Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தமிழ்நாட்டில் கோடை முடிந்து விட்டதா? பருவமழை முன்கூட்டியே தொடங்க காரணம் என்ன?
பட மூலாதாரம், Getty Images
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
கடந்த சில ஆண்டுகளாக ஏப்ரல், மே மாதங்கள் மட்டுமல்லாமல் ஜூன் மாதத்திலும் வெப்பம் அதிகரிக்க தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டு மே மாத மூன்றாவது வாரத்திலிருந்தே மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
கோடை மழை வழக்கம் என்றாலும் கூட, இந்த முறை இந்த மழைக்காலம் தொடங்கிய போது கோடைக்காலம் முடிந்தே விட்டது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வழக்கமாக ஜூன் 1ம் தேதி கேரளாவில் மழை பெய்வதன் மூலம் தனது வருகையை அறிவிக்கும் தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு மே27-ம் தேதியே தொடங்கிவிடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்மேற்கு பருவமழைக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் செய்துக் கொள்ளுங்கள் என்று அரசு துறைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த ஆண்டு உண்மையிலேயே கோடைக்காலம் முடிந்துவிட்டதா? எதனால் இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்கவுள்ளது? என்பதற்கான காரணங்களை தெரிந்துக் கொள்வோம்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இயல்பை விட 90% மழை அதிகம்
பட மூலாதாரம், Getty Images
முதலில் இந்த மாதம் தமிழ் நாட்டில் பெய்த மழை குறித்த சில தரவுகளை பார்க்கலாம்.
இந்திய வானிலை ஆய்வு மைய தரவுகள் படி, தமிழ்நாட்டில், மார்ச்1-ம் தேதி முதல் ஏப்ரல் 19ம் தேதி வரை பெய்த அளவு 192.7 மி.மீ ஆகும். வழக்கமாக இந்தக் காலக்கட்டத்தில் 101.4 மி.மீ மழை மட்டுமே பெய்யும்.
இந்த ஆண்டு இயல்பை விட 90% அதிகமாக இந்தக் காலக்கட்டதில் மழை பெய்துள்ளது. மார்ச் 1-ம் தேதி முதல் மழை அளவு கணக்கிடப்பட்டாலும், மே மாதத்தில் பெய்த மழையின் அளவே கூடுதலாக பதிவாகியுள்ளது.
உதாரணமாக மே19ம் தேதி 21.6 மி.மீ மழை மாநிலம் முழுவதும் பதிவாகியுள்ளது. வழக்கமாக 2.3 மி.மீ மழை, அதாவது கிட்டத்தட்ட வறண்ட வானிலை நிலவியிருக்க வேண்டிய தினத்தில் இயல்பை விட மிக அதிகமாக மழை பெய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.6 மி.மீ மழை பெய்துள்ளது. அரியலூரில் 62.8 மி.மீ, கடலூரில் 60.1 மி.மீ, நாமக்கல்லில் 51.7 மி.மீ, தஞ்சாவூரில் 51.4 மி.மீ மழை பதிவாகியிருந்தது.
பட மூலாதாரம், Getty Images
வழக்கத்துக்கு மாறான மே மாதம்
கோடை மழை பெய்வது புதிதல்ல என்றாலும், இந்த ஆண்டு பெய்த மழையின் அளவு வழக்கத்துக்கு மாறாக அதிகமாக பதிவாகியுள்ளது. புயல் ஏதும் உருவாகாமல் சென்னையில் இவ்வளவு மழை பெய்வது புதிதானது என்கிறார் சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.
“மே மாதம் முதல் மூன்று நாட்கள் சென்னையில் மழை பெய்தது கடந்த 20 ஆண்டுகளில் நான் பார்த்திராத ஒன்று. மே மாதத்தில் காஞ்சிபுரம், ஶ்ரீபெரும்புதூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகள் வரை கூட மழை பெய்யும். ஆனால் சென்னையில் இடிமின்னலுடன் மழை பெய்ததில்லை. எனவே இந்த ஆண்டு மே மாதத்தில் மழை பெய்த நாட்கள் ஆறு அல்லது ஏழு ஆக அதிகரிக்கலாம். வழக்கமாக புயல் உருவானால் மட்டுமே மே மாதத்தில் மழை அதிகரிக்கும்.
2004, 2010, 2016, 2022-ம் ஆண்டுகளில் சென்னையில் அப்படி தான் மே மாதத்தில் மழை பெய்தது. ஆனால் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக மழை அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு கடலோர மாவட்டங்கள் மட்டுமல்லாமல் உள்பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும்” என்கிறார்.
பட மூலாதாரம், Facebook
படக்குறிப்பு, சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்வெப்பம் குறைந்தது
கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்யத் தொடங்கியதிலிருந்து தமிழகத்தின் பல இடங்களில் வெப்பம் இயல்பை விட குறைவாக பதிவாகியுள்ளது.
ஈரோடு, கரூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெப்பம் இயல்பை விட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாகவும், சென்னை, நீலகிரி, மதுரை, சேலம், திருப்பத்தூர், திருச்சி மாவட்டங்களில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைவாக பதிவாகியிருப்பதாகவும், கடலூர், தருமபுரி, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ்க்கு குறைவாக வெப்பம் பதிவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மே மாதத்தில் சென்னையில் வெப்பம் இது வரை 40 டிகிரி செல்சியஸை தொடவில்லை, இனி வரும் நாட்களிலும் சென்னையில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை கடக்காது என்கிறார் பிரதீப் ஜான்.
“மே மாதத்தில் இது வரை இரண்டு நாட்கள் மட்டுமே சென்னையில் 39 டிகிரி செல்சியல் தாண்டியுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் 2004, 2018, 2022 ஆகிய மூன்று வருடங்களில் இப்படி தான் இருந்தது. தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன் மிக கன மழை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்ய வாய்ப்புள்ளது. மேட்டூர் அணை பகுதியிலும் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது.” என்கிறார்.
மேலும், “2023-ம் ஆண்டு மே மாதத்தில் வெப்பம் 42, 43 டிகிரி வரை பதிவாகியது, அது எல் நினோ ஆண்டு என்பதால் வெப்பம் அதிகமாக இருந்தது. எல் நினோ விலகிச் செல்லும் ஆண்டான 2024-ல் மே மாதத்தில் கடுமையான வெப்பம் இல்லை, எனினும் ஏப்ரல் மாதத்தில் வெப்பம் சற்று அதிகமாக இருந்தது. இந்த ஆண்டு எல் நினோ ஆண்டு கிடையாது. மே மாதத்தில் வெப்பம் குறைந்திருப்பதைக் காண முடிகிறது” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
முன்கூட்டியே தொடங்கும் பருவமழை
தமிழகத்தில் மட்டுமல்லாமல் கர்நாடகா, மகாராஷ்ட்ராவிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இவை தென்மேற்கு பருவமழை நெருங்கி வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.
தென்மேற்கு பருவமழை வழக்கமாக கேரளாவில் ஜூன் 1-ம் தேதி தொடங்கும். இது வடக்கு திசையில் நகர்ந்து இந்தியாவின் பிற பகுதிகளுக்கு மழை தரும். இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்கூட்டியே மே 27-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த கணிப்புகள் சொல்லப்பட்ட தேதியிலிருந்து நான்கு நாட்கள் முன்பு அல்லது நான்கு நாட்கள் பின்பு தொடங்கலாம் என்று அர்த்தம்.
இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த 20 ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழையின் தொடக்கத்தை கணித்ததில் 2015-ம் ஆண்டில் மட்டுமே அதன் கணிப்பு பொய்யாகி உள்ளது. 2020-ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என கணிக்கப்பட்டது, பருவமழை ஜூன்1ம் தேதி தொடங்கியது. அதே போன்று, 2021-ம் ஆண்டில் மே 31-ம் தேதி தொடங்கும் என கணிக்கப்பட்டது, ஜூன் 3ம் தேதி பருவமழை தொடங்கியது. 2022-ல் கணிக்கப்பட்ட தேதியிலிருந்து இரண்டு நாட்கள் தள்ளி மே 29-ம் தேதி தொடங்கியது. 2023-ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி தொடங்கும் என கணிக்கப்பட்ட நிலையில், ஜூன் 8ம் தேதி தொடங்கியது. 2024-ம் ஆண்டு மே 31ம் தேதி தொடங்கும் என கணிக்கப்பட்டது, மே 30ம் தேதி பருவமழை தொடங்கியது.
இதன் காரணமாக ஜூன் 1ம் தேதிக்கு முன்பாகவே தமிழகத்தில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பிரதீப் ஜான் தெரிவிக்கிறார். “சென்னைக்கு மழை தந்த, மேல் அடுக்கு சுழற்சி படிப்படியாக நகர்ந்து ஆந்திரா, ஒடிசா நோக்கி செல்லும். எனவே சென்னையில் மழை குறையும். ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
அடுத்த நான்கு ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்பதை அறிவித்த தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா பேசுகையில், “தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் தொடங்குவதற்கான வாய்ப்புள்ளன. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. மத்தியமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு கர்நாடகா உட்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் 21ம் தேதி ஒரு வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி உருவாகக் கூடும். இதன் காரணமாக 22ம் தேதி அதே பகுதியில் அது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும்” என்று தெரிவித்தார்.
வங்கக் கடல், அரபிக் கடல் இரண்டிலும் காற்று சுழற்சி இருப்பதால் வறண்ட வானிலைக்கு இனி வரும் நாட்களில் வாய்ப்பில்லை என்று கூறுகிறார் பிரதீப் ஜான். ” கோடைக்காலம் முடிந்துவிட்டது என்று கூறலாம். வடமேற்கு திசையிலிருந்து வறண்ட காற்று வீசும்போது தான் வெப்பம் அதிகரிக்கும். ஆனால் தற்போது வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. அதே போன்று அரபிக் கடலிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகிறது. இவை இரண்டும் இருப்பதால் வறண்ட காற்று வீசி வெப்பம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. வெப்ப அலை என்பது ஒரு இடத்தில் 45 டிகிரியை விட வெப்பம் அதிகமாக இருப்பது, அல்லது ஒரு இடத்தின் இயல்பான வெப்பத்தை 4 அல்லது 5 டிகிரி அதிகமாக இருப்பது. இவை இரண்டுமே இனி வரும் நாட்களில் ஏற்பட வாய்ப்பு மிக மிக குறைவு” என்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு