சுற்றுலா விசாவில் வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டாம்: வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை !

by admin

சுற்றுலா விசாவில் வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டாம்: வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை !

சுற்றுலா விசாவில் தொழில் வாய்ப்புக்காக ஒருபோதும் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாமென, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையிலிருந்து இளைஞர்களை ரஷ்ய இராணுவ சேவைக்கு அனுப்பும் முயற்சியில், ஆட்கடத்தல் கும்பல் ஒன்று செயற்பட்டு வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலா விசா மூலம் ரஷ்ய இராணுவ சேவையில் இணைந்து கொண்டு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியவர்களின் உறவினர்கள், அண்மையில் அமைச்சரை சந்தித்து அமைச்சரின் பணிப்புரைக்கமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடுகளை சமர்ப்பித்தனர்.

இதற்காக ரஷ்ய இராணுவத்தில் அதிக சம்பளத்தில் தொழில் தருவதாக கூறி ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. பாதுகாப்பு கடமைகளுக்காக இவர்கள், ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பல மாதங்களாக தங்களுக்கு உரிய சம்பளம் கூட வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி எந்தவொரு நபரும், இராணுவ சேவைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படமாட்டார்கள் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்காக செல்ல வேண்டாம்.

தொழில் நிமித்தம் சென்றால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

ஆட் கடத்தல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தின் கீழ், பணியகத்துக்கு அதிகாரம் இல்லை.மேலும் இத்தகைய முறைப்பாடுகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விசாரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்