Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
உச்ச நீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவரின் ‘குறிப்பு’: வரலாறு என்ன சொல்கிறது?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, உச்ச நீதிமன்றத்திற்கு 14 கேள்விகளுடன் ‘குறிப்பு’ ஒன்றை அனுப்பியுள்ளார் இந்திய குடியரசுத் தலைவர்.எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்55 நிமிடங்களுக்கு முன்னர்
சட்டங்களின் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடுவை நிர்ணயித்து இந்திய உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்த நிலையில், இது குறித்து விளக்கம் கோரி உச்ச நீதிமன்றத்திற்கு 14 கேள்விகளுடன் ‘குறிப்பு’ ஒன்றை அனுப்பியுள்ளார் இந்திய குடியரசுத் தலைவர்.
இதனை எதிர்க்க வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது தொடர்பாக பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களின் முதல்வர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
குடியரசுத் தலைவர் இதற்கு முன்பு இதுபோலச் செய்திருக்கிறாரா? அப்போது என்ன நடந்தது?
தமிழ்நாட்டின் சட்டமன்றம் நிறைவேற்றும் சட்டங்களுக்கு தமிழ்நாட்டின் ஆளுநராக உள்ள ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்காமல் பல மாதங்களாகக் கிடப்பில் வைத்திருந்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது.
அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜே.பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு, ஆளுநர்கள் தங்களிடம் அனுப்பப்படும் சட்டம் குறித்து முடிவுசெய்ய காலக்கெடுவை நிர்ணயித்தது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 200 மற்றும் 201ன் கீழ் ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் முடிவெடுப்பதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.
மேலும், தமிழ்நாடு ஆளுநர் நிறுத்திவைத்திருந்த மசோதாக்களுக்கு நீதிமன்றமே ஒப்புதல் அளித்தது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இந்நிலையில், ‘ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மாநில மசோதாக்களைக் கையாளும் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி காலக்கெடுவை விதிக்க முடியுமா’ என கேட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ‘குறிப்பு’ (Presidential reference) ஒன்றை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ளார்.
இந்திய அரசியலமைப்பின் 143வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட இந்தக் குறிப்பில், “மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதாவை, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் நடைமுறைப்படுத்த முடியுமா?” என்பது உள்பட 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் முன்வைத்திருந்தார்.
இந்தக் கேள்விகளுக்குத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, குடியரசுத் தலைவரின் குறிப்பை எதிர்க்க வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களின் முதல்வர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.நீதிமன்றத்திடம் நாட்டின் தலைவர் விளக்கம் கேட்கும் வழக்கம்
நாட்டின் தலைவர், இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தை அணுகி கருத்துக்களைக் கோருவது குறித்த வழிமுறைகள், 1935ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டத்திலேயே இடம் பெற்றிருக்கிறது.
இந்திய அரசுச் சட்டத்தின் 213வது பிரிவில் இது குறிப்பிடப்பட்டிருந்தது. “ஒரு சட்டம் குறித்து கவர்னர் – ஜெனரலுக்கு கேள்வி எழுந்தாலோ, எழவிருந்தாலோ அது குறித்து உச்ச நீதிமன்றத்தின் (Federal Court) கருத்தைப் பெறுவது முக்கியம் என்ற அளவுக்கு பொது நலனுடன் சம்பந்தப்பட்டது என்றால் அவர் அந்தக் கேள்வியை நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பலாம்.
நீதிமன்றம் அதனை விசாரித்த பிறகு, தகுதியான கேள்வியாக இருந்தால், கவர்னர் ஜெனரலுக்கு பதிலளிக்கலாம்” என இந்தியா அரசுச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கும்போது இது, அந்தச் சட்டத்தின் 143வது பிரிவில் இடம்பெற்றது. அதன்படி, “ஒரு குறிப்பிட்ட சட்ட வினா அல்லது பொருண்மை எழுந்திருந்தாலும் எழவிருந்தாலும் அது பொது முக்கியத்துவம் கொண்டதாக இருந்தால் அதற்கு உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெறத் தேவையிருப்பின் அந்த வினாவை நீதிமன்றத்தின் கருத்துக்காக குடியரசுத் தலைவர் எப்போது வேண்டுமானாலும் அனுப்பிவைக்கலாம். நீதிமன்றம் அதற்குத் தனது கருத்தைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம்” என்கிறது அந்தப் பிரிவு.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தமிழ்நாடு ஆளுநர் நிறுத்திவைத்திருந்த மசோதாக்களுக்கு நீதிமன்றமே ஒப்புதல் அளித்தது.இதற்கு முன்பாக விளக்கம் கேட்கப்பட்ட வழக்குகள்
இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து சுமார் 15 முறை குடியரசுத் தலைவரின் ‘குறிப்புகளுக்கு’ இந்திய உச்ச நீதிமன்றம் பதிலளித்திருக்கிறது. 1951ஆம் ஆண்டில், Delhi Laws Act வழக்கு தொடர்பாக குடியரசுத் தலைவர் மூன்று கேள்விகளை எழுப்பினார். இந்த மூன்று கேள்விகளுக்கும் உச்ச நீதிமன்றம் பதிலளித்தது.
இதற்குப் பிறகு, 1958ல் கேரளா கல்வி மசோதா தொடர்பாக (In re Kerala Education Bills), 1960ல் பெருபாரி தொடர்பாக உச்ச நீதிமன்றம் குடியரசுத் தலைவரின் குறிப்புகளுக்குப் பதிலளித்திருக்கிறது. பெருபாரி வழக்கில், மேற்கு வங்கத்தின் பெருபாரி கிராமத்தை நேரு – நூன் ஒப்பந்தத்தின் கீழ் கிழக்கு பாகிஸ்தானுக்கு அளிக்க 1958ல் முடிவுசெய்யப்பட்டது. ஆனால், இதுபோல, ஒரு பகுதியை அளிக்க அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. பெருபாரி வழக்கு அந்தக் கேள்விக்கு பதிலளித்தது.
இந்தியாவின் ஒருபகுதியை யாருக்கும் அளிக்கவோ, புதிதாக ஒரு பகுதியைச் சேர்க்கவோ 368வது பிரிவின் கீழ் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமென குறிப்பிட்டது.
இதற்குப் பிறகு, 1962ல் கடல் சுங்கச் சட்டம் தொடர்பாக (In re Sea Customs Act)வும் 1965ல் கேசவ் சிங் வழக்குகள் தொடர்பாகவும் குடியரசுத் தலைவரின் கேள்விக் குறிப்புகள் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டன. கேசவ் சிங் வழக்கில் சட்டமியற்றும் அவைகளின் அதிகாரங்களும் சிறப்பு உரிமைகளும் வரையறுக்கப்பட்டன.
1974ல் ஒரு மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டிருந்தாலும், குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்தலாமா எனக் கேள்வியெழுப்பப்பட்டது. நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் பதிலளித்தது.
மேலும், 1978ல் சிறப்பு நீதிமன்றங்கள் குறிப்பு வழக்கு, 1992 காவிரி நீர் சர்ச்சைத் தீர்ப்பாயம் தொடர்பான வழக்கு தொடர்பாகவும் குடியரசுத் தலைவர் தனது சந்தேகங்களை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறார். அதில் பதிலளித்த உச்ச நீதிமன்றம், இதுபோன்ற ஆலோசனைகளை அளிக்கும்போது தன்னுடைய முந்தைய தீர்ப்புகளையே மறுவரையறை செய்ய முடியாது என்று கூறியது. மேலும் தீர்ப்பாயத்தின் உத்தரவு சம்பந்தப்பட்ட எல்லா மாநிலங்களையும் கட்டுப்படுத்தும் என்றும் தெரிவித்தது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அயோத்தி விவகாரம் தொடர்பாக அப்போது குடியரசுத் தலைவராக இருந்த சங்கர் தயாள் சர்மா இந்திய உச்ச நீதிமன்றத்திடம் இதேபோல ஒரு கேள்வியை எழுப்பினார்விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் மறுக்க முடியுமா?
சில சமயங்களில் தக்க காரணங்கள் இருக்கும்போது உச்ச நீதிமன்றம் குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு, அறிவுரை வழங்க மறுக்கும் உரிமையையும் கொண்டிருக்கிறது. அந்தக் கேள்விகள் அரசமைப்புச் சட்டம் குறித்து அல்லாமல், சமூக – பொருளாதாரம் குறித்து இருந்தால் அறிவுரை வழங்க மறுக்கலாம் என்பது எம்.இஸ்மாயில் ஃபரூக்கி VS இந்திய யூனியன் வழக்கில் (1994 அக்டோபர்) உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இப்படி ஒரே ஒரு முறைதான் நடந்திருக்கிறது.
அயோத்தி விவகாரம் தொடர்பாக அப்போது குடியரசுத் தலைவராக இருந்த சங்கர் தயாள் சர்மா இந்திய உச்ச நீதிமன்றத்திடம் இதேபோல ஒரு கேள்வியை எழுப்பினார். “ராம் ஜென்ம பூமி – பாபர் மசூதி இருக்கும் இடத்தில் இதற்கு முன்பாக இந்துக் கோவிலோ, இந்து மதம் தொடர்பான கட்டமைப்போ இருந்ததா?” என்ற கேள்வியை அவர் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 143 (1)ன் கீழ் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பினார். ஆனால், இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க இந்திய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. “The Presidential Reference is returned respectfully, unanswered” என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது.
இப்போது குடியரசுத் தலைவர் அனுப்பியுள்ள கேள்விகளுக்கு நீதிமன்றம் எப்போது பதிலளிக்கும்? “இது ஒரு நீண்ட கால நடைமுறையாக இருக்கும். இதற்கென இந்திய உச்ச நீதிமன்றம் புதிதாக ஐந்து அல்லது ஏழு அல்லது 9 நீதிபதிகளைக் கொண்ட அமர்வை உருவாக்கும். அந்த அமர்வு ஒரு வழக்கை விசாரிப்பதைப்போலவே பல்வேறு தரப்பினரின் விளக்கங்களை கேட்கும். ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன ஆகவே இதில் பதில் வர சில ஆண்டுகளாவது ஆகும்” என்கிறார் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியான ஹரி பரந்தாமன்.
பட மூலாதாரம், FACEBOOK
படக்குறிப்பு, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன்குடியரசுத் தலைவரின் விளக்கம் கோரும் மனு முந்தைய தீர்ப்பைக் கட்டுப்படுத்தாது என்றாலும் தமிழ்நாடு முதலமைச்சர் பிற மாநில முதல்வர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகள் இதனை எதிர்க்க வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார். “உச்சநீதிமன்றத்திடம் கேள்விகள் கேட்டு குடியரசுத் தலைவர் அவர்கள் அனுப்பியுள்ள குறிப்பினை நாம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும். நீதிமன்றத்தின் முன் நாம் அனைவரும் ஒருங்கிணைந்த சட்ட உத்தியை உருவாக்கி, உச்சநீதிமன்றம் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் உறுதி செய்தபடி, அரசியல் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாக்க வழிவகுத்திட வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், “இந்தக் கேள்விகளுக்கு நீதிமன்றம் என்ன பதிலைச் சொன்னாலும் இதற்கு முன்பாக வழங்கப்பட்ட தீர்ப்பை அது பாதிக்காது. இது மத்திய அரசுக்குத் தெரியும். பர்திவாலா – மகாதேவன் அமர்வு வழங்கிய தீர்ப்பில் ஏற்பில்லையென்றால் அதனை எதிர்த்து மறுஆய்வு மனுவை தாக்கல் செய்யலாம். அதிலும் ஏற்பில்லாவிட்டால் சீராய்வு (Curative Petition) மனுவைத் தாக்கல் செய்யலாம். ஆனால், எப்படி மேல்முறையீடு செய்தாலும் அதில் ஏற்கனவே வந்தத் தீர்ப்புக்கு மாறாகத் தீர்ப்புவர வாய்ப்பில்லை என்பது மத்திய அரசுக்குத் தெரியும். அதனால்தான் இதுபோன்ற ஒரு வழியை நாடியிருக்கிறார்கள். இதே போன்ற ஒரு வழக்கை கேரள அரசும் நடத்திவருகிறது. தமிழ்நாடு அரசின் வழக்கில் தீர்ப்பு வந்தவுடன், அந்தத் தீர்ப்பு இந்தியா முழுக்கவும் உள்ள ஆளுநர்களுக்குப் பொருந்தும் என்பதால், தங்கள் வழக்கை திரும்பப் பெற கேரள அரசு விரும்பியது. தமக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை ஒருவர் திரும்பப் பெறுவதாகச் சொன்னால், அதனை ஏற்கத்தானே வேண்டும்? மாறாக அதற்கு மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவிக்கிறது. இனி கேரள அரசின் வழக்கு வரும்போது குடியரசுத் தலைவரின் கேள்விகள் நிலுவையில் இருப்பதாகச் சொல்லலாம். ஆகவே இது முழுக்க முழுக்க அரசியல்ரீதியானது” என்கிறார் ஹரி பரந்தாமன்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தவிர, வேறு சில விஷயங்களையும் ஆளுநர்கள் தாமதப்படுத்துகிறார்கள் எனச் சுட்டிக்காட்டுகிறார் அவர். அதாவது, தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கும் விவகாரம், டிஎன்பிஎஸ்சியில் உறுப்பினர்களை நியமிக்கும் விவகாரம், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது வழக்குத் தொடர்வது தொடர்பான விவகாரங்களிலும் கோப்புகள் ஆளுநரிடமிருந்து திரும்பவரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் ஹரி பரந்தாமன், இது ஒரு தொடர் போராட்டம் என்கிறார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு