Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து பதிவிட்டதாக பேராசிரியர் அலி கான் கைது- பின்னணி என்ன?
பட மூலாதாரம், Ali Khan Mahmudabad/FB
படக்குறிப்பு, பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத்2 மணி நேரங்களுக்கு முன்னர்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் மற்றும் இந்திய ராணுவத்தை சேர்ந்த கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோரின் பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்ட பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
யோகேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஹரியாணாவின் சோனிபட் காவல்துறையினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டு சமூகங்களுக்கு இடையே வெறுப்பைத் தூண்டும் வகையில் செயல்பட்டதாக கூறி, பேராசிரியர் அலி கான் மீது ஹரியாணா காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
பேராசிரியர் அலி கான், ஹரியாணாவின் அசோகா பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராக உள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில் போலீசார் தங்கள் வீட்டிற்கு வந்து அலி கானை அழைத்துச் சென்றதாக அவரது மனைவி பிபிசியிடம் தெரிவித்தார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
முன்னதாக ஹரியாணா மாநில மகளிர் ஆணையம் பேராசிரியர் அலி கானுக்கு சம்மன் அனுப்பி அவரது பதிலைக் கோரியிருந்தது.
அலி கான் கைது தொடர்பாக பலர் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர், பலர் சமூக ஊடகங்களிலும் இதைப் பற்றி விவாதித்து வருகின்றனர்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.என்ன விஷயம்?
மே 6 மற்றும் 7 ஆம் தேதிகளின் இடைப்பட்ட இரவில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு, கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் இது குறித்த தகவல்களை வழங்கினர்.
இந்தநிலையில் மே 8 அன்று, பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் சமூக ஊடகங்களில் ஒரு பதிவை வெளியிட்டார்.
இந்தப் பதிவில், கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு தேர்தேடுக்கப்பட்டது குறித்து எழுதியிருந்தார்.
மேலும் தனது பதிவில் இந்தியா- பாகிஸ்தான் மோதல் மற்றும் ‘போரை கோருபவர்களின்’ உணர்வுகள் குறித்தும், போரின் பாதிப்புகள் குறித்தும் பேராசிரியர் அலி கான் எழுதியிருந்தார்.
ஹரியாணா மாநில மகளிர் ஆணையம் இந்த பதிவு குறித்து, தானாக கவனத்தில் எடுத்துக்கொண்டு மே 12 அன்று பேராசிரியர் அலி கானுக்கு சம்மன் அனுப்பியது. இந்த சம்மனில், அவரது கருத்துக்கள்’ஆயுதப் படைகளில் உள்ள பெண்களை அவமதிக்கும் வகையிலும், வகுப்புவாத வெறுப்பை ஊக்குவிப்பதாகவும்’ உள்ளது என கூறப்பட்டுள்ளது.
ஹரியாணா மகளிர் ஆணையம் தனது சம்மனில் ஆறு விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளது. மேலும் ‘கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் உள்ளிட்ட ராணுவத்தில் உள்ள பெண்களை அவமதிப்பது மற்றும் இந்திய ராணுவ அதிகாரிகளான அவர்களின் பங்கைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவது’ பற்றியும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பேராசிரியர் அலி கானுக்கு ஆணையத்தின் முன் ஆஜராக 48 மணிநேரம் அவகாசம் அளித்து, அவரிடம் எழுத்துப்பூர்வ பதிலைக் கேட்டது.
இதன் பின்னர், பேராசிரியர் அலி கானின் வழக்கறிஞர்கள் அவர் சார்பாக மகளிர் ஆணையத்திற்கு எழுத்துப்பூர்வ பதிலைக் கொடுத்தனர்.
”அவர் வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பேராசிரியர். அவர் இந்தக் கூற்றுகளை ‘தனது கல்வி மற்றும் தொழில்முறை நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி’ வெளியிட்டார், மேலும் அவை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன” என பேராசிரியர் அலி கானின் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
பேராசிரியர் அலி கானின் கருத்துக்கள் தொடர்பாக ஹரியாணாவின் சோனிபட்டில் வசிக்கும் யோகேஷ், மே 17 சனிக்கிழமை அன்று போலீஸில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், ஹரியாணா காவல்துறை ஞாயிற்றுக்கிழமை அன்று அலி கானை கைது செய்தது.
பேராசிரியர் அலி கான் மீது இந்திய தண்டனைச் சட்டம் 196 (1)B, 197 (1)C, 152 மற்றும் 299 ஆகிய பிரிவுகளின் கீழ் ஹரியாணா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பட மூலாதாரம், Vineet Kumar
படக்குறிப்பு, பேராசிரியர் அலி கானை ஹரியாணா போலீசார் கைது செய்தனர்.பேராசிரியர் அலி கான் என்ன சொன்னார்?
மே 8 அன்று பேராசிரியர் அலி கான் வெளியிட்ட பதிவில்,”கர்னல் சோபியா குரேஷியைப் புகழ்ந்து பேசும் பல வலதுசாரிகளை கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், இவர்கள் இதேபோல் கும்பல் படுகொலை, தன்னிச்சையான புல்டோசர் நடவடிக்கை மற்றும் பாஜகவின் வெறுப்புணர்வைத் தூண்டும் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காகக் குரல் எழுப்பலாம். இதன் மூலம் இவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்” என கூறியுள்ளார்.
மேலும் “இரண்டு பெண் வீரர்கள் மூலம் தகவலை வெளியியிடும் அணுகுமுறை முக்கியமானது. ஆனால் இந்த அணுகுமுறை யதார்த்தமாக மாற்றப்படவில்லையென்றால் அது வெறும் பாசாங்குத்தனமான ஒன்றாகதான் இருக்கும் ” என்று பேராசிரியர் அலி கான் கூறினார்.
இருப்பினும், பேராசிரியர் அலி கான் தனது பதிவில் இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாராட்டினார்.
“பொதுவான முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் கள யதார்த்தம் அரசாங்கம் காட்ட முயற்சிப்பதை விட வேறுபட்டது. ஆனால் அதே நேரத்தில் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு (கர்னல் சோபியா மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங்கின் பத்திரிகையாளர் சந்திப்பு) இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையை காட்டுகிறது. இந்த கருத்தாக்கம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது என்பதையும் காட்டுகிறது” என்று அவர் எழுதியுள்ளார்.
பேராசிரியர் அலி கான் தனது பதிவின் இறுதியில் ‘ஜெய் ஹிந்த்’ என்று எழுதினார்
அலி கானின் மனைவியும் வழக்கறிஞரும் என்ன சொன்னார்கள்?
பட மூலாதாரம், Ali Khan Mahmudabad/FB
பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது குறித்து அறிய, பிபிசி நிருபர் தில்னாவாஸ் பாஷா அவரது மனைவியிடம் பேசினார்.
“காலை 6:30 மணியளவில், போலீஸ் குழு திடீரென எங்கள் வீட்டிற்கு வந்து, எந்த தகவலும் கொடுக்காமல் பேராசிரியர் அலி கானை அழைத்துச் சென்றது.” என அலி கானின் மனைவி ஒனைசா பிபிசியிடம் கூறினார்.
“நான் ஒன்பது மாத கர்ப்பிணி. விரைவில் குழந்தை பிறக்கபோகிறது. என் கணவர் எந்த உறுதியான காரணம் இல்லாமல் வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்” என்று ஒனைசா கூறினார்.
பேராசிரியர் அலி கானின் வழக்கறிஞர்கள் குழுவைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் பிபிசியிடம், “அவர் கைது செய்யப்பட்டு, சோனிபட்டிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அவரை அங்குள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தலாம். இப்போது நாங்கள் கூடுதல் தகவல்களைச் சேகரிக்க முயற்சிக்கிறோம்” என்று கூறினார்.
பேராசிரியர் அலி கான் கைது செய்யப்பட்டதை ஹரியாணா காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து கருத்து தெரிவித்ததற்காக காவல்துறை அவரை கைது செய்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தலைவர்கள் கூறியது என்ன?
பேராசிரியர் அலி கான் கைது செய்யப்பட்ட பிறகு, பலர் சமூக ஊடகங்களில் எதிர்வினையாற்றியுள்ளனர்.
பேராசிரியர் அலி கான் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக ஸ்வராஜ் அபியான் அமைப்பின் இணை நிறுவனர் யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
“இந்தப் பதிவைப் படித்து உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். இதில் பெண்களுக்கு எதிரானது என்ன? இந்தப் பதிவு எப்படி மத வெறுப்பைப் பரப்புகிறது? மேலும் இது இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை எவ்வாறு ஆபத்தில் ஆழ்த்துகிறது? (முதல் தகவல் அறிக்கையில் இந்திய நீதிச் சட்டத்தின் பிரிவு 152).இத்தகைய புகாரின் அடிப்படையில் காவல்துறை எவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியும்?” என அலி கானின் பதிவை பகிர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் யோகேந்திர யாதவ்.
“கர்னல் சோபியாவை உண்மையில் அவமதித்த மத்தியப் பிரதேச அமைச்சருக்கு ஏதாவது நடந்ததா என்றும் கேளுங்கள்?” எனவும் யோகேந்திர யாதவ் குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் அலி கான் கைது செய்யப்பட்ட செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து “ஜனநாயகத்தின் தாய்” என எழுதியுள்ளார் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா
“ஹரியாணா காவல்துறை அலி கான் மஹ்முதாபாத்தை சட்டவிரோதமாக கைது செய்துள்ளது” என்று எழுத்தாளரும் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியருமான அபூர்வானந்த் கூறியுள்ளார்.
“ஹரியாணா காவல்துறை அலி கானை சட்டவிரோதமாக கைது செய்துள்ளது. டெல்லியில் இருந்து ஹரியாணாவுக்கு டிரான்சிட் ரிமாண்ட் இல்லாமல்( ஒரு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை ஒரு மாநிலத்தில்/நகரில் இருந்து வேறு மாநிலத்துக்கு அழைத்து செல்ல நீதிமன்றம் அளிக்கும் தற்காலிக ஆணை) அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இரவு 8 மணிக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. மறுநாள் காலை 7 மணிக்கு போலீசார் அவரது வீட்டை அடைந்தனர்!” என அபூர்வானந்த் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விஷயத்தில் டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார், மேலும் பிரபிர் புர்காயஸ்தா வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் குறிப்பிட்டுள்ளார்.
பட மூலாதாரம், ANI
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் குமார் ஜாவும் அலி கான் மஹ்முதாபாத் கைது குறித்து பதிவிட்டுள்ளார்.
“தங்கள் கருத்துக்களை அச்சமின்றி கூற மக்கள் அனுமதிப்பதே உண்மையான ஜனநாயகம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார் .
பேராசிரியர் அலி கான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ‘தி இந்து’ செய்தித்தாளின் பத்திரிகையாளர் சுஹாசினி ஹைதர், பேராசிரியர் அலி கானின் பதிவு பாகுபாடு பற்றியது என்று கூறியுள்ளார்.
“இந்த கருத்துக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில் இதே விஷயம் தொடர்பாக ஒரு அமைச்சர் மோசமான வகுப்புவாத கருத்தை கூறினார். அவர் இன்னும் சுதந்திரமாகதான் உள்ளார்” என சுஹாசினி ஹைதர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஹரியாணா மாநில மகளிர் ஆணையத்தின் சம்மனுக்கு எதிரான கடிதத்தில் 1203 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
ஹரியாணா மாநில மகளிர் ஆணையம் “சம்மனை திரும்பப் பெற்று, பேராசிரியர் அலி கான் மஹ்மூதாபாத்திடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று இந்தக் கடிதத்தின் மூலம் மக்கள் கோரியுள்ளனர்.
இதனுடன், அசோகா பல்கலைக்கழகத்திடம் தனது பேராசிரியருடன் நிற்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
பேராசிரியர் அலி கான் யார்?
பேராசிரியர் அலி கான், ஹரியாணாவின் அசோகா பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராக உள்ளார். இது ஒரு தனியார் பல்கலைக்கழகம்.
அலி கான் மஹ்முதாபாத் அரசியல் அறிவியல் மற்றும் வரலாற்றுப் பேராசிரியர். அவர் அரசியல் அறிவியல் துறையின் தலைவராகவும் உள்ளார். பேஸ்புக் சுயவிவரத்தின்படி, அவர் உத்தரபிரதேசத்தின் மஹ்முதாபாத்தை சேர்ந்தவர்.
அசோகா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, அவர் அமெரிக்காவின் ஆம்ஹெர்ஸ்ட் கல்லூரியில் வரலாறு மற்றும் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார்.
இதன் பிறகு சிரியாவின் டமாஸ்கஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டம் பெற்றார். இந்தக் காலகட்டத்தில், அவர் சிரியாவுக்கு மட்டுமல்ல, லெபனான், எகிப்து மற்றும் யேமென் ஆகிய நாடுகளுக்கும் பயணம் செய்தார். மேலும் இரான் மற்றும் ஈராக்கிலும் சிறிது காலம் இருந்தார். பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு