அழகிகளின் கால்களை உள்ளூர் பெண்கள் கழுவினார்களா? ஐதராபாத் உலக அழகிப் போட்டியில் சர்ச்சை

பட மூலாதாரம், I&PR Telangana

படக்குறிப்பு, உள்ளூர் பெண்கள் யாருடைய கால்களையும் கழுவவில்லைஎழுதியவர், அமரேந்திர யார்லகடா பதவி, பிபிசி செய்தியாளர்17 மே 2025

72வது உலக அழகி போட்டி தெலங்கானாவில் நடைபெற்று வருகிறது. மே 7ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டிகள் மே 31ஆம் தேதி வரை நடைபெறும். அரசு ஏற்பாடு செய்த பிரமாண்டமான துவக்க விழா மே 10ஆம் நாளன்று கச்சிபவுலி மைதானத்தில் நடைபெற்றது.

தற்போது உலக அழகி போட்டிகள் தொடர்பான சர்ச்சை சமூக ஊடகங்களில் வைரலாகின்றன.

அழகிப் போட்டியில் கலந்துக் கொள்ள வந்த பெண்களில் சிலர் ராமப்பா ஆலயத்திற்குச் சென்றபோது, ​​உள்ளூர் பெண்கள் அவர்களை வரவேற்றனர். வரவேற்ற பெண்கள், போட்டியாளர்களின் கால்களை நீரால் அலம்பியதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

“தெலங்கானா பெண்கள், பிறருடைய கால்களைக் கழுவ வேண்டுமா?” என்று சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை பலரும் முன்வைத்து வருகின்றனர்.

இருப்பினும், இந்த விமர்சனங்களுக்கு மாநில அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. உலக அழகி போட்டி ஏற்பாடு செய்யப்பட்டதற்கு எதிராக ஏற்கனவே மகளிர் குழுக்கள் அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ள நிலையில், தற்போது அழகிப் போட்டிகள் தொடர்பான சர்ச்சைகள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், I&PR Telangana

படக்குறிப்பு, தெலுங்கானாவில் உலக அழகி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.ராமப்பா ஆலயத்தில் நடந்தது என்ன?

மே 14ஆம் தேதி, தெலங்கானா அரசு உலக அழகிப் போட்டியில் கலந்துக் கொள்ள வந்திருந்தப் போட்டியாளர்களை மாநிலத்தின் முக்கிய இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றது. போச்சம்பள்ளிக்குச் சென்றபோது அவர்கள், ஜவுளித்துறையில் பிரபலமான கைவினைத்திறன்களையும் ஆடை உற்பத்தியையும் பார்த்து ரசித்தார்கள்.

வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ஆயிரம் தூண்களைக் கொண்ட கோயில், வாரங்கல் கோட்டை மற்றும் ராமப்பா ஆலயத்திற்குச் சென்றனர். அங்கு, இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்ட அழகிகளில் சிலர் வாரங்கலில் உள்ள ஆயிரம் தூண் கோயிலுக்கும், மற்றுமொரு குழுவினர் ராமப்பா ஆலயத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். ஆலயங்களுக்குச் சென்றபோது போட்டியில் கலந்துக் கொள்ள வந்த அழகிகள் அனைவரும் புடவை அணிந்திருந்தனர்.

ஆயிரம் தூண்கள் கொண்ட ராமப்பா ஆலயத்திற்கு சென்றபோது, பாரம்பரிய மரபுப்படி கால்களை கழுவிக் கொள்வதற்காக அவர்களுக்கு ​​பித்தளைத் தாம்பாளம், தண்ணீர் நிரப்பப்பட்ட பித்தளை சொம்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. உலக அழகிப் போட்டியாளர்கள் தங்கள் கால்களைக் கழுவிக் கொண்டு, அவற்றை தங்கள் மொபைல் போன்களில் செல்ஃபியாக படம் பிடித்துக் கொண்டனர்.

ஆனால், அதில் சில போட்டியாளர்கள் என்ன செய்வது என்று புரியாமல் சொம்பை வைத்துக் கொண்டு குழம்பிக் கொண்டிருந்தனர். அதில் சிலர், தங்கள் அருகில் உள்ளவர்கள் செய்ததைப் பார்த்து அப்படியே செய்துக் கொண்டிருந்தார்கள்.

இருந்தபோதிலும், உலக அழகி போட்டியாளர்களின் கால்களில் உள்ளூர் பெண்கள் சொம்பில் இருந்து நீர் ஊற்றியதைப் பார்க்க முடிந்தது. தண்ணீரால் கால்களைக் கழுவிய பிறகு கால்களைத் துடைக்க நாப்கின்களும் கொடுக்கப்பட்டிருந்தன. அதில், ஒரு போட்டியாளரின் கால்களை உள்ளூர் பெண்மணி ஒருவர் துடைத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.சமூக ஊடகங்களில் விமர்சனம்

‘மிஸ் வேர்ல்ட்’ போட்டியாளர்களின் கால்களை கழுவச் செய்ததற்காக அரசு விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. சமூக ஊடக பயனாளர்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சியான பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர்களும் சமூக ஊடகங்களில் அரசை விமர்சித்து வருகின்றனர். தெலங்கானா பெண்களை குறைமதிப்பிற்கு உட்படுத்திவிட்டதாக ஆதங்கப்பட்டு, அரசுக்கு கடும் ஆட்சேபனைகளை தெரிவித்தனர்.

“இது மிகவும் விசித்திரமான, மன்னிக்க முடியாத செயல்” என்று பாரத ராஷ்டிரிய சமிதி தலைவர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

உலக அழகிப் போட்டியாளர்களின் கால்களை கழுவினாலும் அவர்களுக்கு அதன் மதிப்பு தெரியுமா என்றும் நெட்டிசன்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

முன்னாள் அமைச்சரும் பிஆர்எஸ் தலைவருமான சபீதா இந்திரா ரெட்டி, இந்த விவகாரம் தொடர்பாக எக்ஸ் ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மிஸ் வேர்ல்ட் போட்டியாளர்களின் கால்களை தெலங்கானா பெண்கள் கழுவுவதும் துடைப்பதும் கீழ்த்தரமானது மட்டுமல்ல வெட்கக்கேடானது, இந்த அரசாங்கம் பெண்கள் அனைவரிடத்திலும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Facebook/Danasari Seethakka

படக்குறிப்பு, பிஆர்எஸ் தலைவர்கள் தவறான தகவல்களைப் பரப்புவதாக அமைச்சர் சீதக்கா குற்றம் சாட்டினார்அரசு தரப்பு என்ன சொல்கிறது?

வாரங்கல் நாடாளுமன்ற உறுப்பினர் கடியம் காவ்யா பிபிசியிடம் கூறுகையில், விருந்தினர்களை கடவுளராகக் கருதி மதிக்க வேண்டும் என்பதைக் குறிக்கும் இந்திய கலாசாரம் மற்றும் விருந்தோம்பல் பாரம்பரியமான ‘அதிதி தேவோ பவ’ என்ற பழக்கத்தையே கடைபிடித்தனர், உள்ளூர் பெண்கள் யாருடைய கால்களையும் கழுவவில்லை என்று தெரிவித்தார்.

“நாங்கள் அனைவரும் வாரங்கல் பெண்கள்”, இங்கு யாருடைய சுயமரியாதைக்கும் பங்கம் ஏற்படுத்தப்படவில்லை. இதை வீடியோவில் தெளிவாகக் காணலாம். உலக அழகிப் போட்டியாளர்கள் தங்கள் கால்களை தாங்களே கழுவிக் கொண்டனர். “அதன் பிறகு, அவர்களின் கால்களைத் துடைக்க நாப்கின்கள் கொடுக்கப்பட்டன, ​​அவர்களே தங்கள் கால்களைத் துடைத்துக் கொண்டனர்,” என்று காவ்யா கூறினார்.

வீடியோ தெளிவாக இருந்தபோதிலும், பிஆர்எஸ் தலைவர்கள் பொய்களைப் பரப்புவதாக எம்பி குற்றம் சாட்டினார்.

பி.ஆர்.எஸ் தலைவர்கள் உண்மைக்கு புறம்பானத் தகவல்களைப் பரப்புவதாக தெலங்கானா பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சீதக்கா குற்றம் சாட்டினார்.

“கோயிலுக்குள் நுழைவதற்கு முன்பு கால்களைக் கழுவுவது வழக்கம்” ஒரே நேரத்தில் 33 பேர் கால்களைக் கழுவுவது அந்த இடத்தில் கடினமாக இருக்கும் என்பதால், கால்களைக் கழுவிக் கொள்வதற்காக ஒரு தாம்பாளத்தையும் சொம்பில் தண்ணீரையும் கொடுத்தனர். ” நிகழ்வை நடத்தும் குழுவைச் சேர்ந்த பெண், ஒருவரின் காலில் தண்ணீரை ஊற்றினார். இதைத் தவறாக திரித்து பொய்களைப் பரப்புகிறார்கள்” என்று அமைச்சர் கூறினார்.

பட மூலாதாரம், I&PR Telangana

படக்குறிப்பு, 72வது உலக அழகி போட்டி தெலங்கானாவில் நடைபெற்று வருகிறதுபோக்குவரத்து கட்டுப்பாடுகள்

தெலங்கானாவில் நடைபெற்று வரும் அழகிப் போட்டி மே 31 ஆம் தேதி வரை நடைபெறும். உலக அழகிப் போட்டியில் கிட்டத்தட்ட 110 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

தெலங்கானா சுற்றுலா, பாரம்பரியம் மற்றும் கலாசாரத் துறையின் மேற்பார்வையின் கீழ் இந்தப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வையொட்டி, ஹைதராபாத் நகரில் உள்ள மேம்பாலங்கள் மற்றும் சந்திப்புகளில் உலக அழகிப் போட்டியைக் குறிக்கும் சிறப்பு விளக்குகள் மற்றும் லோகோக்கள் நிறுவப்பட்டிருக்கின்றன.

தெலுங்கானா அரசு, மே 12ஆம் தேதி புத்தவனத்தை பார்வையிட போட்டியாளர்களை அழைத்துச் சென்றது, மே 13 அன்று சார்மினாரில் பாரம்பரிய நடைப்பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. போட்டியாளர்கள் செல்லும் இடமெல்லாம் அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சிவப்பு கம்பள விரிப்பு, அவர்களுக்காக போக்குவரத்தை நிறுத்துதல் மற்றும் நடைபாதைகளில் உள்ள சிறிய கடைகளை மூடுதல் ஆகிய நடவடிக்கைகளை பலரும் விமர்சிக்கின்றனர்.

ஆயிரம் தூண் கோயிலுக்கு அழகிகள் சென்றபோது, ​​அங்குள்ள சாலையோரக் கடைகள் மூடப்பட்டிருந்தன. ராமப்பா கோயில் மற்றும் சார்மினாரில் சில கடைகள் மூடப்பட்டிருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இருப்பினும், கடைகள் திறந்திருந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உலக அழகிப் போட்டியாளர்களுக்காக சாமானிய மக்கள் எங்கும் சிரமப்படவில்லை என்று கடியம் காவ்யா தெரிவித்தார்.

பட மூலாதாரம், I&PR Telangana

படக்குறிப்பு, பாதுகாப்பு சிக்கல்களைத் தடுக்க போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஹைதராபாத் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்”வழக்கமாக, விஐபிகளின் வருகையின்போது, ​​போக்குவரத்து சிறிது நேரம் கட்டுப்படுத்தப்படுவது வழக்கமானது” அதைத் தவிர, சாதாரண மக்களைத் தொந்தரவு செய்யும் எதுவும் எங்கும் நடக்கவில்லை. “யாருடைய வாழ்வாதாரத்திற்கும் எந்த பிரச்னையும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டோம்” என்று காவ்யா பிபிசியிடம் கூறினார்.

மறுபுறம், போக்குவரத்து நிறுத்தம் குறித்து வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். சார்மினார் செல்லும் வழியிலும், ராமப்பா கோயிலுக்குச் செல்லும் வழியிலும், வாரங்கல் செல்லும் சாலையிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அழகிகளின் வாகனங்களின் அணிவரிசை செல்ல அனுமதிக்கப்பட்டது.

“உலகின் கவனம் உலக அழகி போட்டியில் உள்ளது” என்பதால், பாதுகாப்பு பிரச்னைகள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்யும் பொறுப்பு நமக்கு உள்ளது. “அதனால்தான் போக்குவரத்து கட்டுப்படுத்தப்படுகிறது” என்று ஹைதராபாதைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

“மிஸ் வேர்ல்ட் போட்டிகள் சர்வதேச அளவில் கவனம் பெறுகின்றன. அதனால்தான், முன்னெச்சரிக்கையாக, எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ராமப்பா கோயிலுக்கு அருகில் உள்ள பகுதிகளில் சுற்றித் திரிந்த குரங்குகள் பிடிக்கப்பட்டன, தேன் கூடுகள் அகற்றப்பட்டன…” என்று முலுகுவைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், X/IPRTelangana

படக்குறிப்பு, உலக அழகிப் போட்டியில் கிட்டத்தட்ட 110 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டுள்ளனர்தொடரும் அழகிப்போட்டி சர்ச்சைகள்

தெலங்கானாவில் உலக அழகி போட்டி நடத்துவது தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. உலக அழகி போட்டிக்கு எதிராக மகளிர் குழுக்கள் உட்பட பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

போட்டிகளின் தொடக்க நாளான மே 10ஆம் தேதி, மகளிர் குழுக்களின் தலைவர்கள் கச்சிபவுலி மைதானத்தில் போராட்டம் நடத்தினர். இதில் பங்கேற்ற பெண்கள் முற்போக்கு அமைப்பின் (POW) தலைவர் சந்தியா, AIDWA மாநில பொதுச் செயலாளர் மல்லு லட்சுமி, உதவிச் செயலாளர் கே.என். ஆஷாலதா மற்றும் பலரை காவல்துறையினர் கைது செய்தனர். மே 14ஆம் தேதி, ஆயிரம் தூண் கோயிலுக்குச் செல்லும் வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களும் கைது செய்யப்பட்டனர்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் போது மகளிர் குழுக்களின் சில தலைவர்கள் வீட்டுக் காவலில் தடுத்து வைக்கப்பட்டனர். சார்மினாரில் நடைபெற்ற பாரம்பரிய நடைப்பயணத்தின் போது, ​​ராம்நகரில் உள்ள மார்க்ஸ் கட்டிடம், பாக் லிங்கம்பள்ளியில் உள்ள AIDWA அலுவலகம் மற்றும் ஹைரதாபாத்தில் உள்ள AIIMS அலுவலகம் என பல இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

எல்லையில் பதற்றமான சூழல் நிலவும் போது, ​​அழகுப் போட்டிகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக தெலங்கானா அரசாங்கத்தை பெண்கள் முற்போக்கு அமைப்பின் தலைவர் சந்தியா விமர்சித்தார். அமைதியாக போராட்டம் நடத்தியதற்காக எங்களை வீட்டுக் காவலில் வைக்கிறார்கள் என்று அவர் குற்றம் சாட்டப்பட்டனர்.

“அழகிப் போட்டிகள் ஏன் நடத்தப்படுகின்றன? அவை ரத்து செய்யப்பட வேண்டும்,” என்று மல்லு லட்சுமி கோரிக்கை வைக்கிறார். இருப்பினும், போட்டியை எதிர்ப்பவர்களின் ஆட்சேபங்களை மாநில அரசு நிராகரித்துள்ளது.

“உலக அழகி போட்டிகள், உலகின் முன் தெலங்கானாவின் மதிப்பை உயர்த்துகின்றன, மாநிலத்திற்கு முதலீடுகளை கொண்டு வருவதில் இந்தப் போட்டிகள் பயனுள்ளதாக இருக்கும்” என்று மாநிலத் துணை முதல்வர் மல்லு பட்டி விக்ரமார்கா கூறினார்.

உலக அழகி போட்டி தொடர்பாக தேவையற்ற சர்ச்சைகள் எழுப்பப்படுவதாக தெலங்கானா சுற்றுலாத் துறையின் சிறப்பு தலைமைச் செயலாளர் ஜெயேஷ் ரஞ்சன் கூறுகிறார்.

“இவை தெலங்கானாவின் மகிமையை வெளிப்படுத்தும் போட்டிகள், சிலர் இதுபோன்ற சர்ச்சையை உருவாக்குகிறார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு