2,000 கி.மீ. தூரம் கடந்து வந்த அபூர்வ பாம்பு – அசாமிலிருந்து குஜராத் வந்தது எப்படி?

வெண்கல மரப் பாம்பு, விலங்கினம், குஜராத்

பட மூலாதாரம், DIKANSH PARMAR

  • எழுதியவர், ஜெய் ஷுக்லா
  • பதவி, பிபிசி குஜராத்தி

ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தின் சூரத் நகரத்தில் ஒரு அரிய வகை பாம்பு தென்பட்டது. வனவிலங்கு ஆர்வலர்களும் விஞ்ஞானிகளும் குஜராத்தில் ஒரு புதிய வகை பாம்பு கண்டுபிடிக்கப்பட்டதாக மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் அவர்கள் நினைத்தது பாதி தான் உண்மை.

ஆம், இந்த வகை பாம்பு குஜராத்தில் அதற்கு முன்னர் யாரும் பார்த்ததில்லை என்பது உண்மை. ஆனால் இந்தப் பாம்பு சூரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ‘புதிய இனம்’ என்று அவர்கள் எண்ணியது தவறு.

கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சூரத் நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை இதுபோன்று ஏழு பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொதுவாக இந்த வகை பாம்புகள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் காணப்படும். அதாவது டார்ஜிலிங், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா, மிசோரம், மற்றும் அசாம் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. மேலும், வங்கதேசம், மியான்மர், சீனா, லாவோஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளிலும் காணப்படுகின்றன.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமே இருக்கும் இந்தப் பாம்புகள் சூரத்துக்கு எப்படி வந்தது என பாம்பு ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியப்பட்டனர். மிகவும் அரிய வகை பாம்பு என்பதால், இதுகுறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ளத் துவங்கினர்.

இந்தப் பாம்பின் உருவ அமைப்பு, வடிவப் பகுப்பாய்வு (Morphometrics) மற்றும் அதன் இனத்தின் டி.என்.ஏ ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அவை எங்கெல்லாம் வசிக்கின்றன என்பதன் வரைபடங்களையும் ஆராய்ந்தனர். அவற்றின் ஒவ்வொரு குணாதிசயம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

சூரத்தில் காணப்பட்ட இந்தப் பாம்பு மிகவும் அரிதானது என்றும் அது இங்கு வந்தது ஆச்சரியத்துக்குரிய விஷயம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வு சமீபத்தில் நியூசிலாந்தின் ஜூடாக்சா ‘Zootaxa’ இதழில் வெளியிடப்பட்டது. இந்தப் பாம்பு பற்றி ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள், ஜூடாக்சா இதழில் ஆராய்ச்சி அறிக்கை வெளியிடுவது பெருமைக்குரிய விஷயம் என்று கூறுகின்றனர்.

வெண்கல மரப் பாம்பு, விலங்கினம், குஜராத்

பட மூலாதாரம், DIKANSH PARMAR

படக்குறிப்பு, இந்தப் பாம்புகள் டார்ஜிலிங், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா, மிசோரம், மற்றும் அசாம் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன

இந்த பாம்பு எப்படி இருக்கும்?

இந்த பாம்பு ‘கிழக்கு வெண்கல மரப் பாம்பு’ (Eastern Bronzeback Tree Snake) என்று அழைக்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் ‘Dendrellaphis proarchos’. இந்தப் பாம்பு வெண்கல ரக பாம்பாகும். இவை நச்சுத் தன்மையற்றவை. மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காது.

இந்தியாவில் 11 வகையான வெண்கலப் பாம்பு வகைகள் காணப்படுகின்றன. இவற்றின் உடலின் கீழ் பகுதி செம்பு (Copper) நிறத்தில் இருக்கும். எனவே குஜராத்தியில் இது `தாம்ரபித் சாப்’ என்று அழைக்கப்படுகின்றன.

இதன் அதிகபட்ச நீளம் 3.8அடி (1150மி.மீ., 115செ.மீ.) ஆகும். இவற்றின் தலை கூரானது. இவை பொதுவாக மரங்கள் அல்லது புதர்களில் வாழக்கூடியவை.

வெண்கலப் பாம்பு வகைகள் குஜராத்தில் காணப்படுகின்றன. இதன் அறிவியல் பெயர் ‘Dendrellaphis tristis’. இவை பொதுவான வெண்கலப் பாம்பு வகைகள் ஆகும். ஆனால் கிழக்கு வெண்கல மரப்பாம்பு இனம் குஜராத்தில் வாழக்கூடியது அல்ல. இது விஷமற்ற பாம்பு.

வடகிழக்கு மாநிலங்களில் வாழக்கூடிய இந்தப் பாம்புகள், குஜராத்துக்கு எப்படி வந்தன? கடந்த 10 ஆண்டுகளில் சூரத் நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் பாம்புகள் காணப்பட்டது எப்படி என்ற கேள்வி ஆராய்ச்சியாளர்களின் ஆர்வத்தைத் தூண்டியது. சூரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஏழு பாம்புகளை, ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர். இந்த ஆராய்ச்சி மேற்கொள்ள 10 ஆண்டுகள் ஆயின.

இந்த ஏழு கிழக்கு வெண்கல மர பாம்புகளில், 6 பாம்புகள் ஆண், ஒன்று பெண்.

ஏதேனும் ஆபத்து, அச்சுறுத்தல் நேரும் சமயத்தில், இந்தப் பாம்பு அதன் தொண்டை மற்றும் உடலை விரிக்கும். அப்போது அதன் நீல நிறத் தோல் வெளிப்படும். இந்தப் பாம்புகள் பொதுவாக சாந்தமான இயல்புடையவை என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இவை தவளைகள், பல்லிகள், மற்றும் பிற பூச்சிகளை உண்கின்றன.

வெண்கல மரப் பாம்பு, விலங்கினம், குஜராத்

பட மூலாதாரம், DIKANSH PARMAR

படக்குறிப்பு, இந்த வகைப் பாம்புகளின் பல்வேறு குணாதிசயங்களை ஆய்வு செய்து, 11 வெவ்வேறு வகையான பாம்புகளுடன் ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது

பொதுவான வெண்கல மரப் பாம்புகள் எப்படிப்பட்டவை?

கிழக்கு வெண்கல மரப் பாம்பு இளஞ்சிவப்பு நிற நாக்கைக் கொண்டுள்ளது. பொதுவான வெண்கல மரப் பாம்பின் நாக்கு நீல நிறத்தில் இருக்கும். கிழக்கு வெண்கல மரப் பாம்புக்கு கண்ணில் இருந்து தொண்டை வரை கருப்பு நிறத்தில் பட்டை இருக்கும். பொதுவான வெண்கல பாம்புக்கு இந்தப் பட்டை இருக்காது.

இவற்றின் செதில்களைப் பொறுத்தவரை, கிழக்கு வெண்கல மரப் பாம்பு பிரிக்கப்படாத குதச் செதிலை (anal scale) கொண்டுள்ளது. பொதுவான வெண்கல மரப் பாம்பு பிரிக்கப்பட்ட குதச் செதிலை கொண்டிருக்கும்.

இது குறித்து சூரத்தைச் சேர்ந்த நிலநீர் வாழ்வன மற்றும் ஊர்வன ஆராய்ச்சியாளரும் (herpetologist) விலங்கியல் ஆராய்ச்சி அறிஞருமான திகன்ஷ் பர்மார் பிபிசி குஜராத்தியிடம் கூறுகையில், “சூரத் போன்ற பகுதியில் இந்தப் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது அரிதாக இருந்தது. எனவே அவற்றின் கண்கள், மூக்கு, தலை, செதில்கள், நிறம், நாக்கு போன்றவற்றை ஆய்வு செய்தோம். டி.என்.ஏ பரிசோதனை செய்தோம்,” என்றார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள விலங்கு ஆராய்ச்சி நிறுவனமான கலிங்கா அறக்கட்டளையின் ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் எஸ்.ஆர்.கணேஷ் பிபிசி குஜராத்தியிடம் கூறுகையில், “கிழக்கு வெண்கல மரப் பாம்பின் வாழ்விடம் சூரத் இல்லை. இது பொதுவாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் அல்லது இந்தியாவின் கிழக்கே அண்டை நாடுகளில் காணப்படுகிறது. எனவே இதுகுறித்து ஆய்வு செய்தோம்,” என்றார்.

ஆராய்ச்சிக் குழுவில் திகன்ஷ் பர்மார், எஸ்.ஆர்.கணேஷ் ஆகியோர் இருந்தனர். மும்பையில் உள்ள தாக்கரே வனவிலங்கு அறக்கட்டளையுடன் தொடர்புடைய இஷான் அகர்வால் மற்றும் தென்கிழக்கு ஆசிய ஹெர்பெட்டாலஜிக்கான அமைப்புடன் தொடர்புடைய ஜெர்மன் விஞ்ஞானி ஜெர்னாட் வோகல் ஆகியோரும் இருந்தனர்.

இந்த வகைப் பாம்புகளின் பல்வேறு குணாதிசயங்களை ஆய்வு செய்து, 11 வெவ்வேறு வகையான பாம்புகளுடன் ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நியூசிலாந்தின் Zootaxa இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

குஜராத்தில் இதுவரை மொத்தம் 64 வகையான பாம்புகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக திகன்ஷ் பர்மார் கூறுகிறார். இந்த இனத்தையும் சேர்த்தால், குஜராத் மாநிலத்தில் தற்போது மொத்தம் 65 வகையான பாம்புகள் உள்ளன.

வெண்கல மரப் பாம்பு, விலங்கினம், குஜராத்

பட மூலாதாரம், ZOOTAXA

படக்குறிப்பு, இந்தப் பாம்புகள் குஜராத்தை தங்கள் இயற்கை வாழ்விடமாக மாற்றிக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு

இந்தப் பாம்பு சூரத்துக்கு வந்தது எப்படி?

கடந்த பத்து ஆண்டுகளில், சூரத்தில் உள்ள அப்வா கிராமம், பிப்லோட், வெசு, நவ்சாரி பஜார், மற்றும் உதானா போன்ற பகுதிகளில் இந்தப் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் காணப்படும் இந்தப் பாம்பு சூரத்தில் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதை திகன்ஷ் பர்மார் பிபிசி குஜராத்தியிடம் விளக்கினார்.

“இந்தப் பாம்புகளை ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நாங்கள் கண்டுபிடித்தோம். இந்தப் பாம்புகள் குளிர்காலத்தில் உறக்க நிலைக்குச் செல்லும். அந்தச் சமயத்தில் இந்தப் பாம்புகள், அவைகள் பாதுகாப்பாக உணரும் குகைகோ அல்லது மறைவான இடத்திற்கோ செல்கின்றன. அந்தச் சமயத்தில், வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வணிகத்திற்காக சூரத்துக்கு அனுப்பப்படும் மரங்கள் அல்லது மூங்கில் போன்ற பொருட்களோடு சேர்த்து இவை இங்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம்,” என்றார்.

பிரயாஷ் குழு சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் மெஹுல் தாக்கூர் பிபிசி குஜராத்தியிடம் பேசுகையில், “ஐந்து அல்லது ஆறு கிழக்கு வெண்கல மரப் பாம்புகள் ஒன்றாக உறக்க நிலையில் இருக்கையில், போக்குவரத்து மூலம் இங்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம்,” என்கிறார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள விலங்கு ஆராய்ச்சி நிறுவனமான கலிங்கா அறக்கட்டளையின் ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் எஸ்.ஆர்.கணேஷ் பிபிசி குஜராத்தியிடம் கூறுகையில் “குஜராத்தில், இந்தப் பாம்புகள் வீடுகளைச் சுற்றி கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காடுகளில் காணப்படவில்லை. எனவே இந்த வகை பாம்புகள் ஏற்கெனவே குஜராத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை,” என்றார்.

இருப்பினும், இந்தப் பாம்புகள் குஜராத்தை தங்கள் இயற்கை வாழ்விடமாக மாற்றிக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எஸ்.ஆர்.கணேஷ் மேலும் கூறுகையில் “குஜராத்தைத் தவிர குவாலியர் மற்றும் ராஜஸ்தானிலும் இந்தப் பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை வெப்பமான பகுதிகளில் வாழாது. ஏனெனில் இந்தப் பாம்புகள் குளிர் பிரதேசங்களில் வாழ்பவை. இங்கு அவை இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பு மிகக் குறைவு,” என்கிறார்.