மே தினத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு; அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு !

by admin

மே தினத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு; அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு ! on Sunday, April 28, 2024

உத்தேச ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்தின்போது விசேட அறிவிப்பு ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிடவுள்ளதாகவும், அன்றைய தினத்தில் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகள் மே தின மேடையில் ஏறவுள்ளதாக ஐ.தே.க தெரிவித்தது.

வருட இறுதிக்குள் உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடவுள்ளமையை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் பங்காளி கட்சிகளின் பிரதிநிதிகளை கடந்த வாரத்தில் சந்தித்திருந்த ஜனாதிபதி உத்தேச தேர்தல் மற்றும் அரசியல் கூட்டணி குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பில் பஷில் ராஜபக்ஷ, பிரதமர் தினேஸ் குணவர்தன மற்றும் டிரான் அலஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.

ரணில் விக்கிரமசிங்கவை பொது வேட்பாளராக முன்னிறுத்தும் வகையில் இதன்போது முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன. இதனை மையப்படுத்தியே ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்தில் பங்கேற்க ஏனைய கட்சிகளுக்கு முதல் கட்டமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டம் புதன்கிழமை (மே 01) 2 மணிக்கு கொழும்பு – மருதானை பகுதியில் இடம்பெறவுள்ளது.

சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஐ.தே.க.,வின் மே தின கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு பிறகு சுமார் மூன்று தசாப்தங்களுக்கு பிறகு, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஒருவர் ஜனாதிபதியாக மே தின கூட்டத்தில் பங்கேற்கின்றார். அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்தில் பங்கேற்குமாறு பல அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறு பங்கேற்கும் கட்சிகளுடன் உத்தேச ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி உருவாக்கப்படவுள்ள பரந்துபட்ட அரசியல் கூட்டணி உருவாக்கப்படும் எனவும் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்