புள்ளிப் பட்டியலையே புரட்டிய பிரமாண்ட வெற்றி; நிச்சயமற்ற நிலையில் பிளேஆப் இடங்கள்

கொல்கத்தா

பட மூலாதாரம், SPORTZPICS

  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

ஐபிஎல் தொடரில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்த ஆட்டங்கள் புள்ளிப் பட்டியலையே புரட்டிப் போட்டிருக்கின்றன. கடைசி இடத்தில் இருந்த ஆர்சிபி 7-ஆவது இடத்துக்குச் சென்றிருக்கிறது. 5-ஆவது இடத்திலிருந்த சிஎஸ்கே 3-ஆவது இடத்துக்குச் சென்றிருக்கிறது. முதலிடத்தில் நீடித்து வந்த ராஜஸ்தான் சரிந்துள்ளது, 2ஆவது இடத்திலிருந்த லக்னோ அணி டாப்-4 இடத்திலேயே இல்லை.

லக்னோவில் ஞாயிறன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 54-ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 98 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் சேர்த்தது. 236 ரன்கள் எனும் பிரமாண்ட இலக்கை விரட்டிய லக்னோ அணி 16.1 ஓவர்களில் 137 ரன்களில் சுருண்டு 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

தோனி

பட மூலாதாரம், Getty Images

முதலிடத்துக்கு வலுக்கும் மோதல்

இந்த வெற்றியால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 11 போட்டிகளில் 8 வெற்றி, 3 தோல்வி என 16 புள்ளிகள் பெற்று, நிகர ரன்ரேட்டில் 1.453 என வலுவாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ராஜஸ்தான் அணி 16 புள்ளிகள் பெற்றிருந்தாலும், நிகர ரன்ரேட்டில் சிஎஸ்கே அணியை விடக் குறைவாக 0.622 என்று இருப்பதால் 2-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அணிக்கு இன்னும் 4 ஆட்டங்கள் மீதம் உள்ளன. இதில் அனைத்தையும் வென்றால் தான் முதல் இரு இடங்களுக்குள் வர முடியும்.

கொல்கத்தா அணிக்கு இன்னும் 3 ஆட்டங்கள் மட்டுமே இருப்பதால் அதில் அனைத்திலும் வென்றாலும் 22 புள்ளிகள் மட்டுமே பெற முடியும். ராஜஸ்தான் அணி 4 ஆட்டங்களிலும் வென்றால், 24 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடிக்க முடியும். ஒரு ஆட்டத்தில் தோற்றாலும், நிகர ரன்ரேட்டில் கொல்கத்தா முதலிடத்துக்கு முன்னேற வாய்ப்புள்ளது. தற்போது கொல்கத்தா அணி வலுவான நிகர ரன்ரேட்டை பெற்றுள்ளதால், முதலிடத்தை பிடிக்க ராஜஸ்தானுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

கொல்கத்தா - லக்னோ

பட மூலாதாரம், Getty Images

4-ஆவது இடத்துக்கு கடும் போட்டி

லக்னோ அணி 2-ஆவது இடத்தில் இருந்த நிலையில் இந்தத் தோல்வியால் டாப்-4 இடத்திலிருந்து வெளியே அனுப்பப்பட்டுள்ளது.11 ஆட்டங்களில் 6 வெற்றி, 5 தோல்வி என 12 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது லக்னோ அணி. சிஎஸ்கே, சன்ரைசர்ஸ், லக்னோ அணிகள் தலா 12 புள்ளிகள் பெற்றிருந்தாலும், நிகர ரன்ரேட்டில் லக்னோ அணி மைனஸ் 0.371 என மோசமாக இருப்பதால் 5-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் 0.072 நிகர ரன்ரேட்டையும், சிஎஸ்கே 0.700 பெற்று வலுவாக இருக்கின்றன.

ப்ளே ஆஃப்பில் 4-ஆவது இடத்தைப் பிடிக்க லக்னோ, சன்ரைசர்ஸ், டெல்லி அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து வரும் ஆட்டங்களின் முடிவுகள் புள்ளிப்பட்டியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

பெங்களூரு

பட மூலாதாரம், Getty Images

கொல்கத்தா அணி வென்றது எப்படி?

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு பேட்டர்கள் அமைத்துக் கொடுத்த மிகப்பெரிய ஸ்கோர் தான் காரணம். பெரிய ஸ்கோர் இருந்ததால் தான், பந்துவீச்சாளர்களால் சுதந்திரமாக, அழுத்தமின்றி அதை டிஃபெண்ட் செய்ய முடிந்தது.

குறிப்பாக சுனில் நரைன் தொடக்க வீரராக களமிறங்கி 39 பந்துகளில் 81 ரன்கள் (7 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்) சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் வலுவான அடித்தளம், பெரிய ஸ்கோரை எட்ட கொல்கத்தா அணிக்கு உதவியது. பந்துவீச்சிலும் 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்திய சுனில் நரைனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

கொல்கத்தா அணி பவர்ப்ளேயில் சேர்த்த பெரிய ஸ்கோரை அடித்தளமாக வைத்துக் கொண்டு அடுத்தடுத்து வந்த பேட்டர்கள் கேமியோ ஆடி ரன்ரேட்டை உயர்த்தி, 200 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றனர். சுனில் நரைனைத் தவிர கொல்கத்தா அணியில் வேறு எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. 30 ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர். குறிப்பாக ராமன்தீப் சிங் 6 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உள்பட 25 ரன்கள் சேர்த்தது, பில்சால்ட்(32), ஸ்ரேயாஸ்(23), ரகுவன்ஷி(32) ஆகியோரின் ஆக்ரோஷமான கேமியோ ஆகியவை கொல்கத்தா ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணம்.

பந்துவீச்சில் ஹர்சித் ராணா, ஆந்த்ரே ரஸல், வருண் ஆகியோர் லக்னோ அணி சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.

கொல்கத்தா - லக்னோ

பட மூலாதாரம், Getty Images

லக்னோ தோல்விக்கு காரணம் என்ன?

லக்னோ அணிக்கு தொடக்கமும் சரியாக அமையவில்லை, அதன்பின் எந்த பார்ட்னர்ஷிப்பும் வலுவாக அமையவில்லை. கேப்டன் ராகுல்(25), ஸ்டாய்னிஸ்(36) ஆட்டமிழந்தபின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. 70 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை மட்டும் இழந்திருந்த லக்னோ அணி, அடுத்த 67 ரன்களுக்குள் மீதமிருந்த 9 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வியை ஒப்புக்கொண்டது.

ராகுல், ஸ்டாய்னிஸை தவிர்த்து மற்ற அனைத்து பேட்டர்களும் 10 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது தோல்விக்கான முக்கியக் காரணம். தீபக் ஹூடா முதல் கடைசி வரிசை பேட்டர் பிஸ்னோய் வரை அதிகபட்சமாக 12 பந்துகளைத் தான் சந்தித்துள்ளனர்.

200 ரன்களுக்கு மேல் செல்லும் பெரிய ஸ்கோரை சேஸிங் செய்யும்போது பவர்ப்ளே ஓவருக்குள் பெரிய அடித்தளம் அமைக்க வேண்டியிருக்கிறது. ஆனால், பவர்ப்ளே ஓவரில் லக்னோ அணி 55 ரன்களை மட்டுமே சேர்த்தது.

அதன்பின் தேவைப்படும் ரன்ரேட் லக்னோவுக்கு 13 ஆக இருந்தது பெரிய அழுத்தத்தைக் கொடுத்தது. கொல்கத்தா பந்துவீச்சாளர்களின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பவர்ப்ளே முடிந்தபின், லக்னோ பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது. குறிப்பாக கேப்டன் ராகுல், ஸ்டாய்னிஸ் ஆட்டமிழந்தபின் லக்னோ பேட்டர்கள் நம்பிக்கையிழந்து விட்டது போல் பேட் செய்தனர்.

குறிப்பாக நிகோலஸ் பூரன்(10), தீபக் ஹூடா(5), பதோனி(15), டர்னர்(16) குர்னல் பாண்டியா(5), யுத்விர் சிங்(5) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கொல்கத்தா - லக்னோ

பட மூலாதாரம், Getty Images

பலவீனமாகக் காணப்பட்ட பந்துவீச்சு

பந்துவீச்சில் படுமோசமாகவும் லக்னோ வீரர்கள் செயல்பட்டனர். ரவி பிஸ்னோய் தவிர மற்ற 6 பந்துவீச்சாளர்ளும் ஓவருக்கு சராசரியாக 12 ரன்களை விட்டுக் கொடுத்தனர். அதேபோல கடைசி டெத் ஓவர்களிலும் கட்டுக்கோப்பாக பந்துவீசாதது கொல்கத்தா அணியை 200 ரன்களுக்கு மேல் செல்ல உதவியாக இருந்தது.

தோல்விக்குப்பின் லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் கூறுகையில் “ஏராளமான ரன்களை பந்துவீச்சில் தவறவிட்டு பெரிய இலக்கை அமைக்க உதவினோம். பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படவில்லை. ஒட்டுமொத்தத்தில் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் மோசமான செயல்பட்டுள்ளோம். சுனில் நரைன் எங்களுக்கு பவர்ப்ளேயில் பெரிய அழுத்தத்தை உருவாக்கினார். அந்த அழுத்தத்தை எங்கள் பந்துவீச்சாளர்களால் கையாள முடியவில்லை.

தரமான வீரர்களுக்கு எதிராக போராட வேண்டும், உங்கள் திறமை பரிசோதிக்கப்படும். இதுதான் ஐபிஎல், இப்படித்தான் இருக்கும். நல்ல லென்த்தில் பந்தை பிட்ச் செய்தால் பவுன்ஸ் ஆகியது. நாங்கள் நினைத்ததை விட 30 ரன்கள் அதிகமாக கொல்கத்தாவை சேர்க்கவிட்டோம்.” என்றார்.

மேலும், “எங்கள் பேட்டிங் மோசமாக இருந்தது. நாங்கள் முன்கூட்டியே தயாராகினோம், எதிரணி பேட்டர்கள் குறித்து ஆலோசித்தோம். எந்த வகையான திட்டத்தோடு வந்தோம் என்பதை நினைக்கவில்லை, அதை செயல்படுத்தவும் இல்லை. சுனில் நரைனை ஆட்டமிழக்கச் செய்ய கிடைத்த 2 வாய்ப்புகளைத் தவறவிட்டோம். அடுத்தடுத்துவரும் ஆட்டங்கள் முக்கியமானவை. பதற்றமில்லாமல், பயமில்லாமல் எதிர்வரும் ஆட்டங்களை அணுக வேண்டும்” என்று கூறினார் ராகுல்.

கொல்கத்தா - லக்னோ

பட மூலாதாரம், Getty Images

சுனில் நரைனின் ஆட்டம் எப்படி இருந்தது?

கொல்கத்தாவுக்கு பில் சால்ட், சுனில் நரைன் வலுவான அடித்தளம் அமைத்தனர். சால்ட் தனது முதல் 9 பந்துகளில் 24 ரன்களைச் சேர்த்து 14 பந்துகளில் 32 ரன்கள் என சிறிய கேமியோ ஆடி வெளியேறினார். அதன்பின், ரகுவன்ஷி, நரைனுக்கு ஒத்துழைப்பு அளிக்க, லக்னோ பந்துவீச்சை நரைன் கிழித்து எறிந்தார்.

மோசின் கான், குர்னல் பாண்டியா, ஸ்டாய்னிஸ், யாஷ் தாக்கூர் என யார் பந்துவீசினாலும் டீப் ஸ்குயர் லெக், டீப் மிட்விக்கெட் திசையில் பவுண்டரி, சிக்ஸர் என நரைன் அதிரடியாக இறங்கினார். 27 பந்துகளில் அவர் அரைசதம் அடித்தார். இந்த அரைசதத்தில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும். 2-ஆவது விக்கெட்டுக்கு ரகுவன்ஷி, நரைன் 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர்.

லக்னோ அணி 14 ஓவர்கள் முதல் 18 ஓவர்கள் வரை தான் ஓரளவுக்கு கட்டுக்கோப்பாக பந்துவீசி 45 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரகுவன்ஷி(32), ரஸல்(12),ரிங்கு சிங்(16), ஸ்ரேயாஸ்(23) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். கடைசியில் ராமன்தீப் சிங் மிரட்டலான கேமியோ ஆடி 6 பந்துகளில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 25 ரன்கள் சேர்த்தார். சுனில் நரைன் அமைத்துக் கொடுத்த தளத்தைப் பயன்படுத்தி பின்வரிசையில் வந்த பேட்டர்கள் கேமியோ ஆடி பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றனர்.

கொல்கத்தா - லக்னோ

பட மூலாதாரம், Getty Images

நெருக்கடி தந்த கொல்கத்தாவின் பந்துவீச்சு

பந்துவீச்சிலும் கொல்கத்தா அணி தரமாக தாக்குதலைத் தொடுத்தது. தொடக்கத்திலிருந்தே ராகுல், குல்கர்னிக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் ஸ்டார்க், வைபவ் அரோரா பந்துவீசினர். குல்கர்னி(9) ஸ்டார்க்கின் முதல் ஓவரிலேயே வீழ்ந்தார். அதன்பின் ஸ்டாய்னிஸ், ராகுல் கூட்டணியைப் பிரிக்கத்தான் 6 ஓவர்களுக்கு கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் சிரமப்பட்டனர். 8-ஆவது ஓவரில் ராகுல் ஆட்டமிழந்தபின் கொல்கத்தா பந்துவீச்சாளர்களின் பணி எளிதாகியது. ஒவ்வொரு ஓவரிலும் விக்கெட்டுகள், லக்னோ பேட்டர்கள் வருவதும் போவதும் என இருந்து, கொல்கத்தா பந்துவீச்சாளர்களின் பணியை எளிதாக்கினர்.

குறிப்பாக நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஸ் விக்கெட்டுகளை ரஸல் வீழ்த்தி ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார். கேப்டன் ராகுல் விக்கெட்டை ஹர்சித் ராணா எடுத்து லக்னோ ரன்ரேட்டுக்கு பெரிய திருப்பத்தை உருவாக்கினார். இந்த 3 விக்கெட்டுகள் தான் ஆட்டத்தின் போக்கையே திருப்பிவிட்டன.