதல் ஏற்பட்டது. இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த மன்சிங் மகளின் காதலனை சுட்டுக் கொண்டார். மருமகனான லகான் சிங், மன்சிங்கின் குழுவில் இருந்து வெளியேறினார்,” என்று குறிப்பிடுகிறார்.
“இறுதி காலத்தில் மன்சிங்கிற்கு ஓய்வும் அமைதியும் வீடும் தேவைப்படுகிறது என்று உணர்ந்தார். அரசாங்கத்திற்கு கடிதம் எழுதிய அவர், தன்னுடைய தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் கொள்ளையனாகவோ, கொலைகாரனாகவோ மாறவில்லை. விதியும் சூழலும் அவரை அப்படியாக மாறத் தள்ளியது.”
“உண்மையான இந்தியனாக கோவாவுக்கு செல்ல விரும்பிய அவர், போர்த்துக்கீசியர்களின் பிடியில் இருந்த கோவாவை மீட்டு அவர்களை அங்கிருந்து விரட்ட விரும்பினார்.”
ஆனால் இந்திய அரசாங்கம் அவரின் இந்த கடிதத்திற்கு பதில் அளிக்கவில்லை. மன்சிங் விரக்தி அடைந்தார். இந்த நிகழ்வு அவருடைய கூட்டாளிகளுக்கும் அவருக்கும் சோர்வை அளித்தது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, போர்த்துக்கீசியர்களின் பிடியில் இருந்த கோவாவை மீட்டு அவர்களை அங்கிருந்து விரட்ட விரும்பினார் கூர்கா படை அமைத்த இந்திய அரசாங்கம்
மன்சிங்கின் கூட்டாளிகள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டனர் அல்லது இறந்து போனார்கள் அல்லது கொல்லப்பட்டார்கள். முடிவில் அவருடைய அண்ணன் நவாப் சிங், மகன் சுபேதார் சிங் மற்றும் ரூபாணி உட்பட வெறும் 18 கொள்ளையர்கள் மட்டுமே அவருடன் இருந்தனர்.
1954-ஆம் ஆண்டு நவம்பரில் மத்திய இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த நரசிம்ம ராவ் தீக்சித், இன்னும் ஒரு வருடத்தில் மன்சிங் கைது செய்யப்படவில்லை என்றால் தன்னுடைய பதவியில் இருந்து ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்தார்.
மன்சிங்கை பிடிப்பதற்காக அவர் கூர்காவினரைக் கொண்ட சிறப்புப் படையினரை உருவாக்கினார். ஆனால் மன்சிங் காவல்துறையினரை ஏமாற்றுவதற்காக, அவரைப் போலவே தோற்றம் அளித்த நபர் ஒருவரை எரித்துவிட்டார்.
உடல் நலக்குறைவால் மன்சிங் இறந்துவிட்டதாகவும், அதன் பின்னர் அவருடைய உடலுக்கு எரியூட்டப்பட்டதாகவும் வதந்திகள் பரவின.
ஆனால் சில நாட்கள் கழித்து மன்சிங் மீண்டும் கொள்ளையில் ஈடுபட்டார். காவல்துறையினர் மற்றும் கூர்கா சிறப்புப் படையினரால் அவரை பிடிக்க இயலவில்லை.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மன்சிங்கை பிடிப்பதற்காக கூர்கா சிறப்புப் படை உருவாக்கப்பட்டது (சித்தரிப்புப் படம்) இறுதி தருணம்
பிந்த் பகுதிக்கு தப்பிச் சென்ற மன்சிங் அங்கிருந்து குன்வாரி ஆற்றை கடக்க முயன்றார். அப்போது ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருந்ததால் அவரால் அதை கடக்க இயலவில்லை. அங்கிருந்து அவர் பிஜாபூருக்குச் சென்றார்.
ஜமதார் பன்வர் சிங் தலைமையில் செயல்பட்டு வந்த கூர்கா படைப்பிரிவு அவரை துரத்திக் கொண்டிருந்தது. இரண்டு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. ஆயிரக்கணக்கான குண்டுகள் வெளியேறிய பிறகு மன்சிங்கின் இறுதி காலம் வரத்துவங்கியது. துப்பாக்கி குண்டுகள் துளைத்த பெரிய கொள்ளையனின் உடல் நிலத்தில் சரிந்தது.
மேற்கொண்டு குண்டுகள் துளைக்காமல் இருக்க அவரின் உடலை தன்னுடைய உடலால் மூட நினைத்தார் அவருடைய மகன் சுபேதார் சிங். இறுதியில் அவருடைய உடலும் குண்டுகளால் துளைக்கப்பட்டு அவரும் உயிரிழந்தார்.
மன்சிங்கின் அண்ணன் உயிரைக் காப்பாற்றிய ரூபாணி அங்கிருந்து தப்பிச் சென்றார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பிந்த் பகுதிக்கு தப்பிச் சென்ற மன்சிங் அங்கிருந்து குன்வாரி ஆற்றை கடக்க முயன்றார் குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்படவில்லை
அமைச்சர் தீக்ஷித் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படவில்லை. மன்சிங் கொல்லப்பட்டது குறித்து அன்றைய பிரதமர் நேருவுக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது.
உத்தரப்பிரதேச முதல்வராக இருந்த டாக்டர் சாம்பூர்நாத், “ஒருவரின் இறப்பு செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது நல்ல விசயம் இல்லை. மன்சிங் ஏற்கனவே இறந்துவிட்டார். அவரால் தொல்லைகளை அனுபவித்த மக்கள் தற்போது நிம்மதியாக இருக்கலாம்,” என்று கூறினார்.
இறந்து போன மன்சிங் மற்றும் அவருடைய மகனின் உடல்கள் கட்டில் ஒன்றில் கட்டப்பட்டு பிந்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கே பொதுமக்களின் பார்வைக்காக அந்த உடல்கள் வைக்கப்பட்டன.
40 ஆயிரம் பொதுமக்கள் அவர்களின் உடலைப் பார்க்க அங்கே குவிந்தனர். சிலர் ஆர்வத்தின் பேரில் வந்தனர். சிலர் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால் பலரோ கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தனர்.
இறுதிச் சடங்கிற்காக அவர்களின் உடல்கள் குவாலியருக்கு எடுத்துச் செல்லப்பட்டன. மன்சிங்கின் மனைவி மற்றும் மகன் தாசில்தார் சிங், அவர்களின் உடல்களை இறுதி சடங்கு செய்வதற்காக தங்களிடம் ஒப்படைக்கும் படி வேண்டுகோள்விடுத்தனர். ஆனால் அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை.
எல்லைப் பாதுகாப்புப் படையின் பொது இயக்குநராக செயல்பட்ட கே.எஃப். ருஸ்தோம்ஜி, அவர் எழுதிய தி பிரிட்டிஷ், தி பண்டிட்ஸ், அண்ட் தி பார்டர்மென் என்ற புத்தகத்தில், “மன் சிங் ஒரு குர்ஜார் இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட அவருடைய குழுவில் பார்ப்பன பிரிவைச் சார்ந்த ரூபாணி மற்றும் தாக்கூர் லகானிக்கு சிறப்பு இடத்தை வழங்கினார். ஆனால், அவருக்கு வயதாகும் போது, 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடைய கூட்டாளிகளாக செயல்பட்ட பலரும் தங்களுக்கான குழுக்களை உருவாக்கிக் கொண்டார்கள். மன்சிங்கின் கதை முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால் கொள்ளைகள் தொடர்பான பிரச்னைகள் முடிவுக்கு வரவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.