யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் அவசர அழைப்பு பிரிவுக்கு (119) அழைப்பை ஏற்படுத்திய நபர் திடீரென உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியை சேர்ந்த பாலச்சந்திரன் சசிராஜ் (வயது 29) என்பவரே உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

பொலிசாரின் 119 தொலைபேசி இலக்கத்திற்கு நபர் ஒருவர் அழைப்பினை மேற்கொண்டு , குடும்ப தகராறு என கூறி அவசரமாக பொலிசாரின் உதவியை நாடுவதாக தெரிவித்துள்ளார். 

அதனை அடுத்து , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நடமாடும் (மொபைல்) சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழு , தொலைபேசி அழைப்பில் கூறப்பட்ட வீட்டின் முகவரியை கண்டறிந்து அங்கு விரைந்துள்ளனர். 

அங்கு பொலிஸார் சென்ற வேளை பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டதாக நம்பப்படும் இளைஞன் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டமையை அடுத்து , நோயாளர் காவு வண்டிக்கு அறிவிக்கப்பட்டு , நோயாளர் காவு வண்டி மூலம் இளைஞனை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு, யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

அதேவேளை சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.