கடவுளின் குமாரனாகக் கருதப்படும் இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் வகையில், உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களைப் போலவே, நமது நாட்டிலுள்ள கிறிஸ்தவர்களும் ஈஸ்டர் தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இயேசு கிறிஸ்து மனித இதயத்தில் உள்ள இருளை அகற்றி, புதிய நம்பிக்கையை வழங்கி, மனித வாழ்க்கையை மாற்றும் திறனை வெளிப்படுத்தியது இதன் சிறப்பம்சமாகக் கருதலாம் என ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு அவர் வௌியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், 2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தன்று நமது நாட்டில் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சில ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட அந்த மனிதாபிமானமற்ற தற்கொலைத் தாக்குதலால் இன்றும் நமது நாட்டின் கத்தோலிக்க மக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, அதைப் பயன்படுத்தி அரசியல் அதிகாரத்தைப் பெற்ற சில அரசியல் கட்சிகளின் கீழும், தற்போதைய அரசாங்கத்தின் கீழும், இந்தத் தாக்குதலின் சூத்திரதாரிகளுக்கு உரிய தண்டனை வழங்க முடியாததால், 6 ஆண்டுகள் கடந்தும், இந்தத் தாக்குதலில் உயிரிழந்த, கைகால்களை இழந்த, உறவினர்களையும் நண்பர்களையும் இழந்த மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பது தெரிகிறது.
தேர்தல் காலத்தில் பல்வேறு தரப்பினரும் இவர்கள் இழந்த நீதியை வழங்குவதாக அரசியல் மேடைகளில் சத்தமிட்டாலும், அதிகாரத்தைப் பெற்ற பிறகு எந்த ஆட்சியாளரும் இவர்களுக்குரிய நீதியை வழங்க விரும்பவில்லை என்பது இன்றும் தெளிவான உண்மையாகும்.
எனவே, வீண் பேச்சுக்களையும், பொய் வாக்குறுதிகளையும் தவிர்த்து, இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நீதி கிடைக்க அனைவரும் செயல்பட வேண்டும்.
குறுகிய அரசியல் நோக்கங்களையும், பிற்போக்குத்தனமான போக்குகளையும் கடந்து, அனைவரும் ஒன்றிணைந்து நாடாக நல்ல எதிர்காலப் பயணத்திற்காக அணிதிரள வேண்டும் என இறுதியாக அனைவரிடமும் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன் என எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.