விவிபேட்

பட மூலாதாரம், Getty Images

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் – VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

எனினும் விவிபேட் இயந்திரங்களும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றம்

நீதிபதிகள் சொன்னது என்ன?

இந்த வழக்கில் மூன்று கோரிக்கைகள் இருந்தன:

  • காகித ஓட்டுமுறைக்கே திரும்புதல்
  • 100% விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்த்தல்
  • ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளர்களிடம் கொடுத்து அதை மீண்டும் வாக்குப்பெட்டியில் போடச்செய்தல்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்திருக்கிறது.

நடைமுறையில் இருக்கும் செயல்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள், தரவுகள் ஆகியவற்றைக் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எட்டியிருப்பதாக நீதிபதி கன்னா கூறினார்.

இந்த வழக்கில் இரண்டு தீர்ப்புகள் உள்ளன, ஆனால் இரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன என்றார் நீதிபதி கன்னா.

தீர்ப்பளித்துப் பேசிய நீதிபதி கன்னா, வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தைப் பதிவேற்றியவுடன் அந்தக் கருவியை சீல் செய்து வைத்து, 45 நாட்கள் வரை அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைக்ரோகன்ட்ரோலர்களில் பதிவான ‘மெமரியை’ தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், 2 மற்றும் 3-ஆம் எண்களில் உள்ள வேட்பாளர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு பொறியாளர் குழு சரிபார்க்கலாம் என்றும் கூறினர். இந்தக் கோரிக்கை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் செயப்படவேண்டும். இந்தச் சரிபார்ப்புக்கான செலவீனத்தை கோரிக்கை விடுக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தால், அந்தத் தொகை திருப்பித்தரப்படும், என்றார் நீதிபதி கன்னா.

மேலும், “ஒரு அமைப்பின்மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை கொள்வது அடிப்படையற்ற சந்தேகங்க்களுக்கு இட்டுச்செல்லும்,” என்றார் நீதிபதி தத்தா.

விவிபேட்

பட மூலாதாரம், Getty Images

விவிபேட் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது?

  • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள பட்டனை வாக்காளர் அழுத்துகிறார்.
  • அவர் அழுத்தும் அதேநேரத்தில், வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகைச் சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும்.
  • அதன் பிறகு, சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு, ஒரு ‘பீப்’ ஒலியுடன் சீல் செய்யப்பட்ட பெட்டியில் சேகரிக்கப்படும்.
  • வாக்குப்பதிவின் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது குறித்தும் தெரிவிக்கப்படும். நீங்கள் தீர்மானித்தபடி வாக்களித்தீர்களா என்பதைச் சரிபார்க்க வாக்காளருக்கு வாய்ப்பு கிடைக்கும்.
  • விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும்.
  • விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வாக்காளர்கள் விவிபேட் இயந்திரங்களை திறக்கவோ. அவற்றைத் தொடவோ முடியாது.
  • ஒரு விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒரு காகித ரோலில் 1,500 ஒப்புகைச் சீட்டுகளை அச்சிட முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விவிபேட் ஒப்புகளைச் சீட்டுகள் சோதனை செய்யப்பட்டன.
விவிபேட்

பட மூலாதாரம், Getty Images

EVM-இல் வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன?

முதலில், தேர்தல் அதிகாரி மற்றும் அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் வாக்களிப்பின் ரகசியம் காக்க உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள்.

அதன்பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்படுகின்றன.

இது நடக்கும்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வாக்கு எண்ணும் முகவர்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருக்க உரிமை உண்டு. இந்த முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்க்கலாம்.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குறிப்பிட்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதன் மூலம் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு, பல்வேறு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன.

பின்னர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான எண்கள் கூட்டப்படும்.

விவிபேட்

பட மூலாதாரம், Getty Images

விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்ப்பு

கடந்த 2019-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை முடிந்ததும், அவற்றின் மொத்த எண்ணிக்கை விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் கூடத்துக்கும் தனி விவிபேட் சாவடி உள்ளது.

எண்ணிக்கையில் ஏதேனும் தவறு இருந்தாலோ, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டாலோ அதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியது தேர்தல் நடத்தும் அதிகாரியின் பொறுப்பு.

இந்த அறிவிப்பு கிடைத்ததும், அந்த இடத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடரவோ, வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்யவோ அல்லது மறு வாக்குப்பதிவு நடத்தவோ தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம்.

வாக்கு எண்ணிக்கை பிரச்னையின்றி முடிந்து, தேர்தல் ஆணையத்தால் பிற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவை அறிவிக்கலாம்.

2019-ஆம் ஆண்டு தேர்தலில் கூடுதல் இயந்திரங்கள் உட்பட 39.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 17.4 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு சுவிதா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் வாக்குச்சாவடி முடிவுகளைப் பார்க்கலாம்.

விவிபேட்

பட மூலாதாரம், ANI

வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சைகள்

கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பின.

விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்குமாறு எதிர்க்கட்சிகள் முதலில் உச்ச நீதிமன்றத்திடமும், பின்னர் தேர்தல் ஆணையத்திடமும் கேட்டிருந்தன. ஆனால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படுவதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்து அதில் உண்மை இல்லை என்று கூறியிருந்தது.

விவிபேட்
படக்குறிப்பு, முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி

முன்னாள் தேர்தல் ஆணையர் கூறுவது என்ன?

முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி இதுகுறித்து பிபிசி-க்கு அளித்த பேட்டியில், தேர்தலில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் வசதி மற்றும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும், என்றார்.

“ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரினால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இது முழுமையான மறு வாக்கு எண்ணிக்கைக்கான விருப்பத்தை வழங்கும்,” என்றார்.

தொழில்நுட்ப வல்லுநர்களும் குரேஷியின் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர்.

வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க விவிபேட் ஒரு தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர்.

பிபிசி மராத்தியிடம் பேசிய புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் மாதவ் தேஷ்பாண்டே, விவிபேட் இயந்திரத்தால் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டுக்கு ஒரு செய்தியை அனுப்ப முடியும் என்றார். அதன்மூலம் அது ஒரு தனி ரசீதை அச்சிட முடிந்தால், அது பாதுகாப்பானதாகக் கருதப்படும், என்றார். “வாக்குப்பதிவுக்குப் பிறகும் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.