யாழ்ப்பாணத்தில் கடந்த ஒருவார கால பகுதியில் அதீத போதை வஸ்து பாவனை காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளனர்.
சாவகச்சேரி , மட்டுவில் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 27 வயதுடைய இளைஞன் ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்ட நிலையில் அவரை மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற சமயம் , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்
அதனை அடுத்து, உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு , அங்கு மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் , அதீத போதைவஸ்து நுகர்வு காரணமாக மரணம் சம்பவித்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த வாரம் வடமராட்சி பகுதியில் , அதீத போதை வஸ்து நுகர்வு காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , குறித்த இளைஞனுடன் போதைவஸ்தை நுகர்ந்த இளைஞனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞனை நீதிமன்ற அனுமதி ஊடாக புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்ப பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.