வடக்கில் வவுனியா நகரசபை தவிர்ந்த அனைத்து சபைகளும் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் வசமே வீழ்ந்துள்ளது.
இந்நிலையில் வல்வெட்டித்துறை முற்றாக பேரினவாத கட்சிகளை புறந்தள்ளி நகரசபையின் புதிய தவிசாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பதவியேற்கவுள்ளார்.
வடக்கிலுள்ள பெரும்பாலான உள்ளுராட்சி மன்றங்களிடையே தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளே வாக்குகள் எண்ணப்படும் நிலையில் போட்டியிட்டுவருகின்றன.
இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான கட்சிகளது கூட்டான தமிழ்த்தேசியப் பேரவை மற்றும் சங்கு சின்னத்திலான தமிழ் தேசிய கூட்டணியென தமிழ் கட்சிகள் பரவலாக முடிவுகள் எண்ணப்படும் நிலையில் முன்னணி வகித்துவருகின்றன.
கிளிநொச்சியில் கரைச்சி,பச்சிலைப்பள்ளி மற்றும் பூநகரி பிரதேசசபை மீண்டும் இலங்கை தமிழரசுக்கட்சி வசம் சென்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் 40 வட்டாரங்களில் 36 வட்டாரங்களை தமிழரசுக்கட்சி தன்வசப்படுத்தியிருக்கிறது. கரைச்சி 21 இல் 20இனையும் பூநகரி 11 இல் 10இனையும் பளையில் 8 இல் 6 வட்டாரங்களையும் தமிழரசுக்கட்சி பெற்றுள்ளது.
இதனிடையே வல்வெட்டித்துறை நகரசபை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான கட்சிகளது கூட்டான தமிழ்த்தேசியப் பேரவை வசமாகியுள்ளது. புதிய தவிசாளராக மீண்டும் மூத்த தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் பதவியேற்கவுள்ளதாக தெரியவருகின்றது.