ஒரு தாய் பெரிய அரச இயந்திரத்திற்கு எதிராக படைத் தளத்திற்கு எதிராக துணிந்து தன்னந்தனியாக நிராயுதபாணியாக நின்று தனது மன வலிமையை மட்டும் வெளிப்படுத்தி மக்களிற்காக இந்த தியாகத்தைச் செய்திருக்கின்றார் என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அன்னை பூபதியின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம் சனிக்கிழமை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
அதன் போது, அன்னை பூபதியின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்திய பின்னர் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
37 ஆண்டுகளிற்கு முன்னர் பலவிதமான கோரிக்கைகளை முன் வைத்து அந்த நாட்களில் தமிழ் மக்களிற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அட்டூழியங்களிற்கு எதிராக தமிழ் மக்களிற்கான ஓர் நிரந்தர அரசியல் தீர்வினைப் பெற வேண்டும் என்பதற்காகவும் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த அன்னை பூபதியின் நினைவுநாள் இன்றாகும்.
எத்தனை ஆண்டுகளானாலும் மக்களுக்காக உயிர் நீத்த இந்த அம்மாவிற்காக நினைவுகூறுவோம். இது எமது மனங்களில் அழியாத நினைவாக என்றும் இருக்கும்.
தமிழ் மக்களின் சரித்திரங்கள் எழுதும்போதும் இப்படியான உயிர்த் தியாகங்கள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.
ஒரு தாய் பெரிய அரச இயந்திரத்திற்கு எதிராக படைத் தளத்திற்கு எதிராக துணிந்து தன்னந்தனியாக நிராயுதபாணியாக நின்று தனது மன வலிமையை மட்டும் வெளிப்படுத்தி மக்களிற்காக இந்த தியாகத்தைச் செய்திருக்கின்றார்.
37 வருடங்களிற்குப் பிறகும் பலர் நாங்கள் அங்கலாய்க்கலாம் எங்களிற்கான அரசியல்த் தீர்வு கிடைக்கவில்லையென்று. ஆனால் இப்படியான உரமேற்றுகின்ற பல சம்பவங்கள் கடந்துபோகாது. இவை எல்லாம் சிறப்பான பலனைத் தரும் என்று நம்புகின்றோம். தன்னிடம் இருந்த உயிரை தியாகமாக ஈந்த அன்னைக்கு எங்களது வீர வணக்கங்களைச் செலுத்துகின்றோம் என்றார்.