இந்திய பெருங்கடல்: மீன் வளம் முற்றிலும் அழியும் ஆபத்து – தமிழக மீனவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?

இந்திய பெருங்கடல்: மீன் வளம் முற்றிலும் அழியும் ஆபத்து - தமிழக மீனவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், க.சுபகுணம்
  • பதவி, பிபிசி தமிழ்

அதீத காலநிலை நிகழ்வுகள் காரணமாக தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

புனேவை தளமாகக் கொண்டு இயங்கி வரும் வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வின் முடிவுகள், இந்தியப் பெருங்கடல் அடுத்த 80 ஆண்டுகளில் அதீத காலநிலை நிகழ்வுகளை எதிர்கொள்ளப் போவதாகவும் இதனால் பெருங்கடல் பகுதியில் பவளப்பாறைகள் அழிவு, கடல் அமிலமயமாதல், அதிக புயல் மற்றும் சூறாவளி நிகழ்வுகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கிறது.

எல்சேவியர்ஸ் ஆய்விதழில் வெளியாகியுள்ள ‘இந்தியப் பெருங்கடலின் வெப்பமண்டல பகுதிக்கான எதிர்கால கணிப்புகள்’ என்ற தலைப்பிலான இந்த ஆய்வின் முன்னணி விஞ்ஞானியான ஐஐடிஎம் புனேவை சேர்ந்த காலநிலை விஞ்ஞானி ராக்சி மேத்யு கோல், “எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் வெப்பநிலை உயர்வு, ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்புக்கு நிகரான வெப்பத்தை உண்டாக்கும்” என்று தனது ஆய்வின் முடிவுகள் குறித்து விவரிக்கிறார்.

மேலும், “இந்த மாற்றங்களின் தாக்கங்கள் நமது எதிர்கால சந்ததிகள் எதிர்கொள்ளக் கூடியவை என்று புறக்கணிக்க முடியாது. இவற்றின் விளைவுகளை நாம் ஏற்கெனவே சந்தித்து வருகிறோம்.” என்கிறார் அவர்.

இந்திய பெருங்கடல்: மீன் வளம் முற்றிலும் அழியும் ஆபத்து - தமிழக மீனவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?

பட மூலாதாரம், Roxy Mathew Koll/FB

“வெள்ளம், வறட்சி, சூறாவளி, நிலம் மற்றும் கடல் ஆகிய இரண்டிலும் நிகழும் வெப்ப அலைகள் நம்மை அதிகளவில் பாதிக்கின்றன. காலநிலை நெருக்கடியைத் தணிப்பதற்கான தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இந்தத் தீவிர வானிலை நிகழ்வுகள் ஆய்வு முடிவுகள் கூறும் காலத்திற்கும் முன்பே தீவிரமடையும்,” என்று எச்சரிக்கிறார் ராக்சி மேத்யூ கோல்.

இந்தியப் பெருங்கடலின் வெப்பமண்டலப் பகுதி குறித்து ஆய்வறிக்கை முன்வைக்கும் எச்சரிக்கைகள்:

  • கடந்த 70 ஆண்டுகளில்(1950-2020) நூற்றாண்டுக்கு 1.2 டிகிரி செல்ஷியஸ் என்ற அளவுக்கு இந்தியப் பெருங்கடலில் வெப்பநிலை அதிகரித்தது. ஆனால், அடுத்த 80 ஆண்டுகளில் (2020-2100) நூற்றாண்டுக்கு 1.7 டிகிரி செல்ஷியஸ் முதல் அதிகபட்சமாக 3.8 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும்.
  • அரபிக் கடல் உட்பட வடமேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதி அதிகபட்ச வெப்பநிலை உயர்வை எதிர்கொள்ளக்கூடும்.
  • இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிதீவிர பருவநிலை நிகழ்வுகள் ஏற்படலாம். கடந்த 1950கள் முதல் அதிகன மழை, அதிதீவிர சூறாவளிகள் ஆகியவை அதிகரித்துள்ளன. இந்த நிகழ்வுகளின் அளவு வரும் ஆண்டுகளில் உயரப்போகும் கடல் வெப்பநிலை காரணமாக மேன்மேலும் அதிகரிக்கும்.
  • கடல் மேற்பரப்பு மட்டுமின்றி, கடலின் 2000 மீட்டர் ஆழத்திலும்கூட பத்து ஆண்டுகளுக்கு 4.5 ஜெட்டா-ஜூல் என்ற கணக்கில் ஏற்கெனவே வெப்பமடைந்து வருகிறது.
  • இவற்றின் விளைவாக இந்தியப் பெருங்கடலில் அதிகரிக்கப் போகும் கடல் அமிலமயமாதல், பவளப்பாறை அழிவு, கடல்புல் அழிவு, கடல்பாசி நிறைந்த பகுதிகளின் அழிவு ஆகியவற்றால் வாழ்விடச் சிதைவு ஏற்படக்கூடும். இதனால் பெருங்கடலின் மீன்வளத்துறை பெரியளவில் பாதிக்கப்படும்.
இந்திய பெருங்கடல்: மீன் வளம் முற்றிலும் அழியும் ஆபத்து - தமிழக மீனவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?

பட மூலாதாரம், Getty Images

இந்தக் காலநிலை விளைவுகளால் மீனவர்கள் எதிர்கொள்ளப் போகும் ஆபத்து என்ன?

“இதுபோன்ற எச்சரிக்கைகள் புதிதல்ல” என்கிறார் நெய்தல் சமூக ஆய்வாளரும் உலக மீனவர் மன்றத்தின் பிரதிநிதியுமான ஜோன்ஸ் தாமஸ் பார்டகஸ். “இவை குறித்து என்ன செய்யலாம் என்று மீனவ சமூகங்களிடம் கலந்து பேசினால் மட்டுமே அவர்களுக்கு ஏற்ற உரிய தீர்வு கிடைக்கும்” என்றும் வலியுறுத்துகிறார்.

கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச இடை அரசுக் குழுவின் (ஐபிசிசி) சிறப்பு அறிக்கை, “கடல் வெப்பநிலை எதிர்பாராத வேகத்தில் உயர்வதாகவும் இதனால் அதைச் சார்ந்துள்ள சமூகங்கள் பெரியளவிலான பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும் எச்சரித்தது.

அந்த எச்சரிக்கையை மேலும் அழுத்தமாகத் தற்போதைய ஆய்வு எடுத்துக்காட்டுவதாகக் கூறுகிறார் ஜோன்ஸ்.

கடல் வெப்பநிலை அதிகரிப்பது, கடல் மட்டம் உயர்வது, கடல் நீர் உட்புகுதல் ஆகியவை கழிமுகப் பகுதிகளில் ஆக்சிஜன் நீக்கம் ஏற்படக் காரணமாக அமைவதாகவும் இதனால், மீன் இனங்களின் இடப்பெயர்ச்சி நடப்பதாகவும் ஐபிசிசி அறிக்கை எச்சரித்தது.

அதன்படி, வாழ்விடப் பரவல், மீன்களின் இருப்பு ஆகியவற்றின்மீது வெப்பநிலை உயர்வு ஏற்படுத்தியதன் விளைவுகளை ஏற்கெனவே மீன்பிடித் தொழிலும் அதைச் சார்ந்து வாழும் சமூகங்களும் எதிர்கொள்கின்றன.

இந்திய பெருங்கடல்: மீன் வளம் முற்றிலும் அழியும் ஆபத்து - தமிழக மீனவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?
படக்குறிப்பு, மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருவதாக எச்சரிக்கிறார் நெய்தல் சமூக ஆய்வாளரும் உலக மீனவர் மன்றத்தின் பிரதிநிதியுமான ஜோன்ஸ் தாமஸ் பார்டகஸ்.

இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஆய்வு “கடந்த 70 ஆண்டுகளில் (1950-2020) இந்தியப் பெருங்கடலின் வெப்பநிலை 1.2 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால், காலநிலை மாதிரிகள் கணித்துள்ளதன்படி அடுத்த 80 ஆண்டுகளில் (2020-2100) இந்த அளவு குறைந்தபட்சம் 1.7 டிகிரி முதல் அதிகபட்சமாக 3.8 டிகிரி வரை இருக்கும்” என்று எச்சரிக்கிறது.

குறிப்பாக, இந்தியப் பெருங்கடலின் வடமேற்குப் பகுதியும் அரபிக் கடலும்தான் இதன் தீவிரத்தை அதிகம் உணரப் போவதாகவும் ஆய்வு முடிவுகள் உணர்த்துகின்றன. இது கடலோர சமூகங்கள், குறிப்பாக கடல் வளங்களைச் சார்ந்திருக்கும் மீனவ சமூகங்கள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கிறார் ஜோன்ஸ்.

கேள்விக்குறியாகும் மீனவர்களின் வாழ்வாதாரம்

சமீபத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற 55-ஆவது மனித உரிமை மன்றத்தில் மீனவ சமூகங்களின் பிரதிநிதியாகப் பங்கெடுத்த ஜோன்ஸ், “இந்தியப் பெருங்கடல் அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம் எனப் பல முனைகளிலும் குறிவைக்கப்படுவதால், இதுபோன்ற காலநிலை நெருக்கடிகளோ அதன் விளைவாகப் பாதிக்கப்படும் மீனவ சமூகங்களோ கண்டுகொள்ளப்படுவது இல்லை,” என்று கடுமையாக விமர்சிக்கிறார்.

“இந்தியப் பெருங்கடல் என்னும்போது, அதை மட்டுமே பார்க்கக்கூடாது. இதைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான் சுமார் 80 சதவீதம் வர்த்தகம் நடைபெறுகிறது. அதுபோக, பாதுகாப்பு ரீதியாகவும் மிகப்பெரிய கவனம் பெற்றுள்ளது. பல நாடுகள் இங்குள்ள தீவுகளின்மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. மீன் சார்ந்த தொழில் துறையும் இங்கு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், இங்குள்ள மக்களின் வாழ்வியல் மற்றும் வாழ்வாதாரம் குறித்து யாருமே கவலைப்படுவது இல்லை,” என்று குற்றம் சாட்டுகிறார் ஜோன்ஸ்.

இந்திய பெருங்கடல்: மீன் வளம் முற்றிலும் அழியும் ஆபத்து - தமிழக மீனவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?

பட மூலாதாரம், Getty Images

இந்தப் பகுதியிலுள்ள அனைத்து மீனவர்களும் வரலாற்று ரீதியாகவே ஓர் இன ஒதுக்கலை எதிர்கொள்வதாக அவர் கூறுகிறார். “இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பொறுத்தவரை பேரிடர்களும் வளர்ச்சிகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஆனால், அதன் விளைவுகளை எதிர்கொள்ளும் மீனவ மக்கள் அதன் பாதிப்புகளை எதிர்கொள்கிறார்களே தவிர, இங்கு கிடைக்கும் நன்மைகள் அவர்களைச் சென்றடைவதே இல்லை.”

சமீபத்திய ஆய்வறிக்கை, இந்தியப் பெருங்கடலின் வெப்பமண்டலப் பகுதிகளில் ஆக்சிஜன் செறிவு குறைந்து வருவதாகவும் கண்டறிந்துள்ளது. சர்வதேச அளவில் கரிம உமிழ்வை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துவதாகக் கூறுகிறார் இந்த ஆய்வின் முன்னணி விஞ்ஞானி ராக்சி மேத்யூ கோல்.

பலமுனைகளில் இருந்து இதை அணுகுவதன் மூலம்தான் வரவிருக்கும் சவால்களைச் சமாளிக்க முடியும் என்றும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அதாவது, உலகளாவிய கரிம உமிழ்வைக் கட்டுப்படுத்துவது, இதன் விளைவாக ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ளத்தக்க கட்டுமானங்களை உருவாக்குவது எனப் பலமுனை நடவடிக்கைகளை ஒருசேர எடுப்பதே கடலோர சமூகங்கள் எதிர்கொள்ளவிருக்கும் இந்தப் பேராபத்தைத் தடுக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய பெருங்கடல்: மீன் வளம் முற்றிலும் அழியும் ஆபத்து - தமிழக மீனவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?

பட மூலாதாரம், Getty Images

‘மூச்சுமுட்டும் நிலையில் தவிக்கும் மீனவர்கள்’

ஆனால், ஏற்கெனவே மீனவர்கள் எதிர்கொண்டு வரும் அபாயங்களே அவர்களை மூச்சுமுட்ட வைப்பதாகவும் இந்த நிலையில் இப்படியொரு எச்சரிக்கை வந்திருப்பது சிவப்பு எச்சரிக்கையைவிடத் தீவிரமானது என்றும் கூறுகிறார் ஜோன்ஸ்.

“கடலோர பொருளாதார மண்டலங்கள், கடலில் நடக்கும் பொருளாதார நடவடிக்கைகள், இவற்றுக்கு மேல் காலநிலை நெருக்கடியால் ஏற்படும் தொழில், வாழ்வாதார பாதிப்புகள் என்று அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தாக்குதல் நிகழும்போது மீனவர்களால் எந்தப் பக்கம் ஓட முடியும்?” என்று வினவும் ஜோன்ஸ், மீனவ சமூகங்கள் அனைத்துமே இப்போதே உள்நாட்டு சூழலியல் அகதிகளாகத்தான் இருப்பதாகவும் கூறுகிறார்.

அதே நேரத்தில், இத்தகைய ஆய்வுகளை முற்றிலுமாகச் சார்ந்திருக்க முடியாது என்கிறார் ஐஐடி மும்பையை சேர்ந்த பேராசிரியரும் காலநிலை விஞ்ஞானியுமான ரகு முர்துகுட்டே.

அவரது கூற்றுப்படி, ஒருவேளை உண்மையாக இத்தகைய பேராபத்து வரவுள்ளது என வைத்துக்கொண்டாலும்கூட அதைச் சமாளிக்க என்ன செய்யப் போகிறோம் என்பதற்கான பதில் நம்மிடம் இல்லை.

இந்திய பெருங்கடல்: மீன் வளம் முற்றிலும் அழியும் ஆபத்து - தமிழக மீனவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?

பட மூலாதாரம், Getty Images

காலநிலை மாதிரிகள் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் எதிர்காலம் குறித்த ஊகங்களை மட்டுமே வழங்குவதாகவும் அவற்றை முழுமையாக நம்ப முடியாது என்று கூறும் முர்துகுட்டே, பவளப் பாறைகள் அழிவு, கடல்பரப்பில் வெப்பநிலை உயர்வு, கடல் அமிலமயமாதல் ஆகிய அபாயங்கள் அதிகரித்து வருவதை ஏற்றுக்கொள்கிறார்.

“கடல் பகுதியில் ஏற்படும் வெப்ப அலைகளை, அதன் பாதிப்புகளை இப்போது எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பது குறித்து நாம் கலந்தாலோசித்து திட்டமிட வேண்டும். அதன் பிறகு, 2100-இல் ஏற்படப்போகும் ஆபத்துகளைப் பற்றிச் சிந்திக்கலாம்.”

மீன் வளத்தைப் பொறுத்தவரை அளவுக்கு அதிகமாக மீன் பிடிப்பது ஒருபுறம் பிரச்னையாக இருக்க, மறுபுறம் காலநிலை நெருக்கடியால் மீன் வளம் குறைவது ஒரு முக்கியப் பிரச்னையாக இருக்கிறது. இந்த இரண்டையும் தனித்தனி பிரச்னைகளாக அணுக வேண்டியது அவசியம் என்கிறார் ரகு முர்துகுட்டே.

“கடலோரங்களில் அலையாத்திக் காடுகள், பவளப் பாறைகள் மீது அதிக கவனம் செலுத்துவது, மாசுபாடுகளைக் கட்டுப்படுத்துவது, மீனவ சமூகங்கள் ஒட்டுமொத்தமாக மீன் பிடிக்காமல், அவர்களில் யாரெல்லாம், எந்தெந்த காலகட்டங்களில் மீன் பிடிக்கலாம் என்பது போன்ற ஏற்பாடுகளைச் செய்வது, மீன்வள மேலாண்மையில் நிலைத்தன்மையைக் கொண்டு வருவது எனப் பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த வகையில் எடுக்க வேண்டியது அவசியம். அதன்மூலம் இந்த அபாயத்தைக் கட்டுப்படுத்த முடியும்.” எனவும் வலியுறுத்துகிறார் அவர்.

காலநிலை நெருக்கடியைக் கையாள என்ன செய்ய வேண்டும்?

இந்திய பெருங்கடல்: மீன் வளம் முற்றிலும் அழியும் ஆபத்து - தமிழக மீனவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?

பட மூலாதாரம், Getty Images

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் பல்லுயிர்ச் சூழலைப் பாதுகாக்கவும், காலநிலை தகவமைப்புடன் கூடிய அணுகுமுறையைக் கையாள வேண்டியது அவசியம் எனவும் இதில் சர்வதேச ஒத்துழைப்பையும் வளர்க்க வேண்டும் என்று சமீபத்திய ஆய்வறிக்கை அறிவுறுத்துகிறது.

ஆனால் காலநிலை நெருக்கடியின் விளைவாக ஏற்படும் ஆபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக நிலைமையை மோசமாக்கும் வகையிலேயே அரசின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாகவும் கூறுகிறார் ரகு முர்துகுட்டே.

கடலோர பொருளாதார மண்டலங்கள் மூலம் துறைமுகங்களைப் புதிதாகக் கட்டுவது, ஆழ்கடல் சுரங்கங்கள், ஹைட்ரோகார்பன் திட்டங்கள், தூய ஆற்றல் என்ற பெயரில் ஆழ்கடலில் காற்றாலைகளை நிறுவுவது எனப் பல திட்டங்கள் இந்தியப் பெருங்கடல், வங்கக் கடல் பகுதிகளில் திட்டமிடப்பட்டுள்ளன.

ஆனால், “இத்தகைய பொருளாதார நோக்கிலான திட்டங்களால் தற்போது கூறப்படும் காலநிலை எச்சரிக்கைகள் துரிதப்படுமே தவிர, தணியாது” என்று விமர்சிக்கிறார் ஜோன்ஸ்.

மனித நடவடிக்கைகளால் துரிதமடையும் அபாயங்களை மட்டுப்படுத்தாமல், “வளர்ச்சித் திட்டங்கள்” மூலம் அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதையே அரசு செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.

இந்திய பெருங்கடல்: மீன் வளம் முற்றிலும் அழியும் ஆபத்து - தமிழக மீனவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?

பட மூலாதாரம், Siva.V.Meyyanathan/Twitter

காலநிலை நெருக்கடியின் விளைவுகள் மட்டுமின்றி மேற்கூறிய மனித நடவடிக்கைகளால் ஏற்படும் அபாயங்களையும் கையாள்வதற்கான அணுகுமுறையைத் திட்டமிடும்போது மீனவ சமூகங்களின் பார்வை மிகவும் அவசியம் என அவர் வாதிடுகிறார்.

“உள்ளூர் மக்கள் சமூகங்களைத் திட்டமிடுதலில் இணைத்துக்கொள்ள வேண்டுமென்ற பார்வையே அதிகாரிகள், வல்லுநர்கள் என யாரிடத்திலும் இல்லை. அப்படி நினைத்தால் மட்டுமே அவர்களுக்குத் தேவையான நடவடிகைகளை மேற்கொள்ள முடியும். அதன் மூலமாகத்தான் எதிர்வரும் அபாயங்களைக் கையாள முடியும்” என்கிறார் ஜோன்ஸ்.

மீனவர்கள் நலனில் அரசு அக்கறை செலுத்துகிறதா?

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற கடந்த மூன்றாண்டு காலத்தில் எந்தவித அபாயகரமான திட்டமும் கடற்கரையோரங்களில் நிறைவேற்றப்படவில்லை என்று கூறுகிறார் தமிழ்நாடு சுற்றுச்சூழல், காடு, காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

எந்தவொரு திட்டமோ நடவடிக்கையோ கொண்டு வரப்படும்போது மீனவ சமூகங்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்துக் கேட்டபோது, “மீனவ மக்களுடைய உரிமைகள், வாழ்வாதாரம் தொடர்பான பணிகளை, மீனவ சங்கப் பிரதிநிதிகளிடம் கேட்டு, அவர்கள் அறிவுறுத்தியதன்படியே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,” என்றார்.

எதிர்காலத்தில் காலநிலை நெருக்கடியால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருத்தில் கொண்டே நெய்தல் மீட்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் கூறினார் மெய்யநாதன்.

அந்தத் திட்டத்தால் மீனவ மக்களுக்குப் பெரிய பயன் ஏதுமில்லை என்ற விமர்சனம் குறித்துக் கேட்டபோது, “மீன்பிடித் தடைக்காலத்தில் கொடுக்கப்படும் தொகை உயர்த்தப்பட்டுள்ளது, மீனவ மக்களுக்கான வீட்டு வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன” என்று கூறியவர் அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் நிறைவேற்றித் தருவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.