ஜேஇஇ மெயின் தேர்வுகள்: ஐஐடி அல்லாமல் எந்தெந்த கல்லூரிகளில் படிக்கலாம்?

ஜேஇஇ மெயின் தேர்வுகள்: ஐஐடி அல்லாமல் எந்தெந்த கல்லூரிகளில் படிக்கலாம்?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், சாரதா. வி
  • பதவி, பிபிசி தமிழ்

ஜேஇஇ மெயின் (JEE Main) தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் 56 பேர் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தில் கோவை மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த இரண்டு பேரும் உள்ளனர்.

ஜேஇஇ மெயின் தேர்வு குறிப்பாக ஐஐடியில் நுழைவதற்காகவே எழுதப்படுகிறது. ஜேஇஇ எழுதி தேர்வாகி, ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் அதுவே பொறியியலுக்கான முதல் ரக கல்வி நிலையம் என்று கருதப்படும் ஐஐடியின் உள்ளே நுழையும் வழியாகும்.

இந்த ஆண்டு, நாட்டில் 12 லட்சத்துக்கும் மேலானவர்கள் ஜேஇஇ மெயின் தேர்வு எழுதினர். இதில் சுமார் 2.5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஜேஇஇ மெயின் தேர்வுகள்

பட மூலாதாரம், IITMadras/Facebook

ஜேஇஇ மெயின் தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு இந்தியாவில் சுமார் 100 அரசு கல்வி நிலையங்களிலும் சேர முடியும். இவை தவிர பல்வேறு தனியார் கல்லூரிகளும் ஜேஇஇ மெயின் தேர்வுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர்.

பொறியியல் படிப்பில் சேர வேண்டும் என்றால், ஜேஇஇ மெயின் தேர்வு எழுத வேண்டும், அதில் தேர்ச்சி பெற்று ஜேஇஇ அட்வான்ஸ்ட் எழுத வேண்டும், ஐஐடியில் சேர வேண்டும் என்ற நிலை கிடையாது. மாணவர்களுக்கு வேறு பல வாய்ப்புகள் உள்ளன.

ஜேஇஇ மெயின் தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு இந்தியாவில் உள்ள 30க்கும் மேற்பட்ட நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (NIT) 30க்கும் மேற்பட்ட இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (IIIT), சுமார் 40 அரசு நிதி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்களில் (GFTI) சேர முடியும்.

தமிழ்நாட்டில் எங்கு விண்ணப்பிக்கலாம்?

ஜேஇஇ மெயின் தேர்வுகள்

பட மூலாதாரம், கல்வியாளர் நெடுஞ்செழியன்

இதுகுறித்துப் பேசிய கல்வியாளர் நெடுஞ்செழியன், “ஜேஇஇ மெயின் மதிப்பெண்கள் கொண்டு தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் விண்ணபிக்கலாம். இந்த கல்லூரிகளில் ஜேஇஇ மெயின் மதிப்பெண்கள் தவிர 12ஆம் வகுப்பில் 75% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். இதில் முக்கியமானது என்னவென்றால், எந்தக் கல்லூரியில் எப்போது விண்ணப்பம் வழங்கப்படுகிறது என்பதைக் கவனித்து குறித்த நேரத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த கல்வி நிறுவனங்களுக்கு சேர்க்கை அடிப்படை ஜேஇஇ மெயின் என்ற பொதுத் தேர்வு என்றாலும், ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்களும் பெற்றோர்களும் கோச்சிங் வகுப்புகளுக்கு செலவு செய்யும் அளவு விண்ணப்பிக்க செலவு செய்வதில்லை,” என்று தெரிவித்தார்.

திருச்சியில் இருக்கும் என்ஐடி கல்லூரி, இந்தியாவில் உள்ள சிறந்த என்ஐடி கல்லூரிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தக் கல்லூரியில் பிஇ மற்றும் பி.டெக் படிப்புகளில் சேர ஜேஇஇ மெயின் தேர்வு மதிப்பெண்கள் போதுமானது. இதே போன்று என்ஐடி கர்நாடகா, என்ஐடி ரூர்கேலா, என்ஐடி, வாரங்கல், என்ஐடி காலிகட் உள்ளிட்ட பிற என்ஐடி கல்லூரிகளில் சேரவும் ஜேஇஇ மெயின் மதிப்பெண்கள் போதுமானது. வேறு நுழைவுத் தேர்வுகள் கிடையாது.

இந்தக் கல்லூரிகள் தவிர, அரசு நிதி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் (GFTI) நாட்டில் பல உள்ளன. இந்த வகை கல்லூரிகளில் தமிழ்நாட்டில் பிரபலமானது காஞ்சிபுரத்தில் இருக்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, டிசைன் அண்ட் மேனுஃபாக்சரிங் (IITDM). இந்தக் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய கணினி அறிவியல் படிப்பு கற்றுத் தரப்படுகிறது.

இதுதவிர பிற பி.டெக் படிப்புகளுக்கும் ஜேஇஇ மெயின் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதே போன்று திருச்சியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (IIIT) கல்லூரியிலும் சேரலாம்.

காரைக்குடியில் சென்ட்ரல் எலெக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (CECRI)இல் கெமிக்கல் மற்றும் எலக்ட்ரோ கெமிக்கல் படிப்புகளில் பி.டெக் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. மேலும் தஞ்சாவூரில் உள்ள நேஷ்னல் இன்ஸ்டிடியூட் அப் ஃபுட் டெக்னாலஜியில் (NIFTEM) உணவு தொழில்நுட்பத்தில் பி.டெக் படிப்பு உள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு மதிப்பெண்கள் கொண்டு இந்தப் படிப்பிலும் சேரலாம்.

இவை மட்டுமல்லாமல் சில தனியார் கல்லூரிகளும் ஜேஇஇ மெயின் தேர்வு மதிப்பெண்களைக் கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர். சில கல்வி நிலையங்களில் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மற்றும் ஜேஇஇ மதிப்பெண்கள் இரண்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

ஜேஇஇ மெயின் தேர்வுகள்

விஐடி, எஸ்ஆர்எம் போன்ற நிகர்நிலை பல்கலைகழகங்கள் தங்களுக்கான தனி நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றனர். சில நேரங்களில் ஜேஇஇ மெயின் தேர்வு மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

மேலும், பி.ஆர்க் எனப்படும் கட்டடக் கலை படிப்பில் சேர ஜேஇஇ மெயின் மதிப்பெண்கள் அவசியம். அதோடு நேஷ்னல் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் ஆர்கிடெக்சர் என்ற NATA தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருந்தால் மட்டுமே எந்த கட்டடக் கலை படிப்பிலும் ஒரு மாணவர் சேர முடியும்.

கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் மாநில பொறியியல் நுழைவு தேர்வுகள் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் பொறியியலுக்கான மாநில நுழைவுத் தேர்வுகள் எதுவும் கிடையாது.

ஜேஇஇ மெயின் தேர்வுகள்

பட மூலாதாரம், கல்வியாளர் ராஜ ராஜன்

கல்வியாளர் ராஜ ராஜன் பிபிசி தமிழிடம் பேசும்போது, “அண்ணா பல்கலைக்கழத்தின் கீழ் உள்ள 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சேர 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மட்டுமே போதுமானது.

அண்ணா பல்கலைகழகம் நடத்தும் கலந்தாய்வில் பங்கேற்க மாணவர்கள் தவறாமல் விண்ணப்பித்தால் மட்டுமே இந்தக் கல்லூரிகளில் நுழைய முடியும்.

இதற்கு 12ஆம் வகுப்பின் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களின் மதிப்பெண்கள் அவசியம். ஒவ்வோர் ஆண்டும் நிறைய பொறியியல் கல்லூரி இடங்கள் காலியாக இருக்கின்றன. மாணவர்கள் கலந்தாய்வு மூலம் இடம் கிடைக்காதோ என்ற பயத்தில், மதிப்பெண் மூலம் கிடைத்திருக்கும் அதே இடத்தில் காசு கொடுத்துச் சேர்கின்றனர்,” என்றார்.