ஜே.வி.பியினுடைய பசப்பு வார்த்தைகளை நம்பி ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களுக்கு வாக்களித்தமை தவறு என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். இந்த வெற்றி எங்களை நாங்களே ஆள்வதற்காக மக்கள் எமக்கு தந்த ஆணையாக பார்க்கின்றேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய பேரவையின் வல்வெட்டித்துறை நகரசபை முதன்மை வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வல்வெட்டித்துறை நகரசபையின் 9 வட்டாரங்களில் 7 வட்டாரங்களில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசிய பேரவை வெற்றிபெற்றது. இது தொடர்பில் வினாவிய போதே மேற்கொண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் –
இந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் தெளிவான செய்தியை சொல்லியிருக்கிறார்கள். ஜே.வி.பியினுடைய பசப்பு வார்த்தைகளை நம்பி ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களுக்கு வாக்களித்தமை தவறு என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். இந்த தேர்தலில் பெருவாரியான வாக்குகளை தமிழ்க் கட்சிகளுக்கு வழங்கியிருக்கிறார்கள்.
மக்களின் வாக்களிப்பு சதவீதம் குறைவாக காணப்படுவதால் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் விகிதாசார பிரதிநிதித்துவம் ஊடாக வருகிறார்கள். மக்கள் உறங்கியிருக்காமல் விழிப்பாக
இருந்து இனப் பிரச்சினைக்கான தீர்வுக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராடுவதற்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்.
இந்த வெற்றி எங்களை நாங்களே ஆள்வதற்காக மக்கள் எமக்கு தந்த ஆணையாகப் பார்க்கின்றேன். எங்களினுடைய பயணம் தொடரும்.
வெறுமனே சபைகளில் ஆட்சியைமைபதற்காக மாத்திரமல்லாது இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் பொது உடன்பாட்டுக்கு வரும் வகையில் ஏனைய தமிழ்க் கட்சிகள் அனைத்தோடும் இணைந்து செயற்படுவோம் என மேலும் தெரிவித்தார்