டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு – திமுக தரப்பு விளக்கம் என்ன?

திமுகவை விமர்சித்து வீடியோ

பட மூலாதாரம், சிவராமகிருஷ்ணன்

ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார்.

என்ன நடந்தது?

ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்?

வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா?

பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும்.

(டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார்.

அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.

திமுகவை விமர்சித்து வீடியோ

பட மூலாதாரம், திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம்

இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார்.

இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்,” என்று கூறினார்.

மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார்.

திமுகவை விமர்சித்து வீடியோ

பட மூலாதாரம், YouTube

நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார்.

அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர்.

நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்,” எனப் பேசியுள்ளார்.

மேலும், “ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன்.

நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது.

அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

திமுகவை விமர்சித்து வீடியோ

பட மூலாதாரம், YouTube

மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன்.

அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, ‘எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்’ என்று கூறியதாக” ராமலிங்கம் பேசியிருந்தார்.

திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது.

வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து.

ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.

பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான்.

இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது ‘வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது’ என்று கூறினார்.

அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார்.