சென்னை: காதல் விவகாரத்தில் இளைஞர் தலையை துண்டித்து, உடலை துண்டுதுண்டாக்கிய கும்பல் – என்ன நடந்தது?

சென்னையில் இளைஞர் கொலை
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

சென்னைக்கு அருகில் உள்ள மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தலை, கை, கால்கள் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியை அதிர வைத்திருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், மேலும் சிலரை காவல்துறை தேடி வருகிறது. அந்தப் பகுதியை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இந்தக் கொலையின் பின்னணி என்ன?

மீஞ்சூர் காந்தி சாலை பகுதியில் ஞாயிற்றுக் கிழமை அதிகாலையில் இளைஞர் ஒருவரின் சடலம் போர்வையால் சுற்றப்பட்டுக் கிடந்தது. அதிகாலையில் அந்த வழியாகச் சென்றவர்கள் அந்தப் போர்வையைப் பிரித்துப் பார்த்தபோது, அந்தச் சடலத்தில் தலை, கை, கால்கள் வெட்டப்பட்டிருந்தன. கை மட்டும் தனியாக வேறொரு இடத்தில் கிடந்தது.

அதிர்ந்துபோன பாதசாரிகள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறை, இறந்தவரை அடையாளம் காணும் முயற்சியைத் தொடங்கியது. அந்தச் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

கொலை செய்யப்பட்டவர் யார்?

மீஞ்சூரில் உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்டு நடந்த கொடூரக் கொலை: காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

காவல்துறை நடத்திய விசாரணையில் கொல்லப்பட்ட நபர் பொன்னேரிக்கு அருகில் உள்ள வாஞ்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் குமார் என்பது தெரியவந்தது. இவர் சமீபத்தில்தான் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது.

உறவினர்களிடம் நடத்திய விசாரணையில், அதற்கு முந்தைய தினம் அஸ்வின் குமாரை அவரது நண்பரான அஜய் என்பவர் வந்து அழைத்துச் சென்றது தெரியவந்தது. அதற்குப் பிறகு அஸ்வின் குமார் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அஜய்யைத் தேடும் பணியை காவல்துறை தொடங்கியது.

இதற்கிடையில், சோழவரம் அருகே உள்ள பெருங்காவூர் சுடுகாட்டில் உள்ள சமாதி ஒன்றின் படியில், தலை ஒன்று கிடப்பதாக தகவல்வந்தது. பிறகு அந்தத் தலை அஸ்வின் குமாருடையது என கண்டறியப்பட்டது. ஆகவே, அஸ்வின் குமார் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு, உடல் மீஞ்சூர் காந்தி சாலையில் கொண்டுவந்து போடப்பட்டிருக்கலாம் என காவல்துறை கருதியது.

கொலை செய்யப்பட்ட அஸ்வின் குமார் மீது திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.

கொலை எதற்காக நடந்தது?

மீஞ்சூரில் உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்டு நடந்த கொடூரக் கொலை: காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

அஸ்வின் குமாரின் கொலை ஒரு காதல் விவகாரத்தை முன்னிட்டே நடந்திருப்பதாக காவல்துறை கூறுகிறது. இந்தக் கொலை தொடர்பாக வழுதிகைமேடு பகுதியைச் சேர்ந்த அஜீத் என்ற அவ்ஜா என்பவரை காவல்துறை கைது செய்திருக்கிறது. மீஞ்சூர் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான அவ்ஜா மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கொலை செய்யப்பட்ட அஸ்வின், அஜீத்தின் உறவுக்கார பெண் ஒருவரைக் காதலித்ததாகவும் ஆனால் அவரைத் திருமணம் செய்துகொள்ளாமல் இன்ஸ்டாகிராமில் சந்தித்த வேறு ஒருவரைத் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அஜீத், தனது நண்பர்களான அஜய், மோகன் உள்ளிட்ட சிலருடன் இணைந்து அஸ்வினை கொலை செய்து தலையை சோழவரத்திலும் உடலை காந்தி சாலையிலும் போட்டதாக காவல்துறை கூறுகிறது.

பழிக்குப்பழி கொலை அல்ல: காவல்துறை

மீஞ்சூரில் உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்டு நடந்த கொடூரக் கொலை: காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

கொலை செய்யப்பட்ட அஸ்வின் குமாரின் தலை சோழவரம் பெருங்காவூர் சுடுகாட்டில் அஜய் என்பவரது சமாதியின் படிகளில் வைக்கப்பட்டிருந்தது.

கடந்தாண்டு செப்டம்பர் இறுதியில் செங்குன்றம் அருகே உள்ள கண்ணம்பாளையம் உடற்பயிற்சி கூடத்திற்கு அருகில் மூன்று பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதில் கொல்லப்பட்டவர்களில் ஒருவரது பெயர் அஜீத். இந்த அஜய்யின் சமாதியில்தான் அஸ்வின் குமாரின் தலை வைக்கப்பட்டிருந்தது. ஆகவே, அஜய் பழிக்குப் பழிவாங்கும் விதமாக இந்த கொலை நடந்திருக்கலாமோ என்ற கோணத்தில் செய்திகள் வெளியாயின.

கருப்பு என்பவர் அஜயைக் கொலை செய்தவர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அஜய் பிறந்த நாளுக்கு அஸ்வின் வாழ்த்துத் தெரிவித்தாகவும் அதில் ஆத்திரமடைந்த அஜயின் நண்பர்கள் இந்தக் கொலையைச் செய்து, தலையை அஜயின் சமாதியில் வைத்ததாகவும் சொல்லப்பட்டது.

ஆனால், கண்ணம்பாளையம் கொலைகளுக்கும் இந்தக் கொலைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என காவல்துறை தெரிவிக்கிறது.

“இதில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோருமே நண்பர்கள். கருப்பு, அஜயை சந்தித்து அஸ்வின் வாழ்த்துத் தெரிவித்திருக்கலாம். ஆனால், அதற்காக இந்தக் கொலை நடக்கவில்லை. ஒரு பெண்ணைக் காதலித்துவிட்டு, அந்தப் பெண்ணை திருமணம் செய்யாததால்தான் இந்தக் கொலை நடந்திருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்கிறார் ஆவடி நகர காவல்துறை அதிகாரி ஒருவர்.

இப்போது இந்தக் கொலையில் தொடர்புடையதாக கருதப்படும் மற்றொரு அஜய், மோகன் ஆகியோரை காவல்துறை தற்போது தேடி வருகிறது.