மன்னார் – பூநகரியில் அதானிக்கு பச்சைக்கொடி!

by admin

மன்னார் பூநகரி பிரதேசத்தில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான  புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்தியாவின் அதானி குழுமத்துடன்  மேற்கொள்வதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதானி குழுமத்தினால் உற்பத்தி செய்யப்படும் மின்னினை கொள்வனவு செய்வதற்கும் 20 வருடங்களுக்கு மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கும் இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதானி குழுமத்தின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பிரிவு, 484 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் நிலையங்களை உருவாக்க 442 மில்லியன் டொலர் முதலீடு செய்ய கடந்த பெப்ரவரியில் ஒப்புதல் பெற்றிருந்தது.

மன்னார் நகரம் மற்றும் பூநகரி பகுதிகளில் காற்றாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதானி கிரீன் சமர்ப்பித்த திட்ட முன்மொழிவை மதிப்பீடு செய்ய அமைச்சரவை உப குழு ஒன்றை இலங்கை அரசாங்கம் நியமித்திருந்தது.

பொருளாதார சிக்கல்களுடன் போராடிவரும் இலங்கை, 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் போது கடுமையான மின் தடை மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை சந்தித்தது.அதன் எதிரொலியாக இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களின் விலைவாசி உயர்வைக் குறைக்க, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை நாடு துரிதப்படுத்தி வருகிறது.

எனினும் மன்னார் தீவில் அதானி நிறுவனத்தின் காற்றாலை திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்