தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் , வைத்தியசாலையின் நிர்வாக சீர்குழைவுகளை கண்டித்தும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது.
நாளைய தினம் வெள்ளிக்கிழமை காலை 08 மணி முதல் நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 08 மணி வரையிலான 24 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
கடந்த 2ஆம் திகதி தெல்லிப்பழை வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவினுள் அத்துமீறி நுழைந்து , வைத்திய சேவைக்கு இடையூறு விளைவித்ததுடன் , சேவையில் இருந்த வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு அச்சுறுத்தல் கும்பலுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் , பொலிசாரின் விசாரணைகளில் திருப்தி இல்லை.எனவே பொலிஸார் உரிய முறையில் விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன், புற்றுநோய் சிகிச்சை மற்றும் மனநல சிகிச்சை பிரிவுகளை திறம்பட நிர்வாகிக்க தவறியமை , நிர்வாக கூட்டங்களை நீண்ட காலமாக கூட்டாதமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் நிர்வாகத்திற்கு எதிராக காணப்படுகின்றன. அவற்றினை நிர்வாகம் உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்தே தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.