எண்ணற்ற விசிறிகள் மூலம் கரியமில வாயுவை உறிஞ்சி பாறையாக மாற்றும் உலகின் முதல் ஆலை

கார்பனீராக்சைடை கைப்பற்றி பாறையாக மாற்றும் உலகின் முதல் ஆலை

பட மூலாதாரம், CLIMEWORKS

படக்குறிப்பு, குளிரூட்டிகள் போல தோற்றமளிக்கும் இந்த மாபெரும் மின்விசிறிகள் மூலம், க்ளைம்வொர்க் ஆண்டுக்கு 4,000 டன் கார்பனீராக்சைடை வளிமண்டலத்தில் இருந்து நீக்குகிறது.

ஐஸ்லாந்தின் தலைநகரான ரெய்க்யவிக்குக்கு வெளியே இந்த இடம் உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு திடப்படுத்தப்பட்ட எரிமலைக் குழம்பின் மேல், கப்பல் கன்டெய்னர்கள் அளவிலான பல பெரிய குளிரூட்டிகள் வைக்கப்பட்டிருப்பதை ஒருவர் காணலாம்.

இந்த விசித்திரமான இடம், வேற்று கிரக வாசிகளின் இடம்போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. தோற்றத்தில் மட்டுமல்ல, அதன் செயல்பாட்டிற்கும் இந்த இடம் தனித்துவமானது. சுற்றுச்சூழலில் இருந்து கார்பனீராக்சைடை (கார்பன்-டைஆக்சைடு – CO2) எடுத்து அதை நிலத்தடியில் அடைத்து வைக்கும் உலகின் முதல் சாத்தியமான அமைப்பு இதுவாகும்.

“உலகளாவிய நிகர பூஜ்ஜிய உமிழ்வுகளின் இலக்கை உண்மையிலேயே அடைய, காற்றில் இருந்து கார்பனீராக்சைடை அகற்றுவதற்கான தீர்வுகள் தேவை” என்ற யோசனையுடன் ஸ்விஸ் நிறுவனமான க்ளைம்வொர்க்ஸ் நிறுவனத்தால் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. இது இன்று செயல்பாட்டில் உள்ளது.

பிபிசி நிருபர் அட்ரியன் முர்ரே, ஐஸ்லாந்தின் ஹெலிஷெய்டியில் உள்ள ஓர்கா எனப்படும் ஆலையைப் பார்வையிட்டார். இந்த ஆலை தற்போது ஆண்டுக்கு 4,000 டன்கள் கார்பனீராக்சைடை நீக்குகிறது, அதாவது 900 பெட்ரோல் கார்களின் கார்பனீராக்சைடு உமிழ்வுக்கு சமமான அளவு.

கார்பனீராக்சைடை கைப்பற்றி பாறையாக மாற்றும் உலகின் முதல் ஆலை
படக்குறிப்பு, பிபிசி நிருபர் அட்ரியன் முர்ரே, காற்றில் இருந்து கார்பனீராக்சைடை அகற்றும் முதல் ஆலைக்கு விஜயம் செய்தார்.

ஒரு பெரிய போராட்டத்திற்கான கருவி

ராட்சத குளிரூட்டிகள் போல தோன்றும் இந்த இயந்திரங்கள் உண்மையில் ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கி, ஒழுங்கமைக்கப்பட்டுள்ள எண்ணற்ற மின்விசிறிகள் ஆகும். அவை சுற்றுச்சூழலில் இருந்து காற்றை எடுத்து, உள்ளே இருக்கும் வடிகட்டிகள் மூலம் காற்றில் உள்ள கார்பனீராக்சைடை பிரித்தெடுக்கின்றன.

காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் இது ஒரு முக்கியமான கருவியாக இருக்கும். ஆனால் க்ளைம்வொர்க்ஸ் நிறுவன பிரதிநிதி பிரைண்டிஸ் நீல்சன் பிபிசியிடம் கூறியது போல், காற்றில் இருந்து கார்பனீராக்சைடை அகற்றும் இந்த முறை கார்பனீராக்சைடு உமிழ்வைக் குறைக்கும் நடவடிக்கைகளுக்கு மாற்றில்லை.

“தொழில்துறை புரட்சி தொடங்கியதில் இருந்து மனிதர்கள் வளிமண்டலத்திற்கு செய்து வரும் தீங்குகளை சரிசெய்வதில் நாம் அதிகம் செலுத்த வேண்டும், அதே சமயத்தில் கார்பனீராக்சைடு உமிழ்வு குறைப்புகளுக்கு மாற்றாக இதை நாங்கள் கொண்டு வரவில்லை” என்று நீல்சன் விளக்குகிறார்.

காலநிலை மாற்றத்தின் அபாயங்களைத் தீர்க்க இந்தத் தொழில்நுட்பம் மட்டும் போதாததற்கு முக்கியக் காரணம் ஓர்கா போன்ற ஒரு ஆலையின் திறன்.

ஓர் ஆலை மட்டுமே ஆண்டுக்கு 4,000 டன் கார்பனீராக்சைடை உறிஞ்சும் திறன் கொண்டது என்பது கேட்க சுவாரஸ்யமாகத் தோன்றினாலும், உலகளாவிய கார்பனீராக்சைடு உமிழ்வு 2023இல் 37.4 ஜிகாடன்களை (37 பில்லியன் டன்) என்ற அளவை எட்டியுள்ளது.

“நாங்கள் 2050 க்குள் ஜிகாடன் அளவிலான கார்பனீராக்சைடை கைப்பற்ற வேண்டும், அந்த இலக்கை அடைய, நாம் இப்போதே தொடங்க வேண்டும்,” என்கிறார் நீல்சன்.

அதனால்தான் இந்த நிறுவனத்தின் மம்மத் என்ற அடுத்த திட்டம் ஓர்காவை விட கிட்டத்தட்ட பத்து மடங்கு பெரியதாக இருக்கப் போகிறது.

கார்பனீராக்சைடை கைப்பற்றி பாறையாக மாற்றும் உலகின் முதல் ஆலை

பட மூலாதாரம், Getty Images

ஐஸ்லாந்து தேர்வு செய்யப்பட்டது ஏன்?

புகழ்பெற்ற அறிவியல் புனைகதை புத்தகமான ‘எ ஜர்னி டு தி சென்டர் ஆஃப் தி எர்த்’ (A Journey to the Center of the Earth) 1864இல் வெளியானது. இந்த புத்தகத்தை எழுதிய ஜூல்ஸ் வெர்னின் வாழ்க்கையை மாற்றிய புத்தகம் இது. இன்றும் அறிவியல் புனைகதைகளின் தந்தை என்று பலரால் போற்றப்படுகிறார் ஜூல்ஸ் வெர்ன்.

அந்தக் கதையில், ஐஸ்லாந்தின் ஆபத்தான எரிமலைகளில் டாக்டர் ஓட்டோ லிடன்ப்ராக் மற்றும் அவரது குழு மேற்கொள்ளும் ஒரு நம்பமுடியாத பயணம் குறித்து சொல்லப்படும்.

அமெரிக்க மற்றும் யூரேசிய கண்டத்தட்டுகளின் விளிம்பு பகுதியில் அமைந்துள்ள இந்தத் தீவில் கிளைம்வொர்க்ஸ் தனது ஆலைகளை அமைக்க இந்த தீவிர எரிமலைச் செயல்பாடுதான் முக்கிய காரணம்.

பசுங்குடில் வாயு உமிழ்வுகள் இல்லாமல் சுத்தமான புவிவெப்ப ஆற்றலை வழங்குவதோடு மட்டுமல்லாது, இந்த எரிமலை செயல்பாடு என்பதன் அர்த்தம் ஐஸ்லாந்தின் மண் பாசால்ட்கள், நுண்துளை எரிமலை பாறைகளால் ஆனது. அவை வளிமண்டலத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் கார்பனீராக்சைடுக்கான சரியான கொள்கலன் ஆகும்.

சுற்றுச்சூழலில் இருந்து விசிறிகள் சேகரிக்கும் கார்பனீராக்சைடு வாயுவை தண்ணீரில் கலந்து குழாய்கள் மூலம் மேற்பரப்பில் இருந்து நீண்டு செல்லும் ஒரு வகையான குவிமாடத்திற்கு அனுப்பப்படுகிறது.

இது மற்றொரு நிறுவனமான கார்ப்ஃபிக்ஸ் (CarbFix) மூலம் இயக்கப்படுகிறது. இங்கே அது 2 கிமீ ஆழத்தில் நிலத்தடியில் அழுத்தத்தின் கீழ் செலுத்தப்படுகிறது, அங்கு பாசால்ட்களுடன் வினைபுரிந்து கார்பனீராக்சைடை திடமாக்குகிறது.

கார்பனீராக்சைடை கைப்பற்றி பாறையாக மாற்றும் உலகின் முதல் ஆலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாசால்ட் என்பது நுண்துளை எரிமலை பாறைகள் ஆகும், அவை எரிமலைக்குழம்பு குளிர்ச்சியடையும் போது அதில் சிக்கியிருக்கும் வாயுக்களால் இவ்வாறு மாறுகின்றன.
கார்பனீராக்சைடை கைப்பற்றி பாறையாக மாற்றும் உலகின் முதல் ஆலை

பட மூலாதாரம், CARBFIX

படக்குறிப்பு, ‘மம்மத்’ தலைமையகத்தில் உள்ள கார்ப்ஃபிக்ஸ் குவிமாடங்களில் ஒன்று.

வணிக ரீதியாக சாத்தியமான முறை

கார்ப்ஃபிக்ஸ் பிரதிநிதி எடா அராடோட்டிர் பிபிசியிடம் கூறுகையில், “உலகின் மிகப்பெரிய கார்பனீராக்சைடு உமிழும் தொழிற்சாலைகள், ஐஸ்லாந்தில் அந்த உமிழ்வுகளை டெபாசிட் செய்ய இந்நிறுவனத்தின் சேவைகளை வாடகைக்கு எடுப்பார்கள் என்பது தான் எங்கள் திட்டம்”

“இதன் மூலம் கிகா டன்கள் அளவிலான கார்பனீராக்சைடை நம்மால் வளிமண்டத்திலிருந்து அகற்ற முடியும். நாம் ஒரே வளிமண்டலத்தைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதால், எல்லைகள் கடந்து உலகம் முழுவதுற்குமான ஒத்துழைப்பை அவசியமாக்குகிறது” என்று அராடோட்டிர் விளக்கினார்.

க்ளைம்வொர்க்ஸ் பிரதிநிதி பிரைண்டிஸ் நீல்சன் இதுகுறித்து பேசுகையில், “ஒரு கருத்தை நிரூபிக்க தான் ஓர்கா போன்ற ஒரு ஆலை இங்கே உள்ளது, மேலும் இது போன்ற ஒரு ஆலை வணிக ரீதியாகவும் சாத்தியமானது” என்று கூறினார்.

ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தில் பல சிரமங்கள் உள்ளன. அதிக கார்பனீராக்சைடு உமிழும் நாடுகள், அந்த உமிழ்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்காமல், ஐஸ்லாந்தைத் தங்கள் உமிழ்வு டெபாசிட் இடமாக பயன்படுத்தத் தொடங்கிவிடுவார்கள் என்ற அபாயமும் உள்ளது.

அராடோட்டிரைப் பொறுத்தவரை, ஓர்கா போன்ற திட்டங்களின் நோக்கம், ஆற்றல் நுகர்வு மூலம் கார்பனீராக்சைடை வெளியிடும் தொழில்துறைகள் அல்ல. உலோகம் மற்றும் சிமெண்ட் போன்ற தயாரிப்புகளின் தவிர்க்க முடியாத கழிவுகளாக கார்பனீராக்சைடை வெளியிடும் தொழில்துறைகள் தான்.

காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்கு கார்பனீராக்சைடு உமிழ்வை நீக்குவது போதுமானதாக இருக்காது என ஐஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் அரோரா அர்னாடோட்டிர் பிபிசியிடம் கூறினார், “இந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவதோடு மட்டுமல்லாது, நம்மால் முடிந்தவரை கார்பனீராக்சைடு உமிழ்வை குறைக்க வேண்டும்”

“ஆனால் நாம இன்னும் அந்த நிலையை அடையவில்லை,” என அவர் ஒப்புக்கொள்கிறார்.

புதிய கிளைம்வொர்க்ஸ் ஆலையான ‘மம்மத்’ சுற்றுச்சூழலில் இருந்து ஆண்டுக்கு சுமார் 36,000 டன் கார்பனீராக்சைடை பிரித்தெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.