தேர்தல் முறைகேடுகள் மூலமேனும் வடகிழக்கிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களை கைப்பற்ற தேசிய மக்கள் சக்தி முற்பட்டுள்ளது.
இந்நிலையில் வவுனியாவில் கடை ஒன்றில் இருந்து வாக்காளர் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் வியாபார நிலையம் ஒன்றில் இருந்து ஒரு தொகை வாக்காளர் அட்டைகள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவரின் சகோதரனும், தபால் ஊழியர் ஒருவரும்; கைது செய்யப்பட்டுள்ளனர்.
பலசரக்கு வியாபார நிலையம் ஒன்றில் ஒரு தொகை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குரிய வாக்காளர் அட்டைகள் இருப்பதாக தேர்தல் திணைக்களத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
அதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் அங்கிருந்து ஒரு தொகை வாக்காளர் அட்டைகளை மீட்டுள்ளனர். அதனை உடமையில் வைத்திருந்த குற்றத்திற்காக அவ் வட்டாரத்தில் ஆளும் கட்சியில் போட்டியிடும் வேட்பாளரின் சகோதரனான வியாபார நிலையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதுடன், அந்தப் பகுதிக்குரிய தபால் ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை அவர்கள் விளக்கமறியல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.