Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
போப் ஆண்டவருக்கு துறவறம் கட்டாயமா?
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, போப் லியோ செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் தமது முதல் பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்தினார்எழுதியவர், சுவாமிநாதன் நடராஜன் பதவி, பிபிசி உலக சேவை 3 மணி நேரங்களுக்கு முன்னர்
போப் பிரான்சிஸ் மறைவையடுத்து, உலகில் உள்ள சுமார் 1.4 பில்லியன் கத்தோலிக்கர்களுக்கான தலைவராக போப் பதினான்காம் லியோ மே9ம் தேதி தேர்வானார்.
புதிய போப் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பதவியேற்றுக் கொண்டு தமது முதல் பிரார்த்தனைக் கூட்டத்தை இன்று (மே 18) நடத்தினார்.
போப் மற்றும் பாதிரியர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்ற திருச்சபையின் விதி பல நூற்றாண்டுகளாக, தீவிரமான விவாதங்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருந்துள்ளது.
திருமணமான ஆண்கள் மட்டுமல்லாமல், பெண்களையும் குருத்துவப் பணியில் சேர அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ச்சியாக எழுந்துள்ளன.
தொடக்கத்தில் இருந்தே இவ்வளவு கடுமையான வழிமுறைகளை குருத்துவம் பின்பற்றவில்லை.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
ஆரம்ப கால கிறிஸ்தவ திருச்சபையில் திருமணமாகிய பல பாதிரியார்கள் இருந்தார்கள், மேலும் சில போப்களுக்கு மனைவிகள் கூட இருந்துள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, செயின்ட் பீட்டர் திருமணமானவர். அவரது சிலை வாடிகனில் உள்ளது.தொடக்க கால திருச்சபையில் திருமணமான போப்கள்
தொடர்ச்சியாக போப்பாக பதவி வகித்த 266 போப்களின் பட்டியலை வாடிகன் குறிப்பிட்டுள்ளது.
இந்த பட்டியல் திருமணமான செயின்ட் பீட்டருடன் தொடங்குகிறது. (இயேசு செயின்ட் பீட்டரின் மாமியாருக்கு சுகமளித்ததாக நற்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது).
தொடக்க காலங்களில் “பிஷப்கள், பாதிரியார்கள் மற்றும் ஆதிகால திருச்சபை உதவியாளர்கள் பெரும்பாலும் குடும்ப ஆண்களாக இருந்தனர்” என்பதை வாடிகன் இணையதளத்தில் வெளியாகியுள்ள கட்டுரை ஏற்றுக்கொள்கிறது.
“அதற்கு அடுத்த நூற்றாண்டுகளில், அதிகமான அல்லது குறைவான எண்ணிக்கையில் இருந்த திருமணமான மதகுருமார்கள், திருச்சபையின் இயல்பான அங்கமாக இருந்தனர் என்பதும் தெளிவாகிறது” என்று அக்கட்டுரை கூறுகிறது.
மேலும் அக்கட்டுரை சில போப்கள் திருமணமானவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றது.
“உதராணமாக, 514 முதல் 523 வரையிலான காலத்தில் பதவியில் இருந்த போப் ஹார்மிஸ்தாஸ் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. அவர் போப் சில்வேரியஸின் தந்தை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.”
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, போப் ஹோர்மிஸ்தாசின் படம். அவருக்குப் பின் அவரது மகன் திருச்சபையின் தலைவராகப் பொறுப்பேற்றார்ஆனால் தொடக்க கால கிறிஸ்தவ வரலாற்றாசிரியர்களில் பலர் பீட்டர் மற்றும் ஹார்மிஸ்டாஸ் ஆகியோர் மட்டுமே திருமணமான போப்கள் இல்லை என்று நம்புகிறார்கள்.
“முதல் 39 போப்கள் திருமணமான ஆண்கள்,” என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட கத்தோலிக் ஃபார் சாய்ஸ் என்ற குழுவின் இணைத் தலைவராக உள்ள லிண்டா பின்டோ கூறுகிறார்.
இக்குழு, அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான குருத்துவத்துக்குப் பிரசாரம் செய்கிறது.
முன்னாள் கன்னியாஸ்திரியான லிண்டா பின்டோ, முன்னாள் பாதிரியார் ஒருவரை திருமணம் செய்து கொள்ள தேவாலயத்தை விட்டு வெளியேறினார்.
துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்பது வெளிப்படையான தேவை என்று இயேசுவின் போதனைகளில் குறிப்பிடப்படவில்லை என்கிறார் லிண்டா பின்டோ.
திருச்சபையின் தொடக்க கால தலைவர்கள் பலருக்கு மனைவிகள் இருக்கலாம் என்று பிபிசியுடன் பேசிய மற்ற நிபுணர்களும் ஏற்றுக்கொண்டனர்.
பட மூலாதாரம், Getty Images
தொடக்க கால கிறிஸ்தவத்தின் நிபுணரான அமெரிக்காவில் உள்ள கார்டினெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கிம் ஹைன்ஸ்-ஐட்சன் பிபிசியிடம் பேசுகையில், “ஆரம்ப கட்டத்தில் மதகுருமார்கள் திருமணம் செய்துகொண்டதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன” என்று கூறினார்.
கிறிஸ்தவம் அதன் யூத வேர்களிலிருந்து கிரேக்க-ரோமன் உலகுக்கு பரவியது.
அதன் பின்னர், சுயக்கட்டுப்பாடு, தனிமை மற்றும் துறவறம் மேற்கொள்வது போன்ற நடைமுறைகளைப் பெற்றது என்கிறார் கிம் ஹைன்ஸ்-ஐட்சன்.
பின்னர் பேரரசர் கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவத்தை அரச மதமாக அறிவித்தார், இது போப்களுக்கு தீவிர அரசியல் அதிகாரத்தை அளித்தது.
“போப்கள், பொதுவாக, அதிகார வர்க்கத்தில் இருந்த ரோமானிய குடும்பங்களின் உறுப்பினர்கள் அல்லது ஆளும் ஜெர்மன் பேரரசர்களின் நண்பர்களாக இருந்தனர்” என்று டப்ளின் சிட்டி பல்கலைக்கழகத்தின் இறையியல் மற்றும் தத்துவத்தின் முன்னாள் விரிவுரையாளர் நியாம் மிடில்டன் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 1492 முதல் 1503 வரை பதவி வகித்த போப் அலெக்சாண்டர் VI முறையற்ற பாலியல் உறவுகளில் ஈடுபட்டதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.5 ஆம் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, ரோமைச் சுற்றியுள்ள ஒரு சிறிய இராஜ்ஜியம் போப்பை ஆட்சியாளராகக் கொண்டு போப்பாண்டவர் நாடுகளாக (756 -1870) ஆனது.
அதனைத் தொடர்ந்து, திருச்சபை செல்வத்தையும் அதிகாரத்தையும் குவித்தது, அரசியல் சூழ்ச்சியின் யுகமும் அதில் இருந்து தொடங்கியது.
“போப்பாண்டவரின் ‘இருண்ட காலத்தில்’, போப்கள், பிஷப்கள் மற்றும் பாதிரியார்கள் திருமணம் செய்துகொள்வதும் அல்லது திருமணம் செய்துகொள்ளாமல் வேறு பெண்களோடு உறவு கொள்வதும் சாதாரணமாக இருந்தது.
பாலியல் ஒழுக்கக்கேடு பரவலாக இருந்தது, கூடவே, திருச்சபை அலுவலகங்களை பணத்துக்கு விற்பதற்கான சைமனி என்ற நடைமுறையும் காணப்பட்டது.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, மறைந்த போப் பிரான்சிஸ்இந்த பிரச்னைகளை சமாளிக்க, போப் கிரிகோரி VII திருச்சபையில் முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் தொடங்கினார்” என்று விளக்குகிறார் மிடில்டன்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் செயின்ட் கிராஸ் கல்லூரியில் சர்ச் வரலாற்றின் எமரிட்டஸ் பேராசிரியரான டியர்மைட் மெக் கலுச் இதுகுறித்து பேசினார்.
அப்போது, ரோம் மற்றும் கான்ஸ்டான்டினோவில் உள்ள தொடக்க கால திருச்சபையின் இரண்டு அதிகார மையங்களைப் பற்றி அவர் குறிப்பிடுகையில்,
“12 ஆம் நூற்றாண்டு வரை கிழக்கு மற்றும் மேற்கு தேவாலயங்களில் பெரும்பாலான மத குருமார்கள் திருமணமானவர்களாக இருந்திருப்பர். அவர்களுக்கு குழந்தைகளும் இருந்திருக்கலாம்” என்கிறார்.
துறவறம் மேற்கொள்வது குறித்த இன்றைய ரோமன் கத்தோலிக்கக் கருத்துக்கள் பெரும்பாலும் “11 மற்றும் 12ம் நூற்றாண்டுகளில் உருவான இறையியல் கருத்துக்களின் தொகுப்பால்” வடிவமைக்கப்பட்டுள்ளன என்று “Lower than the Angels: A History of Sex and Christianity” எனும் புத்தகத்தின் ஆசிரியர் நம்புகிறார்.
பாதிரியார்கள் துறவறம் மேற்கொள்வது குறித்து பைபிள் என்ன சொல்கிறது, அது ஒரு விதியாக உருவானது எப்படி?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கிறிஸ்தவத்தில் துறவறம் மேற்கொள்வதை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் பைபிளிலிருந்து மேற்கோள் காட்டுகிறார்கள்.’புதிய ஏற்பாட்டின் நான்கு அதிகாரங்களில் மனைவியைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை’ என்று பாதிரியார்கள் துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தை ஆதரிப்பவர்கள் இயேசுவின் உதாரணத்தை மேற்கோள் காட்டுகிறார்கள்.
மத்தேயு நற்செய்தி, 19 ஆம் அத்தியாயத்தில், “பரலோக ராஜ்ஜியத்துக்காக”, அதை பின்பற்ற வாய்ப்புள்ளவர்கள் துறவறம் மேற்கொள்வதை இயேசு பரிந்துரைக்கிறார்.
பவுலுக்குச் சொல்லப்பட்ட கடிதங்களில், சீடர்கள் அனைவரும் திருமணமாகாதவர்களாகவும், அவரைப் போல துறவறம் மேற்கொள்பவர்களாகவும் இருந்தால் சிறந்தது என்று கூறுகிறார்.
ஆனால், அவர் தீமோத்தேயுவுக்கு எழுதிய முதல் கடிதத்தில், ஆயர்கள் ஒரு முறை மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்.
உண்மையில், பாலியல் உறவுகளிலிருந்து விலகியிருப்பது தொடக்க கால கிறிஸ்தவர்களால் அடிக்கடி பாராட்டப்பட்டுள்ளது.
திருச்சபையின் மிக முக்கியமான இறையியலாளர்களில் இருவரான, செயின்ட் அகஸ்டின் மற்றும் செயின்ட் தாமஸ் அக்வினாஸ் ஆகியோர், பாதிரியார்கள் துறவறம் மேற்கொள்வதை ஆன்மீக நோக்கங்களுக்காக தங்களை சிறப்பாக அர்ப்பணிப்பதற்கான வழிமுறை என்று ஊக்குவித்தனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, திருச்சபையில் ‘துறவறம்’ என்பது மிகவும் விவாதத்துக்குரிய தலைப்புஆனால் திருச்சபையில் துறவறம் மேற்கொள்வது ஒரு சீரான மற்றும் அமல்படுத்தப்பட்ட விதியாக மாறுவதற்கான பாதை நீண்டதாகவும், சவால்கள் நிறைந்ததாகவும் இருந்தது.
ஏடி 325 இல், ரோம பேரரசர் கான்ஸ்டன்டைன் உருவாக்கிய நைசியா கவுன்சிலில் பாதிரியார்கள் துறவறம் மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஏடி 692 இல் நடைபெற்ற ட்ருல்லோ கவுன்சில், ஆயர்கள் கட்டாயமாக துறவறத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தது. ஆனால் அந்த விதி எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியை பின்பற்றி நடைமுறைப்படுத்தப்படவில்லை.
11ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க மற்றும் மரபார்ந்த கிழக்குத் திருச்சபைக்கு இடையிலான “பெரும் பிளவுக்கு” துறவறம் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
பட மூலாதாரம், EPA
400 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற புராட்டஸ்டன்ட் சீர்திருத்தத்தின் போதும் பாதிரியார்கள் துறவறம் மேற்கொள்வது ஒரு விவாதப்புள்ளியாக இருந்தது.
11ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற கிரிகோரியன் சீர்திருத்தங்களும், 1123 மற்றும் 1139ஆம் ஆண்டுகளில் நடந்த இரண்டு லேட்டரன் கவுன்சில்களும், பாலியல் உறவுகளைத் தவிர்ப்பதற்கான சுய கட்டுப்பாட்டை மிகவும் கடுமையாக அமல்படுத்தின.
அதன் பின்னர், 16ஆம் நூற்றாண்டின் சீர்திருத்தக் காலம் மற்றும் டிரெண்ட் கவுன்சிலின் (1545-1563) முடிவுகளைத் தொடர்ந்து, மேற்கத்திய சடங்குகளை அடிப்படையாகக் கொண்ட கத்தோலிக்க திருச்சபையை வரையறுக்கும் பண்பாக துறவறம் மாறியது.
அதன் பின், கத்தோலிக்க குருத்துவத்தின் பார்வை “மற்ற ஆண்களைப் போல இருக்கவும் மனைவியுடன் இருக்கவும் பாதிரியார்களை அனுமதிக்கவில்லை.
ஏனென்றால் பாதிரியார் என்பவர் திருமணமாகாத இயேசு கிறிஸ்துவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்,” என்று டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஜேம்ஸ் கெல்லி பிபிசியிடம் விளக்கினார்.
“ஒரு பாதிரியார் சபையை தனது குடும்பமாக நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டதால், பாதிரியார் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே திருச்சபை மட்டுமல்ல, பாமர மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது,” என்றும் அவர் கூறினார்.
விதியை மீறுபவர்கள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, லுக்ரேசியா போர்கியாவின் தந்தை போப் அலெக்சாண்டர் VIஇவை ஒருபக்கம் இருந்தாலும், சில போப்கள் புனித சடங்குகளை ஏற்கும் முன்பு சட்டப்படி திருமணம் செய்தவர்களாக இருந்தனர்.
மேற்கூறப்பட்ட செயின்ட் ஹார்மிஸ்தாஸ் (514–523) போப்பாக தேர்ந்தெடுக்கப்படும் போது மனைவியை இழந்தவராக இருந்ததாக நம்பப்படுகிறது.
அதேபோல், அட்ரியன் II (867–872) 75 வது வயதில் போப்பாக நியமிக்கப்பட்ட பிறகு, அவரது மனைவியும் மகளும் அவருடன் லேட்டரன் அரண்மனையில் வாழ்ந்தனர்.
(பின்னர் அவர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக 9ஆம் நூற்றாண்டின் செயின்ட் பெர்டின் ஆண்டுக்கான குறிப்புக்கள் கூறுகின்றன)
ஜான் XVII (1003) மற்றும் கிளெமென்ட் IV (1265–68) ஆகியோரும் போப்பாக நியமிக்கப்படுவதற்கு முன்பு திருமணம் செய்திருந்ததாக நம்பப்படுகிறது.
அதே நேரத்தில், முறையற்ற உறவுகளில் ஈடுபட்டு, குழந்தைகளைப் பெற்று தந்தையானவர்களும் இருந்தனர்.
இரண்டு செல்வாக்கு மிக்க இத்தாலிய பெண்கள் கார்டினல்களாக இருந்து பின்னர் போப்பாக பதவி வகித்தவர்களின் மூலம் முறையற்ற வழியில் பிறந்த மகள்களாக பொதுவாக அடையாளம் காணப்படுகிறார்கள்.
லுக்ரேசியா போர்கியாவின் தந்தையாக கூறப்படும் அலெக்சாண்டர் VI (1492 முதல் 1503 வரை போப் ஆக இருந்தவர்). இவர் முறையற்ற உறவுகளில் ஈடுபட்டதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
மற்றவர் பெலிசே டெல்லா ரோவேரே.
இவர் இத்தாலிய மறுமலர்ச்சிக்காலத்தின் மிகச் சக்திவாய்ந்த, சிறந்த சாதனைகளை செய்த பெண்களில் ஒருவர்.
போப் ஜூலியஸ் II (1503 முதல் 1513 வரை பதவி வகித்தவர் ) என்பவரின் மகளாக பெலிசே டெல்லா அறியப்படுகிறார்.
சக்திவாய்ந்த இத்தாலிய வம்சங்கள் போப்பாண்டவரின் பதவியையும், அரசியல் செல்வாக்கையும் கைப்பற்ற போராடிய காலத்தில், போர்ஜியா மற்றும் டெல்லா ரோவேர் குடும்பங்கள் கடும் போட்டியாளர்களாக இருந்தன. (லுக்ரேசியா போர்ஜியா, சூழ்ச்சிக்காரி, பாலியல் தொழிலாளி, மற்றும் விஷம் கொடுப்பவர் என இழிவுபடுத்தப்பட்டார்).
“போர்ஜியா குலத்தின் ஊழல் நிறைந்த போப்பாண்டவர் காலத்தில் தான், 16ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதியான லூதரின் ஆரம்ப வாழ்க்கை இருந்தது.
இரண்டாவது போர்ஜியா போப் அலெக்சாண்டர் VI, முறைகேடான வழியில் பல குழந்தைகளைப் பெற்றிருந்தார்” என மிடில்டன் குறிப்பிடுகிறார்.
“கட்டாயப்படுத்தி துறவறம் மேற்கொள்ளச் செய்வது பாலியல் ஒழுக்கக்கேட்டுக்கு வழிவகுக்கும் என்றும் மார்ட்டின் லூதர் நம்பினார்.”
கூடுதலாக, பதினைந்தாம் மற்றும் பதினாறாம் நூற்றாண்டைச் சேந்த பல்வேறு போப்களும் முறைகேடான வழியில் குழந்தைகளை பெற்றெடுத்ததாக கருதப்படுகிறது.
போப்கள் மற்றும் துறவறத்தின் வரலாறு குறித்து கருத்து கேட்க வாடிகன் மற்றும் பல கத்தோலிக்க நிறுவனங்களை பிபிசி அணுகியது, ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை.
துறவறத்தின் எதிர்காலம்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, போப் பெனடிக்ட் XVI (எல்) மற்றும் போப் பிரான்சிஸ் (ஆர்) ஆகியோர் துறவறத்தின் விதிகளை தளர்த்தவில்லைதிருச்சபை ஒரு பக்கம் நெகிழ்வுத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. (ஆங்கிலிக்கன் மற்றும் பிற கிறிஸ்தவ தேவாலயங்களில் இருந்து திருமணமான பாதிரியார்கள் இணைக்கப்படுவதற்கு விதிகள் தளர்த்தப்பட்டன, மேலும் கிழக்கத்திய சடங்கு முறைகளில் திருமணமான ஆண்கள் நீண்ட காலமாக பாதிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்).
ஆனாலும், போப் பிரான்சிஸ் மற்றும் அவரது முன்னோடியான போப் பெனடிக்ட் XVI ஆகிய இருவரும் பாதிரியார்கள் துறவறம் மேற்கொள்ளும் நடைமுறையை தொடர்ந்து பாதுகாத்து வந்துள்ளனர்.
திருச்சபை இறுதியில் கிராமப்புறங்களில் உள்ள திருமணமான பாதிரியார்களை ஏற்றுக்கொண்டு, பெண்களையும் நியமிக்கும் என்று பேராசிரியர் ஹெயின்ஸ்-ஐட்சன் எதிர்பார்க்கிறார்.
ஆனால், “21 ஆம் நூற்றாண்டில் திருமணமான போப்பை நாம் பார்க்க முடியாது” என்று அவர் நம்புகிறார்.
முன்னாள் பிரான்சிஸ்கன் கன்னியாஸ்திரியான லிண்டா பின்டோ தற்போது ஒரு தாயாகவும் பாட்டியாகவும் உள்ளார்.
சமீபத்தில் அவர் தனது 50வது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடினார். திருச்சபையின் துறவறம் குறித்த கட்டுப்பாடுகளில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை.
“கத்தோலிக்க திருச்சபையில் பிறந்து, ஞானஸ்நானம் பெற்று வளர்ந்தவர்களுக்கு அந்த மாற்றங்கள் செய்யப்படாது,” என்கிறார் லிண்டா பின்டோ.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு