Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தென்னிலங்கையின் மூத்த அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் சிறீலங்கா சுதந்திர கட்சியும் எவ்வாறு அவர்களது மக்களாலேயே ஒதுக்கப்பட்டனவோ அதே நிலைமை 75 வருட வரலாற்றைக் கொண்ட தமிழரசுக் கட்சிக்கு வந்துவிடக்கூடும் போல் தெரிகிறது. தெற்கின் வரலாற்றை இவர்கள் ஒரு பாடமாக எப்போது எடுத்துக் கொள்வர்?
இலங்கையின் சட்ட மாஅதிபர் திணைக்களமும் நீதிமன்றமும் எடுத்த முடிவுகளின் பிரகாரம் அடுத்த மாதம் 6ம் திகதி உள்;ராட்சிச் சபைகளுக்கான தேர்தல் இடம்பெறவுள்ளது. சட்டமும் நீதியும் சேர்ந்து தேர்தல் திணைக்களத்தின் சிக்கலை ஒருவாறு தீர்த்து வைத்துள்ளன.
28 மாநகர சபைகள், 36 பட்டின சபைகள், 275 பிரதேச சபைகள் என 341 உள்;ராட்சிச் சபைகள் இங்குள்ளன. இவற்றுள் 339 சபைகளுக்கே தேர்தல் நடைபெறவுள்ளது. 17,296,330 பேர் இத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
2018ல் இடம்பெற்ற உள்;ராட்சிச் சபைத்தேர்தலில் ராஜபக்சக்களின் பொதுஜன பெரமுன நாடளாவிய ரீதியில் 40 சதவீத வாக்குகளை பெற்றது. இதனை மூலாதாரமாகக் கொண்டு 2019ல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோதபாய வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து 2022ல் இடம்பெற்றிருக்க வேண்டிய உள்;ராட்சிச் சபைகளுக்கான தேர்தல் நிதியின்மை காரணமாக கோதபாய ஆட்சியில் ஒரு வருடத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதன் அடுத்த கட்டமாக 2023 மார்ச் 9ம் திகதி தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்தது. நிதியின்மை காரணமாக தேர்தல் மீண்டும் பின்போடப்பட்டது. 2023 பெப்ரவரி 14ல் இடம்பெற வேண்டிய தேர்தல் ஏப்ரல் 25ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து இழுபறியால் தேர்தல் பின்போடப்பட்டு இப்போது மே மாதம் 6ம் திகதிக்கு நடத்தப்படுகிறது.
ஜனநாயக சோசலி~ குடியரசு எனப்பெயர் கொண்ட இலங்கையில் உள்;ர் நிர்வாகத்தை மேற்கொள்ளும் அடிமட்ட அரசியல் சபைகளுக்கான தேர்தல் கோதபாய, ரணில் விக்கிரமசிங்க ஆகிய இரண்டு ஜனாதிபதிகளின் காலத்தைத் தாண்டி, அநுர குமர ஜனாதிபதியாக இருக்கும் வேளையில் இடம்பெறுவது சரித்திரப் பாட நூலுக்கு தனியான ஓர் அத்தியாயம்.
இதிலுள்ள முக்கிய சிறப்பம்சமாகக் காணப்படுவது, ஒரு வருட காலத்தில் ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்;ராட்சிச் சபைத்தேர்தல் என்பவை ஒன்றன்பின் ஒன்றாக இடம்பெறுவது. கடந்த வருடம் செப்டம்பர் 21ல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ஜே.வி.பி.யின் மறுவடிவமான தேசிய மக்கள் சக்தி கடந்த நவம்பர் 14ம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று கிடைத்த வெற்றியின் சூடு இறங்குவதற்கு முன்னர் உள்;ராட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது.
நாடு பூராவும் பெருமளவான சபைகளை இலகுவாக வென்று விடலாமென்று நம்பிக்கை எதிர்பார்ப்பே இவர்களின் தேர்தல் பரப்புரைகளில் காணப்படுகிறது. தேசிய மக்கள் சக்தியின் எம்.பிக்களிலிருந்து அமைச்சர்கள், பிரதமர், ஜனாதிபதி ஆக அனைவருமே களத்தில் இறங்கியுள்ளனர். கடந்த வாரம் இப்பத்தியில் குறிப்பிட்டது போன்று பிரதமர், ஜனாதிபதி போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்கள் உள்;ராட்சித் தேர்தல் ஒன்றில் தங்கள் கட்சிக்காக வாக்குக் கேட்டு நாட்டின் மூலைமுடுக்கெங்கும் செல்வது இதுவே வரலாற்றில் முதன்முறையாகும்.
இதில் மிக முக்கியமாகக் காணப்படும் இன்னொரு அம்சம், தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கிலுள்ள உள்;ராட்சிச் சபைகளை எவ்வாறு தமிழ் கட்சிகளிடமிருந்து பறித்து விடலாமென்ற கூரிய இலக்குடன் தேசிய மக்கள் சக்தி வாக்கு வேட்டை நடத்துவதுதான். தமிழ் பிரதேசங்களிலுள்ள வாக்குகளை எண்ணி எடுக்காமல் கொள்ளையாக அள்ளி எடுக்க எல்லா வகை முறைகளையும் இவர்கள் பயன்படுத்துகின்றனர். இதற்காக பொய்களைக் கூறுவதிலும் இவர்கள் தயங்கவில்லை.
நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள வல்வெட்டித்துறையில் ஒரு கூட்டத்தில் ஜனாதிபதி அநுர குமர உரையாற்றினார். விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறப்பிடம் என்பதால் இக்கூட்டத்துக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதனால் இதனை பிரமாண்டமான கூட்டமாக மாற்றியமைத்தனர். இங்கு உரையாற்றும்போது, மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் காங்கேசன்துறையில் கட்டப்பட்டு, இன்னமும் பாவனைக்கு உட்படுத்தப்படாதிருக்கும் மாளிகை பற்றி அநுர குமர குறிப்பிட்டார்.
பல கோடி ரூபா செலவில் கட்டப்பட்ட இந்த மாளிகை தமக்கு வேண்டாமென்று கூறிய இவர், உங்களுக்கு வேண்டுமா என்று மக்களைப் பார்த்து ஒரு தடவைக்கு மேலாக கேட்டார். மக்கள் ஓம் என்று உரத்துத் தெரிவித்தனர். நல்லது என்று தமிழில் தெரிவித்த அநுர குமர, கமலஹாசனின் தசாவதாரம் படத்தை குறிப்பிட்டு மகிந்த ராஜபக்ச நாட்டின் பல பாகங்களிலும் மாளிகைகளைக் கட்டி அழகு பார்த்தார் என்றும் கூறி மக்களின் கைதட்டைப் பெற்றார்.
இது நடைபெற்று ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது. காங்கேசன்துறை மாளிகை அப்படியே கிடக்கிறது. அதனை பல்வேறு பொதுத்தேவைகளுக்கு வழங்குமாறு இந்து மாமன்றத்தின் சார்பில் கலாநிதி ஆறு திருமுருகன் பகிரங்க வேண்டுகோள் விடுத்ததற்கும் எந்தப் பதிலும் இல்லை.
ஆனால், இப்போது உள்;ராட்சித் தேர்தல் காலம் என்பதால் அரசாங்க அதிகாரிகள் குழுவொன்று மாளிகைக்குச் சென்று அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி பரிசீலிப்பதாக ஊடகங்களில் படம் காட்டப்படுகிறது. அடுத்த வருடம் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் மாகாண சபைத் தேர்தலின்போதும் இந்த மாளிகை தமிழரின் வாக்குகளுக்காக பேசு பொருளாக்கப்படுமெனவும் இது ஒரு தொடர்கதையாகவே இருக்குமெனவும் நம்பலாம்.
அடுத்தது, காணாமலாக்கப்பட்டோரின் அன்னையர் நீண்டகாலமாக நடத்தி வரும் பெரும் போராட்டம் சம்பந்தமானது. இவர்கள் விடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படுமென்று தேர்தல் காலங்களில் அநுர குமரவினாலும், அவரது கட்சியினராலும் உறுதியளிக்கப்பட்டது. இதுவரை எதுவுமே இடம்பெறவில்லை (இது எதிர்பார்க்கப்பட்டதுவே).
தமிழர் பகுதி தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் உரையாற்றும்போது, தமது சகோதரர் ஒருவரும் (ஜே.வி.பி. போராட்ட காலத்தில்) காணாமலாக்கப்பட்டவர் என்றும், அதனால் இதன் வலி தமக்குத் தெரியுமென்றும் கூறி தமிழ் மக்களை முக்கியமாக அன்னையரை அநுர குமர நம்ப வைத்தார். கடந்த வாரம் வவுனியாவில் தேர்தல் கூட்டமொன்றுக்கு இவர் செல்வதற்கு இவரது பாதுகாப்புக்காக மக்கள் ஆர்ப்பாட்டத்தை தடை செய்யுமாறு பொலிசார் நீதிமன்றத்தில் உத்தரவு கேட்டனர்.
காணாமலாக்கப்பட்டோர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி அமைதிக்கு பங்கம் விளைவிப்பர் என்று பொலிசார் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டம் மக்களின் ஜனநாயக உரிமை என்று கூறிய நீதிமன்றம் தடையுத்தரவை மறுத்துத் தீர்ப்பளித்தது. அநுர குமர நாட்டின் பாதுகாப்பு அமைச்சரும்கூட. இவரால் இவ்வகையான ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டாமென பொலிசாருக்கு உத்தரவிட முடியும். ஆனால், நீதிமன்றம் அதனை எதிர்பார்க்காது சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. ஆட்சிக் கதிரையில் இருப்பவர்களுக்கு பேச்சு மட்டும் பல்லக்கு.
தேர்தல் வேளையில் இவரது அமைச்சர்கள் தமிழர் பகுதிக்கு விஜயம் செய்து என்ன சொல்கிறார்கள்? மண்டைதீவு கிரிக்கட் திடல் அமைக்க நிலம் பார்க்கிறார் ஒருவர். கட்டி முடிக்கப்படாது ஆண்டுக் கணக்கில் அரைகுறையாகவிருக்கும் யாழ்ப்பாண மாநகரசபை கட்டிடத்தை அதிகாரிகள் சகிதம் பார்வையிடுகிறார் இன்னொருவர். ஆனையிறவு உப்பில் நீங்கள் பார்ப்பது பெயரா, ருசியா (சுவை) என்று கேட்கிறார் மற்றொருவர். பொதுமக்கள் குடியேற்றம் பற்றி அரசாங்க செயலகத்தில் கூட்டம் நடத்துகிறார் அடுத்தவர் ஒருவர். தமிழரின் வாக்குகளை சுருட்டுவதற்கு தேர்தலை இவர்கள் பயன்படுத்தும் விதம் இப்படி உள்ளது.
இவ்வாறு அமைச்சர்கள் தமிழர் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றுவதற்கு வாய்ப்பாக இருப்பது தமிழ்க் கட்சிகள் தங்களுக்குள் பிளவுபட்டு பிரிந்து நின்று அடிபடுவதுதான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் இருப்பை தாங்கள் எவ்வாறு இழந்தோம் என்பதை இவர்கள் சிந்திப்பதில்லைப் போலும். நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும், ஒரே குரலில் உரிமைகளைக் கோர வேண்டுமென்று இவர்கள் கேட்பதும்கூட தேர்தலுக்கான மாயாஜாலம்தான்.
கடந்த பொதுத்தேர்தலில் மோசமாக அடி வாங்கியது தமிழரசுக் கட்சி. சுமந்திரனும், சிறீதரனுமே இதற்கான காரணகர்த்தாக்கள். இருவரையும் ஒரு மேடையில் ஏற்ற கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் எடுத்த முயற்சி இதுவரை பயனளிக்கவில்லை.
நல்லாட்சிக் காலத்தில் தமிழரசுக் கட்சியின் பூரண நல்லாசியுடன் உருவாக்கப்பட்ட ஏக்கியராஜ்ய அரசமைப்பை பரிசீலிக்கப் போவதாக அநுர குமர சொல்கிறார். அதற்கு ஆதரவாகவே தேர்தல் காலத்தில் சுமந்திரனும் கூறியிருந்தார். ஆனால், அதனை தாங்கள் ஒருபோதும் ஏற்கப்போவதில்லையென சி.வி.கே.சிவஞானம் இப்போது சொல்கிறார். இதனை சுமந்திரன் அல்லவா சொல்ல வேண்டும்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் புதிதாக உருவாகிய தமிழ் மக்கள் பேரவைக்கு ஆதரவு அதிகரித்து வருவது தெரிகிறது. யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் ஒன்றியம் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளது. தேர்தலின் பின்னர் சபைகளை அமைக்க தேவைப்படுமாயின் பேரவையுடன் இணைய தயார் என்று ரெலோவின் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சியின் முன்னாள் எம்.பி.சரவணபவானும் கஜேந்திரகுமாரின் பேரவைக்கு ஆதரவு வெளியிட்டுள்ளார். இப்போது உள்ள நிலைமையை பார்க்கையில் அநுர குமர அணியினரை கையாளக்கூடியவர்களாக தமிழ் மக்கள் பேரவையினர் காணப்படுகின்றனர்.
தென்னிலங்கையின் மூத்த அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் சிறீலங்கா சுதந்திர கட்சியும் எவ்வாறு அவர்களது மக்களாலேயே ஒதுக்கப்பட்டனவோ அதே நிலைமை 75 வருட வரலாற்றைக் கொண்ட தமிழரசுக் கட்சிக்கு வந்துவிடக்கூடும் போல் தெரிகிறது. தெற்கின் வரலாற்றை இவர்கள் ஒரு பாடமாக எப்போது எடுத்துக் கொள்வர்?