விராட் கோலியின் அதிரடியால் பிளேஆப் கனவை தக்கவைத்த ஆர்சிபி

விராட் கோலி

பட மூலாதாரம், SPORTZPICS

அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் கூடிய 92 ரன்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பைத் தகர்த்த ரன் அவுட் என பேட்டிங்கிலும், ஃபீல்டிங்கிலும் விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் பிளே ஆஃப் வாய்ப்பை இன்னொரு போட்டி வரை நீட்டித்துக் கொண்டிருக்கிறது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி.

அதே நேரத்தில் ஐபிஎல் டி20 2024 சீசனில் இருந்து 2-ஆவது அணியாக பஞ்சாப் கிங்ஸ் வெளியேறியது. ஏற்கெனவே மும்பை இந்தியன்ஸ் அணி முதல் அணியாக அதிகாரபூர்வமாக வெளியேறிவிட்டது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இன்னும் 2 போட்டிகள் இருந்தாலும் அதில் இரண்டிலும் வெற்றி பெற்றாலும் 12 புள்ளிகளுக்கு மேல் பெற இயலாது.

தரம்சாலாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 58-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் குவித்தது. 242 ரன்கள் எனும் இமாலய இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 17 ஓவர்களில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இன்று நடக்கும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்தது. ஆமதாபாத்தில் நடக்கும் இந்த ஆட்டத்தில் குஜராத் அணி தோற்றால் போட்டித் தொடரிலிருந்து வெளியேறும். ஒருவேளை சிஎஸ்கே அணி தோற்றால், குஜராத் டைட்டன்ஸ் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை அடுத்தபோட்டி வரைக்கும் தக்கவைத்துக்கொள்ளும். சிஎஸ்கே அணியின் நிலை சிக்கலாகி கடைசி 2 போட்டிகளிலும் கட்டாயமாக வெல்ல வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்படும்.

ஆர்சிபி பிளேஆப் செல்ல என்ன செய்ய வேண்டும்?

ஐபிஎல் விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி 7-ஆவது இடத்தில் நீடிக்கிறது. 12 போட்டிகளில் 5 வெற்றி, 7 தோல்வி என 10 புள்ளிகளுடன் உள்ளது. நிகர ரன்ரேட்டிலும் லக்னெள, டெல்லி கேபிடல்ஸ் அணியைவிட சிறப்பாக 0.217 என்ற ரீதயில் இருப்பதால், அடுத்த ஒரு ஆட்டத்தில் ஆர்சிபி வென்றால், 5-ஆவது இடத்தைப் பிடிக்கவும் வாய்ப்புள்ளது.

டெல்லி அணி நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.316 ஆகவும், லக்னெள அணி மைனஸ் 0.769 ஆகவும் பின்னடைவுடன் இருக்கிறது. இரு அணிகளும் தங்களுக்கு இருக்கும் 2 ஆட்டங்களிலும் வென்றால்தான் 16 புள்ளிகளைப் பெற முடியும், 4-ஆவது இடத்துக்கும் போட்டியிட முடியும். இரு அணிகளும் தங்களுக்குரிய 2 ஆட்டங்களில் ஒன்றில் தோற்று, மற்றொன்றில் வென்றால், ஒருவேளே ஆர்சிபி அணி தனக்கிருக்கும் 2 ஆட்டங்களிலும் வென்றால், ஆர்சிபி 5ஆவது இடத்தைப் பிடித்துவிடும்.

ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றில் 4-ஆவது இடத்தைப் பிடிக்க வேண்டுமென்றால் சிஎஸ்கே அணி தனக்கிருக்கும் 3 ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெல்ல வேண்டும், மற்ற இரண்டில் தோற்கவேண்டும். அல்லது சிஎஸ்கே அணி தனக்கிருக்கும் கடைசி 3 லீக் ஆட்டங்களிலும் தோற்க வேண்டும்.

மேலும், லக்னெள, டெல்லி கேபிடல்ஸ் அணி தங்களுக்கு இருக்கும் கடைசி இரு ஆட்டங்களிலும் ஒன்றில் வெல்ல வேண்டும், மற்றொன்றில் தோற்க வேண்டும். இவை நடந்தால், ஆர்சிபியின் ப்ளே ஆஃப் கனவு சாத்தியமாகும்.

ஐபிஎல் விராட் கோலி

பட மூலாதாரம், SPORTZPICS

போட்டியை ஆக்கிரமித்த விராட் கோலி

பஞ்சாப் அணிக்கு எதிராக ஆர்சிபி அணி வெற்றி பெற்றதற்கு முக்கியக் காரணமாக அமைந்தவர் விராட் கோலிதான். பவர்ப்ளேயில் கூட 14 பந்துகளைச் சந்தித்த கோலி, அதன்பின் ‘பழைய’ கோலியாக பஞ்சாப் பந்துவீச்சை வெளுத்துவாங்கினார். 32 பந்துகளில் அரைசதம் அடித்து, 47 பந்துகளில் 92 ரன்கள் சேர்த்து விராட் கோலி ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 6 சிக்ஸர்கள், 7பவுண்டரிகள் என 195 ஸ்ட்ரைக் ரேட்டில் கோலி பேட் செய்தார். இந்த ஐபிஎல் சீசனில் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் கோலி ஆடியது இந்தப் போட்டிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பீல்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்ட கோலி, போட்டியை தன்வசமாக்கும் திறன் கொண்ட சஷாங் சிங்கை ரன்அவுட் மூலம் ஆட்டமிழக்கச் செய்தார். அருமையான ‘டைரெக்ட் ஹிட்’ த்ரோ செய்து ஆட்டத்தில் இந்தத் திருப்புமுனையை ஏற்படுத்தினார் கோலி. ஆட்டநாயகன் விருதும் அவருக்கே கிடைத்தது.

ஆர்சிபி அணியின் ஸ்கோர் உயர்வுக்கு நடுவரிசையில் களமிறங்கி விளாசிய ரஜத் பட்டிதாரின் 23 பந்துகளில் 55 ரன்கள், கேமரூன் கிரீனின் 27 பந்துகளில் 46 ஆகிய பங்களிப்பும் முக்கியக் காரணமாக அமைந்தது. விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து பட்டிதார் 32 பந்துகளில் 76 ரன்களும், கேமரூன் கிரீன் 46 பந்துளில் 92 ரன்களும் சேர்த்து பஞ்சாப் கிங்ஸ் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக அமைந்தனர்.

அதேபோல பந்துவீச்சில் ஆர்சிபி சுழற்பந்துவீச்சாளர்கள் கரன் ஷர்மா, ஸ்வப்னில் சிங் இருவரும் நடுப்பகுதி ஓவர்களில் பஞ்சாப் பேட்டர்களுக்கு கடும் நெருக்கடியளித்து ரன்ரேட்டை உயரவிடாமல் இழுத்துப் பிடித்து, விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கரன் ஷர்மா, ஸ்வப்னில் இருவரும் சேர்ந்து 6 ஓவர்கள் வீசி 64 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 9-வது ஓவரிலிருந்து 12 ஓவர்வரை இருவரும் ஆதிக்கம் செய்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் அணியை திணறவிட்டனர்.

ஐபிஎல் விராட் கோலி

பட மூலாதாரம், SPORTZPICS

பிரமாண்ட வெற்றி பற்றி டூப்பிளசிஸ் கூறியது என்ன?

வெற்றிக்குப்பின் ஆர்சிபி கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில், “எங்களின் தவறுகள் குறித்து தொடர்ந்து ஆலோசித்து, வீரர்களிடம் பேசியதில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. அதில் பேட்டிங்கில் நல்ல ஆவேசம் காணப்படுகிறது, பவர்ப்ளேயில் விக்கெட் எடுக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. அது குறித்தும் வீரர்களிடம் பேசியுள்ளோம். எங்கள் அணியிலும் நன்றாகப் பந்துவீசி விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற வேட்கையுடன் வீரர்கள் இருந்தார்கள், அவர்களைக் கண்டுபிடித்தோம். அவர்களை ஃபார்முக்கு கொண்டுவரப் போராடினோம். இப்போது சில வீரர்கள் உண்மையில் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள், நாங்கள் விளையாட விரும்பும் ஆட்டத்தின் பாணியை நாங்கள் விளையாட விரும்புகிறோம். அதைச் செய்தால் நாங்கள் ஒரு நல்ல அணி என்பதை நிரூபிப்போம்,” எனத் தெரிவித்தார்.

ஐபிஎல் விராட் கோலி

பட மூலாதாரம், SPORTZPICS

திரும்பி வந்துவிட்டாரா ‘பழைய’ விராட் கோலி?

நடப்பு ஐபிஎல் டி20 சீசனில் விராட் கோலி அதிகமான ரன் குவித்த பேட்டர்களில் 12 போட்டிகளில் ஒருசதம், 5 அரைசதங்கள் உள்பட 634 ரன்கள் சேர்த்து ஆரஞ்சு தொப்பியைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறார்.

ஆர்சிபி அணியில் கேப்டன் பதவியை துறந்தபின் கடந்த இரு சீசன்களாக கோலி சிறப்பாக பேட் செய்து வருகிறார். இந்த ஆட்டத்திலும் பவர்ப்ளேயில் 14 பந்துகளைச் சந்தித்த கோலி, அதன் பின்புதான் அதிரடிக்கு மாறினார். வில் ஜேக்ஸ்(12), டூப்பிளசிஸ்(9) ஏமாற்றியபின், பட்டிதாருடன் சேர்ந்த பின் கோலியின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. மிட்விக்கெட், கவர்ஸ் திசையிலும் பவுண்டர்கள் பறந்தன, கால்களை அருமையாக நகர்த்தி, பிரமாதமான ஃபுட்வொர்க் செய்தும், கைமணிக்கட்டில் அருமையான ஷாட்களையும் ஆடி கோலி பேட் செய்தார். கோலியின் ஆட்டத்தை நேற்றுப் பார்க்கும்போது ‘வின்டேஜ்’ கோலியின் ஆட்டத்தைப் பார்த்த உணர்வு இருந்ததாக தொலைக்காட்சி விமர்சகர்கள் கூறினார்கள்.

அதிலும், சாம்கரன் வீசிய 16-வது ஓவரில் ஸ்வீப் ஷாட் அடிக்கும் வகையில் காலை மடக்கிக் கொண்டு கோலி அடித்த சிக்ஸர் பழைய கோலியை நினைவூட்டியதாக ரசிகர்கள் பலரும் அந்தக் காணொளியைப் பகிர்ந்து வருகின்றனர். அதேபோல அர்ஷ்தீப் வீசிய 18-வது ஓவரில் அவுட்சைட் ஆப்பில் லென்த்தில் வீசப்பட்ட பந்தை அப்பர்கட்டில் அடித்த சிக்ஸரும் ரசிகர்களால் சிலாகிக்கப்படுகிறது.

அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, 92 ரன்கள் சேர்த்து சதத்தை நோக்கி நகர்ந்தபோது, அர்ஷ்தீப் ஓவரில் ரூஸோவால் கேட்ச்பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். விராட் கோலி களத்துக்கு வந்தபோது ரன் ஏதும் சேர்க்காமல் இருந்த நேரத்தில், அடித்த ஷாட்டை கேட்ச் பிடிக்காமல் பஞ்சாப் வீரர்கள் தவறவிட்டனர், அதன்பின் கோலி 10 ரன்கள் சேர்த்திருந்தபோது அடித்த ஷாட்டில் கேட்ச் பிடிக்கத் தவறினர்.

ஐபிஎல் விராட் கோலி

பட மூலாதாரம், SPORTZPICS

பீல்டிங்கிலும் கோலி நேற்று படு உற்சாகமாக செயல்பட்டார். பஞ்சாப் அணிக்கு 39 பந்துகளில் 92 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது. சஷாங்க் சிங், சாம் கரன் என இரு ஆபத்தான பேட்டர்கள் களத்தில் இருந்தனர். 14வது ஓவரின் 4வது பந்தில் சாம்கரன் அடித்துவிட்டு ஒரு ரன் ஓடி 2வது ரன் ஓட சஷாங் சிங்கை அழைத்தார்.

அப்போது, டீப் மிட்விக்கெட்டில் பீல்டிங் செய்த கோலி, வேகமாக ஓடிவந்து பந்தை எடுத்து தாவிச் சென்று ஸ்டெம்ப்பைப் பார்த்து எறிந்து சஷாங்க் சிங்கை ரன் அவுட் செய்தது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கோலி டைவ் செய்து ஸ்டெம்ப்பை நோக்கி துல்லியமாக பந்தை எறிவார் என சஷாங்சிங் சிறிதுகூட எதிர்பார்க்கவில்லை. களத்தில் நன்றாக செட்டில்ஆகி 19 பந்துகளில் 39 ரன்களுடன் ஆடிய சஷாங்க் சிங் ஏமாற்றத்துடன் பெவிலியன் சென்றார்.

இந்த விக்கெட்தான் ஆட்டத்தின் திருப்புமுனையைாக அமைந்தது, அடுத்த 30 ரன்களுக்குள் பஞ்சாப் அணி மீதமிருந்த 5விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.

ஐபிஎல் ப்ரீத்தி ஜிந்தா

பட மூலாதாரம், SPORTZPICS

பஞ்சாப் அணி ஏமாற்றம்

கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை சேஸிங் செய்து மிரட்டிய பஞ்சாப் அணி நேற்று ஆடிய ஆட்டத்தைப் பார்த்தபோது ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பஞ்சாப் அணி பவர்ப்ளேயில் அதிரடியாகத் தொடங்கி 75 ரன்கள் சேர்த்தனர். ஆனால், அதன்பின் அவர்களால் பெரிய இலக்கை துரத்தும் வகையில் பேட்டர்கள் ஒத்துழைக்கவில்லை.

ரூஸோ 61 ரன்கள் சேர்த்ததுதான் அந்த அணியில் அதிகபட்சமாகும். சஷாங் சிங் (37), பேர்ஸ்டோ(27), சாம்கரன்(22) ஆகியோர் ஓரளவு பங்களிப்பு செய்தனர். 12 ஓவர்களில் 126 ரன்கள் வரை 4 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்த பஞ்சாப் அணி அடுத்த 6 ஓவர்களில் 55 ரன்களுக்கு மீதமிருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. 14வது ஓவரிலிருந்து 17-வது ஓவர் வரை ஒவ்வொரு ஓவருக்கும் விக்கெட்டை பஞ்சாப் அணி இழந்து தோல்வியை ஒப்புக்கொண்டது.