நாசாவுடன் இஸ்ரோ இணையும் நிசார் திட்டம் பற்றி தெரியுமா? அதன் சிறப்புகள் என்ன?

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, நாசாவால் வெளியிடப்பட்ட நிசார் திட்டத்தின் சித்தரிப்பு புகைப்படங்கள் எழுதியவர், அம்ரிதா துருவேபதவி, பிபிசி மராத்தி செய்தியாளர் 19 மே 2025, 08:39 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இஸ்ரோ, நாசா, இந்த இரண்டு அமைப்புகளின் பெயர்களைக் கேட்காமல் நாம் பள்ளிப் பருவத்தை கடந்திருக்க முடியாது. தற்போது இந்த இரண்டு அமைப்புகளும் இணைந்து ஒரு சுவாரஸ்யமான திட்டத்தைத் தயாரித்து வருகின்றன.

அமெரிக்கா விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவும் இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவும் இணைந்து பல வெற்றிகரமான விண்வெளி திட்டங்களை முடித்துள்ளன.

தற்போது நாசாவும் இஸ்ரோவும் ‘நிசார்’ என்கிற திட்டத்தில் இணைந்து வேலை செய்கின்றன. இந்தத் திட்டம் பூமியின் மாறிவரும் நிலைமைகளைப் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.

இரு விண்வெளி அமைப்புகளும் இணைந்து மேற்கொள்ளும் இந்த கூட்டுத் திட்டம் என்ன? இதலிருந்து என்ன சாதிக்கப்படும்? இதில் நாசா மற்றும் இஸ்ரோவின் பங்கு என்ன? போன்ற கேள்விகளுக்கான விடைகளைக் காண்போம்

இந்தச் செயற்கைக்கோள் முழு பூமியையும் வரைபடம் செய்து அதில் நடைபெற்று வரும் புவியியல் மாற்றங்களை தொடர்ந்து (ஒவ்வொரு 12 நாட்களுக்கும் இருமுறை என்கிற அளவில்) பதிவு செய்யும். இதில் பூமிப் பரப்பு மற்றும் நிலப் பரப்பில் உள்ள பனி, சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள், கடல் மட்டம் மற்றும் நிலத்தடி நீர் மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை பற்றிய தரவுகளைச் சேகரிப்பதும் உள்ளடங்கும்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

நாசா – இஸ்ரோ ஒப்பந்தத்தின் சிறப்பம்சங்கள்

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, இஸ்ரோ – நாசா இடையே 2014-ல் ஒப்பந்தம் கையெழுத்தானதுநிசார் என்பதன் முழுப் பெயர் ‘நாசா இஸ்ரோ சிந்தெடிக் அபெர்ட்சர் ரேடார் (NASA ISRO Synthetic Aperture Radar)’ செயற்கைக்கோள் ஆகும். பூமியைத் தாழ்வாகச் சுழலும் இந்தச் செயற்கைக்கோள் பூமியின் கீழ்வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும்.

நிசார் தான் பூமி தொடர்புடைய திட்டத்தில் இஸ்ரோவுக்கும் தனக்குமான முதல் விண்வெளி வன்பொருள் (Hardware) ஒத்துழைப்பு என நாசா கூறுகிறது.

நிசார் செயற்கைக்கோள், சிந்தெடிக் அபெர்ட்சர் ரேடார் (எஸ்.ஏ.ஆர்) என்கிற ஒரு சிறப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும். இந்தச் செயற்கைக்கோள் மற்றும் ரேடார் அமைப்பின் உதவியுடன் நல்ல தெளிவுத்திறன் (Resolution) படங்கள் எடுக்க முடியும். இதற்கு ரேடார் ஒரு நேர் கோட்டில் முன்னே நகர்த்தப்பட வேண்டும். இந்தப் பணியானது இத்திட்டத்தின் கீழ் நிசார் செயற்கைக்கோளால் மேற்கொள்ளப்படும்.

‘நிசார்’ திட்டம் தொடர்பாக இஸ்ரோவும் நாசாவும் 2014 செப்டம்பர் 30-ல் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. இந்தத் திட்டம் 2024-ல் விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில் செயற்கைக்கோள் உருவாக்கத்தில் ஏற்பட்ட தாமதத்தால் நடக்காமல் போனது.

டிசம்பர் 2024-ல் அரசு வழங்கிய தகவல்களின்படி, 12 மீட்டர் நீளமுள்ள ரேடார் ஆண்டெனா ரிஃப்ளக்டரில் (radar antenna reflector) சில முன்னேற்றங்கள் தேவைப்படுவதால் அதனை அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என நாசா வல்லுநர்கள் தீர்மானித்தனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தச் செயற்கைக்கோளை ஏவுவதற்கான அமைப்பு மற்றும் இதர விஷயங்களை இஸ்ரோ பராமரித்து வருகிறது.இந்த அறிக்கையின்படி, கடந்த அக்டோபர் மாதம் இந்த ஆண்டெனா நாசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பிறகு அதில் சோதனை தொடங்கப்பட்டது.

செயற்கைக்கோளின் சில பாகங்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த ஒப்பந்தத்தின்படி, நாசா ஒரு எல் பேண்ட் சிந்தெடிக் அபெர்ட்சர் ரேடார், ஒரு ஜிபிஎஸ் ரிசீவர், அறிவியல் தகவல்களுக்கான ஒரு தொடர்பு அமைப்பு, அதிக திறன் கொண்ட சாலிட்-ஸ்டேட் ரெக்கார்டர் (இது தான் செயற்கைக்கோளின் ஹார்ட் டிரைவ்) மற்றும் ஒரு பேலோட் டேட்டா சப் சிஸ்டம் ஆகியவற்றை வழங்குகின்றது.

நாசா கொடுத்துள்ள தகவல்களின்படி, இந்தச் செயற்கைக்கோளில் எல் பேண்ட் எஸ்.ஏ.ஆர் மற்றும் எஸ் பேண்ட் எஸ்.ஏ.ஆர் என்கிற இரண்டு ரேடார் கருவிகள் இடம்பெற்றிருக்கும். இந்தக் கருவிகளை இஸ்ரோ தயாரித்து வருகிறது.

இந்தச் செயற்கைக்கோளை ஏவுவதற்கான அமைப்பு மற்றும் இதர விஷயங்களை இஸ்ரோ பராமரித்து வருகிறது.

இந்தச் செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 ராக்கெட் மூலம் பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பப்படும் என நாசா தெரிவித்துள்ளது.

இந்தச் செயற்கைக்கோள் பூமியில் கட்டமைப்புகளைக் கண்காணிப்பது, பேரிடர் மேலாண்மை, பயோமாஸ் மதிப்பீடு மற்றும் வேளாண் மேலாண்மை போன்ற பணிகளில் உதவியாக இருக்கும்.

நிசார் திட்டத்தின் நோக்கம் என்ன?

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, நிசார் திட்டத்தில் 12 நாட்களில் உலகின் வரைபடத்தை உருவாக்க முடியும்பூமியில் நிகழும் மூன்று முக்கியமான மாற்றங்களை ஆராய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும்.

இந்தத் திட்டம் சுற்றுச்சூழல், கார்பன் சுழற்சி, பூமிப் பரப்பில் நிகழும் மாற்றங்கள், கடல் மட்ட உயர்வு மற்றும் இதர தாக்கங்களைப் புரிந்துகொள்வதில் உதவியாக இருக்கும்.

உருகும் பனிப்பாறைகள், கடல் மட்ட உயர்வு மற்றும் கார்பன் சேமிப்பு போன்ற பூமிப் பரப்பில் காலநிலை மாற்றத்தின் விளைவுகளைப் புரிந்துகொள்வதற்கு உதவ நிசார் செயற்கைக்கோள் பாத்தைமெட்ரிக் ஆய்வுகளை (bathymetric survey) மேற்கொள்ளும்.

இந்தத் திட்டத்தின் மூலம் நிலநடுக்கம், சுனாமி மற்றும் எரிமலை போன்ற இயற்கை பேரிடர் சூழ்நிலைகளில் அவற்றை கையாள உதவுவதற்காக ஆய்வு செய்யப்படும்.

நிசார், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் மட்டும் தகவல்களை வழங்காது. பூமிப் பரப்பில் நிகழும் சிறிய மாற்றங்கள் பற்றிய விரிவான தகவல்களை உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்களும் பெற முடியும்.

நிசார் திட்டம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி மூலம் விண்ணில் செலுத்தப்படும்.

இந்தச் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட 90 நாட்கள் கழித்து சுற்றுப்பாதையில் நிறுத்தப்படும். அதன் பிறகு இதன் பணிகள் தொடங்கப்படும்.

இந்த அமைப்புகள் அனைத்தும் முறையாக வேலை செய்வதை உறுதி செய்ய பரிசோதிக்கப்படும். அதன்பிறகு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு