அரசாங்கம் உடனடியாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடதுவதன் ஊடாக தாம் அதிகாரப்பகிர்வு எதிரானவர்கள் அல்லர் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியும் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளரும், இணைத்தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்துள்ளதாவது,
அரசாங்கம் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை முகங்கொடுத்திருந்த நிலையில் தங்களது ஆறுமாத கால ஆட்சியின் மேல் மக்கள் கொண்டிருக்கின்ற நிலைப்பாட்டை உணரக்கூடியதாக இருக்கும்.
அவ்வாறான நிலையில், மாகாண சபைகளுக்கான தேர்தலை அரசாங்கம் உடனடியாக நடத்துமா என்று கேள்விகள் தற்போது எழுந்திருப்பது தவிர்க்க முடியாதவொன்றாகும்.
அதேநேரம், ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான ஜே.வி.பியானது, கொள்கை அளவில் மாகாண சபைகளுக்கு எதிரானதாகும். இலங்கை, இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடும்போது அதற்கு எதிராக மிகக் கடுமையான போராட்டத்தினை முன்னெடுத்த தரப்பாக அவர்கள் இருக்கின்றார்கள்.
அவ்விதமான நிலையில், ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து மக்களினதும் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என்று தேர்தலில் வாக்குறுதி அளித்தே அவர்கள் ஆட்சிப்பீடத்தில் ஏறியிருக்கின்றார்கள்.
ஆகையால், ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
குறித்த தேர்தலை நடத்துவதற்கு சட்டரீதியாக காணப்படுகின்ற தடைகளை நீக்குவதில் அரசாங்கத்துக்கு எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. அதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை காணப்படுகின்ற நிலையில் சட்ட திருத்தத்தினை உடனடியாக நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
அவ்விதமான சூழலில் அரசாங்கம் உடனடியாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடதுவதன் ஊடாக அதிகாரப்பகிர்வு எதிரானவர்கள் அல்லர் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியும்.
அத்தகைய செயற்பாட்டின் ஊடாகவே தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வகளிக்கும் என்ற குறைந்தபட்ச நம்பிக்கை ஏற்படும்.
அவ்வாறில்லாது, அரசாங்கம் செயற்படுமாக இருந்தால் அனைத்து பிரஜைகளுக்கும் சமவுரிமை என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை புறந்தள்ளிச் செயற்படுவதாக கொள்ள வேண்டியிருக்கும் என்றார்.