போலி ஆவணங்களுடன் இங்கிலாந்து செல்ல முற்பட்ட முல்லைத்தீவை சேர்ந்த சிறுவனும் பெண்ணும் கைது

by admin

இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கைத் தாய் மற்றும் அவரது மகனின் தகவல்களை பயன்படுத்தி போலி ஆவணங்களை தயாரித்து, இங்கிலாந்திற்கு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் சிறுவன் ஒருவனும் , சிறுவனின் தாய் மற்றும் , சிறுவனுடன் செல்ல முற்பட்ட பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் ,  ஒரு சிறுவனுடன் இங்கிலாந்துக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அவர்கள்  கருமபீடத்துக்கு  வந்தபோது, ​​அவர்களின் ஆவணங்கள் தொடர்பில் அதிகாரிகளுக்கு  ஏற்பட்ட   சந்தேகத்தினால்  அவர்களை விமான நிலையத்தில் உள்ள குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப சோதனையின் போது அவர்கள்  சமர்ப்பித்த  ஆவணங்கள் போலியானவை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

பின்னர் குறித்த அதிகாரிகள் சிறுவனை , தனியே அழைத்துச் சென்று இவ்விடயம் தொடர்பில்  விசாரித்த போது  ,   இது தொடர்பான அனைத்துத் தகவல்களையும்  கூறியுள்ளதுடன் ,  உண்மையான  தாய் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் காத்திருப்பதாகவும்  அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, உடனடியாக செயற்பட்ட  அதிகாரிகள், அவரது தாயாரை தேடி  கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டபோது, ​​இலங்கையில் தற்போது நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியினால் தனது குடும்பம் கடும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அதனால் மகனின் நலன் கருதி,  இவ்வாறு வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க முயற்சித்ததாகவும் தெரிவித்துள்ளார். 

குறித்த பெண்கள் இருவரும் முல்லைத்தீவு பிரதேசத்தை  சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்  அவர்களை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர் .

மேலும்  இந்த விசாரணைகளின் போது , இங்கிலாந்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகனின் தகவல்களை வைத்து வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் ஏனைய ஆவணங்களை தயார் செய்து இவர்களை இலங்கையில் இருந்து இங்கிலாந்துக்கு அழைத்து சென்று ஆள் கடத்தல் தொழில் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

தொடர்புடைய செய்திகள்