இந்திய ஆண்களுக்கு ப்ராஸ்டேட் புற்றுநோய் அதிகரிப்பது ஏன்? கண்டறிவது எப்படி?

இந்திய ஆண்களுக்கு ப்ராஸ்டேட் புற்றுநோய் அதிகரிப்பது ஏன்? கண்டறிவது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், சுசீலா சிங்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

மருத்துவ ஆய்விதழான `லான்செட்` சமீபத்தில் வெளியிட்டிருந்த ஓர் அறிக்கைப்படி, உலகம் முழுவதும் ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டில் ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சமாக இருந்தது. இது 2040ஆம் ஆண்டில் 29 லட்சமாக அதிகரிக்கும் என்று லான்செட் அறிக்கை கூறுகிறது.

மொத்தம் 112 நாடுகளில் உள்ள ஆண்களுக்கு இது பொதுவான பிரச்னை என்றும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 15% பேர் ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டில், உலகளவில் 3,75,000 ஆண்கள் ப்ரோஸ்டேட் புற்றுநோயால் இறந்தனர். எதிர்வரும் 2040ஆம் ஆண்டில் இந்த இறப்புகள் 85% அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

புற்றுநோயால் ஏற்படும் ஆண்கள் மத்தியில் ஏற்படும் இறப்புகளில் இது ஐந்தாவது பெரிய காரணமாக உள்ளது.

இந்தியாவில், புற்றுநோய் பாதிக்கப்பட்ட மக்களில் மொத்தம் 3% ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். மேலும் ஒவ்வோர் ஆண்டும் 33,000 முதல் 42,000 புதிதாக ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் 30% அதிகரித்த ப்ராஸ்டேட் புற்றுநோய்

ப்ராஸ்டேட் புற்றுநோய்

பட மூலாதாரம், Ritu Marwa

படக்குறிப்பு, ரிது மர்வா மற்றும் ராஜேஷ் குமார்

லான்செட் அறிக்கையின்படி, ஒவ்வொரு 1 லட்சம் ஆண்களுக்கும் 4 முதல் 8 பேர் ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 25 ஆண்டுகளில் நகர்ப்புற மக்களில் ப்ரோஸ்டேட் புற்றுநோய் 75% முதல் 85% அதிகரித்துள்ள அதே வேளையில், தேசிய அளவில் புற்றுநோய் பாதிப்புகள் 30% அதிகரித்துள்ளது.

டெல்லியில் வசிக்கும் ராஜேஷ் குமாருக்கு 2022 அக்டோபரில் ப்ரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது.

அவரது மனைவி ரிது மர்வா பிபிசியிடம் ஒரு தொலைபேசி உரையாடலில், “என் கணவர் சிறுநீரை அடக்கி வைப்பதில் பிரச்னைகளை எதிர்கொண்டார். நாங்கள் ஒவ்வோர் ஆண்டும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வோம். இந்த பிரச்னைக்குப் பிறகு, எங்கள் குடும்ப மருத்துவர் அல்ட்ராசவுண்ட் செய்யச் சொன்னார்,” என்றார்.

பரிசோதனையில் ராஜேஷ் குமாருக்கு ப்ரோஸ்டேட் பெரிதாகி இருப்பது தெரிய வந்ததால், மருத்துவர் அவரை ப்ரோஸ்டேட் ஸ்பெசிஃபிக் ஆன்டிஜென் அல்லது பி.எஸ்.ஏ பரிசோதனை செய்து கொள்ளச் சொன்னார்.

இதையடுத்து எம்.ஆர்.ஐ., பயாப்ஸி ஆகிய பரிசோதனைகள் செய்து பார்த்ததில் ராஜேஷ் குமாருக்கு இரண்டாம் நிலை ப்ரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது.

ப்ரோஸ்டேட் என்றால் என்ன?

ப்ராஸ்டேட் புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

`ப்ரோஸ்டேட்` ஆண் இனப்பெருக்க அமைப்பின் ஒரு பகுதி. இது சிறுநீர்ப்பைக்கு அடியில் அமைந்துள்ளது. இது ஒரு வால்நட் அளவில் இருந்தாலும் வயது ஆக ஆகப் பெரிதாகிறது.

ஆண்களுக்கு 45-50 வயதிற்குப் பிறகு ப்ரோஸ்டேட் தொடர்பான பிரச்னைகள் வந்தாலும், அவை அனைத்தும் புற்றுநோய் அல்ல என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், எல்லா ஆண்களும் இந்தச் சிக்கலை எதிர்கொள்வது இல்லை.

ப்ராஸ்டேட் உறுப்பின் அளவு அதிகரிக்கத் துவங்கும்போது ​​மருத்துவர்கள் பி.எஸ்.ஏ சோதனையைப் பரிந்துரைக்கின்றனர். இந்த ஆய்வுக்குப் பிறகுதான், புற்றுநோய் சந்தேகம் இருந்தால் கூடுதல் பரிசோதனைகள் செய்யப்பட்டு, முடிவுகளின்படி சிகிச்சை துவங்கப்படுகிறது.

இந்த சிகிச்சை 68 வயதான ராஜேஷ் குமாருக்கும் தொடங்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ப்ரோஸ்டேட் புற்றுநோய் மெதுவாக வளரும்

ப்ராஸ்டேட் புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) அறுவை சிகிச்சை புற்றுநோயியல் துறையில் பேராசிரியராக இருந்த மருத்துவர் எஸ்.வி.எஸ்.தேவ் இதுபற்றிக் கூறுகையில், இந்த நோய் வயது அதிகரித்த பிறகு தோன்றும் என்றார். மேலும், இது உடலில் மெதுவாக வளரும் தன்மை கொண்டது என்றும் கூறினார்.

தைராய்டு புற்றுநோய் மற்றும் சில வகையான மார்பகப் புற்றுநோய்களும் உடலில் மெதுவாக வளரும் தன்மை கொண்டவை.

“இதற்கு முன்பு இந்தியாவில் ப்ராஸ்டேட் புற்றுநோய் பாதிப்புகள் குறைவாகவே இருந்தன. ஏனெனில் மக்களின் சராசரி ஆயுட்காலம் குறைவாக இருந்தது, அதாவது 60 வயது. ஆனால் இப்போது மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது,” என்று அவர் கூறுகிறார்.

டெல்லியின் ஆர்ட்டெமிஸ் மருத்துவமனையில் சிறுநீரக மருத்துவத்தின் தலைமை மருத்துவராக இருக்கும் விக்ரம் பருவா கௌசிக், “மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்ததால், ப்ரோஸ்டேட் புற்றுநோயும் அதிகரிக்கத் துவங்கியது. ஆனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பதிவு செய்யப்படுவதைவிட அதிகமாக இருக்கலாம்,” என்றார்.

ப்ராஸ்டேட் புற்றுநோய்

பட மூலாதாரம், Dr SVS Deo

படக்குறிப்பு, மருத்துவர் எஸ்.வி.எஸ்.தேவ்

இந்தியாவில் உள்ள புற்றுநோய் பதிவேட்டின்படி, கடந்த பத்து ஆண்டுகளில் ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் இந்த எண்ணிக்கை இரண்டு முதல் மூன்று மடங்கு குறைவாக இருப்பதாக மருத்துவர் எஸ்.வி.எஸ் தேவ் கூறுகிறார்.

இந்தப் புற்றுநோய் தரவு, புற்றுநோய் பதிவேட்டில் இருந்து கிடைப்பதாகவும் ஒவ்வொரு மருத்துவமனையில் இருந்தும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார். இத்தகைய சூழ்நிலையில், ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்றும் எச்சரிக்கிறார் அவர்.

இந்தப் புற்றுநோய்க்கான பரிசோதனைத் திட்டம் இல்லாததால் ப்ரோஸ்டேட் புற்றுநோயின் வழக்குகள் குறைவாக இருப்பதாகவும், ஆனால் மேற்கத்திய நாடுகளில் அதிக அளவு ப்ரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனைகள் நடப்பதாகவும் அவர் கூறுகிறார்.

எவ்வாறாயினும், இதனால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையை மதிப்பிடுவது சவாலானது, ஏனெனில் இதன் காரணமாக ஏற்படும் இறப்புகள் குறைவாகவே பதிவு செய்யப்படுகின்றன.

இது ஒரு வாழ்க்கை முறை நோயா?

ப்ராஸ்டேட் புற்றுநோய்

பட மூலாதாரம், Dr Pradeep Bansal

படக்குறிப்பு, மருத்துவர் பிரதீப் பன்சல்

ஃபோர்டிஸ் மருத்துவமனையின் சிறுநீரகவியல், ரோபோடிக்ஸ் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சைத் துறையின் இயக்குநரான மருத்துவர் பிரதீப் பன்சல், ஆண்களின் வயது அதிகரிக்க அதிகரிக்கும்போது ப்ரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பிற்கான சாத்தியங்கள் அதிகரிப்பதாகக் கூறுகிறார். இதற்குக் காரணம் மரபணு என்றும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம் சைவ உணவு உண்பவர்களைவிட அசைவ உணவு உண்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கலாம் என்கிறார்.

ஆனால் சைவ உணவு மட்டுமே உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் வரவே வராது என்றும் கூற முடியாது, ஏனெனில் புற்றுநோய் வருவதற்கு மேலும் பல காரணங்கள் உள்ளன.

மேலை நாடுகளில் ​​இந்தப் புற்றுநோய் அதிகமாகக் காணப்படுவது, ஏனென்றால் இது உணவுப் பழக்கம், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றுடன் தொடர்புடையது. இவை புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதாகக் கூறுகிறார் மருத்துவர் பன்சால்.

சமீபத்திய லான்செட் அறிக்கைப்படி, ப்ரோஸ்டேட் புற்றுநோய் தாமதமாகக் கண்டறியப்படுகிறது. மேலும் குறைந்த அல்லது நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் தாமதமான நோயறிதல் ஒரு பெரிய பிரச்னை.

ப்ராஸ்டேட் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?

ப்ராஸ்டேட் புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

ஒருவரது குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய் இருந்தால், அந்த நபரை புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ப்ரோஸ்டேட் புற்றுநோய்க்குக் குறிப்பிட்ட அறிகுறிகள் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மருத்துவர்களின் கூற்றுப்படி, ஒருவரின் பி.எஸ்.ஏ அளவும் அந்த நபரின் வயதைப் பொறுத்தது. அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனத்தின்படி, எந்த பி.எஸ்.ஏ அளவும் சாதாரணமானது அல்லது அசாதாரணமானது அல்ல.

முன்பு 4ng/mL அல்லது அதற்கும் குறைவானது சாதாரணமாகக் கருதப்பட்டது. ஆனால் இதைவிடக் குறைவாக உள்ளவர்களுக்கு ப்ரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதையும், இதைவிட அதிகமாக அதாவது 10ng/mL வரை உள்ளவர்களுக்கு ப்ரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படாததையும் அவதானிக்க முடிந்தது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மருத்துவர்களின் கூற்றுப்படி, ஆரம்பத்தில் அறிகுறிகள் தெரியவில்லை என்றாலும் கீழ்கண்ட பிரச்னைகள் எழுந்தால் பி.எஸ்.ஏ பரிசோதனை செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறது:

  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  • இரவில் சிறுநீர் மெதுவாக கழிவது
  • சிறுநீர் தானாக வெளியேறுதல்
  • சிறுநீரில் ரத்தப்போக்கு

புற்றுநோய் கண்டறியப்பட்டு, அது உடலில் பரவியிருந்தால், புற்றுநோய் எலும்புகளுக்குச் செல்கிறது, அதன் பிறகு கீழ்கண்ட பிரச்னைகள் ஏற்படலாம்:

  • முதுகு வலி
  • எலும்பு முறிவு
  • எலும்புகளில் வலி

இதுகுறித்து டாக்டர் பிரதீப் பன்சால் கூறும்போது, ​​“புற்றுநோய் இளம் நோயாளிகளிடம் (வயது 60-75) கண்டறியப்படுகிறது, அது புரோஸ்டேட் சுரப்பியில் மட்டுமே இருந்தால், ரோபோடிக் அறுவை சிகிச்சையைப் பரிந்துரைக்கிறோம். இது அவர்களின் ஆயுளை 10-15 ஆண்டுகள் நீட்டிக்கிறது. ஆனால் அது எலும்புகளுக்குப் பரவினால் அது சிக்கலானது, மேலும் அதற்கான சிகிச்சை வேறு விதமானது,” என்றார்.

இதற்கான சிகிச்சை என்ன?

ப்ராஸ்டேட் புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

ப்ரோஸ்டேட் புற்றுநோயை ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம் என்றும், பெரும்பாலான ஆய்வகங்களில் இந்த வசதி இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ப்ரோஸ்டேட் உறுப்பு விரிவடைந்தால், இமேஜிங், அல்ட்ராசவுண்ட் மற்றும் எம்.ஆர்.ஐ ஆகியவையும் செய்யப்படுகின்றன.

ஆரம்பக் கட்டத்தில் நோயாளிக்கு ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்து அந்தப் பகுதி அகற்றப்படும் என்றும் ஆனால் புற்றுநோயின் நிலை தீவிரமடைந்தால் ஹார்மோன் சிகிச்சை அளிக்கப்பட்டு நோயாளியின் நிலையைப் பார்த்த பிறகு அடுத்தகட்ட சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மருத்துவர் எஸ்.வி.எஸ் தேவ் கூறுகிறார்.

ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 5 முதல் 15 ஆண்டுகள் வரை உயிர்வாழ முடியும், ஏனெனில் இது சிகிச்சை அளிக்கக்கூடிய புற்றுநோய். ராஜேஷ் குமார் அறுவை சிகிச்சை செய்து சகஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

இது மரபணு சார்ந்த நோயா?

ப்ராஸ்டேட் புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

புற்றுநோய் என்பது மரபணு சார்ந்த ஒரு நோய், அதாவது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது புற்றுநோய் இருந்தால், உங்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அத்தகைய சூழ்நிலையில், எந்தவொரு குடும்பத்திலும் ப்ரோஸ்டேட் புற்றுநோய் அல்லது வேறு ஏதேனும் புற்றுநோய் இருந்தால், அவர்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

குடும்பத்தில் யாருக்காவது ப்ரோஸ்டேட் புற்றுநோய் இருந்தால், குடும்பத்தின் ஆண் உறுப்பினர்கள் 45 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் பி.எஸ்.ஏ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

பெண்கள் மார்பகப் புற்றுநோயைத் தாங்களே பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

வெளிநாட்டில் நிலைமை என்ன?

ப்ராஸ்டேட் புற்றுநோய்

பட மூலாதாரம், Dr Vikram Barua Kaushik

படக்குறிப்பு, மருத்துவர் விக்ரம் பருவா கௌசிக்

லான்செட் அறிக்கையின்படி, 2020ஆம் ஆண்டிற்குப் பிறகு, கிழக்கு ஆசியா, தென் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற நாடுகளிலும் ப்ரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் அதனால் ஏற்படும் இறப்புகள் அதிகரிக்கும்.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள பணக்காரர்கள் தற்போது தங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளனர் என்றும், அதன் நேர்மறையான விளைவைக் காண 10 ஆண்டுகள் ஆகும் என்றும் மருத்துவர் எஸ்.வி.எஸ் தேவ் கூறுகிறார்.

“கடந்த 80கள் மற்றும் 90களில், அந்த நாடுகளின் மக்கள் மலிவான நொறுக்குத் தீனிகளை அதிகம் உட்கொண்டார்கள்.” மேலும், அதன் விளைவு இப்போது தெரிவதாகக் கூறுகிறார் அவர்.

மருத்துவர் விக்ரம் பருவா கௌசிக் கூறுகையில், அமெரிக்காவிலும் மற்ற வளர்ந்த நாடுகளிலும் அதிக அளவில் புற்றுநோய் பரிசோதனை இருப்பதாகவும், அதனால்தான் ப்ராஸ்டேட் புற்றுநோய் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகளவில் பதிவாகி இருப்பதாகவும், அவர் கூறுகிறார்.

ஆனால் இந்த மருத்துவர்கள் அனைவரும் இந்தப் புற்றுநோய்க்கான சிகிச்சை சாத்தியம் என்பதாலும் அதன் முன்னேற்றம் மெதுவாக இருப்பதாலும், நோயாளிகள் நீண்டநாள் வாழ்கின்றனர் என்றும் கூறுகிறார்கள்.