Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சாய் சுதர்சன்எழுதியவர், க.போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர்
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 200 ரன்கள் அல்லது அதிகமான இலக்கை விக்கெட் இழப்பின்றி வெற்றிகரமாக எட்டிய இரண்டாவது அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. ஐபிஎல் டி20 தொடரில் நேற்றைய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 200 ரன்களை அந்த அணி சேஸ் செய்தது.
இதற்கு முன் 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி கராச்சியில் நடந்த டி20 ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி 200 ரன்களுக்கு மேல் விக்கெட் இழப்பின்றி சேஸ் செய்திருந்ததுதான் சாதனையாக இருந்தது. அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இலக்கை 19.3 ஓவர்களில் சேஸ் செய்திருந்தது, ஆனால், நேற்று 19-வது ஓவரிலேயே குஜராத் அணி சேஸ் செய்து சாதனை படைத்தது.
மிஸ்டர் கன்சிஸ்டென்சி ஆட்டநாயகன்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தமிழக வீரரும், நடப்பு தொடரில் “மிஸ்டர் கன்சிஸ்டென்சி” என்று அழைக்கப்படுபவருமான சாய் சுதர்சன் சதம் அடித்தார்முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் சேர்த்தது. 200 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 205 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
தமிழக வீரரும், நடப்பு தொடரில் “மிஸ்டர் கன்சிஸ்டென்சி” என்று அழைக்கப்படுபவருமான சாய் சுதர்சன் சதம் அடித்து 108 ரன்களுடனும் (61பந்துகள் – 4 சிக்ஸர், 12 பவுண்டரி), கேப்டன் சுப்மான் கில் 93 (53 பந்துகள் – 7 சிக்ஸர், 3பவுண்டரி) ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ஐபிஎல் டி20 தொடரில் சாய் சுதர்சன் அடிக்கும் 2வது சதம் இதுவாகும். ஆட்டநாயகன் விருதையும் சாய் சுதர்சன் பெற்றார்.
குஜராத் அணியின் ஒரு விக்கெட்டைக் கூட டெல்லி அணியின் பந்துவீச்சாளர்களால் வீழ்த்த முடியவில்லை. சாய் சுதர்சன், சுப்மான் கில் இருவரும் தங்கள் பேட்டிங்கில் ஒரு சிறிய தவறைக்கூட செய்யாமல் பேட் செய்தார்கள.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
200 ரன்களை சேஸ் செய்கிறோம், பெரிய இலக்கு என்ற பதற்றம், ரன் சேர்க்க வேண்டும் என்ற வேகம், பெரிய ஷாட்களுக்கு முயற்சி என எதுவும் சுப்மான் கில், சுதர்சனிடம் காணப்படவில்லை. போட்டி தொடங்கியதிலிருந்து கடைசிவரை இருவரும் ஆற்று நீரோடை போன்று சீராக, அலட்டல் இன்றி ரன்களை எடுத்தனர். தேவைப்படும் நேரத்தில் சிக்ஸர், பவுண்டரி அடித்து ரன்ரேட்டை சிறப்பாக பராமரித்து வெற்றியை சிரமமின்றி பெற்றனர். இதனால் டெல்லி அணி பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு காரணமாக இருந்த கே.எல்.ராகுலின் சதம் (112) வீணானது.
சுதர்சன் அதிரடி தொடக்கம்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தமிழக வீரர் சுதர்சன் தொடக்கத்திலிருந்தே அடித்து ஆடும் முடிவுடன் இருந்தார்.200 ரன்கள் இலக்கு என்பதைப் புரிந்து கொண்ட தமிழக வீரர் சுதர்சன் தொடக்கத்திலிருந்தே அடித்து ஆடும் முடிவுடன் இருந்தார். மறுபுறம் சுப்மான் கில் நிதான ஆட்டத்தைக் கடைபிடித்தார். புதிய பந்தில் நடராஜன் பந்துவீச, அந்த ஓவரை வெளுத்த சுதர்சன் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என விளாசி எடுத்தார்.
3வது ஓவர் முடிவில் 13 பந்துகளில் 35 ரன்களை சுதர்சன் சேர்த்திருந்தார். முஸ்தாபிசுர், சமீரா பந்துவீசியும் சுதர்சன் “டைமிங் ஷாட்”களில் பவுண்டரி, சிக்ஸர் அடிப்பதைத் தடுக்க முடியவில்லை. சுதர்சன் எந்தவிதமான சிரமமும் இன்றி, பந்து செல்லும் போக்கிலேயே பவுண்டரி அடிப்பதும், சரியான டைமிங்கில் சிக்ஸருக்கு பந்தை தூக்கிவிடுவதும் பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. பவர்ப்ளே முடிவில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் சேர்த்திருந்தது.
அதிரடியாக ஆடிய சுதர்சன் 30 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். சுப்மான் கில் மெதுவாகத் தொடங்கி 8 ஓவர்கள் வரை 21 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். ஆனால், அடுத்த 3 ஓவர்களில் அக்ஸர், குல்தீப், விப்ராஜ் ஆகியோரின் ஓவரில் தலா ஒரு சிக்ஸரை பறக்கவிட்டும், சமீரா ஓவரில் பவுண்டரி அடித்தும் கியரை மாற்றிய கில் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
வெற்றிக்கு வித்திட்ட பார்ட்னர்ஷிப்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வெற்றிக்கு காரணமாக அமைந்த பார்ட்னர்ஷிப்இருவரும் ஃபார்முக்கு வந்தபின், டெல்லி பந்துவீச்சாளர்களால் எவ்வாறு பந்துவீசுவதென்று தெரியவில்லை. குல்தீப், விப்ராஜ், அக்ஸர் என 3 சுழற்பந்துவீச்சாளர்கள் நடுப்பகுதி ஓவர்களை வீசியும் சிறிய தவறைக்கூட இருவரும் செய்யவில்லை. இருமுறை 3வது நடுவருக்கு டெல்லி அணி சென்றும் விக்கெட் கிடைக்கவில்லை. 15 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 154 ரன்களை விக்கெட் இழப்பின்றி சேர்த்தது.
முஸ்தாபிசுர் வீசிய 16-வது ஓவரில் சுதர்சன் தொடர்ந்து இரு பவுண்டரிகளையும், குல்தீப் வீசிய அடுத்த ஓவரில் சிக்ஸரும் அடித்து 56 பந்துகளில் சுதர்சன் ஐபிஎல்-ல் தனது 2வது சதத்தை நிறைவு செய்தார். அரைசதத்தை 30 பந்துகளிலும், அடுத்த 26 பந்துகளில் அடுத்த 50 ரன்களையும் சுதர்சன் அடித்தார். இறுதியில் வின்னிங் ஷாட்டாக சுதர்சன் சிக்ஸர் அடித்தார்.
இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய டெல்லி பந்துவீச்சாளர்களின் போராட்டம் கடைசிவரை தோல்வியில் முடிந்தது.
கே.எல் ராகுலின் போராட்டம் வீண்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டெல்லி அணி பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு கே.எல்.ராகுலின் சதம் முக்கியப் பங்கு வகித்ததுடெல்லி அணி பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு கே.எல்.ராகுல் 65 பந்துகளில் 112 ரன்கள் (4சிக்ஸர், 14 பவுண்டரி) சேர்த்தது முக்கியமாக இருந்தது. டெல்லி மைதானம் மற்ற மைதானங்களைவிட சிறியது என்பதால், வேகப்பந்துவீச்சில் பேட்டர் டிபெண்ட் ஷாட் ஆடினாலே பவுண்டரி செல்லும் நிலையில்தான் இருந்தது. ஆனாலும், ராகுலின் ஒவ்வொரு ஷாட்டும் கண்ணில் ஒத்திக்கொள்ளும் வகையில் இருந்தது.
இந்த சீசனில் முதல்முறையாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ராகுல் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினார். ரபாடா ஓவரில் 2 சிக்ஸர்கள், பவுண்டரி என ராகுல் ஆட்டம் பவர்ப்ளேயில் மிரட்டலாக இருந்தது. தொடக்கத்திலயே டூப்ளசிஸ் (5) விக்கெட்டை டெல்லி அணி இழந்தாலும், அபிஷேக் போரெல் ராகுலுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தார்.
அதிரடியாக ஆடிய ராகுல் 35 பந்துகளில் அரைசதம் அடித்தார். 2வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்த நிலையில் போரெல் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். குஜராத் அணி ஒரு கேட்சை நழுவவிட்டதை ராகுல் நன்கு பயன்படுத்தினார். சாய் கிஷோர் வீசிய 14-வது ஓவரில் 3 பவுண்டரிகளை ராகுல் விளாசி 60 பந்துகளில் சதம் அடித்தார். கேப்டன் அக்ஸர் படேல் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் கேமியோ ஆடி 21 ரன்கள் சேர்த்தார்.
ராகுல் 112 ரன்களுடனும், ஸ்டெப்ஸ் 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி அணியின் ஆட்டம் முழுவதும் ராகுலின் பேட்டிங் வியாபித்திருந்தது. டெல்லி அணிக்கு பெரிய ஸ்கோரை பெற்றுக் கொடுத்த ராகுலின் ஆட்டம் பிற்பாதியில் கில் – சுதர்சன் பேட்டிங்கால் மறக்கடிக்கப்பட்டுவிட்டது.
டெல்லி அணியின் தவறுகள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, நடராஜன் மட்டுமல்ல டெல்லி அணியில் அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 9 ரன்களுக்குக் குறையாமல் ரன்களை வாரி வழங்கினர்.டெல்லி அணி புதிய பந்தில் பந்துவீச நடராஜனுக்கு 2வது ஓவரிலேயே வாய்ப்பு அளித்தது தோல்விக்கு முக்கியக் காரணமாகும். இதுவரை ஐபிஎல் மட்டுமின்றி, மற்ற உள்நாட்டுப் போட்டிகளில் கூட நடராஜன் புதிய பந்தில் பந்து வீசியதில்லை. பெரும்பாலும் பவர்ப்ளே முடிந்து பந்து தேய்ந்தபின்புதான் பந்துவீசியிருக்கிறார்.
ஏனென்றால், உள்நாட்டுப் போட்டிகளில் நடராஜன் பந்துவீச்சை எதிர்கொண்ட அனுபவம் உள்ள சுதர்சனுக்கு அவரை பந்துவீசச் செய்தது பெரிய தவறாகும். அந்தத் தவறுக்கான தண்டனையாக 3 பவுண்டரி, சிக்ஸர் என 20 ரன்களை விலையாக டெல்லி அணி கொடுத்தது
காயத்திலிருந்து திரும்பிய நடராஜனை சரியாக அக்ஸர் படேல் பயன்படுத்தி இருக்க வேண்டும். நடுப்பகுதி ஓவர்களிலும், டெத் ஓவர்களிலும் பந்துவீசி பழக்கப்பட்ட நடராஜனை தொடக்க ஓவரில் பந்துவீசச்செய்து அவரின் நம்பிக்கையையும் உடைத்தெறிந்து. 3 ஓவர்கள் வீசிய நடராஜன் 49 ரன்கள் வாரி வழங்கினார்.
நடராஜன் மட்டுமல்ல டெல்லி அணியில் அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 9 ரன்களுக்குக் குறையாமல் ரன்களை வாரி வழங்கினர்.
படக்குறிப்பு, டெல்லி அணியை வீழ்த்திய குஜராத்”நினைத்தது நடந்தது”
ஆட்டநாயகன் விருதுடன் ஆரஞ்சு தொப்பியையும் வசப்படுத்திய தமிழக வீரர் சாய் சுதர்சன் அளித்த பேட்டியில், ” ஆட்டத்தை வெற்றியுடன் முடித்துக் கொடுப்பதில் சிறிய மகிழ்ச்சி இருக்கிறது. 6 ஓவர்களுக்குப் பின் 7 முதல் 10 ஓவர் வரை டெல்லி பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. ஆனால் நானும், கில்லும் ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்து எங்களை தயார் செய்தோம்.
12 ஓவருக்குப்பின் பெரிய ஸ்கோர் செய்ய 2 ஓவர்கள் கிடைத்தன. அதை இருவரும் பயன்படுத்தினோம். ஒவ்வொரு போட்டியிலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து, ஆட்டத்தை ஃபினிஷ் செய்ய நான் நினைப்பேன் ஆனால் முடியவில்லை. இந்த ஆட்டத்தில் நடந்துள்ளது. பேட்டிங்கில் பெரிதாக நான் மாற்றம் செய்யவில்லை.
ஆனால் மனதளவில் சுதந்திரமாக இருக்கிறேன், 15 ஓவர்களுக்குப் பின் என்னால் சிறப்பாக பேட் செய்ய முடிந்தது, சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக ஆடவும் செய்கிறேன். கில்லுக்கும் எனக்கும் நல்ல புரிதல் இருக்கிறது, இருவரும் பவுண்டரி, சிக்ஸர் அடித்தால் ஷாட்களைப் பற்றி பாராட்டுகளை பரிமாறிக் கொள்வோம், விக்கெட்டுகளுக்கு இடையே ரன் ஓடுவதிலும் சிறப்பாக செயல்பட்டோம்” எனத் தெரிவித்தார்.
3 அணிகள் ப்ளே ஆஃப் முன்னேற்றம்
பட மூலாதாரம், Getty Images
குஜராத் அணி இந்த வெற்றியால் 12 போட்டிகளில் 18 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. அது மட்டுமல்லாமல் ஆர்சிபி அணி, பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. பிளேஆஃப் முன்னேற நான்காவது இடத்துக்கு மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் போட்டியிடுகின்றன.
பஞ்சாப் கிங்ஸ் அணி 10 ஆண்டுகளுக்குப் பின் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. ஆர்சிபி அணி கடந்த 6 சீசன்களில் 5வது முறையும், குஜராத் அணி கடந்த 4 சீசன்களில் 3வது முறையும் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்த 3 அணிகளும் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனவே தவிர முதல் 3 இடங்களை எந்தெந்த அணிகள் பிடிக்கப் போகிறது என்பது அடுத்துவரும் ஆட்டங்களின் முடிவில்தான் தெரியும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஐபிஎல் கூடுதல் விவரம்
இன்றைய ஆட்டம்
லக்னெள vs சன்ரைசர்ஸ்
இடம்: லக்னெளநேரம்: இரவு 7.30மும்பையின் அடுத்த ஆட்டம்
மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்
நாள் – மே 21இடம் – மும்பைநேரம்- இரவு 7.30 மணிசிஎஸ்கேயின் அடுத்த ஆட்டம்
ராஜஸ்தான் vs சிஎஸ்கே
நாள் – மே 20இடம் – டெல்லிநேரம்- இரவு 7.30 மணிஆர்சிபியின் அடுத்த ஆட்டம்
ஆர்சிபி vs சன்ரைசர்ஸ்
நாள் – மே 23இடம் – பெங்களூருநேரம்- இரவு 7.30 மணிஆரஞ்சு தொப்பி யாருக்கு?
சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-617 ரன்கள்(12 போட்டிகள்)சுப்மான் கில் (குஜராத் டைட்டன்ஸ்)-601 ரன்கள்(12 போட்டிகள்)ஜெய்ஸ்வால்(ராஜஸ்தான் ராயல்ஸ்) 523 (13 போட்டிகள்)நீலத் தொப்பி யாருக்கு?
பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 21 விக்கெட்டுகள்(12 போட்டிகள்)நூர் அகமது (சிஎஸ்கே) 20 விக்கெட்டுகள் (12போட்டிகள்)ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) 18 விக்கெட்டுகள்(10 போட்டிகள்)- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு