ஸ்வீடனில் உருவாகி வரும் பெரும் கோடீஸ்வரர்கள் – இந்த மாற்றத்திற்குக் காரணம் என்ன?

ஸ்வீடன், பணக்காரர்கள்

பட மூலாதாரம், Maddy Savage

  • எழுதியவர், மேடி சாவேஜ்
  • பதவி, பிபிசி செய்திகள், ஸ்டாக்ஹோம்

உலக அளவில் அதிக வரி வசூலிக்கும் நாடுகளில் ஸ்வீடனும் ஒன்று. அங்கு சமூகச் சமத்துவத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த விஷயங்களுக்காக உலகளாவிய நற்பெயரை ஸ்வீடன் கொண்டுள்ள அதே சமயம், தற்போது, பெரும் பணக்காரர்களுக்கான ஐரோப்பாவின் ஈர்ப்பிடமாகவும் மாறியுள்ளது.

ஸ்வீடனின் லிடிங்கோ தீவில், பாறைகள் மீது நேர்த்தியாக கட்டப்பட்டச் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற மர வீடுகள் காணப்படுகின்றன. தரை, ஜன்னல், மேற்கூரை என வீடு முழுவதுமாக வெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்பட்ட வெள்ளை ‘மினிமலிஸ்ட்’ வீடுகளும் உள்ளன. இது ஸ்வீடனின் பணக்கார வாழ்விடங்களில் ஒன்றாகும். தலைநகர் ஸ்டாக்ஹோமின் மையத்தில் இருந்து அரை மணி நேரத்திற்கும் குறைவான பயணத்தில், இங்கு வந்துவிட முடியும்.

பல்வேறு வணிகங்களைக் கையாளும் தொழிலதிபர் கொன்ராட் பெர்க்ஸ்ட்ரோம், ஒயின் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தனது பாதாள அறையில் விளக்கு ஸ்விட்சை அழுத்தி, தான் அங்கு சேகரித்து வைத்திருக்கும் 3,000 ஒயின் பாட்டில்களைக் காட்டினார்.

“பிரெஞ்சு போர்தோ தான் எனக்கு பிடித்தமான ஒயின் ரகம்,” என்று கூறி கண்களில் ஒளி மின்ன புன்னகைத்தார்.

அவரது இருப்பிடத்தில், நீச்சல் குளம், கலை மானின் பதனிட்ட தோலில் வடிவமைக்கப்பட்ட தரைவிரிப்புடன் கூடிய உடற்பயிற்சிக் கூடம், இரவு பார்டிக்கான இடம், தொழில் பட்டறை என சர்வ வசதிகளும் உள்ளன.

“இசையை நேசிக்கும் பலர் என் நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ளனர், எனவே எங்களின் சந்திப்பில் கண்டிப்பாக இசையும், இசைக் கருவிகள் இருக்கும்,” என்று பெர்க்ஸ்ட்ரோம் உற்சாகத்துடன் விளக்குகிறார். அவர் ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர் உள்ளிட்ட பொருள்கள் சார்ந்த நிறுவனத்தில் இணை நிறுவனராக செயல்படுகிறார். லிடிங்கோ தீவில் அமைந்திருக்கும் இந்த வீட்டை தவிர்த்து ஸ்வீடன் மற்றும் ஸ்பெயினில் இவருக்கு சொந்தமாக நான்கு வீடுகள் உள்ளன.

ஸ்வீடன், பணக்காரர்கள்

பட மூலாதாரம், Maddy Savage

படக்குறிப்பு, ஸ்வீடனின் லிடிங்கோ தீவில், பாறைகள் மீது நேர்த்தியாக கட்டப்பட்ட பணக்காரர்களின் வீடுகள்

குரோனர் கோடீஸ்வரர்களும், டாலர் கோடீஸ்வரர்களும்

ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் இந்த வசதியான வாழ்க்கை முறையில் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், இதில் ஆச்சரியப்படுத்தும் விஷயம் என்னவென்றால், இடதுசாரி அரசியலுக்குப் பேர்போன ஸ்வீடனில் பெர்க்ஸ்ட்ரோமைப் போல, அல்லது அவரை விட அதிகமான எத்தனை பேர் பணக்காரர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான்.

ஸ்வீடனில் தற்போது ஒரு வலதுசாரி கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. என்றாலும், கடந்த நூற்றாண்டில் பெரும்பான்மையாக சமூக ஜனநாயகக் கட்சி தலைமையிலான கட்சிகளே அங்கு ஆட்சியில் இருந்தன. வரிகள் வசூலித்து, பொருளாதாரத்தைச் சமமான முறையில் உயர்த்தப்படும் என்ற வாக்குறுதிகளுக்காக ஒரு வலுவான அரசை மக்கள் தேர்வு செய்து வருகின்றனர். ஆனால் ஸ்வீடனில் கடந்த முப்பது வருடங்களாக பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

முன்னாள் ஸ்வீடிஷ் வணிக இதழான ‘Veckans Affärer’, 1996-ஆம் ஆண்டில், வெளியிட்ட பணக்காரப் பட்டியலின்படி, நூறு கோடி குரோனர் அல்லது அதற்கு மேற்பட்ட நிகர மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்ட 28 பேர் மட்டுமே இருந்தனர். (இது இன்றைய மதிப்பில் சுமார் 760 கோடி இந்திய ரூபாய், 91 மில்லியன் அமெரிக்க டாலர்). அவர்களில் பெரும்பாலானோர் பரம்பரை பரம்பரையாக பணக்கார குடும்பங்களில் இருந்து வந்தவர்கள்.

அதன் பின்னர், 2021-ஆம் ஆண்டில், 542 ‘குரோனர் பில்லியனர்கள்’ இருந்தனர், தினசரி செய்தித்தாளான ‘Aftonbladet’-இன் ஆய்வின்படி, ஸ்வீடனின் பெரும் பணக்காரர்கள், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 70%-க்கு சமமான சொத்து மதிப்பை வைத்திருந்தனர்.

வெறும் ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட நாடான ஸ்வீடன், உலகின் அதிக தனிநபர் வருமானம் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். இங்கு பல ‘டாலர் பில்லியனர்கள்’ வசிக்கின்றனர். ஃபோர்ப்ஸ் வெளியிட்ட 2024 பணக்கார பட்டியலில் ஒரு பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 8,355 கோடி ரூபாய்) அல்லது அதற்கு மேற்பட்ட சொத்து மதிப்புள்ள 43 ஸ்வீடன் நாட்டு தனிநபர்களை பட்டியலிட்டுள்ளது.

இந்த கணக்கீட்டின் படி, ஸ்வீடனில் ஒவ்வொரு 10 லட்சம் மக்களுக்கும் நான்கு பேர் பெரும் பணக்காரராக உள்ளனர். அமெரிக்காவில் ஒவ்வொரு 10 லட்சம் பேருக்கும் இரண்டு பேர் பெரும் பணக்காரர்களாக உள்ளனர். (அமெரிக்கா 813 பில்லியனர்களைக் கொண்டுள்ளது – அனைத்து நாடுகளை விடவும் இது அதிகம் – ஆனால் இங்கு 342 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.)

ஸ்வீடன், பணக்காரர்கள்

பட மூலாதாரம், Miriam Preis

படக்குறிப்பு, ஆண்ட்ரியாஸ் செர்வெங்கா

தொழில்நுட்ப நிறுவங்களின் வளர்ச்சி

ஆப்டான்ப்ளேடெட் (Aftonbladet) பத்திரிகையின் நிருபரும் ‘கிரீடி ஸ்வீடன்’ என்ற நூலின் ஆசிரியருமான ஆண்ட்ரியாஸ் செர்வெங்கா, “இந்தப் பெரும் பணக்காரர்களின் அசுர வளர்ச்சி மறைமுகமான வழியில் வந்துள்ளது. அவர்கள் சொத்து சேர்த்த விதத்தை உண்மையில் யாரும் கவனிக்கவில்லை,” என்கிறார். இவரது நூல், ஸ்வீடனின் பெரும் பணக்காரர்களின் வளர்ச்சியை குறித்தது.

“ஸ்டாக்ஹோமில், செல்வந்தர்கள் பெருகி இருப்பதையும், அதே சமயம் அவர்களுக்கும் மற்ற பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டையும் கண்கூடாகப் பார்க்கலாம்,” என்கிறார் அவர்.

பெரும் பணக்காரர்களின் திடீர் எழுச்சிக்குக் காரணம் ஸ்வீடனின் வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தான். ஐரோப்பாவின் ‘சிலிக்கான் வேலி’ (Silicon Valley) என்று புகழப்படும் ஸ்வீடனில், கடந்த இருபது ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட யூனிகார்ன் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உருவாகிவிட்டன. இவற்றின் நிகர மதிப்பு 100 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகம்.

ஸ்கைப் (Skype), ஸ்பாட்டிஃபை (Spotify), கேமிங் நிறுவனங்களான கிங் (King) மற்றும் மொஜாங் (Mojang) ஆகிய நிறுவனங்கள் இங்கு நிறுவப்பட்டவை. கொரோனா காலகட்டத்தில் சுமார் 200 கோடி அமெரிக்க டாலர்களுக்கு விசா வாங்கிய நிதி தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனமான ‘டிங்க்’, சுகாதார நிறுவனம் ‘க்ரை’, மற்றும் இ-ஸ்கூட்டர் நிறுவனமான ‘Voi’ ஆகியவை ஸ்வீடனில் உருவானவை.

ஸ்வீடனின் ‘எபிசென்டர்’ என்ற கோ-வர்க்கிங்க் அலுவலகத்தில் தொழிலதிபர் ஓலா அஹ்ல்வர்சன் 1990 களில் இருந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறார்.

“ஸ்வீடனில் வீட்டுக் கணினிகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், மற்ற நாடுகளை விட மிக வேகமாக எங்களை இணையம் இணைக்கிறது,” என்கிறார் அஹ்ல்வர்சன்.

பல ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்களின் இணை நிறுவனராகச் செயல்படும் அவர் ஸ்வீடனில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்குள் இருக்கும் வலுவான ‘ஒத்துழைப்பு கலாச்சாரத்தைச்’ சுட்டிக்காட்டுகிறார். இங்கிருக்கும் திறமையான தொழில் முனைவோர்கள் பெரும்பாலும் அடுத்த தலைமுறை தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் முன்மாதிரியாக மாறுகிறார்கள் என்கிறார்.

ஸ்வீடன், பணக்காரர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்வீடனின் ஒரு தெரு

குறைந்த வட்டி விகிதம், அதிக வரிச்சலுகை

அதிகப்படியான நிறுவனங்கள் ஸ்வீடனில் கால் பதிக்கக் காரணம் அந்நாட்டின் பரப்பளவு. ஒரு பிரபலமான சோதனைச் சந்தையாக ஸ்வீடன் மாறிவிட்டது.

“நிறுவனங்களின் உற்பத்தி ஒரு பெரிய சந்தையில் எப்படி செயல்படும் என்பதைச் சோதிக்கக், குறைந்த செலவில், உங்கள் பிராண்டிற்கு அல்லது உங்கள் பங்கு விலைக்கு அதிக ஆபத்து இல்லாமல் இங்கே முயற்சி செய்யலாம்,” என்கிறார் அஹ்ல்வர்சன்.

ஆனால் செர்வெங்கா, அதிக கவனம் செலுத்த வேண்டிய மற்றொரு விஷயம் உள்ளது என்கிறார். “நாட்டின் பணவியல் கொள்கைகள் ஸ்வீடனை பெரும் பணக்காரர்களுக்கான சொர்க்கமாக மாற்ற உதவியது,” என்று கூறுகிறார்.

ஸ்வீடன் 2010-களின் தொடக்கத்தில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகக்குறைந்த வட்டி விகிதங்களைக் கொண்டிருந்தது. இது கடன் பெறுவதை மலிவாக ஆக்கியது. எனவே மக்கள் பணத்தை மிச்சப் படுத்தாமல் சொத்துக்களில் முதலீடு செய்யத் தொடங்கினர். மற்றொரு புறம், தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்கள் போன்ற அதிக ஆபத்துள்ள முதலீடுகளில் மக்களின் கவனம் திரும்பியது. இதனால், நிறுவனங்களின் மதிப்பு அதிகரித்தது.

“பல ஆண்டுகளாகச், சொத்து மதிப்பில் அதிகமான பணவீக்க நிலை இருந்தததால், அது பெரும் பணக்காரர்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது,” என்கிறார் செர்வெங்கா.

“ஸ்வீடனில் அதிக வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் தனிப்பட்ட வருமானத்தில் 50%-க்கு மேல் வரி செலுத்துகின்றனர். இது ஐரோப்பாவின் மிக உயர்ந்த வரி விகித கொள்கைகளில் ஒன்று. இருப்பினும் அடுத்தடுத்த வலதுசாரி மற்றும் இடதுசாரி அரசாங்கங்கள் பணக்காரர்களுக்கு சாதகமாக சில வரிச்சலுகைகளை கொடுத்துள்ளன,” என்று அவர் விளக்குகிறார்.

ஸ்வீடன் அரசு, 2000-களில் செல்வம் மற்றும் பரம்பரை வரிகளை அகற்றியது, மேலும் பங்குகள் மற்றும் நிறுவன பங்குதாரர்களுக்கு செலுத்தும் பணத்தின் மீதான வரி விகிதங்கள் சம்பளத்தின் மீதான வரிகளை விட மிகக் குறைவு. கார்ப்பரேட் வரி விகிதம் 1990-களில் சுமார் 30% லிருந்து 20% ஆக குறைக்கப்பட்டது.

“இன்றைய சூழலின் படி, நீங்கள் ஒரு கோடீஸ்வரராக இருந்தால், ஸ்வீடனை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை. உண்மையில், சில கோடீஸ்வரர்கள் தான் இங்கு ஆர்வமுடன் குடியேறுகிறார்கள்,” என்கிறார் செர்வெங்கா.

லிடிங்கோ தீவில் வசிக்கும் கொன்ராட் பெர்க்ஸ்ட்ரோம், “ஸ்வீடனில் நீங்கள் நிறுவனங்களை உருவாக்கினால், மிகவும் சாதகமான வரி விதிப்பு சூழல் உள்ளது,” என்று ஒப்புக்கொள்கிறார். இருப்பினும், அவரது தொழில்கள் – மற்றும் வீடுகள் – மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதால், அவரது செல்வம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அவர் கூறுகிறார்.

“எங்கள் வீட்டில் வயது முதிர்ந்த பெண் பணியாளர் ஒருவர் இருக்கிறார். தோட்டக்காரர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். அவர்களுக்கான வேலைவாய்ப்பை நான் உருவாக்கி உள்ளேன். நாங்கள் இந்தச் சமுதாயத்தை எவ்வாறு உருவாக்குகிறோம் என்பதை மறந்து விடக்கூடாது. ஸ்வீடனின் பணக்கார தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளர்கள் சமூகம் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஸ்டார்ட்-அப்களில் தங்கள் பணத்தை மறு முதலீடு செய்கிறது,” என பெர்க்ஸ்ட்ரோம் சுட்டிக்காட்டுகிறார்.

ஸ்வீடன், பணக்காரர்கள்

பட மூலாதாரம், Maddy Savage

படக்குறிப்பு, நிக்லாஸ் அடல்பெர்த்

‘அனைவருக்குமான வளர்ச்சி இல்லை’

கடந்த 2023-ஆம் அண்டு, ஸ்வீடனின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான மூலதன நிதியில், 74% சுற்றுச்சூழலை மேம்படுத்த, சமூக நலன்களின் கவனம் செலுத்தும் நிறுவனங்களுக்குச் சென்றது. ‘டீல்ரூம்’ அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, இது ஐரோப்பிய ஒன்றியத்தின் மிக உயர்ந்த சதவீதமாகும். மேலும் ஐரோப்பியநாடுகளில் சராசரியான 35%-ஐ விடவும் அதிகமாக உள்ளது.

யூனிகார்ன் பேமெண்ட்ஸ் தளமான ‘கிளார்னா’-வின் இணை நிறுவனர் நிக்லாஸ் அடல்பெர்த், நாட்டின் மிக உயர்ந்த முதலீட்டாளர் ஆவார். 2017-ஆம் ஆண்டில், அவர் தனது சொத்தில் 130 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்தி நோர்ஸ்கென் அறக்கட்டளையைத் துவங்கினார்.

“நான் பணக்காரன் என்றாலும், ஒரு படகு அல்லது ஒரு தனியார் ஜெட் போன்ற எதையும் வைத்திருப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை,” என்கிறார் அடல்பெர்த்.

ஆனால் ஒரு தரப்பினர் ஸ்வீடனில் பெரும் பணக்காரர்களின் சொத்து விவரங்கள் பற்றிய நுணுக்கமான தரவுகள் இல்லை என்று வாதிடுகின்றனர்.

ஓரிப்ரோ பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆராய்ச்சியின் படி, ஸ்வீடனில் ஊடகங்கள் கோடிஸ்வரர்களின் பிம்பம் பெரும்பாலும் நேர்மறையாக காட்டப்படுகிறது. மேலும் நாட்டின் மாறிவரும் பொருளாதார கொள்கைகளின் பின்னணியில் அவர்களின் சொத்து மதிப்பு பற்றி அரிதாகவே விளக்கப்பட்டுள்ளது.

“பெரும் பணக்காரர்களின் கடின உழைப்பு, தொழில் முனைவோர் மனப்பான்மை போன்றவற்றை பிரதிபலிக்கும் நவீன தாராளமய (neoliberal) சகாப்தம் காட்டப்படும் வரை அதன் பின்னணியில் உள்ள சமத்துவமின்மை கேள்விக்கு உட்படுத்தப்படவில்லை. அமெரிக்கா போன்ற பல மேற்கத்திய நாடுகளில் இருப்பதைப் போல, பெரும் பணக்காரர்களுக்கு வரிவிதிப்பது பற்றிய விவாதங்கள் ஸ்வீடனில் இன்னும் ஆரம்பிக்கவில்லை,” என்று செர்வெங்கா மேலும் கூறுகிறார்.

“இது மிகவும் முரண்பாடானது. வரலாற்றுப் பின்னணியில் ஒரு சோஷலிச நாடாக கருதப்படுவதால், ஸ்வீடன் பற்றிய இந்த மனப்பான்மையே அனைவருக்கும் மேலிடும். ‘வெற்றியாளர் அனைத்தையும் எடுத்துக் கொள்ளலாம்’ என்ற மனநிலை அதிகமாகிவிட்டது. சரியாகக் காய் நகர்த்தினால் நாமும் கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என்ற மனப்பான்மை ஸ்வீடன் மக்களிடையே வந்துவிட்டது. சமத்துவமான பொருளாதாரத்தை மக்கள் தள்ளி வைத்துவிட்டனர்,” என்கிறார் அவர்.

ஸ்வீடனின் பணக்காரர்களின் பட்டியலின்படி, நாட்டின் செல்வம் பெரும்பாலும் வெள்ளையர்களின் கைகளில் குவிந்துள்ளது. நாட்டின் பெரும் புலம்பெயர்ந்த மக்கள் தொகை மற்றும் பாலினச் சமத்துவத்தை ஆதரிக்கும் கொள்கைகள் இருந்தபோதிலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

“ஆம், இங்குதான் மக்கள் புதிய பணத்தை உருவாக்க முடியும், புதிய செல்வத்தை உருவாக்க முடியும், ஆனால் இந்தச் செயல்பாடுகள் இன்னும் ரகசியமாகவே உள்ளன. அவர்களின் யோசனைகளுக்கு யார் நிதி அளிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அதில் வெளிப்படைத்தன்மை இல்லை. பாகுபாடு உள்ளது,” என்கிறார் நைஜீரிய-ஸ்வீடிஷ் நாவலாசிரியரும் தொழிலதிபருமான லோலா அகின்மேட்.

“ஸ்வீடன் ஒரு அற்புதமான நாடு. பல துறைகளில் முன்னணியில் உள்ளது. ஆனால் இன்னும் நிறைய பேர் அந்த வளர்ச்சியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்,” என்கிறார் அகின்மேட்.